ஆதி: 16 : 9 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்!
தேவன் ஆகாரை, அவள் மரணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வனாந்திரத்தில் கண்டார். ஆதி: 16:13 “ என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன்” என்றாள் ஆகார் என்று நேற்று பார்த்தோம்.
அவள் கடினமான வனாந்திரத்தில் அலைந்து திரிந்த போது கர்த்தர் அவளை நோக்கி, “ நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப் போய், அவள் கையின் கீழ் அடங்கியிரு” என்று சொல்வதைக் காண்கிறோம்.
ஒரு பெண் கடினமாக நடத்தப்பட்டாள் என்று தேவன் அறிந்தும், ஏன் அவளை அதே இடத்துக்கு திரும்பி அனுப்புகிறார்? வேதாகம ஆராட்சியாளர்கள் பல கருத்துகளைக் கூறுகிறார்கள். வயிற்றில் குழந்தையோடிருந்த இளம் பெண் கடினமான வனாந்திரத்தில் உயிரோடிருக்க முடியாது. பசியாலும், வெயிலாலும், இரவின் பனியாலும், மடிந்து விடுவாள். அதனால் தான் தேவன் அவளை சாராயிடம் திரும்பும்படி கட்டளையிடுகிறார். ஆபிராமுடைய குழந்தையை அவள் வயிற்றில் சுமந்து கொண்டிருப்பதால் அவளுக்கு சமுதாயத்திலும் பாதுகாப்பு உண்டு.
நம்முடைய வாழ்க்கையில் தேவன் செயல்படுத்தும் ஒவ்வொரு காரியத்துக்கும் சரியான காரணம் உண்டு. ஆகார் வனாந்திரத்தில் பட்ட கஷ்டங்களுக்கு தேவன் பொறுப்பல்ல, ஆனால் தேவன் ஆகாரை தக்க சமயத்தில் ஆபத்திலிருந்து காக்கிறார்.. அதுமட்டுமல்ல அவளுடைய சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன் , அது பெருகி எண்ணமுடியாததாயிருக்கும் என்றும் வாக்களித்தார்.
ஆகார் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து தன் நாச்சியாரண்டைக்கு திரும்பி சென்ற பின் அவளுக்கு இஸ்மவேல் பிறக்கிறான்.
நம் தேவனுடைய கண்கள் ஆகார் மேல் நோக்கமாயிருந்தது. அவள் சிறுமையில் தேவன் அவளை நோக்கினார். அவள் வருமையில் தேவன் அவளை நோக்கினார். அவளுடைய முள்ளான பாதையில் தேவன் அவளை நோக்கினார். அதே தேவன் இருண்ட சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் உன் மீதும் நோக்கமாயிருகிறார். நீ வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் , நீ வேலை செய்யும் இடத்தில் உள்ள சூழ்நிலை அனைத்தையும் தேவனின் கண்கள் நோக்கிக் கொண்டிருக்கின்றன! சரியான சமயத்தில் தேவனின் கரம் உனக்கு உன் பிரச்சனைகளிருந்து விடுதலையளிக்கும்.
தேவனின் உதவி ஒரு வினாடியும் தாமதிக்காது! அவர் உன் மேல் நோக்கமாயிருக்கிறார்!
ஜெபம்:
தேவனே! என் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு காரியங்களும் உமக்கு தெரியும். உம்முடைய உதவி தாமதியாது என்று விசுவாசிக்கிறேன். நன்றி ஆண்டவரே! ஆமென்!
