Archive | April 29, 2011

மலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன?

ஆதி : 24: 67 அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக் கொண்டு போய்,அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டு அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காக கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான்.

 

வருடங்கள் கடந்தோடின! சாராள் தன்  127 வது வயதில் மரிக்கிறாள். திருமண வயதை அடைந்துவிட்டான் ஈசாக்கு. ஆபிரகாம் தன் முதிர்ந்த வயதில், தன் குமாரன் ஈசாக்குக்கு திருமணம் ஒழுங்கு செய்கிறதைப்  பார்க்கிறோம். தன் மகனுக்கு சரியான பெண்ணைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆபிரகாமின் உள்ளத்தின் வாஞ்சையும், அவன் ஊழியக்காரனின் ஜெபமும் தான் கர்த்தர் இந்த திருமணத்தை அமைத்துக் கொடுக்க காரணமாயிற்று.

ஆதியிலே தேவன், ஏவாளை , ஆதாமுடைய  தனிமையைப் போக்கும் துணையாக ஏற்ப்படுத்தினார்.  இங்கு ரெபெக்காளை மணந்ததால், ஈசாக்கு தன் தாய்க்காக கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதலடைந்தான் என்று பார்க்கிறோம். ஒரு மனிதனுக்கு ஏற்ற துணையாக, ஆறுதலாக, படைக்கப்பட்டவள் தான் பெண். அதனால் தான் கர்த்தர் பெண்களாகிய  நமக்கு, மென்மையையும், அன்பையும், ஆதரவையும், புன்னகையையும், உபசரிப்பையும் விசேஷ குணங்களாக கொடுத்திருக்கிறார்.

ரெபெக்காள் தனக்கு தேவன் அருளிய கிருபைகளை எவ்வாறு உபயோகப்படுத்தினாள்? பாருங்கள்!

அவள் துரவில் இறங்கி தண்ணீர் மொண்டு, பிரயாணத்தில் களைத்து வந்த ஆபிரகாமின் ஊழியக்காரனுக்கும், அவன் ஒட்டகங்களுக்கும் கொடுக்கிறாள்.

பின்னர் ,  அவனைத் தன் வீட்டுக்கு அழைத்து போய் அன்போடு உபசரிக்கிறாள்.

பின்னர் தன் அன்பின் மூலமாய் தாயை இழந்து மனதுடைந்து இருந்த ஈசாக்குக்கு ஆறுதல் அளிக்கிறாள்.

என்ன அருமையான ஒரு பெண்ணின் குணத்தை இங்கு பார்க்கிறோம்!

பெண்கள் மாத்திரம் அல்ல, தேவன் ஆண்களுக்கும் தங்கள் திருமண வாழ்வில் காட்ட வேண்டிய சிறப்பான குணங்களை கொடுத்திருக்கிறார். ஈசாக்கு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. எப்படி என்று பார்ப்போம்!

முதாவது, ஆதி 24:63 கூறுகிறது , ‘ஈசாக்கு சாயங்கால வேளையில் தியானம் பண்ணப் போயிருந்தான்’ என்று. ஜெபிப்பது அவனுடைய தினசரி வழக்கமாயிருந்தது. தன் திருமண உறவில் தேவனுக்கு முதலிடம் கொடுத்தவன் என்று பார்க்கிறோம்.

இரண்டாவது , அவன் தன் தாயை அதிகமாக நேசித்தவனான படியால் சாராளை இழந்த துக்கத்தால் மனதுடைந்து காணப்பட்டான். தாயை நேசிக்க, மதிக்க தெரிந்த ஆண்கள் தன் மனைவியையும் நேசித்து, மதித்து நடத்துவார்கள் அல்லவா?

மூன்றாவது, அவன் ரெபெக்காளை நேசித்தான் ( ஆதி:24:67) அவளைக் கண்டவுடன் நேசித்தான், மரணம் வரை அவளோடு வாழ்ந்தான். அவன் ஒருவனுக்கு ஒருத்தி என்று தேவன் அமைத்த திருமணத்தை மதித்தான் என்று பார்க்கிறோம்.

இன்றைய பெற்றோரும், வாலிபரும், தேவனுடை வழி நடத்துதலுக்கு காத்திராமல், தன் சொந்த முயற்சியில் அழகுக்கும், பணத்துக்கும் முதலிடம் கொடுப்பதால்  அனேக திருமணங்கள் கண்ணீரில் முடிகின்றன.

இந்த பூமியில் வாழும் உன் வாழ்க்கையில் உன் பொறுப்பென்ன? ஈசாக்கைப் போல தேவனுக்கு தன் திருமண உறவில் முதலிடம் கொடுகிறவர்களாகவும், ரெபெகாளைப் போல அன்பையும், பரிவையும், உபசரிப்பையும் ,ஆறுதலையும் குடும்பத்தில்  காட்டுகிறவர்களாகவும் நாம் வாழா விடில், நம் குடும்ப வாழ்வில் கண்ணீர் தான் மிஞ்சும்.

திருமணங்கள் பரலோகோத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பது உண்மையாயிருக்கலாம் ஆனால் வாழ்வது பூமியில் தானே?  சிந்தித்து பார்!

ஜெபம்:

ஆண்டவரே! என் திருமண வாழ்க்கையில் என் பொறுப்பை எனக்கு இன்று உணர்த்திக் காண்பியும்.  ஆமென்!

Advertisements