கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1931 துணிந்து விசுவாசி! வெற்றி உண்டு!

நியா: 4 : 8, 9 அதற்கு பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். அதற்கு அவள்; நான் உன்னோடே நிச்சயமாக வருவேன்….என்று சொல்லி, தெபோராள் எழும்பி, பாராக்கோடே கூடக் கேதேசுக்குப் போனாள்.

சென்னையில் கடற்கரை சென்று விட்டாலே , துறைமுகத்தை நோக்கி வரும் கப்பல்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிரியமானக் காரியம். கப்பல்கள் துறைமுகத்தை அடைந்துவிட்டால் அவை பத்திரமாக ஆபத்து இல்லாத இடத்துக்கு வந்துவிட்டன என்ற திருப்தி எனக்கு. தூரத்தில் தெரியும் கப்பலைக்கூட அருகாமையில் வரும்வரை கவனித்துக் கொண்டிருப்பேன்.

ஆம்! துறைமுகத்தில் கப்பல் பத்திரமாய் நிற்பதில் ஆபத்தே இல்லை, ஆனால் கப்பல்கள் அந்த நோக்கத்துக்காகவா கட்டப்பட்டன? அலைகளை எதிர்த்து, போராடி, ஆழ்ந்த கடலின் மேல் மிதந்து எத்தனைத் துணிகரமாகச்  செயல்படும்படி அவைகள் கட்டப்பட்டன!

துணிகரம்  என்றவுடன் அந்த வார்த்தையைப் பற்றி சற்று சிந்திக்க ஆரம்பித்தேன்!  துணிகரமான செயல்களைப் புரிந்த பெண்கள்தான் மனதில் வந்தனர்.

சகோதர்களே மன்னித்துக் கொள்ளுங்கள்! நான் பெண்களைப் பற்றி மாத்திரம் எழுதவில்லை என்று உங்களுக்கு நன்றாகவேத் தெரியும்! ஆனால், இயல்பாகவே பயந்த சுபாவம் கொண்ட பெண்கள் துணிந்து நிற்பது நம் மனதைக் கவரும் காரியம் அல்லவா!

தான் பிறந்த தேசத்தை விட்டு விட்டு எங்கு போகிறோம், எப்படி வாழ்வோம் என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் கணவன் ஆபிரகாமைப் பின் தொடர்ந்து வாக்குத்தத்தம் செய்யப்பட்ட கானானுக்கு பிரயாணம் செய்த சாராள் எவ்வளவு துணிகரமானப் பெண்!

தன்னுடைய பெற்றோரையும், சகோதரையும் , தன் தேசத்தையும் பிரிந்து, தான் அறியாத ஒருத்தனுக்கு மனைவியாகப் புறப்பட்டாளே ரெபேக்காள், அவள் துணிகரமானவள் அல்லவா!

தான் வாழும் தேசத்துக்கு எதிரியாய்க் கருதப்படும் தேசத்தின் வேவுகாரர் இருவரைத் தன் வீட்டில் மறைத்து வைத்து, அவர்களுடைய தேவனுக்கு பயந்ததால் , தன் உயிரைப் பணயம் வைத்து, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தாளே ராகாப், அவள் துணிகரமானவள் அல்லவா!

இந்த வேதாகமப் பகுதியில் நாம் படிக்கும் தெபோராள், துணிகரமாக ஆண்களின் உலகத்துக்குள் நுழைந்து, சேனாதிபதியைத் தட்டியெழுப்பி, யுத்த களத்துக்கு வழிநடத்தி, இஸ்ரவேலுக்கு வெற்றி வாங்கிக் கொடுத்தாளே அவள் துணிகரமானவள் இல்லையா!

கர்த்தருடைய சித்தத்தை பூமியில் நிறைவேற்ற தேவன் துணிகரமானவர்களைத் தெரிந்தெடுக்கிறார்! நேர்த்தியாய் செயல்படும், மன உறுதியோடு செயல்படும், துணிகரமாக செயல்படும் தேவபிள்ளைகள் அவருக்காக ஒளிர்விடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை!

நம்முடைய குடும்பத்தாரின் நிழலில், நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல வசதியானக் குடும்பம் என்ற ஆபத்தில்லாத சூழ்நிலையில் அழகான கப்பலாக கரையில் ஒதுங்கி நிற்க நாம் உருவாக்கப்படவும் இல்லை, தெரிந்துகொள்ளப் படவும் இல்லை!

எங்கள் கம்பெனியில் செய்து ஏற்றுமதி செய்த  எம்பிராய்டரி துணிகளில் அதிகமாக எல்லோருடைய மனதையும் கவர்ந்த ஒன்று,  சூரியன் மறையும் வேளையில், படகு ஒன்று காற்றில் அசைவாடி செல்வது போன்ற படமும், அதன் கீழே எழுதப்பட்ட

 தேவனே என்னைவிட்டு நீங்காதிரும்! இந்தக் கடலோ மகா பெரியது, என்னுடைய படகோ மிகச் சிறியது”  என்ற வாசகமும் தான்!

இந்த வருடத்தின் துவக்கத்தில்  தேவனுடைய கரத்தில் நம்மையும் நம்முடைய பயங்கள் யாவையும் ஒப்புக்கொடுத்து,  நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை துணிகரமன விசுவாசத்தில் தொடரக் கர்த்தர் நம் அனைவருக்கும் உதவி செய்வாராக!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment