கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1117 நான் பயப்படும் வேளை உம்மையே பற்றுவேன்!

உபாகமம்: 33:3  மெய்யாகவே அவர் ஜனங்களை நேசிக்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து…

மோசே தன் வாழ்க்கையை கன்மலையாகிய கர்த்தரின் மேல் கட்டியிருந்தான், கர்த்தரை முகமுகமாய் அறிந்திருந்தான் என்று பார்த்தோம். நம்முடைய வாழ்க்கையும் கற்பாறையாகிய கிறிஸ்து இயேசுவின் கட்டப்பட்டால் எந்த புயல் வீசினும், எந்த அலை வந்தாலும் அது நிலைத்திருக்கும் என்று பார்த்தோம்.

ஒரு வீட்டின் அஸ்திபாரத்தை கன்மலையின்மேல் போட்டால் மாத்திரம் போதாது. அந்த வீடு நிலைத்திருக்க நல்ல தூண்கள் வேண்டும் அல்லவா? அப்படிப்பட்ட தூண்களில் ஒன்றுதான் இந்த வசனத்தில் “அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து” என்று நாம் பார்க்கிறோம். இது ஆங்கில வேதாகமத்தில் உம்முடைய பாதத்தில் அமர்ந்து என்று எழுதப்பட்டுள்ளது.

இவற்றில் எனக்கு தமிழ் மொழியாக்கமே மிகவும் பிடித்தது. அது எபிரேய மொழியாக்கத்தைப் போலவே இருந்தது. பாதத்தில் விழுந்து என்றால் என்ன?

இந்த வார்த்தை எனக்கு என் சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தைதான் நினைவுபடுத்தியது! நாங்கள் திருச்செந்தூர் தாலுக்காவை சேர்ந்த நாசரேத்து என்ற ஊரில் வாழ்ந்து கொண்டிருந்தோம்! அம்மா ஒருநாள் தாலுக்கா ஆபீசுக்கு போக வேண்டியதிருந்ததால் என்னையும் கூட அழைத்துச் சென்றார்கள். வேலை முடிந்தவுடன் கடற்கரைக்கு சென்றோம். அதுதான் முதல்தடவையாக நான் கடலைப் பார்த்த அனுபவம்! அம்மாவுடைய கையைப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தேன். ஒரு பெரிய அலை என்னிடமாய் வந்ததும், பயத்தில் நான் அம்மாவின் கையை உதறிவிட்டு பின்னோக்கி ஓட முயன்றேன் ஆனால் கால் தடுக்கி கீழே விழுந்து, அம்மாவின் கால்களை இறுகப் பிடித்துக்கொண்டேன். அந்த அலை வந்துவிட்டு போகுமட்டும் நான் கால்களை விடவேயில்லை! 

 இதைத்தான் நான் இந்த வார்த்தையில் பார்க்கிறேன். நாம் கர்த்தருடைய பிள்ளைகளாக அவரோடு நடக்கும்போது, அவருடைய சத்தத்தைக் கேட்டு அவரைப் பின்பற்றும்போது, நாம் எதிர்பார்க்காத சோதனைகள், கடல் அலைகள் போல வந்து நம்மைத் தாக்கும் வேளையில் ஒருவேளை நாம் பயத்தில் இடறினாலும் அவருடைய பாதத்திலேயே விழுந்து, அவருடைய பிரசன்னத்தை உணர்ந்து, அவருடைய கரத்தைப் பற்றிக்கொண்டு எழும்பி மறுபடியும் அவரைப் பின் தொடரும் இயல்புதான் நம் வாழ்க்கையில் தூணாக அமையும்.

நம்முடைய வாழ்க்கை என்னும் வீட்டின் அஸ்திபாரம் கன்மலையாகிய கிறிஸ்து என்று பார்த்தோம்.  நம்முடைய வீட்டின் முதல் தூண் நாம் பயப்படும் வேளையிலும், நாம் இடறும் வேளையிலும், அவருடைய பாதத்தில் விழுந்து அவர் கால்களை விடாமல் பிடித்துக்கொள்ளும் வாழ்க்கை!

 நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் எந்த நேரத்தில் புயல் வீசும் என்று நம்மால் கூறமுடியுமா? சாத்தான் நம்மைத் தடுக்கி விழப்பண்ண அநேக இன்னல்களைக் கொண்டு வருவான். ஒவ்வொருநாளும் நீ வேலை பார்க்கும் இடத்திலும், உன்னுடைய  வீட்டிலும் நிம்மதியில்லாத வாழ்க்கையைக் கொடுத்து உன்னை இடறுதலடைய செய்வான். சூழ்நிலைகளைப் பார்த்து நீ கலங்கி பயமடையச் செய்வான்!  ஆனால் மோசே கூறியது போல நாம் செய்ய வேண்டியதெல்லாம்அவருடைய பாதத்தில் விழுந்து கிடப்பது ஒன்றுதான்! 

கர்த்தருடைய தாசனாகிய மோசே பலமுறை தவறினார் ஆனாலும் முற்றிலும் கவிழ்ந்து விடவில்லை. கால் தடுக்கி தவறின பொழுதும் கர்த்தருடைய பாதத்திலேயே விழுந்து அஸ்திபாரமாகிய கன்மலையின் மேலேயே தங்கியிருந்தார். 

உன் வாழ்க்கையிலும் நீ இடறும்போது அவர் பாதங்களைப் பற்றிக்கொள்! அவர் உன்னைக் கைவிட மாட்டார்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment