Archive | March 2016

மலர் 6 இதழ் 358 அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் உபத்திரவம்!

 யாத்தி:14: 1-3   கர்த்தர் மோசேயை நோக்கி: நீங்கள் திரும்பி மித்தோலுக்கும், சமுத்திரத்துக்கும் நடுவே……  சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக.

அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து:அவர்கள் தேசத்திலே திகைத்து  திரிகிறார்கள், வனாந்திரம் அவர்களை அடைத்துப் போட்டது என்று சொல்லுவான்.

 
சில நாட்களுக்கு முன்னர் என்னுடைய எம்பிராய்டரி நூல்கள் வைத்திருக்கும் டப்பா என் இரண்டரை வயது பேரன் Zac கையில் சிக்கிக் கொண்டது.அவன் அழகாக red .. yellow .. pink..purple என்று சொல்லிக்கொண்டு அத்தனையையும் பிரித்துப் போட்டு விட்டான். ஆனால் அவைகளை சிக்கு விழாமல் பிரித்து எடுத்து வைப்பது எனக்கு பெரிய வேலையாயிற்று!

ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து  சிக்கி இருக்கும் நுல்களை பிரிப்பது சாதாரணமான வேலை இல்லை என்று அனுபவப்பட்டவர்களுக்கு தான் தெரியும். தெரியாமல் ஒரு முனைக்கு பதிலாக வேறொரு முனையை இழுத்துவிட்டால் சிக்கு அதிகமாகி விடும். அந்த நூல் உபயோகப்படுத்தப் பட வேண்டுமானால் மிகப் பொறுமையாகவே அதை பிரித்து எடுக்க வேண்டும்.

சில நேரங்களில் நம் வாழ்க்கையும் கூட இவ்வாறு சிக்குகள் நிறைந்து காணப்படுகிறது என்பது உண்மை அல்லவா? உன்னுடைய வாழ்க்கையில் எவ்விதமான சிக்கு காணப்படுகிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் இதை வாசிக்கிற பல பேர்களின் வாழ்க்கையில் வெளியே சொல்ல முடியாத பல இன்னல்கள் உள்ளன என்று மாத்திரம் எனக்கு தெரியும். எதிர்பார்க்காத நோய், வேலை இழப்பு, குடும்ப பிரச்சனைகள், பணத்தட்டுப்பாடு, நம் குடும்பத்தில் ஒருவரை இழந்து போனது, கடன் பிரச்சனைகள் இப்படி எத்தனையோ எண்ணிலடங்காத பிரச்சனைகள்!  சீக்கிரம் என் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் நீங்கி விடாதா என்ற பெருமூச்சு ஒவ்வொரு வாழ்க்கையிலும் உண்டு.

இப்படிப்பட்ட பெருமூச்சு தான் இஸ்ரவேல் மக்களிடமிருந்து வந்தது. 400 வருடங்கள் பார்வோனுக்கு அடிமைகளாய் எகிப்தில் வதை பட்ட அவர்களை மீட்க மோசே என்ற தலைவனை கர்த்தர் அனுப்பினார். எகிப்தை விட்டு வெளியேறிய அவர்கள், கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணின கானானுக்குள் பிரவேசிக்க எவ்வளவு ஆவலோடு இருந்திருப்பார்கள்! இந்த லட்சக்கணக்கான மக்களும் அவர்கள் புறப்பட்டு வந்த எகிப்து தேசத்தின் வட கிழக்கில் உள்ள கானானை நோக்கி எத்தனை வேகவேகமாய் நடக்க ஆரம்பித்திருப்பார்கள்?

ஆனால் நடந்தது என்ன? அவர்கள் எகிப்தின் கிழக்கு எல்லைக்கு வந்தபோது கர்த்தர் மோசேயுடன்  பேசி அவர்களை வடகிழக்கில் அல்ல தென்மேற்கு திசையில் வழிநடத்தி அங்கே உள்ள வனாந்திரத்துக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாளயமிறங்கும் படி உத்தரவு அளித்தார்.

என்னைப் போல உங்களுக்கும் இந்த திசைகளைப் பற்றி ஞானம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது, கர்த்தர் அவர்கள் போக வேண்டிய திசையில் அல்ல நேர எதிரான திசையில் நடத்தினார் என்று.

இஸ்ரவேல் மக்கள் இப்படி வனாந்திரத்தில் பாளயமிறங்கிய செய்தி பார்வோனை எட்டிய போது அவன், அவர்கள் வழி தப்பி குழப்பம் அடைந்து காடுகளில் திகைத்து அலைந்து திரிகிறார்கள் என்று எண்ணுவான் என்று கர்த்தர் மோசேயை எச்சரிக்கிறதை நாம் இன்றைய வேத பகுதியில் காண்கிறோம்.

முன் பின் தெரியாத வனாந்திரத்தில் இஸ்ரவேல் மக்கள் அலைந்து திரிந்தது கர்த்தரால் நடத்தப்பட்ட செயலா என்று எண்ணுகிறாயா? இது குழப்பங்கள் நிறைந்த உன் வாழ்க்கையை போல உள்ளதா? கர்த்தர் ஏன் என்னை இங்கு கொண்டு வந்தார்? என்னைக் கை விட்டு விட்டாரோ? என்றெல்லாம் எண்ணுகிறாய் அல்லவா?  

குழப்பங்களும், சிக்கல்களும் பின்னி பிணைந்து இருக்கும் உன் வாழ்க்கையில் ஒருவேளை கர்த்தரின் பொறுமையான கரம் கிரியை செய்து சிக்கல்களை  நீக்கிக் கொண்டிருப்பதை நீ அறியாமலிருக்கலாம்! உன்னைத் தாக்கியிருக்கும் அந்த நோய்… உன்னுடைய இழப்பு…… உன்னுடைய தோல்வி…… குடும்ப பிரச்சனை….கடன் தொல்லை என்ற இந்த வனாந்திரம், இந்த இருண்ட சூழ்நிலை உன் வாழ்வில் இல்லாவிடில் கர்த்தர் உன்னோடு நெருங்கி உறவாட முடியாது!

ஒருபுறம் வனாந்திரம்! மறுபுறம் சமுத்திரம்! இங்கே தான் கர்த்தர் தம்முடைய கிருபையை  இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படுத்த விரும்பியது மட்டும் அல்ல, அதன் மூலம் பார்வோனுக்கும் தன்னுடைய மகத்துவத்தை வெளிப்படுத்த விரும்பினார்.

உன் வாழ்க்கையிலும் கர்த்தர் தம்முடைய கிருபையின் வல்லமையை வெளிப்படுத்துவார்!

  II  கொரி: 4: 17 மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasuderraj@gmail.com

மலர் 6 இதழ் 357 தம்பி மனைவி ஆகாதவளா?

எண்ணா:12: 1, 2  எத்தியோப்பியா  தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால் மிரியாமும் ஆரோனும்,அவன் விவாகம் பண்ணியிருந்த எத்தியோப்பிய தேசத்து  ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்.

மோசேயின் மனைவியாகிய சிப்போராளின் மூலம் நம் குடும்பத்தில் கடைபிடிக்க வேண்டிய சில நல்ல குணநலன்களைப் பற்றி பார்த்துக் கொண்டு வருகிறோம். மோசே தன் மாமனாரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, அவருடைய ஆலோசனையைக் கேட்டு செயல் பட்டான் என்று பார்த்தோம். இன்று குடும்பத்தில் வந்த குழப்பத்தைப் பற்றி பார்க்கலாம்.

என்னோடு கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை. அதனால் அண்ணன் மனைவி, தம்பி மனைவிமாருக்குள் வரும் மனத்தாங்கல் எனக்கு அனுபவம் இல்லை.

ஆனால்  அநேக கிறிஸ்தவருடைய வாழ்க்கையில், அண்ணன், தம்பிமாரின்  மனைவிகளோடும், அக்கா, தங்கைகளின் கணவர்களோடும் ஏற்படும் பிரச்சனைகளால், சகோதர சகோதரிகளுக்குள் காணப்படும் பொறாமை, மனமுறிவு, வேதனை, கண்ணீர், இவற்றைக் கண்டு, தேவனிடம், என் வாழ்க்கைக்கு பின்னர் என் பிள்ளைகளுக்குள் இப்படிபட்ட வேதனை எந்தக் காரணத்தினாலும் வராமல் காத்துக் கொள்ளும்படி ஜெபிப்பேன்.

பல குடும்பங்களில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முதல் காரணம் நாக்கு அடக்கம் இல்லாமை என்று திட்டமாக கூற முடியும்.

இந்த பிரச்சனை மோசேயின் குடும்பத்தில் கூட நேரிட்டது. நேற்று நாம் மோசேயின் மாமனார் எத்திரோ, மோசேயின் மனைவி சிப்போராளையும், அவனது இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு மோசே பாளையமிறங்கியிருந்த தேவ பர்வதம் வந்தடைந்தான் என்று பார்த்தோம்.

