Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் 333 அழகிய சூழல்! யாரும் பார்க்காத தனிமை!

ஆதி:  39:14 – 15 “ அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரேய மனுஷன் நம்மிடம் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படி என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டேன்,

நான் சத்தமிட்டு கூப்பிடுகிறதை அவன் கண்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போய்விட்டான் என்றாள்

 

போத்திபாரின் மனைவியை யோசேப்பின் சௌந்தர்யம், இளமை, திறமை, அனைத்தும் காந்தம் போல கவர்ந்தன! வீட்டின் பொறுப்புகளை திறமையாக கவனித்த அவனை பல நாட்கள் கண்களால் வலை வீசியிருப்பாள்! அவன் அந்த வலையில் விழாததே அவன் மீது அதிக தாபத்தை கொடுத்திருக்கும். பெண்களுக்கு எப்பொழுதுமே கிடைக்காததை அடைய ஆசைதான். அதுவும் பணக்காரியான போத்திபாரின் மனைவிக்கு ‘கிடைக்காதது’ என்றதே அகராதியில் இல்லை!

வேதம் கூறுகிறது (ஆதி:39:11), ஒருநாள் அவன் தன் வேலையை செய்வதற்கு வீட்டுக்குள் போனான், வீட்டு  மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை என்று.

ஆகா! அழகிய மாளிகை, யாரும் இல்லாத தனிமை, அருகே ஒரு சௌந்தர்யமுள்ள வாலிபன்!……… ஒரு நிமிடம்! எனக்கு வேறே ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது!!!! ஏதேன் தோட்டத்தில் ஏவாள் தனிமையில் உலாத்தியதல்லவா அது! வேதம் கூறுகிறது, அவள் அழகிய தோட்டத்தில் தனிமையில் இருந்தபோது, யாரும் பார்க்காத வேளையில் சர்ப்பம் அவளை வஞ்சித்தது என்று.

இன்றுகூட நாம் தனிமையில் இருக்கும்போது தான், சாத்தான் நம்மை வஞ்சிக்க வருவான். தனிமையான இடம், யாரும் பார்க்க முடியாத சூழ்நிலை என்னும் வல்லமையான ஆபத்தான காந்தம்  நம்மை தவறான வழிக்குள் இழுத்துவிடுகிறது அல்லவா?

போத்திபாரின் வீட்டுக்குள் தான் தனியாக இருப்பதை உணர யோசேப்புக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அவன் ஏவாளைப் போல சர்ப்பத்துக்கு செவி சாய்க்கவில்லை. லோத்துவைப் போல அங்கிருந்து ஓடிப்போக தயங்கவும் இல்லை. வேதம் கூறுகிறது ‘அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான் என்று.

தினமும் சோதனைகளை சகிக்கிற நமக்கு யோசேப்பு ஒரு நல்ல உதாரணமாக அமைகிறான் அல்லவா? நம் வாழ்க்கையில் திரு.போத்திபாரையும், திருமதி போத்திபாரையும் சந்திக்கும்போது, அங்கே பேச்சுக்கு இடம் இருக்க கூடாது, யோசேப்பைப் போல அங்கிருந்து ஓடிவிட வேண்டும்!

தனக்கு கிடைக்காததது உருப்படவே கூடாது என்ற எண்ணத்தில், திருமதி போத்திபார், எபிரேய அடிமையாகிய யோசேப்பு தன்னோடு சயனிக்க முயற்சி செய்தான் என்று , அவனுடைய வஸ்திரத்தை கையில் பிடித்துக்கொண்டு பறைசாற்றுகிறாள். உங்களில் யாராவது இப்படி ஏதாவது கிடைக்காமல் போனதால் பாம்பைப் போல படம் எடுத்திருக்கிறீர்களா? அதனால் தான் இந்த வஞ்சம் தீர்க்கிற குணத்தை சர்ப்பத்தின் குணத்தோடு ஒப்பிடுகிறார்கள் போலும்!

திரு போத்திபார் அவர்கள் தன் மனைவியின் வார்த்தைகளை முழுவதும் நம்பியிருந்தால், யோசேப்பை மறுகணமே கொலை செய்யும்படி கட்டளையிட்டிருப்பான். ஆனால் அவன் தன் மனைவி யோசேப்பின் மேல் கண் போட்டதைப் பற்றி சிறிதாவது கேள்விப்பட்டிருப்பான். இப்பொழுது யோசேப்பின் வஸ்திரத்தை  அவள் கையில் வைத்துக்கொண்டு ‘ உம்முடைய வேலைக்காரன் என்ன செய்துவிட்டான் பாருங்கள்’ என்று கத்தியதால், வேறுவழியின்றி யோசேப்பை அவன் சிறைச்சாலைக்கு அனுப்பினான் என்று வேத வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஒருகணம் சிற்றின்பத்தைத் தேடிய ஒரு பெண்ணை அனுசரித்து போகாததால் போத்திபாரின் அரண்மனையில் வாழ்ந்த யோசேப்பு நாற்றமுள்ள சிறைச்சாலையில் தள்ளப்பட்டான்! ஆனால் அந்த இருண்ட சூழ்நிலையில், நாற்றமுள்ள சிறைசாலையில் தேவன் அவனோடிருந்தார்!

பாவத்தை வெறுத்ததால், பாவத்தை விட்டு ஓடியதால் நீ படும் துன்பங்களை தேவனாகிய கர்த்தர் அறிவார்! பயப்படாதே யோசேப்போடே இருந்த தேவன் உன்னோடும் இருப்பார்! உன்னைக் கைவிட மாட்டார்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment