கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1659 ஆபத்திலிருந்து நம்மை தப்புவிக்கும் ஜெபம்!

மத்தேயு: 26: 41     நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து  ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.

தம்முடைய சீஷர்களோடு தனிமையில் நேரம் செலவிடுவது நம்முடைய ஆண்டவருக்கு இது முதல் தடவையல்ல! ஆனால் அந்த இரவு முற்றிலும் மாறுபட்ட ஒரு இரவு!

மத்தேயு கூறுகிறார் அந்த இரவில்  உணவு அருந்தி விட்டு ஸ்தோத்திரப் பாட்டைப் பாடிய பின்னர் அவர்கள் ஒலிவ மலைக்குப் புறப்பட்டுப் போனார்கள். அங்கு அவர் தம்முடைய சீஷருடனே அன்று இரவு சம்பவிக்கப் போகும் சம்பவங்களை விளக்க ஆரம்பித்தார். அவருடைய நெருங்கிய நண்பர்களால் அதை நம்பவே முடியவில்லை. பேதுது அவரை நோக்கி எல்லோரும் அவரை கைவிட்டாலும் தான் மறுதலிக்கப் போவதில்லை என்று உறுதியாகக் கூறினான். சில நேரங்களில் நாமும் பேதுருவைப் போல நம்முடைய உள் பலவீனத்தை மறைக்க வெளியில் தைரியசாலி போல வேடம் போடவேண்டியிருக்கிறது. ஆனால் இயேசு கிறிஸ்து அவர்களை நோக்கி நீங்கள் இந்த இராத்திரியிலே இடறலடையப் போகிறீர்கள் என்று எச்சரித்தார்.

புயல் வரப்போகிறது நீங்கள் எல்லோரும் அழியப்போகிறீர்கள், ஜாக்கிரதை என்பதைப் போல இயேசுவானவர்  அவர்களை எச்சரித்தது மட்டுமல்ல, அவர்களுக்கு அதிலிருந்து தப்பிக்க ஒரு வழியும் கற்றுக்கொடுத்தார்.  அவர் அவர்களை நோக்கி  என்று  நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து  ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்  என்று பார்க்கிறோம். ஆபத்து நெருங்குகிறது ஆனால் விழித்திருந்து ஜெபித்தால் அதிலிருந்து தப்பி விடலாம் என்று அறிவுரை கூறினார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தின் தலையெழுத்தையே மாற்றியமைக்கப் போகும் யுத்தத்தில் ஈடுபடும் வேளை , வான சேனைகள் தேவக்குமாரனுக்கு என்ன சம்பவிக்கப்போகிறதோ என்று பூமியை நோக்கிக் கொண்டிருந்த வேளை, கர்த்தராகிய இயேசு தம்முடைய நெருங்கிய நண்பர்களாகிய பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் நோக்கி விழித்திருந்து ஜெபியுங்கள் என்றது கர்த்தராகிய இயேசுவை வருகிற ஆபத்திலிருந்து காக்க அல்ல, அவர்கள் தங்கள் விசுவாச வாழ்க்கையில் இடறிப்போகாமலிருக்கத் தான்!

அதுமட்டுமல்ல, உம்மை மரணபரியந்தம் மறுதலிக்க மாட்டேன் என்று உறுதிபூண்ட பேதுருவை நோக்கி, நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடே விழித்திருக்கக் கூடாதா? என்று கடிந்து கொண்டதையும் பார்க்கிறோம்.

மேலறையில் கர்த்தராகிய இயேசுவோடு கொண்ட பந்தியும்,  கெத்செமெனே தோட்டத்தின் குளிர்ந்த காற்றும், இரவு நேர மயக்கமும் அவர்களுடைய சரீர பெலவீனமும் அவர்களைக் கண்ணயற செய்ததால் அவர்கள் எந்தப் பொழுதில் கவனமாக ஜெபித்திருக்க வேண்டுமோ அந்தப் பொழுதில் உறங்கியதற்கு ஒரு சாக்கு போக்காயிற்று!  இன்று நீ ஜெபிக்காமல் உறங்குவதற்கு உன் குடும்பப் பொறுப்பு, உன்னுடைய வேலை, உடல் நலம் என்று அநேகக் காரணங்கள் காட்டலாம்.

கெத்செமெனெ தோட்டத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிப்புக்கு அவர்கள் கண்களை மூடி விட்டனர்.

இந்த சம்பவத்துக்கு அநேகமாயிரம் வருடங்களுக்கு முன்னால், இன்னொரு தோட்டத்திலே இதே போல ஒரு சம்பவம் நடந்தது. தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்திலே தம்முடைய பிள்ளைகளாகிய ஆதாமையும், ஏவாளையும் நோக்கி ஒரே ஒரு கனியை மாத்திரம் புசிக்காதீர்கள், புசித்தால் சாகவே சாவீர்கள் என்று எச்சரித்தார். ஆனால் எச்சரிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி அவர்கள் கால்கள் அலைந்த போது, சாத்தானாகிய சர்ப்பம் அவர்கள் கண்களை மறைத்ததால் அவர்கள் தேவனுடைய எச்சரிப்பை உதறிவிட்டனர்.

நாம் வேதத்தை வாசிப்பதையும், ஜெபிப்பதையும் விட்டு விட்டு உறங்கும்போது சாத்தான் நம்மை தொட்டிலாடுவது போல ஆட்டி தூங்க வைக்கிறான்!

எத்தனை சீக்கிரமாய் கர்த்தருடைய எச்சரிக்கையை மறந்து போயினர்! எத்தனை சீக்கிரமாய் நித்திரையில் ஆழ்ந்தனர்! எத்தனை சீக்கிரமாய் இடறலடைந்தனர்!

அன்று நித்திரையில் விழுந்ததால் இடறிய பேதுரு, இன்று நம்மைப் பார்த்து , 1 பேதுரு 5: 8 ல்  ” .. விழித்திருங்கள்; ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைத் தேடி சுற்றித்திரிகிறான் ”    என்கிறார்.  சுய நம்பிக்கையில் நான் கடைசி பரியந்தமும் நிலைத்திருப்பேன் என்ற பேதுரு, தலைக்குப்புற இடறி விழுந்த பின், விழித்திருந்து ஜெபித்தால் மட்டுமே ஜெயம் வரும் என்பதை தன் வாழ்க்கையில் கற்றுக் கொண்டார்.

சோதனை என்னும் கடலில்  நாம் ஆழ்ந்து போகும் போது தான் நாம் ஆண்டவரே என்னைக் கைவிடாதிரும் என்று கதறுகிறோம். ஆனால் ஒவ்வொருநாளும், ஒவ்வொரு நொடியும் நாம் விழித்திருந்து ஜெபிப்பது எத்தனை அவசியம்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

Leave a comment