இதுவரை மோசேயும், ஆரோனும், மிரியமும் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களாக இருந்தனர். லட்சக் கணக்கான மக்களை எகிப்திலிருந்து கானான் தேசத்து வழி நடத்திக் கொண்டிருந்த மகா பெரிய தலைவர்கள். அவ்வேளையில் திடீரென்று ஒருநாள் மீதியான் நாட்டு ஆசாரியனான எத்திரோ, சிப்போராளோடும் அவள் பிள்ளைகளோடும்  வந்து சேருகின்றான்.

அங்கு நடப்பதை சற்று நம் மனக் கண்களால் பார்ப்போம்! மோசே அவர்களைக் கண்டவுடன் எழுந்து, கூடாரத்துக்கு வெளியே போய், தன் மாமனாரை வணங்கி முத்தஞ் செய்து வரவேற்றான். ஆரோனும், மிரியாமும், மோசேயும் மாத்திரம் சந்தித்து தேசத்து காரியங்களை ஆலோசித்த கூடாரத்துக்குள் எத்திரோவை அழைத்து செல்லுகிறான். அதுமட்டுமல்ல எத்திரோவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்து கொள்ளுகிறான். இது போதாதா ஒரு குடும்பத்தில் குழப்பம் நேரிட? மிரியாமுக்கும் ஆரோனுக்கும் யாரோ கன்னத்தில் அறைந்தது போல இருந்திருக்கும்..

மிரியாமால் தன் தம்பி மனைவியாகிய  சிப்போராளை ஏற்றுக்கொள்ள முடியவில்ல. மோசேயின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகுத்துக்கொண்டிருந்த இந்த சகோதரிக்கு இன்னொரு பெண்ணின் வருகை பொறுக்கவில்லை. சிப்போராள் எத்தியோப்பிய நாட்டை சேர்ந்தவளாதலால் அவள் நிறத்தில்  இஸ்ரவேலரை விட குறைந்தவளாக இருந்திருப்பாள். மோசே இந்த பெண்ணை மணந்திருக்கக் கூடாது என்று தான் மிரியாம் நினைத்திருப்பாள். அவள் அவர்களில் ஒருத்தி இல்லை என்பதை மிரியாமும் ஆரோனும் வெறுத்தனர்.

அதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து சிப்போராளைத் தாக்கினர். அவளுடைய பின்னணியை, அவளுடைய கலாசாரத்தை, அவளுடைய நடைமுறையை, பழக்கவழக்கங்களைத்  தாக்கினர்.

மனவருத்தத்தொடு இதை எழுதுகிறேன். இந்த தவறை நாம் செய்யவில்லையா? “அவள் குடும்பம் அப்படி,….அவள் வளர்ந்த வளர்ப்பு சரியில்லை….. தாய் தகப்பன் சரியில்லை……பணத்தின் அருமை இவளுக்கு எங்கே தெரியும், இவள் நன் குடும்பத்துக்கு தகுதியேயில்லை….” இப்படியெல்லாம் நாம் பேசுவதில்லையா?

இந்த சூடான சண்டையில் ஒன்று குறைவுபடுகிறது. சிப்போராளின் எதிர் வார்த்தைகள். ஆரோனின், மிரியாமின் தாக்குதலுக்கு சிப்போராள் ஒருவார்த்தை திருப்பி பேசியதாகக் கூட வேதம் கூறவில்லை. அதுமட்டுமல்ல சிப்போராள் இதை மோசேயிடம் கண்ணீரோடு குறை கூறியதாகவும் வேதம் சொல்லவில்லை.

ஒன்று மட்டும் வேதம் கூறுகிறது ‘ கர்த்தர் அதைக் கேட்டார் என்று.

இன்று குடும்ப பிரச்சனையால் சிப்போராளைப் போல அமைதியாக, யாரும் பார்க்காத இடத்தில் கண்ணீர் சிந்துகிறாயா? நீ அமைதியாய் பொறுத்துக்கொண்டிருப்பதை கர்த்தர் காண்கிறார்!

நீதி:17:27  அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்

நாம் பேசும் வார்த்தைகள் வெள்ளியைப் போன்றது என்றால், நாம் காக்கும் அமைதி பொன்னைப் போன்றது என்று யாரோ கூறியது எவ்வளவு உண்மையானது!

கர்த்தர் தாமே தம்முடைய வார்த்தைகளின் மூலம் நம்மை ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

மலர் 6 இதழ் 356 பெரியவர்களின் ஆலோசனையை உதறாதே!

