Bible Study, Call of Prayer, Family Devotion, To the Tamil Christian community

மலர்:1 இதழ்:16 திட்டம் என்னுடையது! பழி உம்முடையது! – III

ஆதி: 16     தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்!

மனைவியை திருப்தி படுத்துவதாக எண்ணி , தேவன் வாக்குத்தத்தம் பண்ணின குழந்தையை பெற்று கொள்ளும் முயற்சியில் , சாராயுடைய திட்டத்தின் படி, ஆகாரோடு இணைந்தான் ஆபிராம் என்று நாம் பார்த்தோம்.

இதனால் விளைந்தது என்ன? சாராய் நினைத்தது ஓன்று , ஆனால் நடந்தது வேறு!  ஆதி:16: 4 கூறுகிறது, “ ஆகார் தான் கர்ப்பவதியானதைக் கண்ட போது தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்” என்று.  இவ்வளவு நாட்களாக சாராய் சொல் படி கேட்டு, வாழ்ந்து வந்த ஆகாருக்கு, அவள் வயிற்றில் வளரும் குழந்தை ‘இனி நீ அவளுக்கு அடிமை இல்லை’  என்ற எண்ணத்தைக் கொடுத்தது.

ஒரு ஆணின் செயலால், இரு பெண்கள் இடையே பிரச்சனைகள் வருவது, புதிதான காரியம் அல்ல.

இங்கு ஆகாரின் கரம் ஓங்கியதால், சாராயின் மனது நொறுங்கியது.  மறுபடியும் தன்            கணவனிடம்   ஓடுகிறாள்!                                                                           ( ஆதி:16:5) “ எனக்கு நேரிட்ட அநியாயம் உம்மேல் சுமரும்…… கர்த்தர் எனக்கும், உமக்கும் நடுநின்று நியாயம் தீர்ப்பாராக” என்றாள்.  அதற்கு ஆபிராம் “ இதோ உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்” என்றான்.

வேதாகமத்தை கூர்ந்து கவனியுங்கள்!  ஆதி: 16: 3 ம் வசனத்தில், மறுமனையாட்டியாக உயரத்தப் பட்ட ஆகார்,   5 ம் வசனத்தில், மறுபடியும் அடிமைப் பெண்ணாக மாறுகிறாள்.  சற்று சிந்தித்து பாருங்கள்!   ஆகார் அவர்கள் இருவரையும் பற்றி என்ன நினைத்திருப்பாள்? அவளைத் தன் சொந்த ஊரிலிருந்தும், சொந்த ஜனத்திலிருந்தும் பிரித்து அடிமையாக அழைத்து வந்ததுமில்லாமல், அவள் விருப்பத்தை ஒரு கணம் கூட கேட்காமல், அவளை ஆபிராமுடன் சேர சொல்லினர்,   அவள் குழந்தையுண்டானவுடன், அவளைக் கடினமாக நடத்தினர் ( ஆதி: 16:6) என்று பார்க்கிறோம்.   இரக்கத்தையும், அன்பையும் காட்ட வேண்டிய தேவனுடைய பிள்ளைகளான ஆபிராமும், சாராயும் ஆகாரிடம் இரக்கமில்லாமல் நடந்து கொள்கிறதினால், அவள் வீட்டை விட்டு ஓடிப்போகிறாள்.

கர்த்தருக்கு கீழ்ப்படிந்து , அவருக்கு காத்திராமல், அவசரமாக எடுத்த முடிவால் தங்களுடைய உள்ளத்திலும், இல்லத்திலும் நிம்மதியை இழந்து தவித்தனர் ஆபிராம், சாராய் தம்பதியினர்.

இன்று தேவனுக்கு கீழ்ப்படியாததால் உன் குடும்பத்திலும் நிம்மதியில்லாமல் தவிக்கிறாயா?  தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேற பொறுமையாய் காத்திரு. உன் சுய முயற்சியால் அதை அடைந்துவிட முடியாது.  அவசரமாய் திட்டம் தீட்டி , முடிவெடுத்து, நிம்மதியை இழந்த பின், பழியை தேவன் மேல் சுமத்தாதே.

ஜெபம்:

ஆண்டவரே! நீர் இல்லாமல், சுயமாய் எடுக்கும் எந்த முயற்சியிலும், தோல்வியே பெறுவோம் என்ற உணர்வை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செயலிலும் எங்களுக்கு தாரும்.  ஆமென்!

Leave a comment