Archive | October 2010

ஜெபக்கூடாரம்!

                         

    ஆயிசு நாட்களை கூட்டிய ஜெபம்

 

ஏசா:  38:5 நீ போய் எசேக்கியாவை நோக்கி:  உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் விண்ணபத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்

 

ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம் ஜெப வேண்டுதல்களோடு வருகிற நாள்.

இன்றைய வேத வசனத்தில், எசேக்கியா ராஜா வியாதிப்பட்டு இருக்கையில், அவன் அழுது ஜெபித்தபோது, கர்த்தர் ஏசாயா தீர்கதரிசி மூலமாய் கொடுத்த வாக்குத்தத்தத்தை வாசிக்கிறோம். வேதம் சொல்கிறது அவன் வியாதி நீங்கி சொஸ்தமானான் என்று.

தேவன் இன்று நம் குடும்பத்தில் உள்ள வியாதியை சொஸ்தமாக்க வல்லவர்  என்ற விசுவாசத்தோடு ஜெபிப்போம்.

எசேக்கியாவைப் போல நாமும் மனங்கசந்து , தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணுவோம். அவர் நம் வேண்டுதல்களைக் கேட்பார்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

மலர்:1இதழ்:50 திம்னாவுக்கு போகிற வழியில்……

ஆதி:  38:14,15  “ சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாக கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை களைந்து போட்டு, முக்காடிட்டு தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்கு போகிற வழியிலிருக்கிற நீருற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.

யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்த படியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து

நேற்று நாம் தாமாருக்கு இழைக்கப் பட்ட அநியாயத்தை கர்த்தர் கண்டார் என்று பார்த்தோம். இன்றைய வேத பகுதியில் நான் தாமார் நடந்து கொண்ட விதத்தை படித்தபோது, ஒரு பெண் தன்னை தானே இவ்வளவு கீழ்த்தரமாய் நடத்த முடியுமா என்று நினைத்தேன்.

ஏதோ நாடகத்தில் நடிகர்கள் வேஷம் மாற்றுவதைப் போல தாமார் தன் கைம்பெண் வேஷத்தை கலைத்துவிட்டு, தன்னை வேசியைப் போல அலங்கரித்துக் கண்டு தாமார் திம்னாவுக்கு போகிற வழியில் நீருற்றண்டையில் அமருகிறாள்!

 நம்மில் எத்தனை பேர் உள்ளான வாழ்க்கையை மூடி மறைத்துவிட்டு வெளிப்புறமாய் அலங்கரித்துக் கொள்கிறோம்? என்னுடைய நிறுவனத்தில் வேலை செய்த  ஒரு பெண் கல கலவென்று சிரித்துக் கொண்டே இருப்பாள். அவளை ஒரு நிமிடம் நிறுத்தி எப்படி இருக்கிறாய் என்று கேட்பேனானால், உடனே கண்களில் நீர் பெருக்கெடுத்துவிடும். சிறுகுழந்தை போல சிரிக்கும் இவளுக்குள் இவ்வளவு பெரிய வேதனை மறைந்திருக்கிறதா என்று ஆச்சரியமாயிருக்கும்.

 தாமார் தன் முதல் கணவன் ஏரினால் சரியாக நடத்தப்படவில்லை, அவனுடைய சகோதரன் அவளை அவமதித்தான். அவள் மாமனார் யூதா அவளுக்கு மதிப்பு கொடுத்ததாக தெரிய வில்லை. அந்த காலத்தில் இருந்த எல்லா ஆண்களையும் போல பெண்களை பிள்ளைகள் பெற்கும் இயந்திரமாகவே பார்த்தான். அவனுடைய வீட்டு மருமகளான அவளை அன்புடன் நடத்துவதற்கு பதிலாக, இளம் பெண் தாமாரை, அவள் வீட்டில் விதவை கோலத்தில் தன் மகன் பெரியவனாகும் வரை காத்திருக்க அனுப்பினான்.

இப்பொழுது யூதா தன்  மனைவி மரித்து போன பின்னர், பெண் ஆசை பிடித்து வேசியை தேடி அலைகிறான் என்று பார்க்கிறோம். அவன் செய்த பெரிய குற்றம் என்னவெனில்,  அவன் ஆசை வெறியில் அடையாளம் தெரியாமல், அவன் மருமகளாகிய தாமாரை ஒரு வேசி என்று எண்ணி நெருங்கியதுதான்!

 யூதா , நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்து உதித்த யூத குலத்தின் தகப்பன், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் பிள்ளைகளில் ஒருவன், ஒரு வேசியை தேடி அலைந்து, தான் வேசி என்று நினைத்த தன் மருமகளிடம் சேருகிறான்!  சில தினங்களுக்கு முன்பு நாம் படித்த,  தீனாள், சீகேம் விஷயத்தில், யாக்கோபு தன் குமாரரைப் பார்த்து கூறிய விதமாய்,  தெரிந்து கொள்ளப் பட்ட ஜனமாகிய இவர்கள் தங்கள் வாசனையை கானானியர் முன்பு கெடுத்தார்கள்.

 கர்த்தர் ஏன் இந்த கதையை வேதத்தில் இடம் பெற செய்தார்? தாமாரின் வாழ்க்கையில் நாம் கற்றுகொள்ள என்ன இருக்கிறது என்று நாம் எண்ணலாம். ஒவ்வொரு மனிதனாலும் அலட்சியமாய் நடத்தப் பட்ட தாமார்,  தான் வாழ வேண்டிய வீட்டிலிருந்து கைம்பெண்ணாய், தகப்பன் வீட்டுக்கு துரத்தப்பட்ட இவள், திடீரென்று தன் ‘நல்ல பெண்’ வேஷத்தை கலைத்துவிட்டு, முக்காடிட்டு கீழ்த்தரமான வேசியின் வேஷத்தை அணிந்து கொண்டது ஏன்? என்ன ஆயிற்று அவளுக்கு? அவள் தன் கணவன் ஏர் போல கெட்டவள் இல்லை, ஓனான் போல கர்த்தருடைய கட்டளையை அவமதிக்கவில்லை, யூதாவின் வஞ்ச புத்தி கூட இல்லை? பின்னர்  ஏன் இப்படி செய்தாள்? ஏன் தன்னை அவமானத்துக்குட்படுத்தினாள்?

தாமார் தன் அவல நிலையை மாற்றுவதாக எண்ணி, தன்னை கேவலப் படுத்தினாள்! தன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக எண்ணி, தன்னையே கேள்விக் குறியாக்கினாள் என்று பார்க்கிறோம்.

 என்றாவது , என்னை நானே மதிக்காத அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறேனா? நான் செய்த ஏதாவது ஒரு  காரியம் என்னை நானே வெறுக்கும் படி இருந்ததா? தாமாரைப் போல முக்காடிட்ட வாழ்க்கையை வாழ்கிறேனா? முகத்திரைக்கு பின்னால் என் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்னுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாய் எண்ணி என்னை நானே வெறுக்கும்படி நடந்து கொண்டிருக்கிறேனா? சிந்தித்து பார்ப்போம்!

வேதம் I கொரி:6:20 ல் கூறுகிறது, “ கிரயத்துக்கு கொள்ளப்பட்டீர்களே; ஆதலால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும், உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்”என்று.  நாம் அவருடைய விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே  கிரயத்துக்கு கொள்ளப்பட்டிருக்கிறோம், நம்மை கேவலமாக விற்பதற்கு அல்ல! நம் தாயின் கருவில் நாம் உருவாகும்போதே கர்த்தர் நம்மை அவருடைய  சித்தப்படி உபயோகப் படுத்துவதற்காகவே  உருவாகியிருக்கிறார்.  நம்முடைய இஷ்டப்படி, முக்காடிட்டு, வேஷம் மாற்றுவதற்காக அல்ல!

 ஜெபம்: ஆண்டவரே! திம்னாவுக்கு போகும் வழியில், பாவம் கண்களை மூட செய்யும் இடத்தில் உள்ளேன்! என்னை விடுதலையாக்கும். ஆமென்!

மலர்:1 இதழ்: 49 உன்னைக் காண்கிற கண்கள்!

ஆதி:  38:6,7  யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்கு தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான்.

யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால் கர்த்தர் அவனை அழித்து போட்டார்.

 நேற்று நாம் யோசேப்பை அவன் சகோதரர் இஸ்மவேலருக்கு விற்று போட்டதைப் பற்றி பார்த்தோம். யோசேப்பின் வாழ்வை நாம் தொடரு முன் வேதத்தில் தாமார் என்ற பெண்ணின் கதையை வாசிக்கிறோம். நம்முடைய இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில்  (மத்: 1:3)  இடம் பெற்ற இந்த பெண் யார்? இவள் கதை எதனால் வேதத்தில் இடம் பெற்றுள்ளது? நமக்கு என்ன போதிக்கிறது? என்று சில நாட்கள் தியானிப்போம்.

 ஆதி: 49:10  யூதாவின் குலத்தில் சமாதான கர்த்தர் உதிப்பார் என்று கூறுகிறது. அதனால் யூதாவின் குடும்பத்தில் நடந்த எல்லா சம்பவங்களுமே ஆதியாகமத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளன. ஆதி 37 ல் யோசேப்பு விற்க படுவதையும்,   39 ல் அவன் கதை போத்திபார் வீட்டில் தொடர்வதையும் படிக்கிறோம். ஆனால் இடையில் இந்த   38 ம் அதிகாரம், யூதா, தாமார் கதையை நமக்கு கூறாமல் இருக்குமானால், மத்தேயு இயேசுவின் வம்ச வரலாறு எழுதியதில் இடம் பெற்ற தாமார், பாரேஸ் இவர்கள் யாரென்று நமக்கு தெரியாமல் போயிருக்கும்.

 தயவு செய்து நினைவு படுத்தி பாருங்கள்! யாக்கோபின் புத்திரர், அவர்கள் சகோதரி தீனாளை கெடுத்த சீகேமை, அவன் அவளை திருமணம் செய்ய தயை செய்யுமாறு வேண்டி நிற்கையில், அவன் கானானியன் என்பதால், அவனையும், அவன் பட்டணத்தார் அனைவரையும் பட்டய கருக்கினால் வெட்டி கொலை பண்ணினார்கள்.சில அதிகாரங்களே கடந்து வருகிறோம்! இங்கு யாக்கோபின் புத்திரனாகிய யூதா ஒரு கானானியப் பெண்ணாகிய சூவாவை கண்டு, விவாகம் பண்ணி, அவளோடே சேர்ந்தான் என்று பார்க்கிறோம். இவனுக்கும், தீனாவை விரும்பிய சீகேமுக்கும் என்ன வித்தியாசம்? ஆபிரகாமும், ஈசாக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு கானானியரில்  பெண் கொள்ளக் கூடாதென்று அக்கறை காட்டினர், ஏனெனில் உடன்படிக்கையின் பிள்ளைகளாகிய இவர்கள், கானானியருடைய விக்கிரகங்களுக்கும், விபசாரங்களுக்கும் அடிமையாகக் கூடாது என்பதால் தான்.

 ஆனால் யாக்கோபின் புத்திரர் தங்கள் தகப்பனாகிய ஆபிரகாமும், ஈசாக்கும் வெறுத்த பாவத்தை செய்தனர் என்று பார்க்கிறோம்.

 யூதாவுக்கு மூன்று புத்திரர் பிறந்தனர். மூத்தவன் ஏர் , திருமண வயதான போது, யூதா அவனுக்கு தாமார் என்ற பெயருள்ள பெண்ணை திருமணம் செய்து வைக்கிறான்.ஆதி 38:7 ல் வேதம் கூறுகிறது,  கர்த்தர் ஏர் என்பவனை அழித்துபோட்டார் ஏனெனில் அவன் கர்த்தர் பார்வைக்கு பொல்லாதவனாய் காணப் பட்டான் என்று. தேவனுடைய இந்த நியாயத்தீர்ப்பை பெரும் அளவுக்கு அவன் என்ன பாவம் செய்தான் என்று தெரியாது! அவன் உயிர் வாழும் தகுதியை இழந்தான் என்று அறிகிறோம்.

தேவன் தம்முடைய கரத்தினால் அவனை அழிக்கும்படி வாழ்ந்த அவன் தன் மனைவியை எப்படி நடத்தியிருப்பான்? ஒரு கணம் சிந்தியுங்கள்!  இதைப் பற்றி வேதம் நமக்கு கூறாவிட்டாலும், கர்த்தர் இந்தப் பெண் தாமாரின் மேல் காட்டிய மிகுந்த கிருபைக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லவா? இந்த பெண்ணை அவன் இரக்கமில்லாமல் நடத்தியதால் கர்த்தர் அவனை அழித்திருப்பாரோ?

ஏரை தேவன் அழித்த பின், யூதா தன் இரண்டாவது குமாரன் ஓனானை தாமாரின் மூலமாய் அவன் தமையனுக்கு சந்ததி உண்டாக்க சொல்கிறான். அவன் தாமாருக்கு ஒரு குழந்தையை கொடுக்க விரும்பாமல், அவளை பாலியலினால் அவமதிக்கிறான். அவனுடைய செயல் கர்த்தருடைய பார்வையில் பொல்லாததாயிருந்ததால் அவனையும் அழித்துபோட்டார் என்று வேதம் சொல்கிறது.

இப்பொழுது யூதாவுக்கு மிஞ்சியது ஒரே ஒரு குமாரன் சேலா என்பவன் தான். அவனும் அழிந்து விடுவானோ என்ற பயத்தில் யூதா, தாமாரை நோக்கி, சேலா பெரியவனாகும் வரைக்கும் உன் தகப்பன் வீட்டிலேயே கைம்பெண்ணாக தங்கியிரு என்று சொன்னான். சேலா பெரியவனான பின்பும், யூதா அவன் சொன்ன வார்த்தையை காப்பற்ற வில்லை. அவள் விதவையாக, பிள்ளையில்லாதவளாக, மரித்து,  எல்லோராலும் மறக்கப் பட வேண்டும் என்பது அவன் எண்ணம். அப்படி நடந்ததா? தாமாரின் பெயர் இன்று இயேசு இரட்சகரின் வம்ச வரலாறில், வேதத்தில் அல்லவா இடம் பெற்றிருக்கிறது! எவ்வளவு பெரிய கிருபையை அவர் தாமார் மீது காட்டியிருக்கிறார்.

 பெண்களுக்கு சரீரரீதியாகவோ, மனரீதியாகவோ இழைக்கப்படும் துன்பத்தை கர்த்தர் பார்க்கிறார். பெண்களே! இது உங்கள் மனதில் பதியட்டும்! இரக்கமுள்ள கர்த்தர், உன் உள்ளத்தை வார்த்தைகளால்  குத்துகிறவனைப் பார்க்கிறார்! உன்னை காலால் உதைப்பவனைப் பார்க்கிறார்!  உன்னை சரீரரீதியாய் வதைக்கிறவனைக் காண்கிறார்! பயப்படாதீர்கள்! அவருடைய இரக்கம் உன்னை விட்டு விலகாது. தாமாரைக் கண்ட தேவன் உன்னையும் காண்கிறார்!

 ஜெபம்: ஆண்டவரே! உம்முடைய இரக்கத்துக்கு அளவே இல்லை! நீர் என்னைக் காண்கிற தேவன்! ஸ்தோத்திரம்! ஆமென்!

மலர்:1 இதழ்: 48 தம்பி ஒரு முள்!

 

ஆதி:  37:3 “ இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்பு தனக்கு பிறந்ததினால் இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்கு பலவருணமான அங்கியை செய்வித்தான்

 

அப்பாவுக்கு தம்பியை தான் மிகவும் பிடிக்கும், அவனுக்கு தான் எல்லாம் செய்வார்கள், அம்மாவுக்கு அக்கா தான் உயிர், அவளுக்குத்தான் எல்லாம் கிடைக்கும், நான் என்றால் ஆகாது… என்றெல்லாம் பிள்ளைகள் குறை கூறுவதை கேட்கிறோம். இந்த பிள்ளைகள் தாய் தகப்பனை நேசித்தாலும், அந்த பாசத்தின் நுனியில் ஒரு சிறிய மனஸ்தாபம்.

இது நம் குடும்பங்களில் மாத்திரம் அல்ல, பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் வாழ்ந்த யாகொபின் குடும்பத்திலும் நடந்தது. இதற்கு காரணம் உண்டு.

நாம் சற்று பின்னால் பார்ப்போம்! யாக்கோபுக்கு இரண்டு மனைவிகள், ராகேலும், லேயாளும். ராகேலுக்கு இரண்டு பிள்ளைகள் யோசேப்பும், பென்யமீன் இருவரும், லேயாளுக்கு ஆறு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண், தீனாளும் இருந்தனர். அவனுடைய இரண்டு பணிப்பெண்கள் மூலம் அவனுக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர்.

ஏசாவின் படை அவனுக்கு எதிராய் வருவதை அறிந்து அவன் தன் பணிபெண்களையும், அவர்கள் பிள்ளைகளையும், முன் வரிசையிலும், லேயாளையும் அவள் பிள்ளைகளையும் அடுத்த வரிசையிலும், ராகேலையும் யோசேப்பையும் மிகுந்த பாதுகாப்பான வரிசையிலும் நிறுத்தினான் என்று பார்த்தோம். நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் யோசேப்பின் இடத்தை தவிற என்னை எங்கு நிறுத்தியிருந்தாலும் என் தகப்பனை மன்னித்திருக்க மாட்டேன்.

ராகேல் மரித்தாள். யாக்கோபு அவள் பிள்ளைகள் இருவரையும் அதிகமாக நேசித்தான். எல்லாரையும் விட யோசேப்பை மிக அதிகமாக நேசித்தான். அவன் பல வருண அங்கியை செய்து யோசேப்பை உடுத்துவித்தது, சகோதரருக்குள் பொறாமை என்ற புகையை ஊதி விட்டது போலாகிவிட்டது.

ஆதி:37:4 கூறுகிறது அவன் சகோதரர் அவனிடம் பட்சமாய் பேசுவதை கூட நிறுத்தி விட்டார்கள்.

இந்த சமயத்தில் தான் யோசேப்பு தான் கண்ட சொப்பனத்தில் எல்லாரும் தன்னை வணங்குவதை கண்டதாக பறை சாற்றுகிறான். இது புகைந்த நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல ஆயிற்று. அவன் சகோதரர் அவனை பகைத்தார்கள் என்று வேதம் சொல்கிறது.

இந்த பின்னணியில், ஒருநாள் யாக்கோபு, யோசேப்பை அழைத்து சீகேமில் ஆடுகளை மேய்க்க சென்ற உன் சகோதரரின் ஷேமத்தை கண்டு வா என்று அனுப்பினான். யோசேப்பு அவர்களை தோத்தானில் கண்டு பிடிக்கிறான்.

ஆதி:37:18 கூறுகிறது அவன் தூரத்தில் வரும்போதே அவன் சகோதர்கள் அவனைக் கண்டு அவனை கொலை செய்ய வகை தேடினார்கள் என்று.

ரூபன் அவனை தப்புவிக்கும் எண்ணத்தில் அவர்கள் திட்டத்தை  மாற்றி அவனை ஒரு குழியில் தள்ளி விடும்படி கூறுகிறான், ஆனால் துஷ்ட குணம் உள்ள யூதா அவனை இஸ்மவேலருக்கு விற்று விட ஆலோசனைக் கொடுத்தான். தங்கள் காலில்  குத்திய முள்ளை பிடுங்கி  விடுவதாக நினைப்பு!

அவர்கள் யோசேப்பின் பல வருண  அங்கியை எடுத்து ரத்தத்தில் தோய்த்து யாக்கோபுக்கு  காட்டி துஷ்ட மிருகம் அவனை பட்சித்தது என்றார்கள். யாக்கோபை இது எவ்வளவாய் பாதிக்கும் என்ற அவர்கள் அப்பொழுது உணரவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் யாக்கோபு வேதனையில் துடித்த போது அவர்கள் குற்ற உணர்வு அவர்களை எப்படி வாட்டியிருக்கும்? இப்படிப் பட்ட பொறாமைக்கும், கொலை வெறிக்கும், வஞ்சனைக்கும் அவர்கள் எப்படி தள்ளப் பட்டார்கள்? சிறு வயதில் அவர்கள் மனதில் விதைக்கப்பட்ட விதை தானே?

யோசேப்பின் வாழ்வை அவர்கள் வேதனையில் ஆழ்த்தினாலும், நாம் தொடர்ந்து , கர்த்தர் அவன் வாழ்வின் முடிச்சுகளை எவ்வாறு நீக்கி அவன் மூலமாய் தன் சித்தத்தை எவ்வாறு நிறைவேற்றினார் என்று பார்ப்போம்.

ஜெபம்: ஆண்டவரே! பிள்ளைகளுக்குள் உள்ள பொறாமை, சண்டை, மனஸ்தாபம் எல்லாவற்றையும் நீக்கி, பிள்ளைகள் ஒருவரை ஒருவர் நேசிக்க உதவி தாரும். ஆமென்!

மலர்:1 இதழ்: 47 துக்கம் சந்தோஷமாய் மாறும்!

ஆதி:  35: 19 – 20 ராகேல் மரித்து பெத்லேகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்கு போகிற வழியில் அடக்கம் பண்ணப் பட்டாள்.

அவள் கல்லறையின் மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள் வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.

 

ராகேலுக்கு பிரசவ வேதனை கடுமையாக இருந்ததையும், அவள் பிறந்த குழந்தைக்கு பெனோனி என்று பேரிட்டதை யாக்கோபு மாற்றி பென்யமீன் என்று பேரிட்டான் என்று பார்த்தோம்.

ராகேல் தான் மறுபடியும் கர்ப்பவதியாய் இருப்பதை அறிந்தவுடன் பெரு மகிழ்ச்சி அடைந்திருப்பாள். ஏனெனில் அவள் மலடியாயிருந்து பட்ட நிந்தையை நீக்கி கர்த்தர் ஒரு குமாரனைக் கொடுத்தவுடன் அவனுக்கு அவள் (ஆதி:30:24) ‘இன்னும் ஒரு குமாரனைத் தருவார் என்ற அர்த்தத்தில் அவள்  ‘யோசேப்பு’ என்று பெயரிடுகிறாள்.  இன்னும் ஒரு குமாரனை பெற வேண்டும் என்ற அவள் உள்ளத்தின் வாஞ்சையை கர்த்தர் அறிந்து அவளுக்கு  பென்யமீனைத் தந்தருளினார். இப்பொழுது யாக்கோபுக்கு பன்னிரண்டு குமாரர்கள் ( பன்னிரண்டு கோத்திரங்களின் தகப்பன்மார்கள்) இருந்தனர் என்று பார்க்கிறோம்.

பென்யமீன் பிறந்தவுடன் ராகேல் மரித்தாள். யாக்கோபு ராகேலை எவ்வளவாக நேசித்தான்! அவளை மனைவியாய் அடைய பேராசைக்காரன் லாபானுக்கு பதினான்கு வருடங்கள் அடிமையாய் வேலை செய்தானல்லவா?

 நாம் நேசித்த ஒருவரை மரணம் பிரிக்கும் போது வருகிற துக்கம் தாங்க முடியாதது. என் இளம் பிராயத்திலேயே இந்த துக்கத்தை நான் அனுபவித்திருக்கிறேன். முதலில் என் அண்ணனையும், சில வருடங்களுக்கு பின்னால் என் அம்மாவையும் இழந்த வேதனையான அனுபவம் எனக்கு உண்டு.  பின்னர் எனக்கு அருமையானவர்கள் பலர் கணவரை அல்லது மனைவியை இழந்து , அல்லது மகனையோ, மகளையோ இழந்து தவித்து நிற்பதைப் பார்த்து வேதனைப்  பட்டிருக்கிறேன். மரணம் ஒரு சடுதியில் நம்மை நாம் நேசிக்கிறவர்களிடமிருந்து பிரித்து விடும்.

யாக்கோபு தன அருமை மனைவியை பெத்லேகேமிலே அடக்கம் பண்ணி, அந்த இடத்தில் ஒரு தூணை நிறுத்தினான் என்று வேதம் சொல்கிறது.  நான் பெத்லேகேம் ஊருக்கு சென்ற போது, அங்கிருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்தில் ராகேலின் கல்லறை என்று காட்டினர்.  ஆனால் எரே:31:15  ராமாவிலே ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுகிறாள் என்று  கூறப்பட்டிருக்கிறது. ராமா என்பது பெத்லேகேமிலிருந்து ஐந்து மைல் தூரத்தில் உள்ள ஒரு இடம்.

பென்யமீனின் பிறப்பு பெத்லேகேமிலே சந்தோஷத்தையும், ராகேலின் மரணம் துக்கத்தையும் கொண்டு வந்தது. ஆதி:48:7 ல் யாக்கோபு தான் மரிக்கும் தருவாயில் ( ஆதி: 48:7) “ நான் பதானை விட்டு வருகையில் கானான் தேசத்தில் எப்பிராத்தவுக்கு கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னண்டையிலே  மரணமடைந்தாள்: அவளை பெத்லேகேம் என்னும் எப்பிராத்தவுக்கு போகிற வழியிலே அடக்கம் பண்ணினேன் என்று

நினைவு கூர்ந்தான்.

அன்று யாக்கோபு  தன் மனைவியின் மரணத்தினால் பெத்லேகேமை நினைவு கூர்ந்தான், இன்றோ நாம் நம் இரட்சகரின் பிறப்பினால் பெத்லேகேமை நினைவு கூருகிறோம்.

பெத்லேகேம் என்றால் இன்று கண்ணீர் அல்ல! உலகத்துக்கு ஓர்  நற்செய்தி!

இயேசு கிறிஸ்து உலக மீட்பராய் வந்தததனாலே, துக்க சம்பவத்தோடு வேதத்தில் முதன் முதலில் இடம் பெற்ற இந்த பெத்லேகேம், மிகுந்த சந்தோஷத்தோடு உலகத்தாரால் நினைவு கூறப் படுகிறது!

ஜெபம்: ஆண்டவரே! துக்கத்தை சந்தோஷமாக மாற்ற உம்மால் மாத்திரம் தான் ஆகும்! என் வாழ்வின் கண்ணீரை மாற்றி சந்தோஷத்தை தாரும்.

 

மலர்:1 இதழ்: 46 எனக்கு ஏன் இந்த வேதனை?

ஆதி:  35:16 – 19 “ பின்பு பெத்தேலை விட்டு பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னுங்கொஞ்சம் தூரம் இருக்கும்போது ராகேல் பிள்ளை பெற்றாள். பிரசவத்தில் அவளுக்கு கடும்வேதனை உண்டாயிற்று.

பிரசவிக்கும்போது அவளுக்கு கடும் வேதனையாயிருக்கையில் மருத்தவச்சி அவளைப் பார்த்து , பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றார். மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது அவள் அவனுக்கு பெனோனி என்று பேரிட்டாள் . அவன் தகப்பனோ அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.

கடந்த வாரம் நாம் ரெபெக்காளின் தாதி மரித்து அடக்கம் பண்ணப் பட்டதைப் பற்றி பார்த்தோம். யாக்கோபுக்கு தாயைப் போல இருந்த அவளை இழந்த துக்கம் மாறும் முன் யாக்கோபை இன்னும் ஒரு பேரிடி தாக்கியது. சில மைல் தூரமே அந்த குடும்பம் சென்றிருக்கும், ராகேலுக்கு கடும் பிரசவவேதனை உண்டாயிற்று.  இன்றைய நாட்களில் நமக்கு இருக்கும் மருத்துவ வசதி நிச்சயமாக அப்பொழுது இல்லை. அநேக  பெண்கள் பிரசவ வேதனையில், மரித்து புதிய ஜீவனை உலகத்துக்கு கொண்டுவந்தனர்.

ராகேலுக்கு மரண வேதனை உண்டாகி அவள் மரிக்கும் தருவாயில் தன் மகனுக்கு பெனோனி  என்று பேரிட்டாள்.

 இந்த இடத்தில் , பிறக்கும் பொழுதே தாயை இழந்த குழந்தைகளை நாம் நினைக்கத் தவறக் கூடாது. தாயில்லாத குழந்தைகள் மேல் நாம் அன்பு காட்ட தவறாகக் கூடாது. பெற்ற தாயின் முகத்தை பார்க்காத குழந்தைகள் தாயன்புக்காக ஏங்க மாட்டார்களா? அப்படிப் பட்ட குழந்தைகளுக்கு உதவும் சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்தால் ஒரு தாயின் அன்பை சிறிதாவது அந்த குழந்தைக்கு  கொடுங்கள். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்!

நம்மில் பெரும்பாலோர் கர்த்தரை துதிப்பது எப்பொழுது தெரியுமா? வாழ்வின் சூழ்நிலை அமைதியாக, கஷ்டங்கள் இல்லாமல் இருக்கும்போதும், கடனில்லாமல் வாழும்போதும், நோயில்லாமல் சுகமாக வாழும்போதும், பிள்ளைகள் நன்றாக படித்து நல்ல வேலையில் இருக்கும்போதும், மரணம் என்ற வேதனை தொடாமல் இருக்கும்போதும் தான். அப்பொழுதுதான் என் தேவனை நான் நேசிக்கிறேன், ஸ்தோத்தரிகிறேன், மகிமைப்படுத்துகிறேன் , அவர் என்னை கரம் பிடித்து நடத்துகிறார் என்றெல்லாம் பேசுவோம்.

ஆனால் ஒருவேளை நம் குடும்பத்தில் ஒருத்தருக்கு திடீரென்று ஒரு நோய் தாக்கி விட்டால்… நாம் நேசிக்கிற ஒருவர்  ஒரு விபத்தில் மரித்து விட்டால்…….நம்  வியாபாரம் தோல்வியடைந்து பெருங்கடனில் விழுந்து விட்டால்……. அப்பொழுதும் நம் ஆண்டவர் ஸ்தோத்தரிக்கப்படத் தக்கவராக நம் வாழ்க்கையில் இருப்பாரா?