யாத்தி:18:19 இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன், தேவனும் உம்மோடு கூட இருப்பார்………

18:24  மோசே தன் மாமன் சொல்கேட்டு அவன் சொன்னபடியெல்லாம் செய்தான்.

மோசேயின் குடும்பம் ஒன்று சேர்ந்த இடத்தில் சந்தோஷம் இருந்தது என்று பார்த்தோம். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, குடும்ப நலனுக்காக முடிவு எடுத்து, ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்ந்த குடும்பம் என்று அவர்களைப் பற்றி பார்த்தோம்.

யாத்தி:18: 14 – 25 வசனங்களைப் படிக்கும் போது இன்னுமொரு சம்பவத்தைப் பற்றி படிக்கிறோம். மோசேயின் குடும்பம் ஒன்று சேர்ந்த மறுநாள் காலை முதல் மாலை வரை மோசே ஜனங்களை  நியாயம் விசாரித்ததை எத்திரோ கவனித்துக் கொண்டிருந்தான்!

இதைப் பற்றி மோசேயிடம் விசாரித்தபோது அவன் ஜனங்களுக்கு யாதொரு வழக்கு உண்டானால் அவர்கள் என்னிடத்தில் வருகிறார்கள், நான் அவர்களுக்கு நியாயம் விசாரித்து, தேவ கட்டளைகளை தெரிவிக்கிறேன் என்றான்.

இதைக்கேட்ட எத்திரோ மோசேக்கு ஒரு ஆலோசனை கொடுத்து, தேவனுடைய ஊழியக்காரனான அவனுடைய வேலை தேவனுடைய சமுகத்தில் காத்திருப்பது என்பதையும், நல்ல திறமையான தேவனுக்கு பயந்த  மனிதரை தேர்ந்தெடுத்து அவர்களை ஆயிரம் பேர்களுக்கும், நூறு பேர்களுக்கும், ஐம்பது பேர்களுக்கும், பத்துபேர்களுக்கும் அதிபதிகளாக ஏற்படுத்தவேண்டும் என்பதையும் அறிவுறித்தினான்.

இந்த பகுதியில் நாம் முக்கியமான ஒரு காரியத்தைப் பற்றி படிக்கிறோம். யாருக்கும் ஆலோசனை கொடுப்பது சுலபம் தான் ஆனால் அதை எப்படி, அவர்கள் மனம் புண்படாமல் கொடுக்க வேண்டும் என்று எத்திரோவிடம் கற்றுக் கொள்வோம்.

முதலாவதாக, எத்திரோ மோசேயிடம் ‘ நீ நடந்து கொள்வது தவறு’ என்றோ, அல்லது ‘முட்டாள்தனமான காரியத்தை செய்கிறாய், காலை முதல் மாலை வரை இந்த ஜனங்கள் முன்னால் உட்கார்ந்திருந்தால் உன் குடும்பம் என்ன ஆகும்’ என்றோ கடிந்து பேசவில்லை.

மாறாக அவன் மோசேயிடம் பரிவாக “மோசே நீயும் உன்னோடே இருக்கிறவர்களும் தொய்ந்து போவீர்கள். உன்னால் இந்த பாரத்தை சுமக்க முடித்து” என்று பேசுவதைப் பார்க்கிறோம்.

அநேக நேரங்களில் நாம் ஆலோசனை கொடுக்கும்போது, கேட்கிறவர்களின் செவி கிழியும்படி கத்தி, அவர்கள் காதுகளில் பஞ்சு வைத்து அடைத்துக் கொள்ள செய்கிறோம். எத்திரோ அப்படி செய்யவில்லை, அவன் மோசேயின் நலனில் அக்கறை காட்டினான்.

இரண்டாவது எத்திரோ, மோசே தேவனுடைய சமுகத்தில் அதிக நேரம் செலவிடுவது மிகவும் முக்கியம் என்று உணர்ந்தான். மோசே தேவனிடமிருந்து ஒரு விசேஷ அழைப்பை பெற்ற தேவ மனிதன், ஆதலால் அவன் தேவனிடம் காத்திருந்து, அவருடைய கற்பனைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதுதான், அவன் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் என்பதை மோசேக்கு விளக்கி காட்டினான்.

மூன்றாவது, எத்திரோ மோசேயிடம் நீ செய்வதை நிறுத்திவிடு, யாரோ எப்படியோ போகட்டும் என்று கூறவில்லை. இப்படி செய்யாமல் எப்படி மாற்றி செய்தால் பலன் இருக்கும் என்று விளக்குகிறான். ஆயிரத்துக்கு அதிபதிகளையும், நூற்றுக்கு அதிபதிகளையும் ஏற்படுத்தும்படியான உயர்ந்த ஆலோசனையை சொல்லுகிறான்.

