கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2008 நம் விரல் நீட்டி சுமத்தும் அந்தப் பழி!

1 சாமுவேல் : 1:14 ” நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.”

நாம் அன்னாளைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம்.

தன்னுடைய கணவனின் அன்பைத் தாரளமாகப் பெற்றிருந்தாலும், அவள் மலடியாயிருந்த படியால் ஒவ்வொரு நாளும் பெனின்னாளில் எறியப்பட்ட சொற்களால் மடிவுற்றிருந்தாள். ஆனாலும் நம்மில் பலரைப் போல் தன்னுடைய வேதனைக்குக் கர்த்தர் தான் காரணம் என்று பழியைப் போடாமல், அவள் தேவனுடைய சமுகத்தில் தன்னை ஒப்படைத்து முறையிடுகிறாள் என்று பார்த்தோம்.

ஒருநிமிடம் அன்னாளின் இடத்தில் நம்மை வைத்துக் கொள்வோம். வேதனை மிகுதியால் நம் கண்களில் தாரை தாரையாக நீர் வடிய, வாயைத் திறந்து கர்த்தரிடம் முறையிட வார்த்தைகள் வராமல் தடைபட,உள்ளம் உடைந்து நொறுங்கிய வண்ணமாய் தலை தூக்க முடியாமல் தள்ளாடி நிற்கும் போது, நீ எவ்வளவு நேரம் இவ்வாறு குடிவெறியில் தள்ளாடிக்கொண்டிருப்பாய் என்று யாராவது நம்மிடம் கேட்டால் நமக்கு எப்படியிருக்கும்? இந்த சம்பவம் ஒருவேளை நாம் தேவனுடைய சமுகத்தில் இருந்தபோது நடந்தால், நம்மிடம் அந்த சபை போதகர் இப்படியானக் கேள்வியைக் கேட்டால் நாம் என்ன நினைப்போம்?

அன்னாளிடம் பேசி அவளுடைய நிலமையைத் தெரிந்து கொள்ளுமுன்னமே ஏலி அவள் மேல் குற்றச்சாட்டை எறிகிறான் என்று பார்க்கிறோம்.

அப்படியொரு  நிலைமையை யாராவது கடந்து வந்ததுண்டா? உங்கள் தரப்பு வாதத்தை எடுத்துக்கூற உங்களுக்கு இடம் கொடுக்காமலே உங்கள் மேல் பழி சுமத்தப்பட்டுள்ளதா?

வேதத்தில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு சம்பவம் உண்டு! அன்னாள் மேல் ஆசாரியனான ஏலி குற்றம் சுமத்தியதுபோலவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம், பரிசேயரும், வேதபாதகரும் ஒரு பெண்ணைக் கொண்டு வந்து நிறுத்தி அவள் விபசாரத்திலே கையும் மெய்யுமாய் பிடிக்கப்பட்டாள் என்று குற்றம் சுமத்தினர் (யோவான் 8:3-5). 

ஒரே ஒரு நிமிஷம்!

ஐயோ இந்த  தேவ தூதரைப் போன்ற பாவமறியாத பரிசுத்த மனிதர் எந்த இடத்துக்கு போய் அவள் விபசாரம் பண்ணுவதைப் பார்த்து கையும் மெய்யுமாய்ப் பிடித்தார்களோ தெரியவில்லையே????

அதுமட்டுமல்ல! பிடிக்கப்படுதல் என்ற வார்த்தை கிரேக்க மொழியாக்கத்தில் பிடிக்கும்படியான ஆவல் என்ற அர்த்தத்தைக் கொண்டு வருகிறது. அப்படியானால் அவளைப் பிடிக்கவேண்டுமென்ற ஆவலில் அவர்கள் காத்திருந்து, அவளை மேற்கொண்டு, பிடித்துக் கொண்டு வந்து, அவள் மூலமாக இயேசுவின் மேல் குற்றம் கண்டு பிடிக்கும் படியாய் அவளைப் பகடைக்காயாய் உபயோகப் படுத்தினர் என்று பார்கிறோம்.

இந்த இடத்தில் ஏலியின் செயலின் விளக்கமும் எனக்கு சற்று புரிகிறது. ஏலியின் குமாரரின் நடத்தையால் பல விரல்கள் அவன் மேல் குற்றம் சாட்டிக் கொண்டிருந்த வேளையில், இந்த அப்பாவிப் பெண்ணைப் பார்த்தவுடன் விரலை நீட்டி அவள்மேல் குற்றம் சுமத்தி தன் சூட்டை தணித்துக் கொண்டான் போலும்.

இன்றைய சமுதாயத்தில், ஒருவர் மற்றொருவருடைய தவறுதலை மைக் வைத்து கூச்சல் போட்டு உலகத்துக்கு அறிவிப்பதின் மூலம் , தன்னுடைய பாவத்தை மூடி மறைக்க முயற்சி செய்வதை நாம் காண்கிறோம்.

இன்று யாரையாவது நாம் தவறாக குற்றப்படுத்தி நம்முடைய விரல் நீட்டி பழி சுமத்தியிருக்கிறோமா?

ஒருவர் மீதும் காரை ஏற்றிக் காயப்படுத்த விரும்பாத கிறிஸ்தவர்களான நாம் ஏன் நம்முடைய நாவால்  மற்றவர்களத் தாக்குகிறோம்? 

நாம் மற்றவர் மேல் நம்முடைய ஆள்காட்டி விரலை நீட்டி பழி சுமத்தும் முன், நம்முடைய மற்ற விரல்கள் அனைத்தும் நம்மையே சுட்டிக் காட்டுகின்றன என்பதை மறந்து விடக் கூடாது!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment