Archive | April 2012

மலர் 2 இதழ் 189 பசுந்தோல் போர்த்திய சிசெரா என்னும் புலி!

நியா: 4 : 20 அப்பொழுது அவன் : நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான்.

நாம் யாகேலின் கூடாரத்துக்குள் நுழைந்த சிசெராவைப் பற்றிப் பார்த்தோம்!

அந்த கூடாரத்துக்குள் நடந்ததை சற்று கூர்ந்து கவனிப்போம்! சிசெரா, யாகேலின்  கணவன் ஏபேர் இல்லாதபோது உள்ளே புகுந்தான். யாகேல் கொடுத்த பாலைப் பருகினான். இப்பொழுது யாகேல் கொடுத்த சமுக்காளத்தை மூடிக்கொண்டு தூங்கப் போகிறான்.

அதற்காக அவளை நோக்கி   நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல்  என்று, அவளைப் பொய் சொல்லும்படியாகத் தூண்டுகிறான்.

சாத்தான் என்னும் சிசெரா ஏவாளிடம்  இனிமையான வார்த்தைகளால் பேசிய சர்ப்பமாக வந்து அவளை கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாத படி செய்தான்.

சாத்தான் என்னும் சிசெரா  ஈசாக்கிடம், அவனுடைய மகன் யாக்கோபின் ரூபத்தில், வெள்ளாட்டுக் குட்டிகளின் ரோமத்தைப் போர்த்தி வந்து, ஏசாவின் ஆசீர்வாதத்தை  ஏமாற்றிப் பெற செய்தான்.

நாம் சிறு வயதில் கற்பனைப் பண்ணியவிதமாக சாத்தான் நம்மிடம் இரண்டு கொம்பு வைத்த கொடிய ரூபத்தில் வரமாட்டான்.

சில நேரங்களில் அவன் யாகேலுக்கு ஏற்பட்டது போல, உன்னுடைய கணவனின் நண்பனாக வந்து, உன்னிடம் ஆசை வார்த்தைகள் பேசி உன்னை ஏமாற்றி பாவத்தில் விழ செய்யலாம்!

சில நேரங்களில் ,  ஏவாளை அவளுடைய வீடு என்னும் அழகிய ஏதேன் தோட்டத்தில் பாவம் செய்ய வைத்தது  நம்மையும் நம் வீட்டுக்குள்ளேயே நாம் எதிர்பார்க்காத வேளையில், நாம் எதிர் பார்க்காத சூழ்நிலையில் பாவம் செய்யத் தூண்டலாம்!

சில நேரங்களில்  நம்மை ஈசாக்கைப் போல சிலருடைய ஏமாற்று வலைக்குள் அவர்களுடைய லாபத்துக்காக, அவர்களுடைய பொருளாசைக்காக  விழ வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறான்.

ஐயோ நான் எப்படி இந்த வலைக்குள் விழுந்தேன்? நான் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தேனே! நான் மோசம் போய் விட்டேனே! நான் ஏமாந்து விட்டேனே! என்றெல்லாம் நாம் சிலநேரங்களில் வேதனைப் படுவதில்லையா?

நல்லது என்று  நாம் குருட்டுத்தனமாய் நம்பியவை, பசுந்தோல் போர்த்திய புலி போல, நண்பனாய் யாகேலின் கூடாரத்துக்குள் புகுந்த சிசெரா போல நம்மைப் பாவம் என்னும் படும் குழியில் தள்ள வில்லையா?

அப்படியானால் இப்படிப் பட்ட பசுந்தோல் போர்த்திய புலிகளை நாம் எப்படி அடையாளம் கண்டு கொள்வது? இவர்கள்  நம் வாழ்க்கையில் புகுந்து, நம்மோடு புசித்துக், குடித்து, இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும்?

 அப்போஸ்தலனாகிய  பேதுருவும் ஒருநாள் தான் சற்றும் எதிர்பார்க்காத வேளையில், சிசெரா போன்ற சாத்தானின் தந்திரத்தால் தாக்கப்பட்டான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் கிருபையாய் வெற்றி பெற்ற அவன், 1 பேது: 5: 8  ல் இவ்வாறு எழுதுகிறான்,

” தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்! விழித்திருங்கள்; ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்’.

ஜாக்கிரதை! இந்த உலகத்தில் கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல அலைந்து நம் ஒவ்வொருவரையும் ஏமாற்றி பாவத்தில் விழப்பண்ண சிசெரா என்னும் தந்திரவாதி சுற்றித் திரிகிறான்!  ஆனால் உன்னை பயமுறுத்தும் சிங்கத்தின் ரூபத்தில் அல்ல! பசுந்தோல் போர்த்திய புலியாக உன்னை மயங்க வைக்கும் ரூபத்தில், இனிக்கும் வார்த்தைகளோடு, வஞ்சகமுள்ள இருதயத்தோடு சுற்றி அலைகிறான்.

கணவனின் நண்பனாய் அவள் வாழ்க்கைக்குள்ளே பிரவேசித்த சிசெராவை யாகேல் எப்படி கையாண்டாள் என்று நாம் நாளை பார்க்கும் முன்னர், இன்று உன் வாழ்க்கையில் பிரவேசித்துள்ள சிசெராவை நீ எப்படி கையாளுகிறாய் என்று எண்ணிப்பார்!

இயேசு கிறிஸ்து சாத்தானை முறியடித்தவர்! உன்னைப் பற்றியிருக்கும் பாவ வலையிலிருந்து உனக்கும் வெற்றி தருவார்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

மலர் 2 இதழ் 188 உன்னுடைய கூடாரத்தில் விருந்தா?

நியா:  4:19 ” அவன் அவளைப் பார்த்து : குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால் துருத்தியை திறந்து, அவனுக்குக் குடிக்கக் கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்.

இன்றைக்கு மதியம் நான் சாப்பிட உட்கார்ந்த போது எனக்கு உடம்பில் சர்க்கரை குறைந்து விட்டது. நான் வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்தேன், ஆனால் அதி வேகமாக சர்க்கரை குறைந்து கைகளும் கால்களும் நடுங்கவும், கண்கள் சொருகவும் ஆரம்பித்தன, வாய் குழறியது. என் மருமகள் ஆரஞ்சு ஜூஸை என் வாயில் சிறிது சிறிதாக ஊற்றினாள். சற்று நேரம் கழித்து கண்களில் தெளிவும், உடம்பில் தெம்பும் திரும்ப வந்தது.

இப்படியாக கால்கள் தள்ளாடி, கண்கள் சொருகிய நிலையில்தான் சிசெரா யாகேலுடைய கூடாரத்துக்குள் சென்றிருப்பான். அவன் பாராக்கின் சேனைகளின் கண்களுக்குத் தப்ப பல நாட்கள் ஓடியிருந்திருப்பான். அதுமட்டுமல்ல பாலஸ்தீனிய பாலைவனத்தின் அனல் அவன் உடம்பில் இருந்த சொட்டு நீரையும் உறிஞ்சியிருக்கும். நாவு உலர்ந்து, ஒரு சொட்டு தண்ணீருக்கும், ஒரு பிடி உணவுக்கும் சரீரம் ஏங்கியவனாய் யாகேலின் கூடாரத்துக்குள் நுழைகிறான்.

எது எப்படியாயிருந்தாலும் சரி, யாகேல் தன்னுடைய கூடாரத்துக்குள் எதிர்பாராத வேளையில் நுழைந்த சிசெராவை எப்படி உபசரித்தாள் என்பதே நமக்கு முக்கியம்.

அங்கு அவள் கணவன் ஏபேர் இருந்ததாகத் தெரியவில்லை. அவன் இல்லாததால் தான் சிசெரா யாகேலுடைய கூடாரத்துக்குள் வந்தான். சரித்திரத்தை திரும்பி பார்த்தால், அக்காலத்திலே  கணவன் மனைவியாக இருந்தாலும் அவர்கள் தனித்தனி கூடாரத்திலே வாழ்ந்தனர். ஆபிரகாமும் சாராளும் தனிக் கூடாரங்களிலே வாழ்ந்தனர். ஈசாக்கு ரெபெக்காளை மணந்த போது அவளைத் தன் தாயின் கூடாரத்துக்கு அழைத்து சென்றான் என்று வேதம் சொல்லுகிறது.

யாகேலுடைய உபசரிப்பைப்பற்றிப் பார்க்குமுன்  சில முக்கியமான காரியங்களைக் கவனிப்போம்.

முதலாவதாக, ஆதிப் பழங்குடி நாடோடி மக்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. ஒருவனுடைய கூடாரத்தில் போய் அவனோடே புசித்துக், குடித்து விட்டால் அவர்களுக்குள் அது சமாதானத்துக்கு அறிகுறி. எதிரியுடைய கூடாரமாகவே இருக்கட்டும், அவனோடு புசித்துக் குடித்து விட்டால் ஒருவன் தைரியமாகத் தங்க முடியும். ஐயோ பாவம் சிசெரா யாகேலுடைய கூடாரத்தை அப்படித்தான் நினைத்துவிட்டான், புசித்துக் குடித்துவிட்டால்  சமாதானம் என்று.

இரண்டாவதாக, முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று!  நாவு ஒன்றோடுன்று ஒட்டிக்கொண்டு வந்த சிசெராவுக்கு வேண்டியது தண்ணீர் தான். ஆனால் யாகேல் தண்ணீருக்கு பதிலாக பால் ஊற்றிக் கொடுப்பதைப் பார்க்கிறோம்.

இந்த சிறிய சங்கதியில் என்ன பெரிதாக இருக்கிறது? என்று நினைக்கலாம்! நம் வீடுகளில் படுக்கப்போகும்போது பால் குடிக்கும் பழக்கம் உண்டு அல்லவா? அதே மாதிரி மரிக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கும் பால் கொடுக்கும் பழக்கம் உண்டு! பால் நித்திரையை வருவிக்கும்! யாகேல் தண்ணீரைக் கேட்ட நாகத்துக்கு பாலைக் கொடுக்கிறாள்!  அவனுக்கு மீளாத நித்திரையைக் கொடுக்க அவள் முடிவு செய்து விட்டாள்!

யாகேலின் வாழ்க்கை நமக்குத் தெளிவான ஒரு சத்தியத்தை விளக்குகிறது! பொல்லாதவன் அவள் கூடாரவாசலை அடைந்தவுடனேயே அவனை ஒழித்துவிட முடிவுகட்டி விட்டாள்.

சிசெராவுக்கு அவளுடைய கூடாரத்தில் இடமில்லை!

நம்மை சிலந்தி வலை போல் பற்றிக் கொண்டிருக்கும் பாவங்கள் யாவுமே நம்முடைய வாழ்க்கை என்னும் கூடாரத்துக்குள் நுழைந்த போது நாம் அழைத்து விருந்து வைத்து,  நம்மோடு தங்க வைத்தவைகள் தான்.

சிசெரா போன்ற பொல்லாங்கனுக்கு நம் கூடாரத்தில் விருந்து வைக்காமல், அவனை நம் வாழ்க்கையை விட்டு ஒரேயடியாக விரட்டும் ஞானத்தை தேவனாகிய கர்த்தர் நமக்கு அருளும்படியாக ஜெபிப்போம்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 2 இதழ் 187 யாருடன் நட்பு? சிந்தித்து சொல்?

நியா: 4:  18 யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டு போய்; உள்ளே வாரும்: என் ஆண்டவனே,என்னண்டை உள்ளே வாரும், பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள்; 

யாகேல் என்னும் பெயருக்கு வரையாடு என்று அர்த்தம் என்று பார்த்தோம். அவள் ஒரு நாடோடிப் பின்னணியில் வளர்ந்திருக்கக் கூடும் என்றும் பார்த்தோம்.

யாகேல் முரட்டுப் பெண்ணாக வளர்ந்திருக்கலாம் ஆனால் முட்டாள் பெண்ணாக அல்ல!

புத்திசாலி என்று எண்ணப்படுகிற எந்தப் பெண்ணும் தன்னுடைய கணவனையும், பிள்ளைகளையும் கூர்ந்து கவனிப்பாள். கணவனுடைய நட்பும், பிள்ளைகளுடைய நட்பும் அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றி அமைக்கக்கூடும்.

நாம் நேசிக்கிற யாரையும் நட்பு என்ற பெயரில் யாரும் ஏமாற்றி விடக்கூடாது என்று நினைப்பது, இயற்கையாகவே குடும்பத்தை பாதுகாக்கும் குணம் கொண்ட பெண்களின் இயல்புதான்! யாகேல் தன் கணவன் ஏபேரின் நண்பர்களை கவனித்துக் கொண்டிருந்தாள்.

ஏபேருக்கு கானானியரின் ராஜாவாகிய யாபீனுடனும், அவனுடைய சேனாதிபதியாகிய சிசெராவிடமும் சமாதானம் அல்லது நட்பு இருந்தது (நியா:4 : 17).ஒருவேளை தொழில் சம்பந்தமான நட்பாக இருந்திருக்கலாம். உலோகத்தில் பொருட்கள் செய்யும் ஆசாரியான அவன் யாபீனுடைய 900 இரும்பு ரதங்களை பராமரித்திருக்கக் கூடும்!  அதனால் நிச்சயமாக ஏபேருக்கு நல்ல வருமானம் இருந்திருக்கும்!

யாகேல் என்னும் வரையாடு சாதாரணப் பெண் இல்லை. தன் கணவன் ஏபேருக்கும், ராஜா யாபீனுக்கும், சேனாதிபதி சிசெராவுக்கும் இடையே உருவான நட்பு  அவளுக்குத் தெரியும்.  யாபீனும், சிசெராவும் இஸ்ரவேல் மக்களை அடக்கி, ஒடுக்கி ஆண்டு வந்ததும் அவளுக்குத் தெரியும். அவர்கள் இஸ்ரவேல் மக்களை சபித்ததையும்  கேட்டிருக்கக்கூடும். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரையும், அவருடைய பிள்ளைகளையும் மதிக்காத அவர்களுடைய நட்பு நீடிக்கவேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இல்லை.

சரி! என்ன நடக்கிறது? கர்த்தர் சிசெராவின் சேனைகளைக் கலங்கப் பண்ணியதால், பாராக் சிசெராவின் சேனைகளை முறியடித்தான். சிசெரா தப்பித்து ஓடி, ஏபேரும் யாகேலும் வாழ்ந்த கூடாரத்தைத் தேடிப் போகிறான்.

அப்பொழுது யாகேல் தன் கூடாரத்தை விட்டு வெளியே வந்து, நாவில் தேன் சொட்ட சொட்ட, முகத்தில் புன்னகையோடு சிசெராவை தன் கூடாரத்துக்குள்ளே அழைத்தாள். தலைக்கு வரும் ஆபத்திலிருந்து தப்பிக் கொள்ள, யாகேலுடைய அழைப்பை ஏற்று அவள் கூடாரத்துக்குள்ளெ நுழைந்தான் சிசெரா! உண்மையான நட்பு என்பது ஒருவர் மேல் ஒருவர் காட்டும் அன்பும் ஆதரவும் ஆகும்!  ஆனால் இந்தக் குள்ள நரி சிசெராவிடம் உண்மையான அன்பும், பரிவும் இல்லை என்று யாகேல் என்னும் வரையாடு அறிவாள்!

உன் நண்பனைக் காண்பி! உன்னைக் காண்பிக்கிறேன்!’ என்ற ஸ்பானிஷ் பழமொழி நமக்கு நன்கு தெரிந்ததுதானே!  ஏபேருடைய நண்பர்களாகிய யாபீனையும், சிசெராவையும் பார்த்து,  ஏபேர் எப்படிப்பட்டவனாக இருந்திருப்பான் என்று என்னால் ஊகிக்க முடிகிறது.

ஆனால் யாகேல் தன் கணவனின் நட்பைப் பொருட்படுத்தாமல், அதனால் வீட்டுக்குள்ளே வரும் எந்தப் பிரச்சனையையும் பொருட்படுத்தாமல், பெரிய இடத்து சம்பந்தமாயிற்றே பகைத்துக்கொண்டால் நம் நிலமை என்ன ஆகும் என்று எண்ணாமல், நம் கணவனின் தொழில், வருமானம் எல்லாம் போய்விடுமே என்றெல்லாம் எண்ணாமல், வானத்தையும், பூமியையும் படைத்த தேவாதி தேவனின் நட்பையே பெரிதாகக் கருதினாள்.

இன்று நாம் எந்த நட்பைப் பெரிதாகக் கருதுகிறோம்? உலகப்பிரகாரமான, தொழில் சம்பந்தமான, வருமானம் சம்பந்தமான, கவுரவம் சம்பந்தமான நட்பையா? அல்லது நம்மை நேசிக்கிற, நம்மேல் அன்பும் பரிவும் காட்டுகிற, நமக்காக தம் ஜீவனையே கொடுத்த இயேசு கிறிஸ்துவின் நட்பையா?

யாருடன் நட்பு?  சிந்தித்து முடிவு செய்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு!

நியா: 4: 18 “யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர் கொண்டு போய்….”

சென்றவாரம் நான் ஆலயத்துக்கு சென்ற போது அங்கே ஒரு அக்கா என்னிடம் வந்து, உங்கள் மகள் ஷெக்கினா எப்படி இருக்கிறாள்? அவளை நான் குளோரி என்று கூப்பிடுவேன், அவளையும், அவள் பெயரின் அர்த்தத்தையும்  எனக்கு மிகவும் பிடிக்கும்! அந்த பெயருக்கு மனிதருடைய கண்களுக்கு தென்பட்ட தேவனுடைய மகிமை என்று தானே அர்த்தம்? என்று கேட்டார்கள்.

என் மகள் பிறந்தபோது, அவளை முதன்முறையாக ஷெக்கினா என்று நாங்கள் அழைத்தபோது, அவள் எப்படி வாழப் போகிறாள் என்ற சந்தேகம் சற்றும் வரவில்லை. நிச்சயமாக அவள் தேவனுடைய மகிமையை மற்றவர்கள் காணும்படியாக வாழ்வாள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருந்தது! அந்த நம்பிக்கை ஒருநாளும் வீண்போகவேயில்லை.

நாம் ஒவ்வொருவரும் நம் பிள்ளைகள் எப்படி, யாரைப்போல வாழ வேண்டும் என்பதை மனதில் கொண்டே பெயர்களை தெரிந்தெடுக்கிறோம்.

இன்றைக்கு நாம் இஸ்ரவேலை அடக்கி ஆண்ட யாபீன் என்கிற ராஜாவின் சேனாதிபதி சிசெராவை அழித்து சரித்திரத்தில் இடம் பெற்ற யாகேல் என்ற பெண்ணைப் பற்றிப் படிக்கப் போகிறோம்!

யாகேல் என்ற பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா? வரையாடு! வரையாடுகளைப் பார்த்திருக்கிறீர்களா?

சில வருடங்களுக்கு முன்னால் இந்த வரையாடுகளைப் பார்ப்பதற்காக மூனார் மலைப்பகுதியில் வெகுதூரம் நடந்து சென்றோம். ஆனால் ஒன்று கூட கண்ணில் படவில்லை. அதன் பின்னர் பலமுறை நான் வால்பாறை செல்லும் வழியில் குடும்பமாக குட்டிகளோடு அலைந்த வரையாடுகளைப் பார்த்தேன். கடந்த மாதம் நான் வால்பாறை சென்றபோது ஒரு பெரிய ஆடு, என்னுடைய கார் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தது. இந்த ஆடுகள் மலைப்பிரதேசத்தில் தான் வாழும்! செங்குத்தான மலையின் மேல் கால்கள் சருக்காமல் ஏறும் திறமையுள்ளவைகள்!

யாகேல் அல்லது வரையாடு என்ற பெயர் கொண்ட இந்த பெண்ணைப் பற்றி அறிந்து கொள்ள நாம் அவள் குடும்பப் பிண்ணணியை சற்றுப் பார்ப்போம்.

இவள் தெற்கு பாலஸ்தீனத்தை சேர்ந்தவள். அவளுடைய குடும்பத்தினர் நாடோடிகளாக கூடாரங்களில் வசித்தவர்கள். பாலைவனத்தில் வாழ்ந்த அவர்களுடைய தினசரி வாழ்க்கையே மிகக் கடினமானது. அவளுடைய கணவனாகிய ஏபேர், கேனியன் என்று வேதம் சொல்லுகிறது. கேனியர் இரும்பு, செம்பு போன்ற உலோகங்களில் ஆயுதம், மற்ற கருவிகள் செய்யும் திறமை வாய்ந்தவர்கள். அதனால் அவர்கள் கானானில் உள்ள மக்களுக்கு வேண்டப்பட்டவர்களாய் இருந்தார்கள்.

நியா: 4: 11 கூறுகிறது, “ கேனியனான ஏபேர் என்பவன்…..கேனியரை விட்டுப் பிரிந்து, கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்” என்று. ஏன் அவன் இவ்வாறு பிரிந்தான் என்று நமக்குத் தெரியவில்லை! ஒருவேளை குடும்பத்தில் ஏதாவது சண்டை காரணமாயிருந்திருக்கலாம். ஆதலால் அவன் கேதேஸ் அருகே சானாயிம் என்ற இடத்தில் குடியிருந்தான். அங்கே அவன் கானானியருடன் சமாதானத்துடன் வாழ்ந்தான். கானானியரின் ராஜாவாகிய யாபீனுக்கு தொள்ளாயிரம் ரதங்கள் இருந்தன, அவனுக்கு நிச்சயமாக , உலோகத்தில் வேலை செய்யும் ஏபேரின் உதவி தேவைப் பட்டிருக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நம்முடைய வரையாடு  என்கிற யாகேல் வாழ்ந்து வந்தாள். அவளுடைய் குடும்பப் பின்னணி அவளை முரட்டுப் பெண்ணாக உருவாக்கியிருந்தது! அவளுடைய கடினமான கூடார வாழ்க்கை, அவளை சொந்தமாக சிந்தித்து முடிவெடுக்கும் பெண்ணாக உருவாக்கியிருந்தது! அவளுடைய கணவனாகிய ஏபேர் கானானியரிடமும், அவர்கள் ராஜாவாகிய யாபீனிடமும், அவனுடைய சேனாதிபதி சிசெராவிடமும் சமாதானம் கொண்டிருந்தாலும், அவள் இஸ்ரவேலின் எதிரிகளை அழிக்க முடிவெடுத்தாள்! அவள் கானானியரின் நிலத்தில் வாழ்ந்த போதிலும், அவர்கள் கர்த்தருடைய பிள்ளைகளை ஒடுக்கி ஆண்டவர்களோடு சமாதானம் பண்ண விரும்பவில்லை!

யாகேல் தேவனுக்கு கீழ்ப்படிந்த ஒரு முரட்டாடு! அவளுடைய குலமோ, கோத்திரமோ, குடும்பமோ, அவளுடைய கணவனோ யாரும் அவள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதைத் தடை செய்ய முடியவில்லை!

நாம் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற எத்தனை சாக்குபோக்கு சொல்லுகிறோம்?

நாளையும் இந்த மலர்த்தோட்டத்துக்கு வாருங்கள்! யாகேலைப் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 2 இதழ் 185 தலைப்பு செய்திகள்! சிசெரா தப்பிவிட்டான்!

நியா: 4: 17  “சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.”

வெற்றி! வெற்றி! சிசெராவின் சேனை ஒழிந்தது! கர்த்தர் நமக்கு வெற்றி கொடுத்தார்! சிசெராவும் அவனுடைய  900 இரும்பு ரதங்களும் ஒழிந்தன!

இஸ்ரவேல் மக்களுக்குள் இவ்வாறு வெற்றி செய்தி காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருந்த வேளையில், ” தலைப்புச் செய்திகள்… சிசெரா ஒழிந்து போகவில்லை! தப்பித்து விட்டான்!” என்ற பரபரப்பான செய்தி வெளியாகி மக்களை திடுக்கிட வைத்தது.

பாராக்கின் சேனைகளுக்கும், சிசெராவின் சேனைகளுக்கும் இடையே  நடந்த கடும் யுத்தத்தின் மத்தியில், சிசெரா கால்நடையாகவே தப்பித்து தலைமறைவாகி விட்டான்.

துரதிருஷ்டவசமாக இந்த வசனம் நமக்கு சிசெராவைப் பற்றி சற்று அதிகமாகவே கற்பிக்கிறது! அவன் தைரியசாலி! புத்திசாலி! தப்பி ஓட ரதம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, தன் கால்களை தன் குதிரையின் கால்களைப் போல் உபயோகித்து தப்பிக்க அவனுக்கு தெரியும்!

சரி தப்பித்து எங்கே ஓட முடியும்? இஸ்ரவேலில் யார் கண்களில் அவன் பட்டாலும் அவன் தலை உருண்டு விடும்!

நியா: 4: 17 கூறுகிறது,” சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.”  அவன் சமாதானத்தின் கூடாரத்தை நோக்கி ஓடினான்.

எபிரேய மொழியில்,  இந்த  சமாதானம் என்ற வார்த்தைக்கு, போரற்ற நிலை என்று மாத்திரம் அர்த்தம் இல்லை, இருதரத்தாருக்குள்ளான  நட்பு , செழிப்பு போன்ற அர்த்தமும் உண்டு.

புத்திசாலிதான்! சரியான இடத்தை நோக்கிதான் ஓடியிருக்கிறான்! கேனியனான ஏபேரின் வீட்டுக்குள் நுழையும்போது தனக்கு அங்கு ஒரு நண்பனைப் போல் பாதுகாப்பு கிடைக்கும் என்று அவனுக்குத் தெரியும்!

ஒருநிமிடம்!  நம் வாழ்க்கையில் சிசெராவைப் போன்ற பாவங்கள், சிற்றின்பங்கள் ஒழிந்து விட்டன, சிசெராவையும் அவன் ரதங்களையும், சேனைகளையும் முற்றிலும் ஒழித்து விட்டேன், இனி எனக்கு பயமில்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கையில், திடீரென்று சிசெரா தலை தூக்குகிறான்.

இந்த முறை ரதத்தில் ஏறி ஆடம்பரமாய் நம் வாழ்க்கைக்குள் வரவில்லை! நாம் எதிர்பார்க்காத வேளையில் பின்வாசல் வழியாக நுழைகிறான். சிசெரா! அந்த வஞ்சிக்கிற சர்ப்பம் நாம் எதிர்பாராத இடத்தில் ஒளிந்திருந்து விட்டு, எதிர்பாராத வேளையில் நமக்குள் தலை தூக்குகிறான்.

ஏபேரின் வீட்டில் அவனுக்கு சமாதானம் உண்டு என்று அறிந்திருந்தான்! சமாதானம் என்ற வார்த்தைக்கு நான் கண்ட அர்த்தம் இன்னொன்றும் உண்டு! நட்பும், செழிப்பும் தான்!  ஆம்! நம்முடைய வாழ்க்கை என்னும் கூடாரத்தில் சிசெரா என்னும் வஞ்சனைக் காரனுக்கு தகாத நட்பு, அல்லது செழிப்பான, ஆடம்பரமான வாழ்க்கை என்ற இடத்தை ஒதுக்கி அவன் ஒளிந்து கொள்ள அனுமதித்திருக்கிறோமா?நான் செய்வது தவறு இல்லை! ஒரு சிற்றின்பம் தானே, பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்று எண்ணும் காரியம் உன்னையே அழித்துவிடும்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நாம் நம்மை இந்த வஞ்சனைக்காரனிடமிருந்து காத்துக் கொள்ளும்படியாய் ” நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்” என்றார்.( மத்:26:41)

சிசெராவும், அவன் சேனைகளும், ரதங்களும் ஒழிந்துவிட்டன என்று நினைத்த உன் வாழ்க்கையில் சிசெரா சமாதானத்துடன், நட்புடன் செழிப்புடன் ஒளிந்து கொண்டிருக்கிறானா? ஜாக்கிரதை!

ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது (மத்: 26:41) சாத்தான் என்னும் வஞ்சனைக்காரன் ரதம் பூட்டியல்ல, கால்நடையாகவே உன்னிடம் வருவான்! பெரிய ஆடம்பரத்தோடு அல்ல சிற்றின்பத்தோடு வருவான்! ஜாக்கிரதை! இடம் கொடாதே!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

மலர் 2 இதழ் 184 சுய பெலன் சிலந்தி நூல் போன்றது!

நியா: 4 : 16 ” பாராக் ரதங்களையும், சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத் மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.”

நாம் கடைசியாக சிசெராவைப் பற்றி  நியா: 4:15 லிருந்து படித்த போது, கர்த்தர் சிசெராவின் சேனையைக் கலங்கப் பண்ணினார் என்று பார்த்தோம். கலங்கடித்தார்  என்பதற்கு முறியடித்தார் அல்லது முற்றும் அழித்தார் என்ற அர்த்தத்தையும் பார்த்தோம்.

இன்றைய வேத பகுதியில், தேவனுடைய மக்களின் சேனைத் தலைவனாகிய பாராக், சிசெராவின் ரதங்களையும், சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத் மட்டும் துரத்தினான் என்று பார்க்கிறோம். பாராக் அவர்களை முற்றிலுமாக கானானை விட்டு ஓட ஓட விரட்டினான். ஒருசிலரை கூட விட்டு வைக்கவில்லை. இது நாம் கவனம் செலுத்த வேண்டிய ஒரு பகுதி!

இந்த சம்பவத்துக்கு வெகு காலத்துக்கு முன்னமே, கர்த்தர் தம்முடைய தாசனாகிய மோசேயின் மூலமும், பின்னர் யோசுவாவின் மூலமும், தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் மக்களுக்கு தாம் வாக்குக் கொடுத்த கானான் தேசத்தில், எதிரிகளாகிய கானானியருக்கு இடமில்லை என்று தெளிவாகக் கூறியிருந்தார். ஏன் அப்படி சொன்னார்? கானானியரை ஏன் அவர் அனுமதிக்கவில்லை? ஒருசில கானானியர் கூட அவர்கள் மத்தியில் வாழக்கூடாதா? என்ன அநியாயம்? என்ற எண்ணம் நமக்குத் தோன்றவில்லையா?

நம்மையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். கர்த்தர் வேதத்தின் மூலமாக நம்மோடு பேசி, நம்மை சரியான பாதையில் நடத்துகிறார். நம்மை பாவ சேற்றில் விழாமல் பாதுகாக்கிறார். ஆனால் பல நேரங்களில், நமக்குள் புதைந்திருக்கும் ஒருசில சிற்றின்பங்களின் தூண்டுதலால், ஏன் எனக்கு கர்த்தர் இப்படி வாழ சுதந்தரம் கொடுக்கவில்லை, அப்படி வாழ சுதந்தரம் கொடுக்கவில்லை, நான் ஏன் மற்றவர்களைப் போல  வாழக்கூடாது என்றெல்லாம்  எண்ணி, நம்மைப் பாதுகாக்கும் தேவனை, ஏதோ நம் சுதந்தரத்தைப் பறித்தவர் போல நோக்குகிறோம்.

உண்மை என்ன என்றால், சிசெராவின் சேனையில் ஓரிரு கானானியர் விடப்பட்டாலும், அல்லது நம்முடைய வாழ்வில் ஒருசில சிற்றின்பங்கள் விடப்பட்டாலும், அந்த ஓரிருவர் மூலமாய் நாம் முற்றிலும் வழிமாறிப் போய்விட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதனால் தான் சேனைத்தலைவன் பாராக் சிசெராவின் சேனையை பட்டயக்கருக்கினால் அழித்தான். இந்த சேனையை நம்முடைய சேனைகளோடு இணைத்துக் கொண்டால் நமக்கு மிகப் பெரிய சேனை இருக்குமல்லவா என்று சற்றும் எண்ணவில்லை. அவர்களை விட்டு வைத்தால், அவர்கள் கர்த்தருடைய ஜனத்தை முற்றும் திசை திருப்பி அழித்துவிடுவார்கள் என்று அவர்களை பட்டயத்துக்கு ஒப்புவித்தான்.

நம்மில் அநேகரின் வாழ்க்கையில் சிசெராவின் சேனை போன்ற சிற்றின்பங்கள் முற்றிலும் அழிக்கப்படவில்லை. அவற்றை நமக்குள் புதைத்துக்கொண்டு, அவற்றின் மேல் வெற்றி சிறந்தது போல வாழ முயற்சி செய்வது,  நம்முடைய சுய பெலத்தால் சிற்றின்பங்களை அடக்க நினைப்பது,  இவை எப்படி இருக்கிறது தெரியுமா? காற்றினால் அலைந்து கடலில் மூழ்கப்போகிற கப்பலை, சிலந்தி நூலைக் கொண்டு திசை திருப்ப நினைப்பது போல இருக்கிறது!

இதற்கு தீர்வு என்ன? பரிசுத்த பவுல், பிலிப்பியர் 4:13 ல்  “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்கு பெலனுண்டு” என்று இதற்கு தீர்வு காண்கிறார். அவருடைய பெலத்தினாலே எனக்கு பெலனுண்டு! அவருடைய பெலத்தினாலே சிசெராவின் சேனையை முறியடிப்பேன்!

சுய பெலத்தினாலே பாவங்களை மேற்கொள்ள முடியாது! சாத்தானை முறியடிக்க முடியாது! ஆனால் நமக்குள் வாசம் செய்யும் இயேசு கிறிஸ்துவின் பெலத்தினாலே சாத்தானின் சேனையை முறியடிக்க முடியும்! இது அவர் நமக்கு கொடுத்திருக்கிற வாக்குத்தத்தம்!

சுய பெலனா? அது சிலந்தி நூல் போன்றது! தேவ பெலனைப் பெற்று வெற்றியுடன் வாழ்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 2 இதழ் 183 உன் எதிரிகளைக் கலங்கப் பண்ணுவார்!

நியாதிபதிகள்: 4: 14, 15 அப்பொழுது பாராக்கும் அவன் பின்னாலே பதினாயிரம்பேரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள், கர்த்தர் சிசெராவையும், அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்.

வாழ்க்கையை தன் அதிகாரத்துக்குள் வைத்திருப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? தான் சொல்வதுதான் சட்டம், எல்லாமே தனக்கு சொந்தம், எல்லோருமே தனக்கு அடிமைகள், எதிர்காலமே தன் கையின் சுண்டு விரலில், போன்ற எண்ணம் கொண்டவர்களைப் பற்றித் தான் கேட்கிறேன்!

அப்படிப்பட்ட ஒருவன் தான் யாபீன் என்கிற கானானியரின் ராஜா என்று வேதம் சொல்லுகிறது. 20 வருடங்கள் இஸ்ரவேல் மக்களை அடக்கி ஆண்டு கொண்டிருந்தான். சேனாதிபதி  சிசெராவின் உதவியோடு, 900 இருப்பு ரதங்களோடு, தன்னை யாரும் முறியடிக்க முடியாது என்ற இருமாப்பில் ஆண்டான்.

நியா: 4 :2 கூறுகிறது, யாபீன் ஆத்சோரை ஆண்டான் என்று, ஆனால் ஆத்சோரை மட்டுமல்ல, அண்ட சராசரங்களையும் அடக்கி ஆளும் தேவாதி தேவனைப் பற்றி அவனுக்கு அறிவே இல்லை. அந்த தேவனுக்கு மனதிராவிட்டால் யாபீன் ஆள ஒரு பிடி மணல் கூட இந்த பூமியில் இருந்திருக்காது என்பதை உணராமல் வாழ்ந்தான்.

தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் மக்களை இந்த யாபீனின் இரும்பு ஆட்சியிலிருந்தும், சிசெராவின் இரும்புப் பிடியிலிருந்தும் விடுவிக்க தேவனாகிய கர்த்தர் முடிவு செய்தார்.

கர்த்தர் சிசெராவையும், அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார் என்று வேதம் கூறுகிறது. பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார் என்பதற்கு, முற்றும் அழித்தார் என்று அர்த்தம்.

11 சாமுவேல் 22:15, ” அவர் அம்புகளை எய்து, அவர்களை சிதற அடித்து, மின்னல்களை பிரயோகித்து அவர்களை கலங்கப் பண்ணினார்”  என்ற வார்த்தை நமக்கு இதை தெளிவாக விளக்குகிறது. வானத்தையும், பூமியையும் ஆளும் பரலோக தேவனுக்கு நிகராகத் தங்களை இணைத்த யாபீனுக்கும், சிசெராவுக்கும் எதிராக தேவன் தம் வல்லமையுள்ள புயத்தை வெளிப்படுத்தினார். இஸ்ரவேல் மக்களின் தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லவர், சருவத்தையும் ஆளுபவர் என்று அவர்கள் புரிந்து கொண்டனர்.

கர்த்தர் யாபீனையும், சிசெராவையும் கலங்கப்பண்ணின சம்பவத்திலிருந்து, இஸ்ரவேல் மக்களும், விசுவாசிகளாகிய நாமும் சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியதிருந்தது.

தேவனாகிய கர்த்தர் சருவத்தையும் ஆளுகிறார் என்ற எண்ணமே இல்லாமல் நாம் வாழும்போது, தேவனாகிய கர்த்தரின் கண்கள் தம் பிள்ளைகள்ளகிய நம்மேல் நோக்கமாயிருக்கிறது என்று நினையாமல் நாம் வாழ்க்கையின் சுமைகளைத் தாங்கும் போது, கர்த்தர் நம்மை நோக்கி, எழுந்திரு! போ! நான் உனக்கு முன் செல்கிறேன்! என்று ஏன் சொல்லுகிறார் தெரியுமா? அவர் நம் எதிரிகளைக் கலங்கடிக்கப் போகிறார்!

நம்முடைய பிரச்சனைகளுக்கு மத்தியில் நாம் தேவனாகிய கர்த்தரை சர்வ வல்லவர் என்று விசுவாசிக்கிறோமா?

 அவர் வல்லவர்! சர்வ வல்லவர்! அவர் உனக்காக யுத்தம் செய்வார்! உன் எதிரிகளை கலங்கடித்து உனக்கு ஜெயம் கொடுப்பார்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்