கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:2174 ஐயோ! எங்கேயோ கரிந்த வாடை வருகிறதே!!!

1 சாமுவேல் 11: 26,27  தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள்தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள். துக்க நாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக் கொண்டான். அவள் அவனுக்கு மனைவியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்.

கற்பு என்பது  நமக்கும் அழகு!  நம்முடைய ஆத்துமத்துக்கும் அழகு! பாவத்துக்கு பயந்து வாழும் வாழ்க்கையை விட கற்புடன் வாழ்வதை நேசித்தால் நலம்!

 இதை வாசிக்கும் போது இன்றைய வேதாகமப்பகுதியில் இருந்து என்ன படிக்கப்போகிறோம் என்று புரிகிறது அல்லவா?

அன்று பத்சேபாளின் கதவு தட்டப்பட்டது! போர்க்களத்திலிருந்து செய்தி! என்னவாயிருக்கும்! மாவீரன் உரியா  மறைந்து விட்ட செய்தி! உன்னுடைய அன்புக் கணவன் மரித்துவிட்டான் என்ற செய்தி.

பத்சேபாளுக்கு எப்படி இருந்திருக்கும்? வேதம் சொல்கிறது அவள் தன் நாயகனுக்காக துக்கம் கொண்டாடினாள் என்று.  எத்தனை நாள் துக்கம் தெரியுமா? ஏழே நாட்கள்தான்.  உண்மையாக சொல்லப்போனால் உரியாவின் உடல் குழிக்குள் இறங்கி எட்டாம் நாளில் அவள் தாவீதுக்கு மனைவியாகிறாள்.

நான் பத்சேபாளை சந்திக்க நேர்ந்தால் ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். என்ன கேள்வி தெரியுமா? உன் புருஷனை கொன்ற ஒருவனை எப்படி உன்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது என்றுதான். சிலர் சொல்கின்றனர், பத்சேபாளுக்கு தன் கணவன் படுகொலை பண்ணப்பட்ட விவரம் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை என்று.

ஆனால் பெண்களே சொல்லுங்கள்! நம்மால் இதை உணர முடியுமா? முடியாதா? நம்முடைய உள்ளுணர்ச்சி நிச்சயமாக இதை நமக்குக் காட்டும். தான் தாவீதால் கர்ப்பவதி ஆகிவிட்டதை தாவீதுக்கு தெரிவித்து சில நாட்களிலேயே அவளுடைய, வாலிபனான, போரில் திறமையான, தைரியசாலியான கணவன் மரித்து விட்டான்.

நான் பத்சேபாளின் இடத்தில் இருந்திருந்தால் நிச்சயமாக எங்கோ கரிந்து விட்டது என்று முகர்ந்திருப்பேன். ராஜ கிரீடம் தரித்து சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் ராஜா ஒரு நரி என்று உணர்ந்திருப்பேன்.

முதல் தடவை தாவீது அவளை அடைய விரும்பி ஆள் அனுப்பியபோதே அவள் முடியாது என்று சொல்லி  இருக்கலாம். அவள் கணவன் இறந்து துக்கம் கொண்டாடிய பின்னர் மறுபடியும் அவளுக்காக ஆள் அனுப்பியபோது முடியாது என்று சொல்லியிருக்கலாம். அவர்கள் இருவரும் ஆடிய கபட நாடகத்தை மறைக்க அவள் அரண்மனைக்குப் போய் அவனைத் திருமணம் செய்கிறாள்.

கர்ப்பவதியான அவளால் அந்த செய்தியை அநேக நாட்கள் மறைக்க முடியாது. போர்க்களத்தில் கணவன் இருந்தபோது இவள் எப்படி கர்ப்பந்தரித்தாள் என்ற கிசுகிசுப்பு பரவ ஆரம்பிக்கும்.  தாவீதும் அவளும் செய்த பாவத்தை எப்படியாவது மறைக்கவேண்டும் என்றே இந்த உடனடி முடிவு எடுக்கப்பட்டது.

தாவீதுக்கு தான் விரும்பிய பெண் கிடைத்து விட்டாள். அவளுக்கோ யாரும் அவள் கற்பின்மேல் குற்றம் கண்டுபிடிக்கவே முடியாது.  கற்புக்கரசி அல்லவா!

ஆனால் அவளுடைய குமாரனான சாலொமோனோ தன்னுடைய நீதிமொழிகளின் புத்தகத்தில் ( 28:13) தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்: அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்கிறான். தன் தாயும் தகப்பனும் செய்த சதி வேலைகள் அவனுக்குத் தெரிந்திருந்தனவோ என்னவோ?

நம்முடைய நடத்தையில்  பரிசுத்தம் இல்லாமல் ஆத்துமாவைப்பற்றி பேசுவதால் என்ன பயன்?

நடத்தையில் பரிசுத்தம் இல்லாமல் ஆலயப்பணிகளில் ஈடுபடுவதால் பலன் என்ன? இன்று நம்மில் எத்தனை பேர் இப்படி நம் பாவத்தை மறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்?

கற்போடும், பரிசுத்தத்தோடும் வாழ பெலன் தருமாறு கர்த்தரை நோக்கி ஜெபிப்போமா?

உங்கள் சகோதரி

Dr பிரேமா சுந்தர் ராஜ்

1 thought on “இதழ்:2174 ஐயோ! எங்கேயோ கரிந்த வாடை வருகிறதே!!!”

  1. கற்புடைய மாந்தரின் பிறப்பிடம் தமிழகம். மிக்க நன்றி.

Leave a reply to Nagarasan Kaliannan Cancel reply