Archive | May 2012

மலர் 2 இதழ் 198 துணிகரமாய் செயல்படு – தெபோராளைப் போல!

நியா: 4 : 8, 9 அதற்கு பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். அதற்கு அவள்; நான் உன்னோடே நிச்சயமாக வருவேன்….என்று சொல்லி, தெபோராள் எழும்பி, பாராக்கோடே கூடக் கேதேசுக்குப் போனாள்.

சென்னையில், கடற்கரை சென்று விட்டாலே , துறைமுகத்தை நோக்கி வரும் கப்பல்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிரியமானக் காரியம். கப்பல்கள் துறைமுகத்தை அடைந்துவிட்டால் அவை பத்திரமாக ஆபத்து இல்லாத இடத்துக்கு வந்துவிட்டன என்ற திருப்தி எனக்கு. தூரத்தில் தெரியும் கப்பலைக்கூட அருகாமையில் வரும்வரை கவனித்துக் கொண்டிருப்பேன்.

ஆம்! துறைமுகத்தில் கப்பல் பத்திரமாய் நிற்பதில் ஆபத்தே இல்லை, ஆனால் கப்பல்கள் அந்த நோக்கத்துக்காகவா கட்டப்பட்டன? அலைகளை எதிர்த்து, போராடி, ஆழ்ந்த கடலின் மேல் மிதந்து எத்தனைத் துணிகரமாகச்  செயல்படும்படி அவைகள் கட்டப்பட்டன!

துணிகரம்  என்றவுடன் அந்த வார்த்தையைப் பற்றி சற்று சிந்திக்க ஆரம்பித்தேன்!  துணிகரமான செயல்களைப் புரிந்த பெண்கள்தான் மனதில் வந்தனர்.

சகோதர்களே மன்னித்துக் கொள்ளுங்கள்! நான் பெண்களைப் பற்றி மாத்திரம் எழுதவில்லை என்று உங்களுக்கு நன்றாகவேத் தெரியும்! ஆனால், இயல்பாகவே பயந்த சுபாவம் கொண்ட பெண்கள் துணிந்து நிற்பது நம் மனதைக் கவரும் காரியம் அல்லவா!

தான் பிறந்த தேசத்தை விட்டு விட்டு எங்கு போகிறோம், எப்படி வாழ்வோம் என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் கணவன் ஆபிரகாமைப் பின் தொடர்ந்து வாக்குத்தத்தம் செய்யப்பட்ட கானானுக்கு பிரயாணம் செய்த சாராள் எவ்வளவு துணிகரமானப் பெண்!

தன்னுடைய பெற்றோரையும், சகோதரையும் , தன் தேசத்தையும் பிரிந்து, தான் அறியாத ஒருத்தனுக்கு மனைவியாக புறப்பட்டாளே ரெபேக்காள், அவள் துணிகரமானவள் அல்லவா!

தான் வாழும் தேசத்துக்கு எதிரியாய்க் கருதப்படும் தேசத்தின் வேவுகாரர் இருவரைத் தன் வீட்டில் மறைத்து வைத்து, அவர்களுடைய தேவனுக்கு பயந்ததால் , தன் உயிரைப் பணயம் வைத்து, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தாளே ராகாப், அவள் துணிகரமானவள் அல்லவா!

இப்பொழுது நாம் படித்துக் கொண்டிருக்கும் தெபோராள், துணிகரமாக ஆண்களின் உலகத்துக்குள் நுழைந்து, சேனாதிபதியைத் தட்டியெழுப்பி, யுத்த களத்துக்கு வழிநடத்தி, இஸ்ரவேலுக்கு வெற்றி வாங்கிக் கொடுத்தாளே அவள் துணிகரமானவள் இல்லையா!

கர்த்தருடைய சித்தத்தை பூமியில் நிறைவேற்ற தேவன் துணிகரமானவர்களைத் தெரிந்தெடுக்கிறார்! நேர்த்தியாய் செயல்படும், மன உறுதியோடு செயல்படும், துணிகரமாக செயல்படும் தேவபிள்ளைகள் அவருக்காக ஒளிர்விடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை!

நம்முடைய குடும்பத்தாரின் நிழலில், நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல வசதியானக் குடும்பம் என்ற ஆபத்தில்லாத சூழ்நிலையில் அழகான கப்பலாக கரையில் ஒதுங்கி நிற்க நாம் உருவாக்கப்படவும் இல்லை, தெரிந்துகொள்ளப் படவும் இல்லை!

எங்கள் கம்பெனியில் செய்து ஏற்றுமதி செய்த ஒரு எம்பிராய்டரி துணிகளில் அதிகமாக எல்லோருடைய மனதையும் கவர்ந்த ஒன்று,  சூரியன் மரையும் வேளையில், படகு ஒன்று காற்றில் அசைவாடி செல்வது போன்ற படமும், அதன் கீழே, ” கடவுளே என்னைவிட்டு நீங்காதிரும்! இந்தக் கடலோ மகா பெரியது, என்னுடைய படகோ மிக சிறியது! என்ற வாசகமும்.

ஒவ்வொரு நாளும் தேவனுடைய கரத்தில் நம்மையும் நம்முடைய பயங்கள் யாவையும் ஒப்புக்கொடுத்து, நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை தெபோராளைப் போலத் துணிகரமாக விசுவாசத்தில் தொடரக் கர்த்தர் நம் அனைவருக்கும் உதவி செய்வாராக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 2 இதழ் 197 எதை செய்தாலும் மன உறுதியோடு செய் – தெபோராளைப் போல!

நியா: 4:10 அப்பொழுது பாராக்; செபுலோன் மனுஷரையும், நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம் பேரோடே போனான்; தெபோராளும் அவனோடேகூடப் போனாள்.

தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த  தாலந்துகளை வெளிப்படுத்தும் கலைஞர்களை நான் வாயைப் பிளந்து பார்ப்பதுண்டு! எனக்கு எந்தக் கலையிலும் தாலந்து என்று சொல்லிக்கொள்ள எதுவுமே கிடையாது! ஆனால் சாலை ஒரங்களில் படம் வரைந்து பணம் வசூலிக்கும் கலைஞன் முதல், கல்லில் சிலை வடிக்கும் சிற்பக் கலைஞன்  வரை,  பல்வேறு கலைகளில் சிறந்து விளங்குபவர்கள் அனைவரும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

என்னுடைய இளவயதில் வர்ணம் ஆர்ட் ஸ்கூல் என்ற கலைக்கூடத்தின் மூலம் படங்கள் வரையவும், பெயிண்ட் செய்யவும் கற்றுக்கொண்டேன். அதை ஆரம்பிக்கும் போது ஏதோ அந்தக் கோர்ஸ் முடியும்போது நான் ஒரு பெரிய ஆர்டிஸ்ட் ஆகி விடுவேன் என்று நினைத்தேன். ஆனால் அந்தக் கலையில் கற்றுக் கொள்ளவேண்டியது வெறும் 10% தான், மன உறுதியோடு பயிற்சி செய்ய வேண்டியதோ 90% என்றப் பாடத்தை தான் முதலில் கற்றுக்கொண்டேன்.

மன உறுதியோடு செய்யும் கடினமான பயிற்சிக்கு பின்னர்தான் ஒரு கலைஞன் உருவாகிறான்! விடாமுயற்சியோடும், உறுதியான மனப்பான்மையோடும் நாம் உழைக்கும்போதுதான் நாம் எந்தத் துறையிலும் சிறந்து விளங்க முடியும்.

மன உறுதி என்ற வார்த்தைக்கு உதாரணமே நம் தெபோராள் தான்! இந்த வீரப் பெண்மணியின் மன உறுதி கர்த்தருடைய வழிநடத்துதலை அவள் தெளிவாகக் காண உதவியது!

தேவனாகிய கர்த்தர் தெபோராளிடம் ஒரு செய்தியைக்கொடுத்து அதை இஸ்ரவேலின் சேனாதிபதி பாராக்கிடம் கூறு என்றபோது, ஒரு துளி தயக்கமும் இன்றி ஆண் உலகத்தில் நுழைந்து பாராக்கை எழுந்திரு என்று உலுக்கி எழுப்பினாளே அந்த மன உறுதியை சிந்தித்து பாருங்கள்!

யாபீன் என்ற கானானியரின் ராஜாவும், சிசெரா என்ற சேனாதிபதியும், 900 இருப்பு ரதங்களோடு , இருமாப்பாய் அடக்கி ஆண்டபோது,அவர்களை வெற்றி பெறக்கூடிய தகுதியில் இஸ்ரவேலின் சேனை இல்லாமலிருந்தபோது,  தேவனாகிய கர்த்தர் தெபோராளுக்கு கொடுத்த வெற்றியின் செய்தியை அவள் விசுவாசித்து, கர்த்தருடைய வார்த்தைகளை சிறிதுகூட சந்தேகப்படவோ அல்லது இது எப்படியாகும் என்று ஆராய்ச்சி செய்யாமல், முழுமனதாக அவரைப் பற்றி, இஸ்ரவேலை வெற்றிபெற செய்தாளே அந்த மன உறுதியை சற்று சிந்தித்து பாருங்கள்!

தெபோராள் மற்ற தீர்க்கதரிசிகள் போல பாராக்கிடம் தேவனுடைய செய்தியைக் கொடுப்பதே என் கடன் என்று நினையாமல், தான் ஒரு பெண் என்று கூட நினையாமல் அவனோடு புறப்பட்டு, யுத்தம் நடந்த இடத்தில் தங்கி, இஸ்ரவேலின் சேனை வெற்றி பெற்று முடியும் வரை, முன்னின்று காரியத்தை நடத்தினாளே அந்த மன உறுதியை சற்று சிந்தித்துப் பாருங்கள்!

தெபோராளின் வாழ்க்கை , எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் மன உறுதியை பிரதிபலிக்கிறது அல்லவா? வேதத்தில் மாத்திரம் அல்ல, கிறிஸ்தவ திருச்சபையின் சரித்திரத்திலும், கர்த்தர் தங்களுக்கு அளித்த பொறுப்பை மன உறுதியோடு நிறைவேற்றிய அநேக தேவனுடைய பிள்ளைகளை கண்டிருக்கிறோம்!

நம்மை சுற்றிய சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும் சரி, சோர்ந்து போகாமல்,  தேவனுடைய வார்த்தைகளை விசுவாசித்து முன் செல்!  நீ செல்லும் பாதையில் கல்லும் முள்ளும் இருக்கலாம், பெரியத் தடைகள் இருக்கலாம், நீ சாதிக்க வேண்டிய காரியம் பெரிய மலைபோல உன் கண்களில் தெரியலாம்! தெபோராளின் மன உறுதியோடு செல்!

செய்யவேண்டும் என்று தீர்மானம் எடுத்த பின் தடைகளைப் பார்த்து பின் வாங்காதே! கடின உழைப்பும், மன உறுதியும் உன்னை வெற்றியின் பாதையில் நடத்தும்! கர்த்தரைப் பின்பற்றும் தீர்மானத்திலும் உறுதியாய் இரு! தெபோராளைப் போல படிப்படியாய் கர்த்தருடைய வழிநடத்துதலைக் காண்பாய்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 2 இதழ் 196 செய்யும் எதையும் சரிவர செய் – தெபோராளைப்போல!

நியா: 4: 4 அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபோராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.

சில மாதங்களுக்கு முன்னர் என் கணவர் எனக்கு ஒரு பாத்திரம் கழுவும் இயந்திரத்தை வாங்கிக்கொடுத்தார். மேலை நாடுகளில் வாழும் உங்களில் சிலருக்கு இது ஒன்றும் புதிதல்ல!

இன்று காலையில், நல்ல சுடு தண்ணீரில் பாத்திரங்களை கழுவி உலர்த்திய, அந்த மெஷினிலிருந்து பள பளவென்று பாத்திரங்களை வெளியே எடுத்து அடுக்கும்போது என்னுடைய அம்மா ஞாபகம்தான் அதிகமாக வந்தது. அம்மா பள பளவென்று பாத்திரம் விளக்குவார்கள். கழுவிய பாத்திரங்களை துடைத்து வெயிலில் காயவைத்து எடுத்து உள்ளே அடுக்குவார்கள்.

சின்னஞ்சிறு வயதில் எனக்கு பாத்திரம் விளக்கச் சொல்லிக் கொடுத்த போது, ஒரு சாப்பிடுகிற தட்டைக் காண்பித்து, இதில் ஒட்டிக்கொண்டிருக்கிற உணவு நாம் சரியாகக் கழுவாவிட்டால் அப்படியே காய்ந்து ஒட்டிக்கொண்டிருக்கும். ஒருவேளை நம் வீட்டுக்கு யாராவது சாப்பிட வந்து, நாம் இந்தத் தட்டில் சாப்பாடு பரிமாரினால், காய்ந்து ஒட்டிக்கொண்டிருக்கும் சாப்பாட்டைப் பார்த்துவிட்டு நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்!  என்று சரியாக விளக்காதற்காக என்னைத் திட்டாமல், நேர்த்தியாக செய்வதே சரியான செயல் என்று புரிய வைத்தார்கள்.

இன்றைய சமுதாயத்தில் அந்த எண்ணம் மிகவும் குறைவு பட்டிருப்பதைப் பார்க்கிறோம். என்னுடைய கார் , சர்வீஸ் ஸ்டேஷன் போய்விட்டு வந்தபோது, நான் சொல்லியனுப்பிய குறை சரியாக கவனிக்கப்படாமல் இருந்தது மட்டுமல்ல, காரின் முன் பகுதியில் கருப்பான கையச்சுகளோடு வந்தது! அதைப்பார்த்தவுடன் எத்தனை அலட்சியமாக வேலை செய்துள்ளனர் என எரிச்சல் தான் வந்தது.

நல்லவேளை , எதை செய்தாலும் நேர்த்தியாக செய்யவேண்டும் என்று கற்றுக்கொடுத்த அம்மா எனக்கு அன்று கிடைத்தார்கள்! எதையும் நேர்த்தியாக செய்த தெபோராளின் வாழ்க்கை உதாரணமாக இன்று கிடைத்திருக்கிறது!

நீதிமொழிகள்: 22: 29 எனக்கு பிடித்தமான வசனம்.  ” தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.”    இந்த வாசகத்தின் அர்த்தம்,  தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவன் தனக்குக் கொடுக்கப்படும் எந்தப் பொறுப்பையும் கவனமாக செய்வான் என்பது மட்டும் பொருளல்ல! அவன் தன் வாழ்க்கை மீது மட்டும் அக்கரை காட்டாமல் மற்றவர்கள் வாழ்க்கை மீதும் அக்கரை காட்டுபவன் என்றுதான் அர்த்தம். மற்றவர்கள் மேலும் சற்று அக்கரை இருக்குமானால், நாம் செய்யும் எந்த வேலையும் மிகுந்த ஜாகிரதையோடே செய்வோம்.

இதை நான் தெபோராளின் வாழ்க்கையில் பார்க்கிறேன். தெபோராள் மற்றவர்களின் வாழ்க்கை மேல் அக்கரை கொண்ட ஒரு பெண் என்பதற்கு,  வேதம் , அவளை  ஒரு மனைவி என்றும்,  ஒரு தீர்க்கதரிசி என்றும்,, ஒரு நியாதிபதி என்றும் கூறுவதே சாட்சி.

ஒரு மனைவியாகத் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை மிகுந்த ஜாக்கிரதையோடு செய்ததால், அவளைக் கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியாகவும், ஒரு நியாதிபதியாகவும் அழைத்தார்!

சகோதரனே, சகோதரியே, உன்னுடைய குடும்ப பொறுப்பை எவ்வாறு நிறைவேறுகிறாய்? உனக்கு கர்த்தர் கொடுத்திருக்கிற சிறிய பொறுப்பை அலட்சியப்படுத்தாமல், மிகுந்த ஜாக்கிரதையோடு, உன்னை சுற்றியுள்ளவர்கள் மேல் அக்கரையோடு , நேர்த்தியாக செயல் படும்போது , கர்த்தர் உன்னை இன்னும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவார் என்பதில் சந்தேகமேயில்லை.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 2 இதழ் 195 நெருங்கி வா! இரட்டிப்பாய் பெற்றுக்கொள்!

நியா: 5: 31 “அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.”

ஆனைமலை என்றழைக்கப்படும் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள வால்பாறை என்ற பட்டணத்துக்கு நான் அடிக்கடி செல்வதுண்டு. மலையின் மேல் இருக்கும் நாட்களில் , சில்லென்று காற்று  அடித்தாலும், சூரியனின் வெப்பத்தை சற்று அதிகமாகவே உணர முடியும். சூரியனுக்கு அருகாமையில் இருப்பதுபோல வெப்பம் கூர்மையாகத் தாக்கும்.

அதேவிதமாக ஒருமுறை வெப்பத்தின் கூர்மையை நான் சென்னையில்  உணர்ந்தேன். என்னிடம் வேலை செய்யும் பெண்களை முட்டுக்காடு அழைத்து சென்று படகு சவாரி சென்ற போது தண்ணீரிலிருந்து வெப்பம் சற்று அதிகமாகவே வந்தது! ஏனெனில் சூரியன் நீரில் பிரதிபலிப்பதால் நாம் சூரியனுக்கு சற்று அருகாமையில் இருப்பது போன்ற வெப்பம்!

நாம் எதற்கு அருகாமையில் இருக்கிறோமோ அதை சற்று அதிகமாகவே உணர முடியும் என்பதுதான் உண்மை!

இன்று நாம் வாசிக்கிற வசனத்தில் , அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று தெபோராளும், பாராக்கும் பாடுவதைப் பார்க்கிறோம். நீதியின் சூரியனான தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய அருகாமையில் நாம் சேரச் சேர அந்த சூரியனை நாம் அதிகமாகப் பிரதிபலிக்கிறவர்களாகவும் இருப்போம்.

சற்று யோசித்துப்பாருங்கள்! இருபது வருடங்கள் இஸ்ரவேல் மக்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாங்கானதை செய்தனர். ஆனால் அவர்கள் தங்களை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்தபோது, தெபோராளின் மூலமாகக் கர்த்தருடைய அழைப்புக்கு இணங்கியபோது, அவர்கள் மறுபடியும் புதுப்பெலெனடைந்து கழுகளைப்போல செட்டைகளடித்து எழும்பினார்கள். அவர்களுடைய வாழ்க்கை   தேவனாகிய கர்த்தரை பிரதிபலித்தது!

இதோ தெபோராள், பாராக், யாகேல் என்பவர்களின் சரிதை உங்கள் முன்னால்! அவர்கள் யாரை நேசிக்க முடிவு செய்தனர் என்று கவனியுங்கள்! அவர்கள் உலகத்தை நேசியாமல், தேவ்னாகிய கர்த்தர் மேல் அன்பு கூர்ந்ததால் , அவரைத் தங்கள் வாழ்க்கையில் பிரதிபலித்தனர்.

அவரில் அன்புகூரும் கிருபையை தேவனாகிய கர்த்தர் எனக்கும் என் குடும்பத்துக்கும் அனுதினமும் வழங்க வேண்டும் என்பதும், அவருடைய அன்பை நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பிரதிபலிக்கவேண்டும் என்பதுமே என்னுடைய அன்றாட ஜெபம். இதுவே உங்கள் ஜெபமாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

இன்னும் ஒன்றை இந்த வசனத்தில் கவனியுங்கள்! இஸ்ரவேல் மக்கள் தேவனிடத்தில் அன்பு கூற ஆரம்பித்தபோது , நாற்பது வருடங்கள் அவர்களுடைய தேசத்தில் அமைதியிருந்தது! தேவனண்டை நெருங்கி, அவருடைய அன்பினால் நம் வாழ்க்கை மாறும் போது நம் வாழ்விலும் அமைதி கிடைக்கும்.

இருபது வருடங்கள் பொல்லாங்கானதை செய்து, யாபீனுக்கு அடியில் கசங்கிக் கொண்டிருந்த இஸ்ரவேல் மக்கள் தங்களை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்த போது, தேவனுடைய அன்பை உணர்ந்த போது, கர்த்தர் , அவர்களுடைய இருபது வருட அடிமைத்தனத்துக்கு பதிலாக, நாற்பது வருடங்கள் அமைதியைக் கட்டளையிட்டார்! 

யோவேல் 2: 25 ல் , ” நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப்பூச்சிகளும், பச்சைப்புழுக்களும், பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன் “,என்று கர்த்தர் வாக்குத்தத்தம் கொடுத்த வண்ணமாய், அவர்களுக்கு இரட்டிப்பான சந்தோஷத்தைத் திரும்பக் கொடுத்தார்.

நம்மையும் மனப்பூர்வமாய்க் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து, நாம் அவரை நேசிக்கும்போது, இரட்டிப்பான சந்தோஷமும், ஆசீர்வாதமும், சமாதானமும் நமக்குக் கொடுப்பார்.

தேவனாகிய கர்த்தரின் இருதயம் உன்னுடைய அன்புக்காக ஏங்கியிருக்கிறது!  அவருக்கு அருகாமையில் நெருங்கி வா! வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல பிரகாசிப்பாய்! உன் குடும்பத்திலும் சமாதானம் உண்டு! இரட்டிப்பாய் உண்டு!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 


 

A special Mothers Day Message! தெபோராளே எழும்பிப் பாட்டு பாடு!

நியா: 5 : 12 ” விழி, விழி, தெபோராளே, விழி, விழி, பாட்டுப்பாடு;

ராஜாவின் மலர்களில் வேதத்தை நாம் ஆராய்ந்து படிக்க ஆரம்பித்த பின்னர், இருளில் ஒளி வீசிய அநேக தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறோம்.

இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனம் என்கிற இருளில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, எகிப்தில் பார்வோன் சுமத்திய சுமையின் கீழ் மாண்டு கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி எல்லாமே இருள் மயமானபோது, தேவன் அவர்களுக்காக கிரியை செய்தார். இரண்டு சாதாரண மருத்துவச்சிகளின் மூலமாக கர்த்தர் எண்ணமுடியாத குழந்தைகளைக் காப்பாற்றினார். இரக்க குணமுள்ள ஒரு பார்வோன் குமாரத்தியும், தன் பிள்ளை இஸ்ரவேலை இரட்சிப்பான் என்ற பெரிய நம்பிக்கைக் கொண்ட ஒரு தாயும், தேவனுடைய கருவியாக உபயோகப்பட்டனர்.

தீர்க்கதரிசியான மிரியாமின் பாடல் நிறைந்த ஆராதனை மக்களைத் தொடர்ந்து உறுதியான விசுவாசத்தில் வழிநடத்தியது. தேவனாகிய கர்த்தர் அநேகப் பெண்களைத் தம்முடைய ஆசீர்வாதத்தின் கால்வாய்களாக உபயோகப்படுத்தினார் என்று கண்டோம்.

இப்பொழுது நியாதிபதிகளின் புத்தகத்தில், தேவனுடைய அழைப்பை மக்களுக்கு அறிவிக்கும் எக்காளதொனியாக நாம் தெபோராளைப் பார்க்கிறோம். அவளுடைய தொனி ஒரு வெற்றியின் தொனி!

இன்றைய வேதாகமப்பகுதியில்  கர்த்தர்,தெபோராளை விழி, விழி, தெபோராளே, விழி, விழி, பாட்டுப்பாடு என்றழைப்பதைக் காண்கிறோம். எபிரேய மொழியாக்கத்தின்படி , ” தெபோராளே எழுந்திரு! பாடல் பாடி மற்றவர்களை உற்சாகப்படுத்து! என்று அர்த்தம்.

உங்களைப்பற்றி எனக்குத் தெரியவில்லை! ஆனால் என்னை இந்த வார்த்தைகள் உலுக்கியன!

அன்னையர் தினமாகிய இன்று,  இந்த வார்த்தைகளை ராஜாவின் மலர்த் தோட்டத்துக்கு வரும் ஒவ்வொரு சகோதரிகளுக்கும் அர்ப்பணிக்கிறேன்.

உங்களை சுற்றியுள்ளவர்களை உற்சாகப்படுத்தும் சக்தி உங்களுக்கு மாத்திரம்தான் உள்ளது. குடும்பத்தை விளக்கேற்றி ஒளிர வைக்க உங்களால் மட்டும்தான் முடியும். உங்கள் குழந்தைகளையும், கணவரையும் அன்பான வார்த்தைகளால் தட்டி எழுப்பும் திறமை உங்களுக்கே உள்ளது.

இப்படிப்பட்ட திறமை பெண்களுக்கு உள்ளதால் தான் தேவனாகிய கர்த்தர்,  வாழ்வின் இருண்ட காலங்களில், எகிப்திலோ, கானானிலோ அல்லது நம்முடைய இல்லத்திலோ, தீர்க்கதரியான மிரியாமையோ, தெபோராளையோ அல்லது  நம் தாயையோ அல்லது மனைவியையோ ஆசீர்வாதத்தின் கால்வாய்களாக உபயோகப்படுத்துகிறார்.

ராஜாவின் மலர்த்தோட்டத்துக்கு வரும் அன்பு சகோதரிகளே! உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கும்படி கர்த்தராகிய இயேசு நமக்கு கட்டளையிட்டார். நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு நாம் வெளிச்சத்தைக் கொடுக்க இரண்டு வழிகள் உள்ளன!

“ஒன்று நாம் மெழுகுவர்த்தி போல் எரிந்து பிரகாசிப்பது!

மற்றொன்று இயேசு கிறிஸ்து என்கிற பேரொளியை நாம் கண்ணாடி போல பிரதிபலிப்பது! “

சகோதரியே விழி! விழி! பாட்டுப்பாடு! உன் அன்பின் வார்த்தைகளால், அரவணைப்பால், உன் குடும்பத்தினரை உற்சாகப்படுத்து! உன் குடும்பத்தில் விளக்காய் எழுந்து பிரகாசி! தெபோராளைப் போல வெற்றியின் தொனியை முழங்கு! என் தாயைப் போல அல்லது என் மனைவியைப்போல உலகில் எங்கும் கண்டதில்லை என்று உன் குடும்பத்தினர் உன்னைப்பற்றி பெருமைப் படவேண்டும்!

Happy Mothers Day!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்மலர் 2 இதழ் 194 ஏற்றம் பெற ஒரு வழி!

நியா: 5: 1 – 3  “அந்நாளிலே தெபோராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது: கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியை சரிக்கட்டினதினிமித்தமும், ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தமும் அவரை ஸ்தோத்தரியுங்கள். ராஜாக்களே கேளுங்கள்; அதிபதிகளே செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப் பாடி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணுவேன்.”

இன்றைக்கு நாம் நியாதிபதிகளின் புத்தகம் 5 வது அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ள, இந்த “தெபோராளின் ஜெபம்” என்றழைக்கப்படும் பகுதியின் மூன்று நாள் தியானத்தை ஆரம்பிக்கப் போகிறோம்.  இந்தப்பாடலின் மூலம் தேவனாகிய கர்த்தர் தம் பிள்ளைகளான இஸ்ரவேல் மக்களுக்காக யுத்தம் செய்து வெற்றி சிறந்ததின் காரணத்தைப் படிக்கப் போகிறோம்.

முதலாவதாக, இன்று நாம் பார்க்கும் பாடலின் பகுதி, இஸ்ரவேலின் வெற்றிக்குக் காரணம், ஜனங்கள் தங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்ததினிமித்தம் என்று கூறுகிறது. இன்று நாம் இந்த வரியை மாத்திரம் கவனிக்கலாம்.

இந்த மனப்பூர்வமாய் என்ற வார்த்தை மேல் எனக்கு ஒரு பிரியம் உண்டு! அதனால் இந்த வார்த்தையை சற்று ஆழமாக படிக்க ஆரம்பித்தேன். இங்கு இஸ்ரவேல் மக்கள் தங்களை மனப்பூர்வமாய் கொடுத்ததால், தேவன் அவர்களுக்கு வெற்றியைக் கட்டளையிட்டார்.

இந்த வார்த்தையை இன்னொருவிதமாகவும் புரிந்து கொள்ளலாம். மனப்பூர்வமாய் என்னை முழுமையாக அவருக்கு ஒப்புக்கொடுக்கும்போது, என்னை அவர் காணிக்கையாக ஏற்றுக் கொள்கிறார்.

யாத்திராகமம் 25: 2 கர்த்தர் மோசேயை நோக்கி,” இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக” என்கிறார்.  கர்த்தர் மனப்பூர்வமாய் கொடுப்பனிடம் மட்டுமே காணிக்கையை பெற்றுக் கொள்கிறார். அவர் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. நம்மையும்கூட மனப்பூர்வமாய் கொடுத்தால் தான் காணிக்கையாக ஏற்றுக் கொள்வார்!

சரி! ஒப்புக்கொடுத்தல் என்றால் என்ன? ஒப்புக்கொடுத்தல் என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில்  ஏற்றம் என்ற அர்த்தமும் உண்டு! என்னை மனப்பூர்வமாய் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும்போது என் வாழ்க்கை ஏற்றம் பெறும் என்றால் மிகையாகாது! இதையே தான் ஏசாயா தீர்க்கதரிசி “கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள் ( ஏற்றம் பெறுவார்கள்)” (ஏசா: 40: 31) என்றார்.

மனப்பூர்வமாய் தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தம், கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு வெற்றிக் கொடுத்தார். மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுக்கும் வாழ்க்கையை அவர் தமக்குக் காணிக்கையாக ஏற்றுக் கொள்கிறார். மனப்பூர்வமாய் நம்மை ஒப்புக்கொடுக்கும்போது நம் வாழ்க்கை ஏற்றம் பெறும்!

உன்னை கர்த்தரிடம் மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்துப் பார்! அவர் உனக்காக வைத்திருக்கும் அற்புதம் வெளிப்படும்! உன் வாழ்க்கை ஏற்றம் பெறும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

மலர் 2 இதழ் 193 ஒருவாரம் பட்டினி! ஒருநாள் சாப்பாடு?

நியா: 4: 24 “இஸ்ரவேல் புத்திரரின் கை கானானியரின் ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்குமட்டும் அவன் மேல் பலத்துக் கொண்டேயிருந்தது.”

இன்று காலை ஒரு கப் தேநீரை சூடுபண்ணி வைத்துவிட்டு , சற்று நேரம் ராஜாவின் மலர்களுக்காக டைப் செய்து கொண்டிருந்தேன். அருகில் வைத்த தேநீரை மறந்து விட்டேன். திடீரென்று ஞாபகம் வர, தேநீர் கப்பை எடுத்து வாயில் வைத்தேன்! அது வெதுவெதுப்பாகி  ருசியற்று இருந்தது.

