கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1784 யார் இந்த யேசபேல்?

1 இராஜாக்கள் 16:31 – 33  நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு,  தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தை எடுப்பித்தான். ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்துவந்தான்.

இதை வாசிக்கும்போது என்னுடைய அம்மாவின் ஞாபகம் அதிகமாக வந்தது. யேசபேல் என்ற பெண்ணைப் பற்றி முதன்முதலில் எனக்குக் கூறியது அம்மாதான்.

நான் சென்னையில் படித்துக் கொண்டிருந்தபோது,  ஏதோ ஒன்றை என்னுடன் படித்த ஒருசில பெண்களின் தூண்டுதலால் அணிய ஆசைப்பட்டேன் என்று நினைக்கிறேன். அம்மா என்னிடம் என் மகள் யேசபேல் மாதிரி போகிறது எனக்கு விருப்பம் இல்லை என்றார்கள்! உண்மையில் அநேகருடைய மனதில்  யேசபேலை வெறும் அலங்காரமான, ஆடம்பரமான பெண்ணாக  சித்தரித்துளார்கள் என்று நினைக்கிறேன். என்னுடைய அம்மாவின் மனதிலும் அந்தக் கற்பனைதான் இருந்தது போலும்!

யேசபேல்! யார் அந்த யேசபேல்?????  என்ற கேள்வி எழும்போது நம்முடைய கற்பனையில் கூட , தன்னை அதிகமான ஆடம்பரத்தால் அலங்கரித்துக் கொண்டுள்ள பெண்ணின் உருவம் நம் கண் முன்னால் வருகிறது அல்லவா! நாம் கேள்விப்படுகிறவைகளைக் கொண்டு சிலரை சித்தரித்து விடுகிறோம் ஆனால் அவர்களுடைய உண்மையான ரூபம் அதற்குள்ளே ஒளிந்து விடுகிறது. ஆம்! யேசபேல் கூட அப்படித்தான்! நம்முடைய கற்பனயில் அவளுடைய ஆடம்பர வெளிபுறம் தோன்றுகிறது ஆனால் ஆபத்தான உட்புறம் மறைந்து விடுகிறது!

கடந்த சில வாரங்களாக நாம் எலியாவை தேவனாகியக் கர்த்தர் எவ்விதமாக வழி நடத்தினார் என்பதைப் பற்றிப் படித்தோம். பாகாலுடைய தேசமாகிய சீதோனில்கூட தேவன் அவனுக்காக ஒரு விதவைத் தாயை ஆயத்தம் பண்ணியிருந்தார். அவளுடைய இருதயம் ஒரு நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையைப் போல தேவனுடைய இரக்கத்தைப் பற்றிக்கொண்டது.

இப்பொழுது நாம் யேசபேலைப் பற்றி சில நாட்கள் படிக்கலாம் என்று நினைக்கிறேன். என்ன சொல்லுகிறீர்கள்? இந்தப் பெண்ணைப் பற்றிப் படிக்க என்ன இருக்கிறது என்றா?

இந்தப்பெண் அவளுடைய தகப்பன் ஆண்டு கொண்டிருந்த தேசத்தில் இல்லாமல் எலியா வாழ்ந்து கொண்டிருந்த இஸ்ரவேலின் 10 கோத்திரங்களுக்கு ராணியாக எழும்புகிறாள். பாகாலுடைய வழிபாட்டு மையத்தில் இல்லாமல் இஸ்ரவேலின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேவதையாக வருகிறாள்.

வருந்தத்தக்க  காரியம் என்னவென்றால்,  அவளுடைய கணவன் ஆகாப் இஸ்ரவேலின் சிங்காசனத்தில் ராஜாவாக இருந்ததால்தான் இந்தப் பெண் யேசபேல், தேவனுடைய பிள்ளைகள் வாழ்வில் தன்னுடைய பெலத்தைக் காட்ட முடிந்தது. அரசியலிலும், ஆராதனையிலும் தலைமையாக இருக்க வேண்டிய அரசன், அந்த மக்களை இழிவான நிலைக்கு கொண்டு சென்றான். ஏனெனில் அவன்  யேசபேலை இஸ்ரவேலுக்கு அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் அவளுடைய தெய்வமாகிய பாகாலையும் இஸ்ரவேலின் தெய்வமாக்கினான்.

யேசபேலைப் பற்றி சில வாரங்களாக நான் படித்ததில் எனக்கு ஒரு கேள்வி எழுந்தது! யேசபேல் என்பவள் நம் வாழ்க்கையில் நம்மை ஏமாற்றுபவளாகவும், அதே சமயத்தில்  நம்மைத் தன்னிடம் ஈர்க்கக் கூடியவளாகவும்  வந்தால், அந்த யேசெபேலை நாம் யாரென்று எப்படி கண்டு கொள்ள முடியும்? ஏனெனில் அவளுடைய சாகசம் அவளுடைய கணவன் வீட்டை மட்டும் அல்ல, மொத்த தேசமுமே அவளிடம் விழும்படியாக இருந்தது!

இந்தப் பெண்ணின் குணங்களை ஆராயும்போது, அவள் யாரை ஆராதித்தாள் என்பதை கவனிக்க வேணியது உள்ளது. அவள் நேசித்த, ஆராதித்த பாகால் அவளைத் தீவிர மதவாதியாகவும், தீவிரவாதியாகவும் மாற்றி விட்டான். ஒருவரை அல்லது ஒரு பொருளை நீ அதிகமாக நேசிக்கும்போது நீ அதைக்குறித்து பைத்தியமாவது போல.

அவள் சென்ற பாதை அவளுக்கு கடினமாகவேயில்லை ஏனெனில் இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது, ஆகாபுக்கு அவனுக்கு முன் ஆட்சி செய்த  யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது கொஞ்ச காரியமாகத் தோன்றியது என்று. உங்களுக்கு ஞாபகம் இருக்குமானால், இந்த யெரொபெயாம் தான் மக்கள் தொலைதூரம் போய் இஸ்ரவேவேலின் தேவனை வணங்க வேண்டாம் என்று மிகுந்த அக்கறையோடு பெத்தேலிலும், தாணிலும் இரண்டு கன்றுக்குட்டிகளை தெய்வங்களாக செய்வித்தவன். அதுமட்டுமல்லாமல்,

அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தின் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான். (1 இராஜாக்கள் 12 : 31) 

ஆகாப் சிங்காசனம் ஏறியபோதே பரிசுத்தமான தேவனுடைய ஆராதனை வேடிக்கையான கேளிக்கை ஆகிவிட்டது. பரிசுத்த தேவன் விரும்பியது இந்த ஆராதனை அல்ல! புறஜாதியான ராணியின் வருகையும், அவள் தன்னோடு கொண்டுவந்த தெய்வமும் இஸ்ரவேலின் மொத்த ஆராதனையும் பரிசுத்தமான தேவனை விட்டு பாகாலை சென்று அடைந்தது.

இன்று நம்முடைய ஆராதனை எப்படி உள்ளது?

நம்முடைய நினைவுகள் பரிசுத்தமான தேவனை நோக்கி உள்ளதா?

நம்முடைய உள்ளம் தேவனுடைய சத்தியத்தால் நிறைந்திருக்கிறதா?

உலகப்பிரகாரமான எல்லாவற்றையும் விலக்கிவிட்டு தேவனுடைய அழகை மட்டும் ஆராதிக்கிறோமா?

தேவனுடைய அன்பு என் உள்ளத்தில் ஊற்றப் படுகிறதா?

என்னுடைய சித்தத்தை தேவனுடைய சித்தத்துக்கு ஒப்புக்கொடுக்கிறேனா?

இவையெல்லாம் உங்களுக்கு சம்பந்தமேயில்லை என்றால் உங்கள் ஆராதனை பொய்யான ஆராதனையே! இதை நாம் உணர ஆரம்பிக்கும்போது நம்மை ஏமாற்றும் யேசபேலை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்! அவளுடைய பிடியிலிருந்து விலகி ஓட முடியும்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

 

1 thought on “இதழ்:1784 யார் இந்த யேசபேல்?”

Leave a comment