1 இராஜாக்கள் 14:1-3 அக்காலத்திலே யெரோபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான். அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப்பார்த்து; நீ எழுந்து நீ யெரொபெயாமின் மனைவி என்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ, இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்…… பிள்ளைக்கு சம்பவிக்கப்போகிறது இன்னதென்று அவன் உனக்கு அறிவிப்பான் என்றான்.
இன்று நாம் பார்க்கும் சம்பவம் ஒரு சோகமான ஒன்று! இதற்கு காரணம் யெரோபெயாம் தன்னை ராஜாவாக்கிய தேவனாகியக் கர்த்தருக்கு பயப்படாமல், பலவீனமாக செயல்பட்டதால்தான் என்று நினைக்கிறேன். அவன் தேவனாகியக் கர்த்தருக்கு பதிலாக இரண்டு பொன் கன்றுக்குட்டிகளை கடவுள் என்று வழிபட நிறுத்தினான். உண்மைக்கு பதிலாக போலியைத் தெரிந்து கொண்டதால் இஸ்ரவேல் கீழான பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இது யெரொபெயாமின் நாட்டை மட்டும் அல்ல வீட்டையும் வெகுவாக பாதித்தது. அவனுடைய குமாரன் அபியா வியாதியில் விழுந்தான். அவன் தன்னுடைய செல்ல மகன் இறந்து விடுவானோ என்று பயந்தான். ஒரு ஆண்பிள்ளை இருந்தால் தான் அந்த நாட்டைத் தொடர்ந்து ஆள முடியும். அதனால்தான் இந்த பயம் வந்துவிட்டதோ என்னவோ! அவன் தன் குமாரனை நேசிக்கவில்லை என்றும் நான் சொல்லவில்லை. அதே சமயம் தன்னுடைய செங்கோல் தன் தலைமுறைக்கும் நிலைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பான் என்று சொல்லுகிறேன்.
சரி! யெரொபெயாமுக்கு தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி சற்று அறிந்து கொள்ள ஆசை வந்துவிட்டது. சவுல் ராஜாவைப்போல ஆவிகளோடு பேசும் பெண்ணைத்தேடி செல்லாமல், தீர்க்கதரிசியான அகியாவைத் தேட முடிவு செய்தான். அகியாதான் யெரொபெயாம் இஸ்ரவேலின் ராஜாவாவான் என்று தீர்க்கதரிசனம் சொன்னவன். நன்மையான தீர்க்கதரிசனத்தை சொன்ன அகியாவிடமிருந்து அவனுடைய குமாரனும் இஸ்ரவேலை ஆளுவான் என்ற நற்செய்தியை எதிர்பார்த்தான் யெரொபெயாம்.
ஆனால் இங்குதான் பிடி இருக்கிறது. அவனுடைய உள்ளத்தின் ஆழத்தில் அவன் தேவனுக்கு விரோதமாக கன்றுக் குட்டிகளை நிறுத்திய காரியம் அவனுடைய ஆவிக்குரிய வாழ்வை ஒரேயடியாக தரைமட்டமாக்கிவிட்டது என்பது அவனுக்குத் தெரியும். இந்த சமயத்தில் தீர்க்கதரிசி அகியாவிடம் போய் தலைக் காட்டினால், உடனே அவன் தன்னுடைய இருளான வாழ்க்கையைக் குறித்து பேச ஆரம்பித்துவிடுவான் என்ற பயத்தில் தன் மனைவியை வேஷம் மாறி சீலோவுக்கு செல்லும்படி கூறுகிறான்.
என்ன பரிதாபம்! இது அவன் எவ்வளவுதூரம் தேவனைப் பற்றி புரிந்து கொண்டிருந்தான் என்று காட்டுகிறது! அவன் உண்மையில் பார்த்தால், தன் வாழ்வில் இரண்டு பொன் கன்றுக் குட்டிகளை தெய்வம் என்று தெரிந்து கொண்டான்.அவன் தனக்கென்று உருவாக்கிக்கொண்ட ஒரு மதம் அது. ஆனால் அவனுக்கு எப்பொழுதெல்லாம் தேவையோ அப்பொழுதெல்லாம் யெகோவா தேவை! மணியடித்தால் ஓடிவரும் வேலைக்காரன் போல!
யெரொபெயாம் போட்ட திட்டம், சதி, தந்திரம் எல்லாமே தேவனாகிய கர்த்தருடைய கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்கத்தான். தினமும் அவரோடு உறவாடும் உறவைத் தள்ளிவிட்டு யெரொபெயாம் ஒரு மதத்தை தன்னுடைய லாபத்துக்காக ஏற்படுத்தினான். இன்று அது கை கொடுக்கவில்லை!
அன்பின் தேவனுடைய பிள்ளைகளே நம்மில் எத்தனைபேர் தேவனாகியக் கர்த்தரை இவ்விதமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம்? தினமும் அவரோடு உறவாடும் அந்த இனிய ஐக்கியத்தைத் தள்ளி விட்டு, நமக்கு எப்பொழுதெல்லாம் தேவையோ அப்பொழுதெல்லாம் அவரைத் தேடி ஓடுகிறோமே அதைத்தான் சொல்கிறேன்! இப்பொழுதெல்லாம் நம்முடைய எல்லா வேலைகளுக்கும் தேவையான நேரத்தில் வந்து அந்த வேலையை செய்து முடிக்க ஆட்கள் அனுப்பக்கூடிய இணையதளங்கள் உள்ளனச. நாம் தேவனுடைய சமுகத்தையும் அப்படிப்பட்ட ஒரு இணையதளமாக யோசிக்கிறோம்.
வாழ்க்கையில் மிக மோசமான சோகமே தேவனோடு உள்ள நெருக்கமான வாழ்க்கையை இழந்து அவருடைய பிரசன்னத்தை இழந்து போவதே! அந்த சோகம் உனக்கு வேண்டாமே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
