Archive | May 2011

மலர்1:இதழ்: 107 மனசோர்பு என்ற பட்டயம்!

எண்ணா: 21:4 “அவர்கள் ஏதோம் தேசத்தை சுற்றிப் போகும்படிக்கு ஓர் என்னும் மலையை விட்டு சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம் பண்னினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.”

என்னுடைய இளவயதில் தமிழ் மொழி கதைகள், நாவல்கள் அதிகமாக வாசிப்பேன். விசேஷமாக சரித்திர நாவல்களில் தான் ஆர்வம் அதிகம். அந்தக் கதைகளில் எதிரிகள் பட்டயத்தை மறைத்து செல்வதும், தக்க சமயம் வரும்போது பட்டயத்தை வெளியே எடுத்து உருவக்குத்துவதும் அடிக்கடி வாசிக்கிற ஒரு காரியம். இன்றைய தியானத்தில் நாம் பட்டயத்தைப் பற்றி பார்க்கப்போவதில்லை! பட்டயத்தால் உருவக்குத்தினதைப் போல் இருதயத்தை ஊடுருவி வேதனையைத் தரும் மனசோர்புகளைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்.

இந்த மனசோர்புகள் ஒருவேளை நம்முடைய விறுவிறுப்பான வேலைகளின் மத்தியில் ஒளிந்து கொண்டிருக்கலாம்! ஆனால் தக்க சமயம் வரும்போது வெளியே தலைகாட்டி, நம்முடைய ஆத்துமாவின் ஆவிக்குரிய ஜீவியத்தை மாத்திரம் அல்ல, நம்முடைய சரீரத்தையும் அதிகமாக பாதித்துவிடுகிறது!

இன்று பட்டயங்களைப் போல நம்மைக் அழிக்கும் மூன்றுவிதமான மனசோர்புகளைப் பற்றிப் பார்ப்போம்!

1. நம்முடைய விசுவாசத்தை அழிக்கிறது மனசோர்பென்ற பட்டயம்! நாம் வாசித்த இந்தப்பகுதியில் இஸ்ரவேல் மக்களுடைய விசுவாசம் உருக்குலைந்தது. அவர்கள் பிரயாணம் பண்ணின வழியைக்குறித்து மனமடிந்தார்கள். கர்த்தரின் வழிநடத்துதலை மறந்துபோனார்கள். முன்னும் பின்னுமாய் மேகஸ்தம்பமாய், அக்கினிஸ்தம்பமாய் வழிநடத்தினவரின் மேல் சந்தேகம் எழும்ப ஆரம்பித்துவிட்டது. நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்றவரின் வாக்குத்தத்தங்கள் மறந்து போய்விட்டன! ஒரு நண்பர் இவ்வாறு கூறினார்: கர்த்தர் உனக்கு ஒளியில் கொடுக்கும் வாக்குதத்தங்களை உன் வாழ்வில் இருள் சூழும்போது மறந்து போய்விடாதே என்று. இஸ்ரவேல் மக்களோ வழி கடினமான போது, இருள் சூழ்ந்தபோது மனசோர்படைந்து விசுவாசத்தை இழந்தார்கள்.

2. நம்முடைய தன்னம்பிக்கையை இழக்கவைக்கிறது மனசோர்பென்ற பட்டயம்! மனசோர்பென்ற பட்டயம் தாக்கியவுடன், இஸ்ரவேல் மக்களுக்கு இந்தப் பிரயாணத்தை நம்மால் முடிக்க முடியும் என்ற தன்நம்பிக்கை போய்விட்டது! கல்லும் முள்ளும் நிறைந்த பிரயாணம் என்னால் இதற்கு மேல் முடியாது என்ற எண்ணத்தைக் கொடுத்தது! அவர்களைத் தம் கரங்களில் ஏந்துகிற, சுமக்கிற தேவனாகிய கர்த்தர் அவர்களோடு இருப்பதை மறந்து போனார்கள்1 கர்த்தர் மேல் நம்முடைய விசுவாசம் குறைவுபட்டவுடனே, கர்த்தர் நம்மோடிருப்பதை மறந்துவிட்டு, நான் எப்படி இந்த சூழ்நிலையை சமாளிப்பேன், எனக்கு பெலன் இல்லையே என்று புலம்ப ஆரம்பிக்கிறோம். வாழ்வென்னும் படகு புயலில் சிக்கும்போது நமது தன்னம்பிக்கை முற்றும் அழிந்து போகிறது! நம் வாழ்வே தோல்வியாய்த் தெரிகிறது!

3. மற்றவர்கள் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையை இழக்க வைக்கிறது இந்த மனசோர்பென்ற பட்டயம்! மனசோர்பென்ற பட்டயம் தாக்கியவுடன், இஸ்ரவேல் மக்கள் கர்த்தர் மேல் இருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள், தங்கள் மேலிருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள் அதுமட்டுமல்ல, ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள். அதனால் தான் அவர்களுக்குள் சண்டையும், சச்சரவும், புறம்பேசுதலும், முறுமுறுப்பும் அதிகரித்தன. நம் வாழ்விலும் மனசோர்பென்ற பட்டயம் தாக்கும்போது, நாம் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோம்? நம் கணவரிடமும்,பிள்ளைகளிடமும் எரிந்து விழுவதில்லையா? மூன்றுமுழ நீழத்துக்கு முகத்தை தூக்குவதில்லயா?

மனசோர்பு என்னும் பட்டயம் உன்னை உருருவித் தாக்கவிடாதே! அது கர்த்தர்மேல் உள்ள உன் விசுவாசத்தை அழித்துவிடும், உன் தன்னம்பிக்கையை அழித்துவிடும், உன்னை மற்றவர்களைவிட்டு பிரித்துவிடும்!

கல்லும் முள்ளுமான பாதையானாலும் கர்த்தர் உன்னோடிருக்கிறார்! உன் கால் வைக்கமுடியாத பாதையில் அவர் கரம் உன்னை ஏந்தும்!

உன்னுடைய கடந்த காலத்தையும், எதிர்காலத்தையுமே அதிகமாக நினைக்காமல், ஒவ்வொரு நிமிடமும் கிறிஸ்துவுக்காக எதை பேசுகிறாய், எதை செய்கிறாய் என்றே சிந்தி! மனசோர்புக்கு இடம் கொடாதே! ஏனெனில்

“…அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை, அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்…” (சங்கீ:37:28)

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

Advertisements

மலர்:1இதழ்: 106 இச்சையை அடக்கு! இல்லாவிடில் அது உன்னை அடக்கும்!

 எண்ணா:11:4 அவர்களுக்குள் இருந்த அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள். இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்?

 

என்றாவது ஏதாவது ஒன்றின் மேல் அளவுக்கு அதிகமாய் ஆசைப்பட்ட ஞாபகம் இருக்கிறதா? நான் சிறு வயதில் ஐஸ்கிரீம் சாப்பிட அதிகமாக ஆசைப்படுவேன். அப்பொழுது வீடுகளில் பிரிட்ஜ் கிடையாது. வருடத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை மெரினா கடற்கரைக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். அவ்வாறு ஒருமுறை நாங்கள் கடற்கரைக்கு போயிருந்தபோது அளவுக்கு மிஞ்சி ஐஸ்கிரீம் சப்பிட்டுவிட்டேன். அவ்வளவுதான்! வயிறும் போச்சி! தொண்டையும் போச்சி! அதை சாப்பிடுகிற ஆசையும் போச்சி!

நமக்கெல்லாருக்குமே ஆசைகள், பாசங்கள்,ஏக்கங்கள், சில இச்சைகளும் கூடஉண்டு. எல்லா ஆசைகளும் தவறு என்று கணித்துவிட முடியுமா? ஆசைகள் இல்லாத உலகம் வெறுமையாய் இருக்கும், ஆசையில்லாத வாழ்க்கை ருசியில்லாமல் இருக்கும். அப்படி நாம் வாழ வேண்டுமானால் கர்த்தர் நமக்கு ஐம்புலன்களை கொடுத்திருக்கக்கூடாது. எதையுமே ரசிக்கவும், ருசிக்கவும், உணரவும் தெரியாமல் வாழ்ந்திருப்போம். ஆனால் தேவனாகிய கர்த்தர் நம்மை அவ்வாறு உருவாக்கவில்ல. கர்த்தர் சிருஷ்டித்த எல்லாவற்றையும் அனுபவிக்கும்படியாய் நம்மை ஏதேன் தோட்டத்தில் வைத்தார் என்று வேதம் சொல்லுகிறது.

ஆனால் அளவுக்கு மீறிய ஆசைகள்தான் நமக்கு ஆபத்தாய் அமைந்து, நம்மை அழிவுக்குள் நடத்துகின்றன!

வேதாகமம் சொல்கிறது, எண்ணா:11:32 ல், “ அப்பொழுது ஜனங்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள்முழுவதும்

காடைகளை சேர்த்தார்கள்….. அவைகளை பாளயத்தைச் சுற்றிலும் தங்களுக்காக குவித்துவைத்தார்கள் என்று.

இஸ்ரவேல் மக்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது அநேக அந்நியர்களும் அவர்களோடு புறப்பட்டனர். அவர்கள் ஒருவேளை  இஸ்ரவேல் ஸ்திரிகளை மணந்திருக்கலாம். அதனால் தங்கள் மனைவி பிள்ளைகளோடு அவர்களும் புறப்பட்டிருக்கலாம்! இப்படியாக ஒரு எகிப்தியனை மணந்த செலோமித் என்ற ஒரு பெண்ணின் குடும்பத்தைப் பற்றி நாம் சில நாட்களுக்கு முன் பார்த்தொம் அல்லவா?  இந்த அந்நியர்கள் எப்பொழுதுமே இஸ்ரவேல் மக்களுக்கு உபத்திரவமாக இருந்ததை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் தங்களுடைய பழைய எகிப்தின் வாழ்க்கையை, புதிய வாழ்க்கையோடு இணைக்க முயன்றனர்.

எகிப்தை விட்டு புறப்பட்ட பின்னர், வனாந்தரத்தில் அத்தனை மக்களுக்கும் உணவு கிடைப்பது அரிதானதால், தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கு மன்னா என்ற அப்பத்தை அன்றன்று அருளினார். இஸ்ரவேல் மக்கள் மன்னாவைப் பொறுக்கி, ஏந்திரங்களில் அரைத்து அல்லது இடித்து சமைத்தார்கள் (எண்ணா:11:8) . அதில் அப்பம் சுடுவதைத் தவிர எத்தனை விதமான உணவு சமைக்க முடிந்தது என்று எனக்குத் தெரியவில்லை! இப்பொழுது அவர்கள் நாக்கு மாறுபாடன சுவையைத் தேட ஆரம்பிக்கிறது!

மன்னா சாப்பிட்டு வெறுத்துவிட்டது! காலையில் மன்னா, மதியம் மன்னா, இரவு மன்னா! எங்கள் நாக்கு என்ன செத்தா போய்விட்டது? எங்களுக்கு மீன் வேண்டும், கோழிக்கறி வேண்டும்! என்ற அந்நிய ஜனங்களின் கூக்குரலோடு இஸ்ரவேல் மக்களும் சேர்ந்து கூக்குரலிட ஆரம்பித்தனர்! எங்கள் உள்ளம் வாடிப்போகிறது; மன்னாவைத்தவிர எங்களுடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று அழ ஆரம்பித்தனர்.

எண்ணா:11:23 ல் பார்க்கிறோம், கர்த்தர், “ கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ?” என்று அவர்களுடைய நன்றியில்லாத இருதயத்தின் கூக்குரலுக்கு பதிலளித்தார். சில நேரங்களில் இப்படிபட்ட ஜெபத்துக்கு கர்த்தர் பதிலளிக்காமல் இருந்துவிட்டால் நமக்கு நலம். அவருடைய சித்தத்துக்கு மாறாக நாம் ஜெபிக்கும் காரியத்தை நாம் பெற்றுக்கொண்டாலும் நமக்கு சாபமாய் அமையும்.

இஸ்ரவேல் மக்களுக்கும் அப்படித்தான் நடந்தது! கர்த்தர் சமுத்திரத்திலிருந்து ஒரு காற்றை அனுப்பி, காடைகள் கரைசேர செய்தார். இச்சையினால் கூக்குரலிட்டு அழுத ஜனங்கள், அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள்முழுவதும் காடைகளை சேர்த்தார்கள். அவர்களுடைய இச்சையின் ஜெபம் கேட்கப்பட்டது, மாமிசம்கொடுக்கப்பட்டது.

ஆனால் அந்த மாமிசம் அவர்களுடைய பற்களில் இருக்கும்போதே தேவனுடைய கோபம் அவர்கள் மேல் மூண்டது. கர்த்தருக்காக பிரித்தெடுக்கப்பட்ட ஜனமாய் வாழ வேண்டிய அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட அந்நியரோடு சேர்ந்து இச்சையில் விழுந்து, அழுததால், கர்த்தர் அவர்களை வாதித்தார். இச்சித்த ஜனங்கள் அங்கே அடக்கம் பண்ணப்பட்டார்கள்.

தேவனுடைய பிள்ளைகளே இச்சித்தவைகளை அடைந்துவிட்டோம் என்று சந்தோஷப்படவேண்டாம்! காடையின் மாமிசத்துக்காக அவர்கள் அழுதது பார்வோனுடைய சாட்டை அடியை விட பலத்த தண்டனையை வாங்கிக்கொடுத்தது.

உன்னுடைய  இச்சையை நீ அடக்கி ஆளாவிட்டால், அது உன்னை அடக்கி ஆளும்! எந்தவிதமான இச்சை இன்று உன்னை அடக்கி ஆண்டு கொண்டிருக்கிறது?

கர்த்தரை நாம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும் தேடி, அவரை நேசிக்கும்போது, நம்மை அவரிடமிருந்து பிரிக்கும் இச்சைகள், ஆசைகள், பாவங்கள் இவற்றை அடக்கி ஆள நமக்கு பெலன் கிடைக்கும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

மலர்:1இதழ்: 105 சித்தீமில் நடந்தது என்ன?

 

எண்ணாகமம்:25:1 – 2  “ இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில்,ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே, வேசித்தனம் பண்ணத் தொடங்கினார்கள்.

அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள். ஜனங்கள் போய் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்து கொண்டார்கள்.”

வீட்டில் கேக் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்ஞள் கருவையும் ஏன் பிரிக்கிறோம் என்று நன்கு தெரியும்! வெள்ளைக்கரு கேக்கை மிருதுவாகப் பண்ணும் ஆனால் மஞ்சள் கருவோ கனமாக இருப்பதால், வெள்ளைக் கருவின் தன்மையையே கெடுத்து, அதை மிருதுவாகவோ அல்லது வெண்மையாகவோ செய்ய விடாது. சில நேரங்களில் நாம் இதை பிரிக்க முயற்சிக்கும்போது, சிறிது மஞ்சள் கரு எப்படியாவது வெள்ளையுடன் ஒட்டிவிடும். அதனால் பெரிய விளைவு இல்லை என்றாலும், அதன் கனமான தன்மை வெள்ளைக் கருவை நுரைத்து எழும்ப விடாது.

இது இயற்கை அல்லவா? வேறு வேறு தன்மை கொண்ட இரு பொருட்கள் ஒன்றாக இணையும்போது, அவை ஒன்றை ஒன்று சரிவர வேலை செய்ய விடாது. அப்படி இருக்கும் போது, இருவிதமான வழிகளைக் கொண்ட விசுவாசிகளும், அவிசுவாசிகளும் எவ்விதம் ஒன்றாய் கலந்து வாழ முடியும்?

அதனால் தான் கர்த்தர் இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியெ கொண்டு வந்து, அவர்கள் தமக்கு பரிசுத்த ஜனமாக வாழ விரும்பினார் என்று லேவி: 22 ல் வாசித்தோம். அவர்கள் உலகத்தின் மற்ற தேவர்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தம்முடைய சொந்த பிள்ளைகளாக ஜீவிக்க விரும்பினார். அவர்களோடு பேசினார், அவர்களை மன்னாவினால் போஷித்தார், அவர்கள் மத்தியில் தம்முடைய மகிமையில் வாசம் பண்ணினார், அவர்களை வழிநடத்தினார். எல்லாவற்றிர்கும் மேலாக தான் பரிசுத்தர் ஆதலால் அவர்களும் பரிசுத்தராயிருக்க வேண்டும் என்று தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். அவர்கள் தம்மை மாத்திரம் வழிபடவேண்டும், அவர்களுக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டார்.

ஆனால் என்ன பரிதாபம்! அங்கிருந்து கடந்து நாம் எண்ணாகமத்துக்கு வருமுன் இஸ்ரவேல் மக்கள் மோவாபிய பெண்களோடு வேசித்தனம் செய்ததைப் பார்க்கிறோம்.. எண்ணா:25:1-3 வாசிக்கும்போது முதலில் மோவாபிய பெண்கள் மேல் மோகம் கொண்ட இஸ்ரவேல் மக்கள், வெகு சீக்கிரம் விருந்துக்கு போய் அவர்கள் தேவர்களைப் பணிந்து கொண்டர்கள். அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டதால் இஸ்ரவேலர் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது என்று வாசிக்கிறோம்.

அந்த அதிகாரத்தை தொடர்ந்து வாசிப்பீர்களானால், கர்த்தர் அவர்களை வாதித்தார், அதனால் இறந்தவர்கள் இருபத்தினாலாயிரம் பேர் என்று பார்க்கிறோம். கர்த்தர் அவர்களிடம் அவருடய உக்கிர கோபம் நீங்கும்படி, தவறு செய்த யாவரையும் தூக்கிலிடும்படி கூறுகிறார்.

என்ன நடந்தது? அவர்கள் அழுதுகொண்டு நிற்கையில், ஒருவன் மீதியான பெண் ஒருத்தியை தன் மார்பில் சாய்த்துக்கொண்டு வருகிறான். அதைக்கண்ட கர்த்தருடைய ஆசாரியனான பினெகாஸ், (ஆரோனின் குமாரனான எலெயாசரின் மகன்) அவர்கள் வேசித்தனம் பண்ணிக்கொண்டிருந்த அறைக்குப் போய் அவர்கள் இருவரையும் ஈட்டியால் குத்துகிறான், அப்பொழுது தேவனுடைய உக்கிரம் தணிந்தது, வாதை நின்று போயிற்று என்று படிக்கிறோம்.

இந்த சம்பவத்தின் மூலம் கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு, அவிசுவாசிகளோடு சம்பந்தம் கொள்வது அவருக்கு வெறுப்பான ஒரு காரியம் என்று விளங்கப்பண்ணினார்.

இதையே பவுல் நமக்கு எழுதும்போது ( 11 கொரி: 6:14)

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? என்றார்.

கொடிய அனுபவத்தின் மூலம் இஸ்ரவேல் மக்கள் பரிசுத்தமான வாழ்க்கைக்கு பிரித்தெடுக்கப்படுதல் என்றால் என்ன எனபதைப் புரிந்து கொண்டார்கள்.

கர்த்தருக்கு பிரியமான பாத்திரமாக நீ வாழ முடியாமல் தடை செய்யும் காரியம் ஏதாவது உன் வாழ்வில் உண்டா? அவிசுவாசியோடு மார்பில் சாய்ந்து கொண்டிருக்கிறாயா? மாறுபாடான வழிகளைக் கொண்ட இருவர் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது!

கர்த்தர் சித்தீமிலே இஸ்ரவேலரை எச்சரித்தது போல், இன்று உன்னையும் எச்சரிக்கிறார்!

”உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” ( 1 பேது:1:15)

 

இது உங்களுக்கு ஒர் எச்சரிக்கை!  சித்தீம் அனுபவம் உனக்கு வேண்டாம்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

மலர்:1இதழ்: 104 இருதயத்தின் நினைவை வாய் பேசும்!


எண்ணா: 14:`2  “ இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி : எகிப்து தேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும். இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்.

 நான் உயர்நிலைப்ப் பள்ளியில் படிக்கும்போது, ஒருவருடம் நான் என்னுடைய சொந்த ஊரில் படிக்க வேண்டும் என்று என் அம்மா விரும்பினார்கள். நான் இந்த சென்னையில் படித்தால் ஒரு நல்ல பெண்ணாகத் தேற மாட்டேன் என்ற எண்ணம் அம்மாவுக்கு. ஒருவருடமாவது சொந்த ஊர் வாசனை வீச வேண்டும் என்று ஹாஸ்டலில் விட்டு விட்டர்கள். அந்தப் பெண்கள் விடுதியில் முறுமுறுப்பு அதிகம் இருந்ததாலோ என்னவோ, அங்கு எல்லாரும் பார்க்கும்படி இந்த வாசகம் எழுதப்பட்டிருந்தது! அது என்றுமே என் மனதைவிட்டு நீங்கியது கிடையாது. “ஒரு சிலர் எப்பொழுதும் ரோஜாவில் முள் குத்துகிறது என்று முறுமுறுக்கிறார்கள், ஆனால் ஒரு சிலரோ முள்ளில் மலர்ந்த ரோஜாவுக்காக கர்த்தரை துதிக்கிறார்கள் என்பதே அந்த வாசகம்.

எத்தனை உண்மை இது! நம்மில் சிலருக்கு முறுமுறுத்தலே வாழ்க்கையில் சுவை அல்லவா? இது இஸ்ரவேல் மக்களுக்கும் உரித்தான ஒரு வழக்கமாக இருந்தது. வேதத்தில் நாம் பார்க்கிறோம், இஸ்ரவேல் மக்கள் குறைந்தது 25 முறைகளாவது கானானுக்குள் போகும்வழியில் முறுமுறுத்தார்கள். ஒவ்வொருமுறையும் அவர்கள் தேவனுக்கு விரோதமாகவும், தேவனுடைய ஊழியர்களுக்கு விரோதமாகவும் முறுமுறுத்ததைப் பார்க்கிறோம்! ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் சேர்ந்து கொண்டார்கள் இந்த முறுமுறுப்பில். மோசேக்கு விரோதமாக அவன் சகோதரி மிரியாம் முறுமுறுத்ததைக் கண்டோம்.

நான் சிறு வயதில் அம்மாவின் பொறுமையை சோதிக்கும்படியாய் முறுமுறுத்ததாய் ஞாபகம்! தேவனாகிய கர்த்தர் நீடிய பொறுமையுள்ளவர் தான் ஆனால் அவருடைய பொறுமையை சோதிக்கும்படியாய் அவருடைய பிள்ளைகள் கர்த்தருக்கு விரோதமாகவும், மோசேக்கு விரோதமாகவும் முறுமுறுத்தார்கள்.`

எகிப்திலிருந்து தம்முடைய பலத்த கரத்தினால் வழிநடத்தி, செங்கடலை இரண்டாய்ப் பிளந்து, அக்கினியாய், மேகமாய் முன்னும் பின்னும் காத்து வழிநடத்திய கர்த்தரைப் பார்த்து ’எகிப்து தேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும். இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்.” என்று இஸ்ரவேல் மக்கள் கூறியது கர்த்தருடைய பொறுமையை எவ்வளவு தூரம் சோதித்திருக்கும்!

எகிப்து தேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும் என்று அவர்கள் முறுமுறுத்ததால் என்ன அர்த்தம்? இனி நீர் எங்களை வழிநடத்த வேண்டாம், பார்வோன் எங்களுக்கு போதும் என்று சொன்னமாதிரி இல்லையா?

அதனால் அவர்களுக்கு என்ன கிடைத்தது? கர்த்தர் அவர்கள் இருதயத்தின் வாஞ்ஞையையே அவர்களுக்கு கொடுத்தார்.  கர்த்தர் தம்முடைய பாதுகாப்பை அவர்களிடமிருந்து எடுத்துப் போட்டார், அழிவிற்கு மேல் அழிவு அவர்களைத் தொடர்ந்தது.கர்த்தருக்கு விரோதமாய் முறுமுறுத்ததின் விளைவை அவர்கள் வெகு சீக்கிரம் உணர்ந்தனர்.

நம்முடைய முறுமுறுப்பினால் நாம் கர்த்தரை நம்முடைய வாழ்வைவிட்டு வெளியேறும்படி கட்டளையிடுகிறோம். தேவனுடைய பிரசன்னம் நம்மைவிட்டு விலகுகிறது! முறுமுறுப்பு நம்முடைய கால்களை மரணத்தை நோக்கி இழுக்கும் சரிவு மண்ணைப் போன்றது. நம்முடைய் ஆவிக்குரிய வளர்ச்சியை அது தடுக்கிறது!

ப்ல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களைப்போல, பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு பின்னால் வாழும் கர்த்தருடைய பிள்ளைகளான நாமும் முறுமுறுப்பதால் ஆசீர்வாதங்களை இழந்து போகிறோம்.

நாம் எதை நினைக்கிறோமோ அதை வாய் பேசும்! நாம் எதை பேசுகிறோமோ அதையே பெற்றுக் கொள்வோம்! இது கர்த்தரின் தீர்ப்பு!

 

  என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக. (சங்: 19:14)

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

 

 

மலர்:1இதழ்: 103 இராட்சதருக்கு முன் வெட்டுக்கிளி!

 எண்ணா:13:32 33 நாங்கள் போய் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம். நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகப்பெரிய ஆட்கள்.

அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம். நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப் போல் இருந்தோம்.

 

 

நாங்கள் லக்னோவில் வாழ்ந்த போது குளிர் காலத்தில் பலநாட்கள் சூரியனைப் பார்க்கவே முடியாது. பகலில் கூட பனி இரங்கிக் கொண்டிருக்கும். நடுக்கும் குளிரும், ஈரப்பதமான குளிர் காற்றும், சென்னை வாசிகளான எங்களுக்கு, சிறிது சூரிய வெப்பம் நம் மேல் படாதா என்று ஏங்க வைக்கும்.

எங்களுடைய விசுவாச வாழ்க்கையிலும் சூரியன் மறைந்த நாட்கள் பல உண்டு. எங்களுக்கு மட்டும் அல்ல, விசுவாசிகளான உங்களுக்கும் வாழ்வில் பனிபடர்ந்து, இருண்டு போன நாட்களின் அனுபவம் அநேகம் உண்டல்லவா? சோதனைகளும் வேதனைகளும் மலைபோல நிற்கும்போது நாம் பெலவீனராக நின்றதில்லையா?

இன்று நாம் தொடர்ந்து அதிகமாய் வாசிக்கப்படாத எண்ணாகம புத்தகத்தை தியானிப்போம். மோசேயின் தலைமையில் கர்த்தர் இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, பலத்த கரத்தினால் அவர்களை வழிநடத்தி, அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின கானான் தேசத்தின் மறுகரையில் கொண்டு வந்து சேர்த்தார். அப்பொழுது மோசே கானானுக்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக, இஸ்ரவேல் கோத்திரங்கள் அனைத்திலுமிருந்து ஒருவனை கானானுக்குள் வேவு பார்த்துவர அனுப்பினான்.

மோசே அவர்களை நோக்கி, கானான் தேசம் எப்படிப்பட்டது? அங்கு வாழ்கிற மக்கள் எப்படிப்பட்டவ்ர்கள்? அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டது? கூடாரங்களா? கோட்டைகளா? நிலம் எப்படிபட்டது? வளமானதா? விருட்சங்கள் உண்டா? கனிகள் எப்படிபட்டவை? என்று பார்த்து வர சொன்னான் ( எண்ணா:13:17 -20). நாம் ஒரு கிரவுண்டு நிலம் வாங்குவதற்கு முன்னால் , நிலம் எப்படி, நீர்வளம் எப்படி, சுற்றிலுமுள்ளவர்கள் எப்படி என்று விசாரிப்பது போல இருக்கிறது அல்லவா?

இவற்றையெல்லாம் சொல்லிவிட்டு மோசே, கடைசியாக அவர்களை நோக்கி,(எண்ணா:13:20) நோக்கி “தைரியங்கொண்டிருந்து தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள்” என்றான். ஏன் மோசே அவர்களை தைரியமாயிருக்கச் சொன்னான்?  மோசேக்கு தெரியும், எதிரிகள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் நாம் பயப்படத்தேவையில்லை என்று. ஜெயம் கொடுப்பவர் நம்மோடிருக்கும் போது, நம்முடைய எதிரி எவ்வளவு பலசாலியாயிருந்தாலும் நாம் அஞ்ச வேண்டியதில்லை!

என்ன ஆயிற்று பாருங்கள்! இந்த வேவுகாரர், கானான் தேசத்தை சுற்றி திரிந்தனர். அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கு வந்தபோது ஒரு திராட்சை குலையை வெட்டி, அது மிகவும் கனமாக இருந்ததால், அதை ஒரு தடியிலே கட்டி, இரண்டுபேர் தூக்கிக்கொண்டு வந்தனர். பின்னர் மாதளம் பழங்களிலும், அத்திப் பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தனர். நாற்பது நாட்கள் சுற்றித்திரிந்தபின்னர், அவர்கள் மோசேயிடம் திரும்பிவந்து “அது பாலும் தேனும் ஓடுகிற  தேசம்தான், இது அதினுடைய கனி” என்றனர். (எண்ணா: 13: 23-27).

என்ன அருமை! எகிப்தின் அடிமைத்தனத்தில் வாழ்ந்த மக்களுக்கு கர்த்தர் கொடுக்கப்போகிற கானான் தேசம் பாலும் தேனும் ஓடுகிற தேசம்!

வேவு சென்றவர்கள் உற்சாகமாய், ’வாருங்கள்! நாம் அதை சுதந்தரிப்போம்! இவ்வளவு நாட்கள் நாம் வனாந்தரத்தில் பட்ட கஷ்டம் போதும்! அருமையான தேசம் நமக்கு காத்திருக்கிறது!’  என்று சொல்வதற்கு பதிலாய் (எண்ணா:13:31-33)) “ ஆனாலும்  நாங்கள் போய் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம். நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகப்பெரிய ஆட்கள்.

அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம். நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப் போல் இருந்தோம்” என்றார்கள்.

இஸ்ரவேல் மக்கள் பயந்தனர்! ஏன் தெரியுமா? தங்களுடைய பிரச்சனைகளுக்கு முன்பால தங்களை அவர்கள் வெட்டுக்கிளிகளைப் போல் கண்டனர்.

நீ எப்படி?

வாழ்வில் சூரியன் மறைந்து, இருள் சூழ்ந்திருக்கும் போது, பிரச்சனைகள் மலைபோல் நிற்கும்போது, நீ சாதிக்க வேண்டிய காரியங்கள் உன் கண்முன் இமயமாய் உயர்ந்து நிற்கும்போது உன்னால் ஒரு சிறு சோதனையை கூட சந்திக்கமுடியாமல் ஒரு பெலவீனமான் பாண்டம் போல் நிற்கிறாயல்லவா? ஏன்? இஸ்ரவேல் மக்களைப் போல பிரச்சனைகளை பெரிய இராட்சதராகவும், உன்னை சிறு வெட்டுக்கிளியாகவும் பார்ப்பதால்தான்.

ஒன்றை மறந்து விடாதே! நம்முடைய கர்த்தராகிய ஆண்டவருக்கு, நாம் சந்திக்கும் எந்த பிரச்சனைகளும் இராட்சதரைப் போல பெரியவை அல்ல! கர்த்தர் தம்மால் தோற்க்கடிக்க முடியாத எந்த இராட்சதரையும்  இதுவரைகண்டதில்லை! அவர் கானானுக்குள் சுமந்து செல்ல முடியாத எந்த சிறிய வெட்டுக்கிளியையும் அவர் பார்த்ததில்லை!

 

 

பெலவீனமான உன்னைப் பார்த்து பயப்படாதே!

பெலமுள்ள அவரைப் பார்த்து தைரியங்கொள்!

கர்த்தருடைய நாமத்தை நம்பி, தேவனை சார்ந்து கொள்! (ஏசா: 50:10)

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

 

 

 

மலர்:1இதழ்: 102 எண்ணிப்பார்! மறந்து போகாதே!

எண்ணா:15: 37 – 38 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி;

நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்ட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்;

நீங்கள் பின்பற்றி சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும், உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியெ செய்யும்படிக்கு அது உங்களுக்கு தொங்கலாய் இருக்கவேண்டும்.”

 

நானும் என் கணவரும் அமெரிக்காவில், எங்களுடைய நண்பர் ஒருவரின் அலுவலகத்திற்கு சென்றோம்.

அவர் தன் மனைவியிடம் என்னை அவர்களோடு கூட்டி சென்று தங்களுடைய ஊழியங்களைக் காட்டும்படி சொன்னார். அவருடைய மனைவி லிண்டா தன் செக் புக்கை எடுத்து வருவதாக ஆபிசுக்குள் சென்றவர் ஒருமணி நேரமாய் வரவில்லை.  என்ன நடக்கிறது என்று பார்க்க உள்ளெ சென்றவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது! ஆபிசே தலை கீழாக மாறி விட்டது. ஆபீஸ் பைல்கள் குப்பை போல் கிடந்தன! அந்த செக் புக்கைத் தேடி அலங்கோலப் படுத்திவிட்டார். பின்னர் தன்னுடைய காரில் தேட ஆரம்பித்தார். அங்கும் அலங்கோலம்! மூன்று மணி நேர தேடலுக்கு பின்னர், அவர்கள் காரில் வைத்திருந்த ஒரு சிறு கைப்பையில் அந்த செக் புக் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் ஒரு நாளே வீணாய் போய் விட்டது எனக்கு.

எத்தனை முறை நாமும் இப்படி முக்கியமான பொருட்களை வைத்த இடம் மறந்து போய் தேடியிருக்கிறோம்! நாம் மறதியுள்ளவர்கள் என்று நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கும் தெரியும்! அதனால் தான் சில காரியங்களை நாம் நினைவுகூற வேண்டி அவர் திரும்ப திரும்ப நினைவூட்டுகிறார்!

அதுமட்டுமல்ல இஸ்ரவேல் புத்திரரை, தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்ட வேண்டும் என்றும், அதைப் பார்த்து, அவர்கள் கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைவுகூற வேண்டும் என்றும் சொன்னார்.

கர்த்தருடைய கற்பனைகளை நினைவுகூற என்ன அருமையான வழி! இந்தக் காலத்தில் நம்மை நினைவு படுத்த பலமுறைகளை உபயோகிக்கிறோம்! வாலிபருக்கு மொபைல் போன் போன்ற கருவிகள் அதிகமாக உதவுகின்றன! என்னைப் போன்றவர்கள் சமையலறையில் குறிப்பு எழுதிக் கொள்வோம்! ஆனால் அந்தக் காலத்தில் என் பாட்டி ஏதாவது ஒன்றை நினைவு வைத்துக் கொள்ள வேண்டுமானால், தன்னுடைய ஆறுமுழ புடவையின் நுனியில் ஒரு முடி போட்டுக் கொள்வார்கள்! அந்த முடிச்சை பார்க்கும்போதெல்லாம் முடிக்க வேண்டிய காரியம் ஞாபகத்துக்கு வரும் அல்லவா!

கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் எதை மறக்காமலிருக்க விரும்பினார்?

1. கர்த்தர் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்ததை நினைவுகூற

வேண்டும் என்று விரும்பினார்.  ( உபாகமம்: 5:15)

2. தம்முடைய பலத்த கரத்தினால் அவர்களை எகிப்திலி்ருந்து

புறப்படப் பண்ணினதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். (யாத்தி:13:3)

3  அவர்களை உருவாக்கின தேவனை நினைவுகூற விரும்பினார்.

கர்த்தர் யாத்தி:20 ம் அதிகாரத்தில் பத்து கட்டளைகள் கொடுத்தபோது,

நான்காவது கட்டளையை மாத்திரம் நாம் நினைவு கூறும்படி கூறினார்.

ஒய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக’ (யாத்தி:20:8)

ஏனெனில் ஒய்வுநாள் கர்த்தருடைய ஆறுநாள் கிரியை ஞாபகப்படுத்துகிறது!

அவர் கரம் நம்மை உருவாக்கியதை ஞாபகப்படுத்துகிறது!

4. இந்த உலகம் நமக்கு சொந்தமல்ல என்று நினைவுகூற விரும்பினார்.

லூக்:17:32 ல் லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள் என்று

சொல்லப்பட்டுள்ளது. உலகத்தை திரும்பிப் பார்த்து அவள் உப்புத்

தூணானாளே!

5. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ’என்னை நினைவுகூரும்படி இதை

செய்யுங்கள்’ (லூக்:22:19) என்று, திருவிருந்து என்ற  செயலால்

அவருடைய இரத்தம் நமக்காக சிந்தப்பட்டதை நாம் நினைவுகூரும்படி

சொன்னார்!

இன்று கர்த்தர் உனக்கு எதை ஞாபகப்படுத்த விரும்புகிறார்? அவர் உனக்கு கொடுத்த ஆசிர்வாதங்களை மறந்து போனாயோ? அவற்றை ஒவ்வொன்றாய் எண்ணிப்பார்! அவருடைய அன்பு, கிருபை, பாதுகாப்பு, அரவணைப்பு, வழிநடத்துதல் அனைத்தும் நினைவுக்கு வரும்!

 

எண்ணிப்பார்! எண்ணிப்பார்! மறந்து போகாதே!

 

 உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

மலர்:1இதழ்: 101 உன் தலை எண்ணப்பட்டிருக்கிறது!

எண்:1:1,2 “இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டம் வருஷம், இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:

நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச் சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணி தொகையேற்றுங்கள்.”

 

நாம் வேதத்தில் நான்காவது புத்தகமான எண்ணாகமம் என்ற புத்தகத்தை படிக்க இன்று ஆரம்பிக்கிறோம். அடுத்த ஒருசில வாரங்கள் நாம் இந்த   எண்ணாகமத்தைப் படிக்கப் போகிறோம்.

இந்த புத்தகம் முழுவதும், கார்த்தருடைய கோபத்துக்கு ஆளாகி, பாலைவனத்தில் நாற்பது வருடங்கள் அலைந்து திரிந்த இஸ்ரவேலரின்,  பெயர்களும், பெயர் வரிசைகளும், தொகைகளும், விதிமுறைகளும், தான் இடம் பெற்றிருக்கின்றன என்பது இதை வாசித்த நமக்கு தெரியும். சாதாரணமாக லேவியராகமம், எண்ணாகமம் புத்தகங்களை நாம் வாசிப்பதை தவிர்த்துவிடுவோம் அல்லவா?

இதை ராஜாவின் மலர்களுக்காக படிக்க ஆரம்பித்தபோது, இந்த ஜனங்களின் பாலைவன அனுபவத்திலிருந்து என்னுடைய ஆத்தும வளர்ச்சிக்கு நான் எதை கண்டடைவேன் ஆண்டவரே என்று பயந்தேன்.

ஆனால் நான் ஆச்சரியப்படும் அளவுக்கு இந்த புத்தகம் எனக்கு பாலைவனத்தில் ஓர் நீரோடையாய் கிடைத்தது.

இதில் இடம்பெற்றிருக்கிற சில அருமையான் சம்பவங்கள், கதைகள் நம்முடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகின்றன! சில தேவனுடைய பிள்ளைகள் செய்த தவறுகள், நாம் இன்று அப்படிப்பட்ட தவறுகளை செய்யாமல் தடுத்து, நம்மை சீரான வழியில் நடத்துகின்றன! பிரித்தெடுக்கப்பட்ட பரிசுத்த ஜீவியம், முறுமுறுப்பு என்ற பெருந்தவறு, பாலைவன வாழ்க்கையினால் ஏற்ப்படும் மன சோர்புகள் போன்ற பல அருமையான பாடங்கள் நமக்காக காத்திருக்கின்றன!

பாலைவனத்தின் நீரோடையான இந்த எண்ணாகமத்தை நாம் இன்று வாசித்த எண்ணாகமம்: 1: 1,2 வசனங்களிலிருந்து ஆரம்பிக்கலாம்.

கர்த்தர் மோசேயை நோக்கி, இஸ்ரவேல் மக்களின் தொகையை பேர்பேராக எண்ணச் சொல்லுகிறார். கர்த்தர் இப்படி இஸ்ரவேல் மக்களின் தொகையை எண்ணச் சொன்னது, முதல் தடவையோ அல்லது கடைசி தடவையோ அல்ல! அவர்களை வம்சம் வம்சமாக, குடும்பம் குடும்பமாக, தலை தலையாக எண்ணும்படி கட்டளையிட்டார்.

வனாந்தரத்தில் கால்நடையாக நடந்த மக்களை சீராக வழிநடத்த இந்த குடிமதிப்பு உதவியிருக்கும் என்பது வேதகம வல்லுநர்களின் கணிப்பு.

இதில் ஒரு காரியம் என் உள்ளத்தை கவர்ந்தது! கர்த்தர் மோசேயை நோக்கி, சுமாராக எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று கணக்கு பார் என்று சொல்லியிருந்தால், சுமாராக 2 இலட்சம் பேர் அல்லது சுமாராக எண்பதாயிரம் பேர் இருப்பார்கள் என்று மோசேயும் தோராயமாக சொல்லியிருப்பான். ஆனால் கர்த்தர் கேட்டதோ தோராயமாக அல்ல, அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணி தொகையேற்றுங்கள்.” என்றார்.

உதாரணமாக, யூதா கோத்திரத்தாரின் எண்ணிக்கை, இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து நானுறு பேர் என்று (எண்:2:9 ) வாசிக்கிறோம்.

சகல தலைகளையும் பேர்பேராக எண்ணும்படி கட்டளையிட்ட தேவனுக்கு, ஒவ்வொரு தனி மனிதனும் முக்கியம். ஒரு சபையில் எத்தனை பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள் என்ற எண்ணிக்கை அவருக்கு தேவையில்லை! ஒரு கன்வென்ஷன் கூட்டத்தில் எத்தனை பேர் கை தூக்கினார்கள் என்ற எண்ணிக்கை அவருக்கு முக்கியமில்லை! நானும் நீயும் அவருக்கு முக்கியம்!

ஏதோ ஒரு திருச்சபையில், ஒரு மூலையில் ஒதுங்கியிருந்து விட்டு செல்கிறாயா? ஒரு கூட்டத்தின் மறைவில் நீ யாரென்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா? கர்த்தர் உன் தலையை எண்ணியிருக்கிறார்! நீ தேவனுடைய பார்வையில் விசேஷமானவன்!

உன் தலையை மட்டுமல்ல “உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால் பயப்படாதிருங்கள்: அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.” (மத்தேயு:10:30 என்று நம் கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார்.

இயேசு கிறிஸ்து உன்னை நேசிப்பதால் நீ அவருக்கு விசேஷமானவன்! யாரோ ஒரு பரிசுத்தவான் எழுதியதைப் போல ”இந்த உலகத்தில் உன்னைத் தவிர வேறு யாரும் வாழாதது போல அவர் உன்னையே காண்கிறார்! உன்னையே நேசிக்கிறார்!”

நீ அவரை நேசிக்கிறாயா?

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com