நியாதிபதிகள் 16: 22 அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு திரும்பவும் முளைக்கத் தொடங்கிற்று.
சில நேரங்களில் தலைமுடியை சற்று அதிகமாக டிரிம் பண்ணிவிட்டு, ஐயோ அதிகமாக வெட்டிவிட்டோமே, வளர இன்னும் எத்தனை மாதங்கள் ஆகுமே என்று கவலைப்படுவதுண்டு. ஆனாலும் ஆச்சரியப்படும்படியாய் வெட்டிய முடி வளர்ந்து விடுகிறது.
அப்படித்தான் நம்முடைய கதாநாயகன் சிம்சோனின் வெட்டிய முடி வளர ஆரம்பித்தது. சிம்சோனின் வாழ்க்கையில் முடி வளர ஆரம்பித்தது சரீரப்பிரகாரமாக அவனுக்குக் கிடைத்த பரிசு மட்டுமல்ல ஆவிக்குரிய பரிசும்தான்!
நாம் சிம்சோனின் வாழ்க்கையைப் பற்றி படித்தபோது, பிரியமுடியாத பலவித கட்டுகளால் கட்டப்பட்டிருந்த அவனை, பெலிஸ்தரால் விலைக்கு வாங்கப்பட்ட பெண்ணான தெலீலாள் தன் மடியில் படுக்க வைத்து, அவனை வார்த்தைகளாலே நெருக்கி அலட்டினதால், அவன் தன் பலத்தின் இரகசியம் தன் தலைமுடியில் உள்ளது என்று அவளிடம் உளறினான்.
பிறந்ததுமுதல் கத்திப்படாத அவனுடைய முடியை சிரைத்து விட்டால், அவனுடைய பலம் அவனைவிட்டு நீங்கிவிடும்! அதன்பின்பு அவன் நசரேயன் அல்ல! அவன் கர்த்தருடைய பலத்தால் நிரம்பியவன் அல்ல! அவன் கர்த்தருடைய பரலோக சித்தத்தை பூமியில் நிறைவேற்றுகிறவன் அல்ல! இந்த இரகசியத்தைதான் அவன் தெலீலாளிடம் பிட்டு வைத்தான்.
5500 வெள்ளிக்காசுகளை லாட்டரி அடித்துவிட்ட சந்தோஷத்தில் தெலீலாள் சிம்சோனைத் தன் மடியில் நித்திரையடைய செய்துவிட்டு, அவனுடைய தலைமுடியை சிரைப்பித்து அவனை சிறுமைப்படுத்த ஆரம்பிக்கிறாள் (16:19). அவனுடைய பலம் அவனைவிட்டு நீங்கிற்று. அப்பொழுது அவள் சிம்சோனே பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள். அவன் எப்போதும்போல் உதறிவிட்டு வெளியே போவேன் என்றான். தெலீலாளுடன் விளையாட துணிந்த அவன், அவன் தான் எல்லையை மீறிவிட்டதையும், கர்த்தருடைய பலம் தன்னைவிட்டு நீங்கினதையும் சற்றுகூட உணரவில்லை. தான் இன்னும் பலசாலி என்று எண்ணி, தனியாக இந்த பெலிஸ்தரை சமாளித்துவிடலாம் என்று எண்ணினான்.
ஆனால் என்ன பரிதாபம்! பெலிஸ்தரை எதிர்க்க பலமில்லாமல் போன சிம்சோன், கயிறுகளால் அல்ல வெண்கல சங்கிலிகளால் கட்டப்பட்டான். யாராலும் சிறைப்பிடிக்க முடியாமல் இருந்த பலசாலியான அவனை சிறைச்சாலையில் மாவரைக்க வைத்தார்கள்.
ஆனால் இங்குதான் நம்முடைய பரமபிதாவின் கிருபையைப் பார்க்கிறோம்! அவர் தம்முடைய கிருபையை ஒரு நல்லவன் மேல், ஒழுக்கமுள்ளவன்மேல் காட்டாமல், தன் வாழ்நாள் முழுவதும் வேசிகள் பின்னால் அலைந்த ஒருவனிடம், பெண்களிடம் பொய் சொல்லி ஏமாற்றிய ஒருவனிடம் காட்டுவதைப் பார்த்து எனக்கு புல்லரித்துப் போனது. எத்தனை மகா கிருபை! இவன் நமக்கு லாயக்கு இல்லை என்று அவனை வெறுத்துத் தள்ளாமல், அவன்மேல் தன் கிருபையை பொழியப்பண்ணுகிறார் நம்முடைய பரம பிதா!
சிம்சோனை மொட்டையாக விட்டுவிடாமல் அவன் முடியை வளரப்பண்ணினார். ஒவ்வொருநாளும் சிம்சோன் மாவரைக்கும் இயந்திரத்தில் மாவைத் தள்ளினபோதும் அவன் முடி சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தது. அவனுடைய தலைமுடி மட்டுமா வளர்ந்தது? அதோடு அவன் இதுவரைக் கீழ்ப்படியாமல் ஒதுக்கித் தள்ளின தேவனாகிய கர்த்தர் மேல் நம்பிக்கையும் விசுவாசமும் வளர்ந்தது! கர்த்தர் தம்முடைய சுத்தக் கிருபையால் அவனுடைய இருதயத்தையும், சிந்தையையும் புதுப்பிக்க ஆரம்பித்தார்!
இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கரம் குறுகிப்போகவுமில்லை என்ற வசனத்திற்கு சிம்சோனே சாட்சி! இன்று கர்த்தர் என்னை இரட்சிக்கவே முடியாத நிலையில் நான் இருக்கிறேன் என்று யாராவது கலங்குகின்றீர்களா? உங்களுக்கு ஓர் நற்செய்தி! கர்த்தர் உங்களுடைய வாழ்வு எந்தநிலையில் இருந்தாலும் அதில் கிரியை செய்ய வல்லவர்!
நீ உன்னையே இரட்சித்துக்கொள்ள முடியாது என்று உணரும் தருணத்தில் கர்த்தரின் கிரியை உன்னில் ஆரம்பிக்கும்.
சிம்சோன் மாவரைக்கும் இயந்திரத்தில் மாவைத் தள்ள தள்ள , தேவனாகிய கர்த்தர் பேரில் அவன் உள்ளத்தில் கொழுந்தாய் உருவான வாஞ்சை, பெரிய நெருப்பாய் மாறியது.
இன்று நீ பிறரால் தள்ளப்பட்ட நிலையில் இருக்கலாம்! உன்னால் எதையும் சாதிக்க முடியாது என்று பிறரால் சிறுமைப்படுத்தப்பட்டிருக்கலாம்! ஆனால் கர்த்தர் தம்முடைய கிருபையால் உன் தலைமுடியை வளரச் செய்யுவார்! உன் பலம் உனக்குள் திரும்பி வரும்! உனக்கு ஜெயமும் வரும்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
God’s Grace is not limited to persons! He is no respector of persons!! His Grace always covers all our mistakes!!! What a Graceful God we have !!! God bless!!!