தக்க சமயத்தில் கொடுக்கப்படும் நல்ல ஆலோசனையைவிட உயர்ந்த பரிசு இந்த உலகில் எதுவுமே இருக்க முடியாது என்று எண்ணுகிறேன்!

 வேதம் கூறுகிறது, மோசே தன் மாமன் சொல்கேட்டு அவன் சொன்னபடியெல்லாம் செய்தான் என்று.

நம் குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கும் குணம் உண்டா என்று சிந்தித்து பார்ப்போம். மாமனாரை மதித்து அவர் வார்த்தையின்படி செய்கிறவர்கள் நம்மில் எத்தனைபேர் உண்டு?

 எத்திரோவின் ஆலோசனை மோசேயின் வாழ்க்கையை நிர்மூலமாக்கவில்லை, அவன் குடும்பத்தை கட்ட உதவியது. பெரியவர்களின் ஆலோசனையை உதறித்தள்ளாதே! அவை உன்னை அழிக்காது!

 நீதி: 15:23 “ மனுஷனுக்கு தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்! ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது”.   

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

மலர் 6 இதழ் 355 ஒருவரையொருவர் புரிந்து கொண்ட குடும்பம்!

 

யாத்தி: 18: 5 மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயின் குமாரரோடும், அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்திரத்துக்கு வந்து….”

நாம் மோசேயுடைய வாழ்க்கையைப் பற்றி படிக்கும் போது பெண்கள் அவன் வாழ்க்கையில் முக்கிய இடம் வகுத்தனர் என்று அறிந்தோம். அவன் தாய் யோகெபெத், சகோதரி மிரியம், பார்வோன் குமாரத்தி, அவன் மனைவி சிப்போராள் என்ற பல பெண்கள் அவன் வாழ்க்கையை பாதுகாத்து, வளர்த்து, நேசித்து வந்தனர் என்று பார்க்கிறோம்.  

மோசேயின் மனைவியாகிய சிப்போராள் ஒரு அருமையான பெண் மாத்திரமல்ல, ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வந்தவளும் கூட. அவளும் அவள் தகப்பன் எத்திரோவும் மோசேயின் வெற்றிக்கு பின் நின்றவர்கள்!

மோசே எகிப்தில் பார்வோன் குமாரத்தியின் வளர்ப்பு மகனாய் இருந்தபோது எகிப்தியன் ஒருவன் ஒரு எபிரேயனை சித்திரவதை செய்வதைப் பார்த்து, அவன் மேல் கோபப்பட்டு, யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவனைக் கொலை செய்தான். நாம் மறைவிடத்தில் செய்யும் தவறையும் பார்க்கிற தேவன், அவன் சட்டத்தை கையில் எடுத்து எகிப்தியனை தண்டித்ததை நிச்சயமாக விரும்பவில்லை. அதனால் அவன் எகிப்தை விட்டு ஓடி மீதியான் தேசத்தில் தஞ்சம் புக வேண்டியிருந்தது. கர்த்தர் அவனைக் கைவிடாமல், மீதியான் தேசத்தில், எத்திரோவின்  குடும்பத்தில் அவனுக்கு அன்பையும், அரவணைப்பையும், ஒரு மனைவியையும், பிள்ளைகளையும் அமைத்து கொடுத்தார்.

நம்மை சிப்போராளின் இடத்தில் வைத்து கொஞ்சம் சந்தித்து பாருங்கள்! நாம் எகிப்திய ராஜ குமாரன் என்று நினைத்தவன், திடீரென்று நம்மிடத்தில் நான் எகிப்தியன் இல்லை, கொலை செய்து விட்டு தப்பி ஓடிவந்த எபிரேயன் என்றால் நமக்கு எப்படியிருக்கும்?

அதுமட்டுமல்ல, இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன் ஆன பின்னால் ஒருநாள், நான் எரியும் முள் செடியில் கர்த்தரைப் பார்த்தேன் அவர் என்னை எகிப்த்துக்கு திரும்பிப் போய் பார்வோனிடமிருந்து என் ஜனத்தை மீட்க சொல்கிறார், புறப்பட்டு நாம் போகலாம் என்றால், இவனுக்கு என்ன ஆயிற்று? ஏதாவது குடித்து விட்டு புலம்புகிறானா என்று தானே நினைப்போம்.

