கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1564 நன்மை செய்பவருக்கு சரிக்கு சமம் செய்யலாம்! தீமை செய்பவருக்கு?

1 இராஜாக்கள் 15:25 -26  … யெரொபெயாமின் குமாரனாகிய நாதாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி….கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்து… தன் தகப்பன் பாவத்திலும்…நடந்தான்.

28: பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அவனைக் கொன்றுபோட்டபின் அவன் ஸ்தானத்திலே ராஜாவானான்.

30:  அவன் ராஜாவானபின் அவன் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்.

நம்முடைய காலத்தில் ஊழியம் செய்து சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த சுவிசேஷகர் பில்லி கிரஹாமுக்கு அடுத்தபடியாக உலக சுவிசேஷகர் என்று அழைக்கப்படும்  பாஸ்டர் சார்ல்ஸ் சுவிண்டோல் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் டெக்ஸாஸ் போயிருந்தபோது மூன்று வாரங்கள் ஸ்டோன் பிரயார் என்று அழைக்கப்படும் அவருடைய திருச்சபைக்கு சென்றிருந்தேன். வயது மிக்க அவர் கண்களில் நீர் ததும்ப சிலுவை அன்பைக் குறித்து பேசியது மனதிலேயே உள்ளது. அவருடைய வீடியோக்களைப் பார்க்க நான் தவறுவது இல்லை.

நான் அவரைப் பற்றி அடிக்கடி  இங்கு குறிப்பிடுவதால் இதை சொல்ல நினைத்தேன்!

அவர்கள் எழுதிய Hope Again என்ற புத்தகத்தில் ஒரு கதையை சொல்கிறார்.  அதில் ஒருவனுக்கு நாய் கடித்து ரேபீஸ் என்ற நோய் வந்துவிட்டது. அந்த நோய் வந்தால் நாயைப் போல குரைத்து கடிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவனுக்கு ரேபீஸ் இருப்பதை ஆஸ்பத்திரியில் இருந்த மருத்துவர் ஒருவர் அவனுக்கு சொல்கிறார். உடனே அவன் அங்கிருந்த பேப்பரையும், பேனாவையும் எடுத்து எழுத ஆரம்பிக்கிறான். ஒருவேளை  தான் சாகப்போவதாக நினைத்து உயில் எழுதுகிறான் போல என்று நினைத்து அந்த மருத்துவர் அவனிடம் இந்த் நோயை நிச்சயமாக குணப்படுத்தி விடலாம், பயப்பட வேண்டாம் என்கிறார்.

அதற்கு அந்த மனிதன், தெரியும் டாக்டர்,  நான் யார் யாரையெல்லாம் கடிக்கலாம் என்ற பட்டியல் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றான்.

1 இராஜாக்கள் 14 – 16 வாசிக்கும்போது எனக்கு இந்தக் கதைதான் நினைவுக்கு வந்தது.  இஸ்ரவேலுக்குள் இதுதான் நடந்து கொண்டிருந்தது. இஸ்ரவேல் தேவனை மறந்ததால், தேவனாகிய கர்த்தர் பழி வாங்குதலை என்னிடம் விட்டு விடுங்கள் என்று கட்டளையிட்டதும் மறந்தே போயிற்று.

அநேக நேரங்களில் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் இதேபோல வாங்கியதைத் திருப்பி  கொடுத்து விடும் வழக்கத்தில் உள்ளோம் அல்லவா? நம் மேல் ஒருவர் பழி சுமத்தினால் நாம் சும்மாயிருக்கப் போவதில்லை! நமக்கு ஒருவர் தீமை செய்தால் நாம் அமைதியாகவா இருப்போம்! உடனே கொடுத்துவிட வேண்டாமா? உண்மைதானே?

ஜான் சௌதார்ட் என்பவர் சொல்கிறார், நமக்கு உதவி செய்தவர்களுக்கு மட்டுமே நாம் சரிக்கு சமம் செய்யவேண்டுமேயன்றி மற்றவருக்கு அல்ல என்று.

பழிவாங்குதல் என்பது எங்கேயோ ஒரு இடத்தில் ஒரு அழிவை நிச்சயம் கொண்டு வரும். இது இன்றைய வேதாகமப் பகுதியில் தெளிவாகத் தெரிகிறது. ராஜாவாகிய பாஷா யெரொபெயாமுடைய மொத்த குடும்பத்தையும் வேட்டையாடி விடுகிறான். இந்த படுகொலைக்கு மொத்த இஸ்ரவேலும் சாட்சி என்பதே வேதனைக்குரியது. எவ்வளவு கொடூரமான பழிவாங்கும் எண்ணம் பாருங்கள்!

பெயர் அறியாத  ஒருவர் எழுதிய இந்த வார்த்தைகள் மிகவும் உண்மையானது என்று நான் நினைப்பதுண்டு,

கொலைசெய்யும்போது நாம் மிருகமாகிறோம்

நீதி செய்யும்போது நாம் மனிதராகிறோம்

மன்னிக்கும்போது  மட்டுமே நாம் கடவுளைப்போலாகிறோம்.  

அன்பின் தேவனுடைய பிள்ளைகளே, தீமைக்கு சரிக்கட்டுவேன்  என்று சொல்லாதே: கர்த்தருக்குக் காத்திரு அவர் உன்னை இரட்சிப்பார் ( நீதி:20:22) என்ற அறிவுரையின்படி பழிவாங்குதலை விட்டு விடுவோம்.

எனக்கு விரோதமாக அவர்கள் எப்படி அந்த வார்த்தைகளைப் பேசலாம்,   நான் எவ்வளவு உதவியிருக்கிறேன் என்னை ஏமாற்றிவிட்டார்களே,  கூடவே இருந்து குழியை பறித்துவிட்டார்களே, என் வேலை போனதற்கு அவர்கள்தான் காரணம்,  நான் உழைத்து சம்பாதித்ததை பிடுங்கி விட்டார்களே என்றெல்லாம் நீ குமுறிக்கொண்டிருக்கலாம்.

கர்த்தருடைய பாதத்தில் எல்லாவற்றையும் அர்ப்பணித்து காத்திருங்கள்! கடினமான ஒன்றுதான் ஆனால் நிச்சயம் பலன் உண்டு! இரட்சிப்பு அவரிடத்திலிருந்து வரும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

Leave a comment