Archive | June 2012

மலர் 2 இதழ் 203 சிறிய தவறுதானே என்று எண்ணுவது பெரிய தவறு!

நியா: 8: 31- 35 ” சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு அபிமெலேக்கு என்று பேரிட்டான்.

பின்பு யோவாசின் குமாரனாகிய கிதியோன் நல்ல விருந்தாப்பியத்திலே மரித்து ஒப்ராவிலே தன் தகப்பனாகிய போவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கப்பண்ணப்பட்டான்.

கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் திரும்பவும் பாகால்களைப் பின்பற்றிச் சோரம்போய் பாகால்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய கர்த்தரை நினையாமலும்,

கிதியோன் என்னும் யெருபாகால் இஸ்ரவேலுக்குச் செய்த சகல நன்மைக்குந்தக்க தயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள்.

இன்று கிதியோனைப்பற்றி சிந்தித்தபோது என் சிறுவயதில் நான் செய்த சிறு தவறு ஒன்றுதான் ஞாபகம் வந்தது. என்னுடைய அம்மா திறமையாக லேஸ் பின்னுவார்கள். தூக்கத்தில் கூட அவர்கள் விரல்கள் தவறு இல்லாமல் லேஸ் பின்னும் என்று நான் அடிக்கடி சொல்லுவேன். ஒருநாள் அம்மா சொல்லிக்கொடுத்த ஒரு டிசைனை நான் பின்னிக்கொண்டிருந்தேன். அதில் ஒரு லூப் தவறாக போட்டுவிட்டேன் என்று எனக்கே தெரிந்தது. சின்னத் தவறுதானே, இதினால் என்னா ஆகப்போகிறது என்று எண்ணியவாறு அந்த டிசைன் முழுவதும் முடித்துவிட்டேன். அம்மாவிடம் போய் பெருமையாக நான் முடித்து விட்ட டிசைனைக் காட்டினேன். அம்மா அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு, நான் தவறாகப் போட்ட அந்த லூப்பை தன்னுடைய ஊசியால் சிறிது இழுத்தார்கள். ஒரு நொடியில் நான் கஷ்டப்பட்டுப் போட்ட டிசைன் அப்படியே உருவி வந்துவிட்டது. சிறிய தவறுதானே என்று நான் எண்ணியது எவ்வளவு பெரியத் தவறு என்று உணர்ந்தேன்.

இந்த அரியப் பாடத்தைதான் நாம் கிதியோனின் வாழ்விலிருந்து கற்றுக் கொள்கிறோம்

நாம்  பார்த்தவிதமாக கிதியோனின் வாழ்க்கை சரியான பாதையில் தான் சென்று கொண்டிருந்தது. கர்த்தருக்கு கீழ்ப்படிந்து 300 பேர் கொண்ட படையைக் கொண்டு, மீதியானியரை முறியடித்தான். வெற்றியின் கர்வம் அவன் தலையை எட்டவில்லை. அவனைத் தலைவனாக்கும்படி இஸ்ரவேல் மக்கள் அணுகியபோது மறுதலித்தான்.

ஆரோனின் குடும்பதுக்கு கர்த்தர் அளித்த ஏபோத்தை செய்து அதை தன் ஊரில் வைத்த முதல் அடியில் அவன் சறுக்கினான். அதிலிருந்து அவன் வாழ்க்கை அடிமட்டத்தை நோக்கிதான் சென்றது.அவன் எடுத்த அடுத்த தவறான  அடி பெண்கள் விஷயம் என்றும் பார்த்தோம். அவன் கர்த்தர் நமக்கு ஏற்படுத்திய ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண உறவை மதித்ததாகத் தெரியவில்லை. பல பெண்களை மணந்தான்.

அதுமட்டுமல்ல, இன்றைய வேதாகமப்பகுதி கூறுகிறது, அவனுக்கு மறுமனையாட்டியும் இருந்தாள்.இந்தப் பெண் ஒரு கானானிய ஸ்திரி போலத் தெரிகிறது. கர்த்தர் கானானியரிடம் எந்த சம்பந்தமும் கலக்க வேண்டாம் என்று கூறியதை அலட்சியப்படுத்தி விட்டான்.