 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.” (வெளி: 3:15 ) என்று கர்த்தர் லவோதிக்கேயா திருச்சபை மக்களைப் பார்த்து கூறுகிறதைக் காண்கிறோம். பரலோகத்திலிருந்து கவனிக்கும் தேவனின் கண்களில் இந்த திருச்சபை மக்கள் எதிலும் முழுமனதோடு ஈடுபடாமல் இருந்தனர். அவர்கள் ஆத்துமாவில் அக்கினி இல்லை.
அதனால் கர்த்தர் அவர்கள் அக்கினி போல அனலாயாவது, உறைபனி போல குளிராயாவது இருந்தால் நலமாயிருக்கும், இரண்டும் இல்லாமல், வெதுவெதுப்பாய், உருகிப்போன வெந்நீரைப்போல இருக்கிறீர்களே என்று குறைபடுவதைப் பார்க்கிறோம்.

நாம் தெபோராள், பாராக், யாகேல் இந்த மூவர் கொண்ட அணியைப் பற்றியல்லவா படித்துக்கொண்டிருந்தோம்! இன்று வெதுவெதுப்பான தேநீரும், வெதுவெதுப்பான சபையும் பற்றி நாம் இந்த நியாதிபதிகள் புத்தகத்தில் என்ன படிக்கப் போகிறோம் என்று ஒருவேளை எண்ணலாம்.

நியாதிபதிகளின் புத்தகம் 1 லிருந்து 4 வரை, எப்பொழுதெல்லாம் இஸ்ரவேலில் நல்ல தலைவர்கள் இருந்தனரோ அப்பொழுதெல்லாம் மக்கள் கர்த்தரை முழுமனதோடு பின்பற்றினர் என்று பார்க்கிறோம். ஆனால் 4: 1 கூறுகிறது “ஏகூத் மரணமடைந்தபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்தார்கள்.” என்று.

இஸ்ரவேல் மக்களின் வெதுவெதுப்பான இந்த மனநிலை ஆச்சரியப்படும்படியாக இருக்கிறது அல்லவா? தேவன் அவர்களுக்கு எவ்வளவு நன்மைகளும், அற்புதங்களும் செய்திருக்கிறார், எப்படி இவ்வாறு பின்வாங்க முடிகிறது என்றுதானே எண்ணுகிறோம். அவர்களது மனநிலையைக் குறித்து நாம் கணக்கு போடுமுன்னர் நம்முடைய நிலையை சற்று சிந்தித்துப் பார்ப்போம்!

ஞாயிறு காலை ஆராதனை முடிந்து வரும்போது, இன்று செய்தி கொடுத்த போதகர் மிகவும் மேலாகப் பேசினார், ஆழமாக ஒன்றுமேயில்லை என்று எண்ணுகிறோம். நம்மை ஆவிக்குரிய வழியில் நடத்த நல்ல போதகர்கள் தேவைதான்! இல்லையென்று சொல்லவில்லை! அவர்களுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்! ஆனால் நாம் கிறிஸ்துவில் வேரூன்றி நிற்கவும், நிலைத்து நிற்கவும், நல்ல போதகம் மாத்திரம் இருந்தால் பற்றாது! நாம் நேரம் எடுத்து வேதத்தை ஆராய்ந்து படிக்க வேண்டும்.

ஒருவாரம் முழுவதும்  வேதத்தை ஆராயாமல், ஒருநாள் போதகத்தால் நம்மை நிரப்ப ஆசைப்படுவது, வாரம் முழுவதும் பட்டினியாய் இருந்துவிட்டு, ஒருநாள் மாத்திரம் அறுசுவை உணவால் நம்மை போஷிக்க ஆசைப் படுவது போல ஆகும்!

ராஜாவின் மலர்கள் மூலம் வேதத்தை ஆராய்ந்து படிக்கும் ஆவலை உங்களுக்குள் ஏற்படுத்துவது தான் என்னுடைய ஆவல்!

வேதத்தைப் படிக்கும் போதுதான் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் அனல் மூட்ட முடியும். அந்த அனல் கொழுந்து விட்டு எரியும்போது , நாம் கிறிஸ்துவின் நோக்கத்தை பூமியில் நிறைவேற்றும் ஆவலும் உண்டாகும், அதற்கு தடையாயிருக்கும் யாவாற்றையும் தகர்த்தெரியும் பெலனும் நமக்குக் கிடைக்கும்.

நியா: 4: 24 ல் இன்று நாம் பார்க்கிற இஸ்ரவேல் மக்களின் கரம் யாபீனையும், சிசெராவையும், அவனுடைய 900 இருப்பு ரதங்களையும்  நிர்மூலமாக்குமட்டும் அவன் மேல் பலத்ததுபோல , நாமும் முழுமனதோடும், அனலோடும், அக்கினியோடும், தேவனுடைய சித்தத்தை பூமியில் நிறைவேற்றுவோம்!

வெதுவெதுப்பான வெந்நீராய் இராதே!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்