சிலக் கிறிஸ்தவர்கள், விசுவாசிகளுக்கு நோய் நொடிகள் வராது, கஷ்டங்கள் எல்லாம் ஓடிப்போகும், பணத்தேவைகள் எல்லாம் சந்திக்கப்படும் என்றல்லவா பிரசங்கிக்கிறார்கள்? அப்படிப்பார்த்தால் தன்னுடைய ஆடம்பர வாழ்க்கையை விட்டுக்கொடுத்து, ஆப்பிரிக்க நாட்டுக்கு ஊழியராக சென்ற மருத்துவர் டேவிட் லிவிங்ஸ்டன் , தன் வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் எத்தனை என்று தெரியுமா? அவர் விசுவாசி மட்டுமல்ல, தேவனுக்காக ஊழியம் செய்ய சென்றவர் தானே! அவருக்கு ஏன் அத்தனை கஷ்டங்கள்?

வேதத்தில் யோபு எத்தனை  பாடுகள்  பட்டான் என்று படிக்கிறோம். அத்தனை வேதனைகளின் மத்தியிலும் அவன் என்ன சொன்னான் பாருங்கள்! (யோபு: 13:15) அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று.

ராகேல் தன் மரண வேதனையில் தன் குழந்தையை  பென்….ஓ ….னி …… பெனோனி  என்று அழைத்தாள். அதற்கு ‘ என் வேதனையின் குமாரன்’ என்று அர்த்தமாம். ஆனால் தேவன் அவள் வேதனையைக் கண்நோக்கிப் பார்த்தார். அவள் குழந்தையின் பெயரை உடனே மாற்றி தன் ‘வலது கரத்தின் குமாரன்’ (மதிப்புக்குரியவன்) என்ற அர்த்தத்தில் பென்யமீன் என்று பெயரிட கர்த்தர் அங்கு யாக்கோபை வைத்திருந்தார்.

இன்று ராகேலைப் போல மரண வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாயா? உன் வேதனையை  கர்த்தர் அறிவார். உன் முணங்கல் கர்த்தர் காதில் விழுகிறது.

ராகேலுடைய பிள்ளைகளை கர்த்தர் ஆசிர்வதித்தார். அவள் குமாரன் யோசேப்பு எகிப்து நாட்டில் இலட்சக்கணக்கான மக்களை பஞ்சத்திலிருந்து காத்த பெருந்தலைவன் ஆனான். அவள் குமாரன் பென்யமீனின் கோத்திரத்தில் வந்தவர்  தான் அப்போஸ்தலனாகிய பவுல் அடியார். என்ன ஆசீர்வாதம் பாருங்கள்? புறஜாதியாராகிய நமக்கு சுவிசேஷத்தை கொடுத்த பவுல் தன்னை பென்யமீன் கோத்திரத்தான் என்று பிலிப்: 3:5 ல் கூறுகிறார்.

நம் வாழ்க்கையில் இன்று  நடக்கும் பல வேதனையான காரியங்களுக்கு நமக்கு அர்த்தம் தெரியாமல் நாம் திகைக்கலாம் ஆனால் அவற்றின் அர்த்தத்தை தெரிந்த தேவன் நம்மோடு இருக்கிறார், அவர் மேல் நம்பிக்கையாயிருப்போம்!

 

ஜெபம்:  ஆண்டவரே, என் வேதனையையும், கண்ணீரையும், துக்கத்தையும் நீர் அறிவீர். நான் அறியாத பாதையில் சென்றாலும் நீர் என்னை வழி நடத்துவதால் பயமில்லாமல் செல்ல உதவி தாரும் ஆமென்!

ஜெபக்கூடாரம்!                        

                      குழந்தையை அருளிய ஜெபம்!

 

 

 

I சாமு:1: 10,11 அவள் (அன்னாள்) போய் மனங்கசந்து மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி,,

சேனைகளின் கர்த்தாவே தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையை கண்ணோக்கி பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையை கொடுத்தால் …….என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.

 

ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் தேவனுடைய சமுகத்தில் நம் ஜெப வேண்டுதல்களோடு வருகிற நாள். இன்றைய வேத வசனத்தில்,

அன்னாள் செய்த ஜெபத்துக்கு தேவன் பதிலளித்து தேவன் சாமுவேலை தந்தருளினார் என்று வாசிக்கிறோம்.

தேவன் இன்று நம் குடும்பத்தில் உள்ள குறைகள் யாவையும் நீக்க கடவர் என்ற விசுவாசத்தோடு ஜெபிப்போம்.

அன்னாளைப்  போல நாமும்மனங்கசந்து , தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணுவோம். அவர் நம் வேண்டுதல்களைக் கேட்பார்.

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com