முதல் அடி, இரண்டாவது அடி, மூன்றாவது அடி, கிதியோன் தான் தவறானப் பாதையில் அடிமேல் அடி வைப்பதை உணருமுன் அவன் தலைகீழாக சறுக்கினான். வேதம் கூறுகிறது, கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் மக்கள் தேவனைப் பின்பற்றவில்லை.தேவனை வணங்காமல் பாகாலை வணங்கினர், கிதியோனின் வீட்டாருக்கும் தயவு காட்டவில்லை.

கிதியோனின் வாழ்க்கை, நாம் தவறான பாதையில் நாம் எடுக்கும் ஒரு தவறான முடிவு நம்மை எந்த நிலைக்குக் கொண்டுவிடும் என்று காட்டுகிறது.

ஒவ்வொருநாளும், ஒவ்வொரு நொடியும் தேவனுடைய சமுகத்தில் செலவிட்டு, தேவனோடு நெருங்கி ஜீவிக்கும் போதுதான் நாம் வாழ்வில் வெற்றிபெற முடியும். சிறிய தவறு, அல்லது சிறிய அலட்சியம் கூட நம்மைக் கர்த்தரைவிட்டுப் பிரித்துவிடும் என்பதை மறந்து விடாதே!

கிதியோனின் வாழ்க்கை நமக்கு ஒரு எச்சரிப்பாக அமையட்டும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 2 இதழ் 202 தவறாய் எடுக்கும் ஒரு அடி!

நியா: 8: 30 ” கிதியோனுக்கு அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர்.”

என் கணவரும் நானும்  யூத் பார் க்ரைஸ்ட் (YFC) என்ற நிறுவனத்தில் இருபது ஆண்டுகள் பணி செய்தோம். இந்தியாவின் பல மாகாணங்களில் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம். ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் நான்கு வருடங்கள் ஊழியம் செய்த போது, சுற்றியுள்ள அநேக கிராமங்களுக்கு செல்வதுண்டு. அவ்விதமாக நாங்கள் சென்ற போது மாட்டு வண்டிகளில் கூட பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது.

ஒரு முறை அவ்வாறு சென்றபோது நடந்த சம்பவம் என்னால் மறக்கவே முடியாது. ரயில் நிலையத்துக்கு போவதற்காக மாட்டுவண்டியில் ஏறினோம். ஒரு உயரமான காட்டு வழியாக எங்கள் வண்டி வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று வண்டியை இழுத்த மாடுகள் இரண்டும் ஒரு இறக்கத்தில் வண்டியை இழுத்துக்கொண்டு ஓடியது. நாங்கள் பயந்தே போய் விட்டோம். ஒரு ஐந்து நிமிடம் ஓடி, அவை அங்குள்ள கிணற்றண்டையில்  நின்றவுடன் தான் எனக்கு மூச்சே வந்தது. அதன் பின்னர்தான் அந்த மாடுகள் அவ்வாறு ஓடியதின் காரணத்தை அறிந்தோம். அந்தக் கிணற்றண்டைதான் தினமும் மாடுகளுக்கு தண்ணீர் காட்டுவார்கள் போலும்! அந்த இடம் வந்தவுடன் பழக்க தோஷத்தில் அவை கிணற்றண்டை இழுத்துக்கொண்டு போய்விட்டன!

இவ்வாறு பழக்கதோஷத்தில் கிழே இழுத்து சென்ற மாடுகள் போல , நாமும் சில வேளைகளில் நம்முடைய பழக்க வழக்கங்களில் கீழ்நோக்கி செல்லுகிறோம். நாம் எடுத்து வைக்கும் ஒரு தவறான அடி மற்றொரு தவறான அடிக்குள் நம்மை நடத்துகிறது. ஒரு அடிதானே வைக்கிறேன், நான் ஒன்றும் படுகுழிக்குள் விழுந்துவிட மாட்டேன் என்று நாம் தவறாக எடை போட்டுக்கொண்டிருக்கும்போதே, நம்மை அது படுகுழிக்குள் இழுத்து செல்கிறது.

நாம் நேற்று பார்த்தவிதமாக கிதியோனின் வாழ்க்கை சரியான பாதையில் தான் சென்று கொண்டிருந்தது. கர்த்தருக்கு கீழ்ப்படிந்து 300 பேர் கொண்ட படையைக் கொண்டு, மீதியானியரை முறியடித்தான். வெற்றியின் கர்வம் அவன் தலையை எட்டவில்லை. அவனைத் தலைவனாக்கும்படி இஸ்ரவேல் மக்கள் அணுகியபோது மறுதலித்தான்.

இவ்வளவு நேரம் சரியான பாதையில் சென்றவன், ஆரோனின் குடும்பதுக்கு கர்த்தர் அளித்த ஏபோத்தை செய்து அதை தன் ஊரில் வைத்த முதல் அடியில் அவன் சறுக்கினான். அதிலிருந்து அவன் வாழ்க்கை அடிமட்டத்தை நோக்கிதான் சென்றது.

 அநேக  நல்ல காரியங்களை கிதியோனைப்பற்றிக் கூறிய வேதம், சில வசனங்களுக்கே பின்னர் இந்த தலைவனைப்பற்றிய ஒரு பரிதாபமான உண்மையை வேதம் பறைசாற்றுகிறது. கிதியோனுக்கு அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர் என்று.  வேதம் அவன் பெற்ற பெண்பிள்ளைகளை கணக்கு போடவேயில்லை. நாம் பெண்பிள்ளைகளையும்  சுமாராக கணக்கு வைத்தால் அவனுக்கு நூறு பிள்ளைகளுக்கு மேல் இருந்திருக்கலாம்.

அவன் எடுத்த அடுத்த தவறான  அடி பெண்கள் விஷயம் என்று நினைக்கிறேன். அவன் கர்த்தர் நமக்கு ஏற்படுத்திய ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண உறவை மதித்ததாகத் தெரியவில்லை. ஆதியாகமம் 2: 24 ல்  கர்த்தர் ஒருவன் தன் தகப்பனையும், தாயையும் விட்டு பல பெண்களோடு இசைந்திருப்பான் என்றா கூறினார்?  கிதியோன் பல பெண்களை மணந்ததை சரி என்று வேதம் எங்குமே கூறவில்லை. கிதியோன் தன் சொந்த இஷ்டமாக வாழ ஆரம்பித்தான்.

 

சரித்திரத்தில், கிதியோன் வாழ்ந்த சமயத்தில் மட்டுமல்ல, இன்றுவரை,  உலகத்தில் அதிகாரமும், சம்பத்தும் உள்ள பெரும்புள்ளிகள், பல பெண்களோடு வாழ்வது வழக்கம். கிதியோன் ஒருவேளை யோசித்திருக்கலாம், நானும் பெரும்புள்ளியாகி விட்டேன் , நானும் பெரும்புள்ளி போல நடந்து கொள்ளலாம் என்று. அவன் சென்று கொண்டிருந்த நேரான பாதையிலிருந்து அவன் கண்கள் விலகியதும், அடிக்கு மேல் அடி வைத்து அவன் கீழான பாதையில் வேகமாக ஓடினான்.

ஒரு தவறான அடி அடுத்த தவறுக்கு அஸ்திபாரம்! நாம் தவறு செய்ய ஆரம்பித்த பின்னர், நாம் செய்வது தவறு என்ற உணர்ச்சியே மறைந்து விடுகிறது. 

இன்று நம்முடைய பழக்க வழக்கங்கள் நம்மை எங்கு கொண்டு செல்கின்றன? செவ்வையான பாதையின் மேலிருக்கும் கண்களை விலக்குவாயானால், கீழ் நோக்கி சென்று விடுவாய்! ஜாக்கிரதை!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

மலர் 2 இதழ் 201 நோக்கம் நல்லது தான்! ரிசல்ட் தான் மோசம்!

நியா: 8: 27  “அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான். இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம் போனார்கள். அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று”.

நல்ல எண்ணத்தோடு, உதவி செய்யும் நோக்கத்தோடு குடும்பத்துக்குள் ஏதாவது ஒரு  பிரச்சனையில் தலையிட்டு அது உங்களுக்கே கெட்ட பெயரை வாங்கி கொடுத்த அனுபவம் உங்களுக்கு உண்டா? எனக்கு உண்டு!

நல்ல முறையில் , பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணங்கள் ஏன் விவாகரத்தில் முடிவடைகின்றன? விவாகரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு  யாரும் திருமணம் செய்வதில்லை அல்லவா?

நல்ல நோக்கத்தோடு செய்யப்படும் சில காரியங்கள் கூட பழுதடந்துவிடுகின்றன. எங்கே , என்ன தவறு நடந்தது என்று யாரும் ஊகிக்கும் முன்னர் கை தவறிப் போய் விடுகிறது!

நாம் நேற்று பார்த்தவிதமாக, மீதியானியருக்கு பயந்து கெபிகளிலும், குகைகளிலும் வாழ்ந்து கொண்டிருந்த கிதியோனிடம் தேவனாகிய கர்த்தர் திறமையையும், பராக்கிரமத்தையும் பார்த்து, அவனை மீதியானியரை முறியடிக்கும்படியாகத் தெரிந்து கொண்டார்.  அவனை 300 பேர் கொண்ட சேனையின் தலைவனாக்கி, அவன் மூலம் இஸ்ரவேலருக்கு வெற்றியை அருளினார். இஸ்ரவேல் மக்களோ, தங்களை மீதியானியரிடமிருந்து மீட்ட தேவனைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்காமல், இதுவரை தொடைநடுங்கியாய் வாழ்ந்த கிதியோனை ஹீரோவாக்க முயன்றனர் என்று பார்த்தோம்.

வேதம் கூறுகிறது,  கிதியோன் அதை மறுத்து, நான் உங்களை ஆளமாட்டேன் என்று கூறினான். கிதியோனை பாராட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை. வெற்றி அவன் கண்களை மறைக்கவில்லை. பெருமை அவன் தலையின் மேல் ஏறவில்லை. தான் செய்த காரியத்தைக் குறித்து அவன் பெருமை பாராட்டவில்லை, தன்னை அவர்கள் ஹீரோவாக்கவும் அனுமதிக்கவில்லை.

அப்படியானால் எங்கே தவறு நடந்து போயிற்று? இன்றைய வசனம் கூறுகிறது, கிதியோன் ஒரு ஏபோத்தை செய்து அதைத் தன் ஊரிலே வைத்தான் அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று என்று . அவன் அப்படி என்ன தவறு செய்து விட்டான்?

இந்த வசனத்தை ஆழ்ந்து நோக்கும்போது அவன் ஒரு ‘ஏபோத்தை உண்டாக்கி அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான்’ என்ற பகுதி என்னை சற்று சிந்திக்க வைத்தது.

நியா 8: 25,26  தெளிவாக கூறுகிறது, இஸ்ரவேல் மக்கள் தாம் மீதியானியரிடம் கொள்ளையிட்ட பொன் கடுக்கண்களையும் மற்ற விலையேறப்பெற்ற பொருட்களையும் சந்தோஷமாக கிதியோனிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள் என்று. அதில் தவறு ஒன்றும் தெரியவில்லை.

அத்தனை பொன்னையும் ஒன்றுசேர்த்து ஒரு ஏபோத்தைப் பண்ணி அதைத் தன் ஊரிலே வைத்தானே அங்குதான் தவறு தெரிகிறது!  கிதியோன் தவறான நோக்கத்துடன் செய்ததாகத் தெரியவில்லை ஆனால் அது தவறாக முடிந்துவிட்டது.

முதலாவது ஏபோத் என்றால் என்ன என்று அறிந்து கொள்வோம்! யாத்தி: 28:6 ன் படி ஏபோத்  என்பது பொன்னினாலும், இளநீல நூலாலும், இரத்தாம்பரநூலாலும் , சிவப்பு நூலாலும், திரித்த பஞ்சு நூலாலும் செய்யப்பட்ட வஸ்திரம். இந்த தோள்க்கச்சையில் உள்ள இரண்டு ஓனிக்ஸ் கற்களில் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் நாமங்களும் எழுதப்பட்டிருக்கும். இந்த பரிசுத்த வஸ்திரம் ஆசாரிய ஊழியம் செய்த ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுக்கப்பட்டது (யாத்தி: 28:4)

கிதியோன் ஒரு ஏபோத்தை செய்து அதை சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் வைக்காமல், அதை தன்னுடைய் ஊரிலே வைத்தான்.ஒருவேளை கிதியோன் நல்ல நோக்கத்தோடு, கர்த்தரை வழிபடும் ஸ்தலமான சீலோ சற்று தூரமாக உள்ளதால், தனக்கு அருகிலே, தன்னுடைய ஊரிலே கர்த்தரை வழிபடும் அடையாளத்தை உண்டுபண்ண விரும்பியிருக்கலாம். நோக்கம் எதுவானாலும் சரி, ரிசல்ட் படு மோசமாகி விட்டது. இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை ஆராதிப்பதை விட்டுவிட்டு, கிதியோன் பண்ணின ஏபோத்தை பின்பற்றி சோரம் போனார்கள்.அது கிதியோனுக்கு கண்ணியாயிற்று.

கிதியோன் கர்த்தரை ஆராதிக்கும் ஸ்தலமான சீலோவிலிருந்து தன் கண்களை விலக்கினான், கர்த்தர் மேலிருந்து தன் கண்களை விலக்கினான், தன் ஊராகிய ஒப்ராவிலே கண்களை வைத்தான் அது அவனுக்கு கண்ணியாக முடிந்தது.

நான் சரி என்று நினைப்பதையும், என்னுடைய திட்டத்தையும், என்னுடைய நோக்கத்தையும் ,( அவை ஒருவேளை நல்ல திட்டங்களாக இருக்கலாம் அல்லது நல்ல நோக்கங்களாக இருக்கலாம்), நான் முன் வைத்து தேவனாகிய கர்த்தரை நான் பின் வைப்பேனானால் அவை என் வாழ்வை பழுதடையப்பண்ணும்!

நாம் ஒவ்வொரு நாளும், தேவனுடைய பிரசன்னத்தில், அவருடைய அதிகாரத்துக்குட்பட்டு, அவருடைய மகிமைக்காக ஜீவிப்பது தான் நல்ல கிறிஸ்தவ வாழ்க்கையாகும்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

மலர் 2 இதழ் 200 யார் உன் ஹீரோ?

நியா: 8: 22 ” அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.”

என்னுடைய கல்லூரி நாட்களில், எனக்கு சரித்திர கதைப்புத்தகங்கள் வாசிப்பது மிகவும் பிடிக்கும்.  அதிலும் விசேஷமாக நம்மை ஆண்ட மன்னர்களின் கதைகள் மேல் தான் பிரியம். போரில் வெற்றி பெற்ற வீரர்கள் பிடிக்கும். கைகளில் செங்கோல் ஏந்திய மன்னர்கள் பிடிக்கும்.

நான் மட்டுமல்ல! நம்மில் அநேகர் இவ்விதமாக,வெற்றிவாகை சூடி,  வல்லமையோடு ஆளத் திறமையுள்ளவர்களை வியப்போடு பார்க்கிறோம். சிலர் , இந்த மண்ணை ஆளத் திறமை உள்ளவர்களை வியப்போடு பார்ப்பது மட்டுமல்லாமல், கண்மூடித்தனமாக அவர்களைப் பின்பற்றுவதையும் பார்க்கிறோம்.

