ஆதி: 19: 3 – 38 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்!
லோத்தின் மனைவி சோதோமை விட்டு பிரிய மனதில்லாமல், திரும்பிப் பார்த்து உப்புத்தூணானாள் என்று நேற்று பார்த்தோம்.
இஸ்ரவேல் நாட்டிலே உப்புக்கடல் எனப்படுகிற கடல் பகுதியை நாங்கள் பார்க்க சென்ற போது, வழியில் தூரமாய் ஓரிடத்தை காண்பித்து சரித்திரத்தின் படி, இந்த இடத்தில் தான் லோத்தின் மனைவி உப்புத்துணாய் நின்றிருப்பாள் என்று எங்கள் வழிகாட்டி கூறினார். Dead sea என்றழைக்கப்படும் உப்புக் கடல் பகுதியில் எங்கேயோ ஒரு இடத்தில், சோதோம், கொமோரா என்ற பட்டணங்கள் அழிக்கப்பட்டு சாம்பலாய் மாறின.
ஆதி 19:28 ஆபிரகாம் விடியற்காலத்தில் எழும்பி அந்த திசையை நோக்கிப் பார்த்தான், சூளை போல புகை எழும்பிற்று. அந்தப் பட்டணங்களில் தேவனால் பத்து நீதிமான்களைக் கூட காண முடியவில்லை, அதனால் தான் கர்த்தர் அதை அழித்தார் என்பது ஆபிரகாமுக்கு தெரியும். ஆபிரகாமை தேவன் நினைத்து லோத்தை அந்த அழிவிலிருந்து தப்புவித்தார்.
லோத்தும், அவன் இரு குமாரத்திகளும், ஒரு மலையின் கெபியிலே தங்கியிருந்தார்கள். லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் கொடுத்து அவனோடு சயனித்து தங்கள் தகப்பனால் கர்ப்பவதிகளாகி, மோவாப் , பென்னம்மி என்ற குமாரரைப் பெற்றார்கள். இவர்கள் இருவரும் மோவாபியர் , அம்மோன் புத்திரர் என்ற இரு வம்சங்களுக்கு தகப்பன்மார்கள். தேவனால் அருவருக்கப்பட்ட இரு வம்சங்கள் லோத்தினுடைய குமாரத்திகளின் அருவருப்பான காரியத்தால் உருவாயின.
இப்படிப்பட்ட அவலமான காரியத்தை செய்ய இந்தப் பெண்கள் எப்படி துணிந்தனர்? அவர்கள் வாழ்ந்த சோதோமின் சீர் கெட்ட தன்மை அவர்கள் வாழ்க்கையை பாதித்திருந்ததா? அல்லது அவர்களுடைய தாயும், தகப்பனும் நல்ல உதாரணமாக வாழவில்லையா? சிந்தித்து பாருங்கள்!
ஆதி: 19:8 ல் லோத்தின் வீட்டுக்கு தேவ தூதர்கள் வந்த போது, ஊரே திரண்டு வந்து அவர்களை வெளியே அனுப்பும் என்றனர், லோத்து அவர்களுக்கு பிரதியுத்தரமாக ‘ இதோ புருஷனை அறியாத இரண்டு குமாரத்திகள் உண்டு, அவர்களை அனுப்புகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்’ என்றானே! இவன் தன் பிள்ளைகளுக்கு முன்னால் நல்ல உதாரணமா? பின்னர் அவன் போய் தன் குமாரத்திகளை விவாகம் பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரை சோதோமை விட்டு புறப்படும் படி அழைத்தபோது அவர்கள் அவனைப் பார்த்து நகைத்தார்களே, இது லோத்து எப்படிப் பட்ட உதாரணமாய் வாழ்ந்தான் என்று நமக்கு கூறவில்லையா? அவன் வார்த்தைக்கு அவன் குடும்பத்தில் எவ்வளவு மதிப்பு இருந்தது என்று நமக்கு காட்டவில்லையா? அவன் குடும்பமும் அவனை மதிக்கவில்லை , அந்த ஊர் ஜனமும் அவனை மதிக்கவில்லை. தேவனும் அவனை நீதிமானென்று கண்டு அவனை அழிவினின்று தப்புவிக்கவில்லை, ஆபிரகாமை நினைத்துதான் அவன் மீது இரக்கம் காட்டினார்.
லோத்து தன் குடும்பத்தை ஆவிக்குரிய வழியில் நடத்தாமல், உலக ஆசைகளுக்கும் ,ஆடம்பரத்துக்கும் இடம் கொடுத்து , சாட்சியில்லாமல் வாழ்ந்ததால், அவன் பிள்ளைகளும் பாவம் செய்து கர்த்தருடைய பார்வையில் அருவருப்பாய் நடந்தனர் என்று பார்க்கிறோம்.
நம்முடைய சாட்சியில்லாத வாழ்க்கை, நம் குடும்பத்தையும், நம்மை சுற்றியுள்ளவர்களையும் அழிவின் பாதையில் நடத்தும். நாம் நல்ல சாட்சியாய் ஜீவிப்பதே நாம் செய்யக் கூடிய மிகப் பெரிய சுவிசேஷ ஊழியம்!
ஜெபம்:
ஆண்டவரே! என் குடும்பத்தார், உற்றார் , உறவினர் முன்பு நான் சாட்சியாய் ஜீவிக்க எனக்கு உதவி தாரும். ஆமேன் !