சிலர் அதையும் விட ஒரு படி அதிகமாய், அதிகாரமும், பதவியும் உள்ள தலைவர்களைப் பற்றி சிறிதே தெரிந்திருந்தாலும், அவர்களால் நமக்கு காரியம் ஆக வேண்டும் என்று அவர்கள் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும், பின்னாலேயே அலைவதையும் பார்க்கிறோம். தங்களை ஆட்டிப்படைக்கும் அதிகாரத்தை இந்த தலைவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஆட்டுக்குட்டி போல வாலாட்டிக் கொண்டு அலைகிறார்கள்!

நியாதிபதிகள் புத்தகத்தில்,  கிதியோனையும், அவன் மீதியானியரோடு செய்த யுத்தத்தையும் நாம் படிக்கும் போது, இப்படிப்பட்டவர்களைத் தான் பார்க்கிறோம்.

நாம் நேற்றைய தினம் பார்த்தவிதமாக, கிதியோனின் குடும்பம் மீதியானியருக்கு பயந்து மலைகளிலும், கெபிகளிலும் வாழ்ந்தனர்.இஸ்ரவேல் மக்கள் யாரும் அவனிடம் போய் எங்களை மீதியானியருக்கு எதிரான யுத்தத்தில் நடத்தும் என்று கேட்கவில்லை. அவனுடைய பெற்றோரும் அவனிடம் அதை எதிர்பார்க்கவில்லை. அவனே ஒரு தொடைநடுங்கியாக கோதுமையை ஆலை மறைவில் போரடித்துக் கொண்டிருந்தான். அவனில் பராக்கிரமத்தைப் பார்த்தவர் தேவனாகிய கர்த்தரே. அவன் கர்த்தராலே அழைக்கப்பட்டான். அவனுடைய அழைப்பு கர்த்தரிடமிருந்து வந்தது! மனிதரிடமிருந்து அல்ல!

கிதியோன் கர்த்தருடைய அழைப்புக்கு கீழ்ப்படிந்து, அதை மற்ற இஸ்ரவேலரோடு பகிர்ந்து கொண்டான். இஸ்ரவேலர்  கிதியோனிடம் தலைவன் என்ற பதவி கொடுக்கப்பட்டதை அறிந்தவுடன், சற்றும் சிந்தியாமல் அவனைப் பின்பற்ற முன்வந்தனர்.

ஆனால் கர்த்தர் கிதியோனிடம் எனக்கு இவ்வளவுபேர் தேவையில்லை என்றார். இந்த ஜனங்களைப் பற்றி நன்கு அறிந்தவராயிற்றே! பெரிய கூட்டமாக யுத்தத்துக்கு போய்விட்டு, எங்களுடைய பெலத்தால் தான் மீதியானியரை முறியடித்தோம் என்று சொல்லிவிடுவார்கள் அல்லவா!

கிதியோன் முன் வைத்த சவாலைத் தாக்குபிடிக்க முடியாமல் வீட்டுக்கு சென்றவர்கள் போக கிதியோனிடம் மிஞ்ஞினவர்கள் 300 பேர் மட்டுமே! இதைத்தான் கர்த்தர் விரும்பினார்!

ஞாபகசக்தியில் பெலவீனமான நாம் நம்முடைய பெலத்தால் எல்லாவற்றையும் சாதிப்பதாகத்தான் நினைத்துக் கொள்கிறோம். நாமாகவே செய்ய முயன்ற காரியங்களில் நாம் தலைக்குப்புற விழுந்து தோல்வியை வாரிக்கொண்டது நமக்கு மறந்தே போய்விடுகிறது. ஆனால் தேவனாகிய கர்த்தர் அவ்வப்போது நம்மைக் காப்பாற்ற ஏதாவது ஒரு வழியை உபயோகப்படுத்தி சகாயம் செய்கிறார்.

கிதியோனின் 300 பேர் கொண்ட சேனை மீதியானியரை வெல்லுமானால், நிச்சயமாக அந்த வெற்றியைக் கொடுத்தது யார் என்று உலகத்துக்கே தெரியும். ஆனால் இஸ்ரவேல் மக்களோ அதை உணர்ந்ததாய்த் தெரியவில்லை.

என்ன நடந்தது பாருங்கள்! யுத்ததுக்கு பின்னர் இஸ்ரவேல் மக்கள் கர்த்தரைத் துதித்து கீர்த்தனம் பாடினார்கள் என்றா வேதம் சொல்லுகிறது? இல்லை!  மீதியானியரை வென்ற பின்னர் ” இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.” (நியா:8:22)

எவ்வளவு சீக்கிரம் நாம் மனிதரை பின்பற்றுகிறோம் பாருங்கள்! சில நாட்கள் முன் வரை கிதியோன் மலைகள், கெபிகளில் தலைமறைவாய் வாழ்ந்தவன்! ஒரு தொடை நடுங்கி! இன்றோ மக்கள் அவனை ஒரு ஹீரோவாக்கி விட்டனர். தங்களை ஆளும் அதிகாரத்தை கிதியோனின் கரத்தில் ஒப்புவிக்க முன் வந்தனர்.

இன்று யாருடைய கரத்தில் நம்மை ஆளுகை செய்யும் அதிகாரத்தை ஒப்புவித்திருக்கிறோம்? தேவனுடைய கரத்திலிருந்து சகலத்தையும் பெற்றுக்கொள்ளும் நாம், தேவன் நம்மை ஆளுகை செய்ய ஒப்படைத்திருக்கிறோமா? கர்த்தருடைய வழிநடத்துதலை மறந்து, மனிதருக்கு மகிமையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோமா? 

தேவனாகிய கர்த்தரை ஆண்டவரே என்று அழைக்கும் நாம் அவர் நம்மை ஆளுகை செய்ய இடம் கொடுக்க வேண்டும்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

மலர் 2 இதழ் 199 10 ம் வகுப்பு ரிசல்ட் எப்படி?

நியா: 6: 12 “கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.”

 கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றக் கர்த்தரால் உபயோகப்படுத்தப்பட்ட தெபோராள், பாராக், யாகேல் என்ற மூவரைப் பற்றி நாம் படித்தோம். தெபோராளின் வாழ்க்கையிலிருந்து அநேக காரியங்களைக் கற்றுக்கொண்டோம்.

ராஜாவின் மலர்களில் நாம் பெண்களைப்பற்றி மாத்திரம் படிப்பதில்லை, ஆபிரகாம், லோத்து, யாக்கோபு, மோசே போன்ற அநேக ஆண்களின் சரித்திரத்தையும் நாம் அலசிப்பார்த்திருக்கிறோம் அல்லவா!

இப்பொழுது நியாதிபதிகள் 6 ம் அதிகாரத்தில் நாம் கிதியோனின் வாழ்க்கைக்கு கடந்து வருவோம்.  நாம் படிக்கும்போது கிதியோன் எப்படியொரு சிக்கலான மனிதன் என்று தெரிந்து கொள்ளப்போகிறோம்.

நியாதிபதிகளின் புத்தகம்  ஆறாவது அதிகாரம் “பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தார்கள் “என்று ஆரம்பிக்கிறது.  எவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர்கள் சிசெராவின் கொடுமையையும், ராஜா யாபீனின் 900 இருப்பு ரதங்களையும் மறந்து போனார்கள். அதை மட்டுமா மறந்தார்கள்! தேவனுடைய பலத்த கரம் அவர்களை விடுவித்ததையும், தெபோராளும், பாராக்கும் , யாகேலும், கர்த்தரால் உபயோகப்படுத்தப்பட்டதையும் கூட மறந்தார்கள்!

இப்பொழுது மறுபடியும் அவர்கள் வதைக்கப்பட்டார்கள். இந்தமுறை கானானியரால் அல்ல, மீதியானியரால் கஷ்டத்துக்குள்ளானார்கள். நியாதி: 6: 2 ல் வேதம் கூறுகிறது,  மீதியானியரின் கை, இஸ்ரவேலின் மேல் பலத்ததால், அவர்கள் தங்களுக்கு, மலைகளிலுள்ள கெபிகளையும், குகைகளையும், அரணான ஸ்தலங்களையும்,  அடைக்கலங்களாக்கிக் கொண்டார்கள் என்று. பயத்தினால் அவர்கள் ஒளிந்து வாழ்ந்தனர். தங்களுக்கு இனி விடுதலையே இல்லை என்று நம்பிக்கையிழந்து காணப்பட்டனர்.

ஆனால் தேவனாகிய கர்த்தரோ அவர்களை கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருந்தது. தம்முடைய மக்களை விடுவிக்கத் திறமைசாலியான ஒரு மனிதனைத் தேடினார்.

நியா: 6: 11 கூறுகிறது, கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்கு சமீபமாக அதைப் போரடித்தான் என்று.  தேவனாகிய கர்த்தர் அவனிடம் தம்முடைய தூதரை அனுப்பி  “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.”

ஒரு நிமிடம்! நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது!

உயிருக்கு பயந்து மலைகளிலும் கெபிகளிலும் வாழ்ந்த கிதியோனைப் பார்த்து, கோதுமையை நல்ல வெளிச்சத்தில் போரடிக்க பயந்து, ஆலையின் மறைவில் போரடித்த கிதியோனைப் பார்த்து, கர்த்தர் பராக்கிரமசாலியே என்று அழைக்கிறார். தொடை நடுங்கிக் கொண்டு கோதுமையை போரடித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து, கர்த்தர், வீர தீரனே! தைரியசாலியே!   வலிமையானவனே! துணிவுள்ளவனே!  என்று அழைப்பதைப் போல் உள்ளது அல்லவா!  ஆம்! நான் உபயோகப்படுத்தின இத்தனை வார்த்தைகளும் பராக்கிரமசாலி என்ற ஒரே வார்த்தையில் அடங்கும்!

நாம் அருகதையற்றவன் என்று நினைப்பவரிடம் கர்த்தர் திறமையைப் பார்க்கிறார். நாம் பயந்தவன் என்று நகைப்பவரிடம் கர்த்தர் தைரியத்தைப் பார்க்கிறார்.

நேற்று 10 ம் வகுப்புக்கான ரிசல்ட் வந்தது. நான் ஓரளவுக்கு நல்ல மார்க்குகள் வாங்கிய இரண்டு பிள்ளைகளிடம் பேசினேன். அவர்கள் இருவருமே என்னிடம், ‘ அம்மாவுக்குதான் ஆண்ட்டி நான் வாங்கியிருக்கிற மார்க்குகள் மேல் திருப்தியில்லை. என்னிடம் பேசகூட மாட்டேன் என்கிறார்கள்’ என்று வருத்தப்பட்டனர்.

அன்பு சகோதரனே! சகோதரியே! உன் பிள்ளைகளிடம் நீ காணாத ஒன்றைக் கர்த்தர் காண்கிறார். உன் பிள்ளைகள் உனக்கு படிப்பில் பலவீனமாய்த் தெரியலாம்! கர்த்தரோ அவனில் ஒரு விஞ்ஞானியைப் பார்க்கிறார்! ஒரு  ஐ.ஏ.ஸ் அதிகாரியைப் பார்க்கிறார். ஒரு டாக்டரைப் பார்க்கிறார்! ஒரு சிறந்த ஊழியக்காரரைப் பார்க்கிறார்.

எக்கேடோ கெட்டுப்போ, உருப்படவே மாட்டாய் , என்று பிள்ளைகளைத் திட்டாதீர்கள்! எந்த சூழ்நிலையிலும், 10 ம் வகுப்பு அல்லது 12 ம் வகுப்பு மார்க்குகள் உங்களை அதிர்சிக்குள்ளாகினாலும், கர்த்தர் அவ்ன் வாழ்க்கையில் பெரியதொரு தரிசனத்தை வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்து, அன்பு என்ற நீரைப் பாய்ச்சும்போது, ஒருநாள் அவன் மலர்ந்து கனி கொடுப்பான்.

மனம் சோர்ந்து இருக்கும் உன் பிள்ளையை பராக்கிரமசாலியாகப் பார்!  10 ம் வகுப்பு ரிசல்ட் எப்படியானாலும் சரி, கர்த்தரின் கண்களுக்கு அவன் ஒரு திறமைசாலிதான்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்