இந்த சம்பவங்களை நாம் வேதத்தில் வாசிக்கும்போது, அதில் இடம் பெற்றவர்களும் நம்மைப் போல சாதாரண மக்கள்தான், இந்த சம்பவம் நடந்த போது அவர்களும் இதைக்குறித்து முடிவு எடுக்க திணறிதான் இருந்திருப்பார்கள் என்ற எண்ணம்  நமக்கு உதிப்பதில்லை. நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் என்னுடைய பிள்ளைகளோடு, எகித்துக்குள் போய், பார்வோனால் கொலைக் குற்றத்துக்காக தேடப்படுகிற குடும்பம் என்று முத்திரை குத்தப்பட நிச்சயமாக சரி என்று சொல்லியிருக்க மாட்டேன்.

யாத்தி4: 18 ல் மோசே தன் மாமனாகிய எத்திரோவிடம் போய் , உண்மையான காரணத்தை சொல்லாமல், தன் சகோதரரை எகிப்தில் பார்க்க போவதாக பொய் சொல்லி விடை பெறுகிறதைப் பார்க்கிறோம். எத்திரோவும் அவனை, உண்மையறியாமல் சமாதானத்தோடே போ என்று அனுப்பி வைக்கிறான்.

மோசே தன் மனைவி, பிள்ளைகளோடு எகிப்த்துக்கு போகும் வழியில் கர்த்தர் இடைப்பட்டு அவனுடைய கீழ்ப்படியாமையினால் அவனைக் கொல்லப் பார்த்தார். சிப்போராளின் கீழ்ப்படிதல் அவனைக் காப்பாற்றியது.

இந்த பயங்கர சம்பவத்துக்கு பின் நான் அங்கு இருந்திருந்தால், ‘மோசே நீர் தேவனுக்கு கீழ்ப்படிவதைக் குறித்து எனக்கு பெருமையாய் இருந்தாலும், எகிப்தில் நமக்கு எனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. ஒருவேளை நாம் சிறைக் கைதிகளாகலாம் அல்லது அடிமைகளாகலாம். நானும் பிள்ளைகளும் மீதியானுக்கு திரும்பிப் போகிறோம், நீர் நாங்கள் வரலாம் என்று சொல்லி அனுப்பும்போது வருகிறோம்’ என்றுதான் கூறியிருப்பேன்.

அங்கும் அப்படித்தான் நடந்தது என்று நினைக்கிறேன். குடும்ப நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவாகத்தான் அது இருந்திருக்கும். அதுமட்டுமல்ல, மோசேக்கு கர்த்தர் கொடுத்த பெரிய பொறுப்பு அவனுடைய முழு நேரத்தையும், பெலத்தையும் கொடுக்க வேண்டியது என்று அந்த குடும்பம் உணர்ந்து, சிப்போராளும், பிள்ளைகளும் மீதியானுக்கு திரும்பி எத்திரோவுடன் தங்கினர்.

பின்னர் என்ன நடந்தது என்று இன்றைய வேத பகுதியில் பார்க்கிறோம். கர்த்தர் செய்த அற்புதமான வழிநடத்துதலைப் பற்றி கேள்விப்பட்ட எத்திரோ, சிப்போராளோடும், மோசேயின் இரண்டு குமாரரோடும் மோசே இருந்த பர்வதத்துக்கு வந்து சேர்ந்தான்.

யாத்தி:18 ல் அந்த குடும்பம் ஒன்று சேர்ந்த போது இருந்த மகிழ்ச்சியைப் பற்றி கூறுகிறது. மோசே கூடாரத்தை விட்டு வெளியே சென்று தன் மாமனாரை முத்தம் செய்து வரவேற்கிறான். பின்னர் அவனை கூடாரத்துக்குள் அழைத்துவந்து கர்த்தர் செய்த எல்லா அதிசயங்களையும் பற்றி கூருகிறான். அந்த இடத்திலேயே எத்திரோ , ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய கர்த்தரை  விசுவாசித்தான் என்று பார்க்கிறோம்.

இதைப் பற்றி நாம் தொடர்ந்து படிக்குமுன், சிப்போராளின் குடும்பத்தினர் மோசேயிடம் காட்டிய பரிவும், அன்பும், அக்கறையும், பின்னர் அவனை புரிந்து கொண்டு தேவனுடைய காரியமாய் அனுப்பி வைத்ததும் நம் மனதில் தங்குகிறதல்லவா?

ஒருவனின் வெற்றிக்கு பின்னணியே அவன் குடும்பம் தான்.

 
உங்கள் குடும்பம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் அவரவர் பணியில் சிறந்து விளங்க ஒத்துழைக்கும் குடும்பமா? குடும்ப நலனை மனதில் கொண்டு எந்த முடிவையும் எடுக்கும் குடும்பமா?

கர்த்தர் தம்முடைய வார்த்தையின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

ஜெபக்குறிப்புகள் இருந்தால் premasunderraj@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

HE IS RISEN INDEED!

And the angel answered and said unto the woman, ‘Fear not ye for I know that ye seek Jesus, which was crucified. He is not here, for HE IS RISEN’. (Matt 28:6)

Ten years ago my husband and I took a trip all through the Holy Land. We had a longing to walk where Jesus walked. But of all the places we visited, the one that made the most lasting impression on us was the visit to a tomb, a place believed to be the tomb where Jesus was laid.

I have frequently visited both the cemeteries where my mother and father are buried. I have never seen an empty tomb. These days here the tombs are opened to bury more and more.
Thank God, there is an empty tomb where once the Son of God was laid, from where His Father called Him and raised Him!

We know that the one who raised the Lord Jesus from the dead will also raise us with Jesus and present us with you in His presence (II Corinthians 4: 14)

While the death of Jesus gives me the grace that washes the stains in my life, the resurrection of Jesus gives me the hope I need each day to keep moving forward in the face of life’s troubles and sorrows.

How thankful I am today that I can rejoice because the empty tomb holds the promise of a hopeful future!

Happy Resurrection Day! God bless you!

மலர் 6 இதழ் 354 உயிரைக் காத்த கீழ்ப்படிதல்!

யாத்தி:4: 20, 24, 25 அப்பொழுது மோசே தன் மனைவியையும், தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு எகிப்து தேசத்துக்கு திரும்பினான்….

வழியில் தாங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு வெளிப்பட்டு அவனைக் கொல்லப் பார்த்தார்.

அப்பொழுது சிப்போராள் ஒரு கருக்கான கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய  நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்.

சிப்போராள் மோசேக்கு மீதியான் வனாந்தரத்தில் கிடைத்த பரிசு என்று பார்த்தோம். பல கனவுகளோடு அவள் மோசேயை மணந்தாலும் அவள் கனவுகள் எதுவும் பலிக்க வில்லை. அவளுக்கு மோசேயோடு கிடைத்தது 40 வருடங்கள் நாடோடியாய் கானானுக்கு போகிற வழியில் நடந்து திரிந்ததுதான் அவளுக்கு கிடைத்த வாழ்க்கை ஆனாலும் சிப்போராள் ஒரு நல்ல மனைவியாக வாழ்ந்தாள் என்று பார்த்தோம்.

இன்று சிப்போராளின் வாழ்க்கையில் காணப்பட்ட கீழ்ப்படிதல் என்னும் குண நலனைப் பற்றி சிறிது அறியலாம்!

கர்த்தர் மோசேயோடு பேசி, அவனை இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்படியான பெரிய பொறுப்பைக் கொடுத்து எகிப்துக்கு திரும்பி போகும்படி கட்டளை கொடுக்கிறார்.

நாம் தியானிக்கிற இந்த சம்பவம் மோசே தன்னுடைய மனைவியோடும், பிள்ளைகளோடும் எகிப்த்துக்கு போகும் வழியில் சம்பவித்தது. அவன் தன் குடும்பத்தோடு தங்கிய இடத்தில்  கர்த்தர் அவனை  கொலை செய்ய முயற்சித்தார் என்று பார்க்கிறோம்.

இதை வாசிக்கிற உங்களைப் பற்றி தெரியவில்லை, ஆனால் எனக்கு கொஞ்சம் பயங்கரமாகத்தான்  தோன்றியது இந்த சம்பவம்!

கர்த்தர் ஏன் மோசேயிடம் இப்படி நடந்து கொண்டார்? என்று நாம் யோசிக்கலாம்! தேவன் அன்பானவர், இரக்கமும், கிருபையும் உள்ளவர் என்று நாம் விசுவாசிப்போமானால், கர்த்தருடைய இப்படிப்பட்ட செயல்களுக்கு பின்னால் உள்ள அர்த்தத்தையும், அதன் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் இன்று வாசிக்கிற வேத பகுதி நமக்கு மோசேயின் பிள்ளைகளில் ஒருவர் விருத்தசேதனம் பண்ணப்படாமல் இருந்ததைக் காட்டுகிறது.

கர்த்தர் தமக்கு சொந்தமான ஜனமாக இஸ்ரவேலைத் தெரிந்து கொண்டபோது அவர்களுக்கு விருத்தசேதனம் பண்ண வேண்டும் என்ற புது கட்டளையையும் கொடுத்தார். இதை ஏன் செய்யவேண்டும் என்று அவர்களுக்கு விளக்கி கூறியதாக வேதம் சொல்லவில்லை. இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தனர். மோசேயின் தாய் தகப்பன் இருவரும் தேவனுக்கு கீழ்ப்படிந்தவர்கள் ஆதலால் தங்கள் குமாரனாகிய மோசேக்கு நிச்சயமாக விருத்தசேதனம் செய்திருப்பார்கள்.

ஆனால் 40 வருடங்கள் எகிப்தின் அரண்மனையில் வாழ்ந்ததாலும், இன்னுமொரு 40 வருடங்கள் மீதியான் தேசத்தின் வனாந்திரத்தில் வாழ்ந்ததாலும் அவன் விருத்தசேதனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருக்கலாம், அல்லது அதின் முக்கியத்துவத்தைப் பற்றி அவன் மனைவிக்கு எடுத்துரைக்காமல் இருந்திருக்கலாம்.

அதனால் வேதாகம வல்லுநர்கள் எண்ணுகின்றனர், மோசே தன்னுடைய மூத்த மகனுக்கு எபிரேய முறைப்படி விருத்தசேதனம் செய்திருப்பான், ஆனால் இளையவனுக்கு விருத்தசேதனம் செய்ய விடாமல் சிப்போராள் தடை செய்திருக்கக் கூடும் என்று. இது நமக்கு மோசேயின் இரு குமாரரில் ஒருவன் ஏன் விருத்தசேதனம் செய்யப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் கொடுக்கிறது அல்லவா? தன்னுடைய கணவனுக்கு வந்த ஆபத்தைக் கண்டவுடன் சிப்போராள் ஒரு கருக்குள்ள கத்தியை எடுத்து, தன் புத்திரனின் நுனித்தோலை அறுத்தது எறிந்தது மாத்திரமல்லாமல், நீர்  எனக்கு இரத்தத சம்பந்தமான புருஷன் என்று கூறினது அவள் இந்த இரத்த சம்பந்தமான விதிமுறையை விரும்பவில்லை என்று தெரிகிறது!

மோசே மீதியான் தேசத்தில் போய் பெண் எடுத்த போது, அவன் அந்த தேசத்து பழக்க வழக்கங்களின் படி நடக்க ஆரம்பித்திருப்பான். தன் வாழ் நாள் முழுவதும் அந்த தேசத்தில் கழிந்துவிடும் என்று தானே நினைத்திருப்பான்? எகிப்துக்கு திரும்புவதை கனவில் கூட நினைத்திருக்கமாட்டான். அதேவிதமாய் சிப்போராள் முதலில் அவனை மணந்தபோது, மோசேயுடைய எபிரேய பழக்க வழக்கங்களில் ஆர்வம் காட்டியிருப்பாள். அதனால் தான் அவர்கள் முதல் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்திருந்தனர். ஆனால் காலப்போக்கில் அந்த ஆர்வம் குன்றியிருக்கும்.   கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுப்பதும், கீழ்ப்படிவதும் அவர்களிடம் குறைவு பட்டிருக்கும்.

இப்பொழுது மோசே இஸ்ரவேல் மக்களின் தலைவனாக எகிப்துக்கு செல்கிறான். தேவனாகிய கர்த்தர் தம்முடைய பிள்ளைகளான மோசேயும், சிப்போராளும் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாதவர்கள், தங்கள் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யாதவர்கள் என்ற குறையோடு  இஸ்ரவேல் மக்களின் தலைமைப் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை. அதனால் வழியில் இடைப்பட்டு  சிப்போராள் தன் குமாரனுக்கு விருத்தசேதனம் செய்யாததால் மோசேயின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று வெளிப்படுத்துகிறார்.

சிப்போராளின் கீழ்ப்படிதல், அவள் கணவன் உயிரைக் காத்தது!

தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுத்தலும், கீழ்ப்படிதலும் உன்னுடைய குடும்பத்தில் குறைந்து காணப்படுகிறதா? இன்று உன் குடும்பத்தில் இருக்கிற ஆபத்தான சூழ்நிலைக்கு உன் கீழ்ப்படியாமை காரணமாயிருக்கக் கூடும்! கீழ்ப்படியாமை நம் தலைக்கு கத்தியை கொண்டு வரும்! ஏனெனில் நாம் அவருடைய வார்த்தைக்கு செவிகொடுக்காமல் இருக்கும்போது கர்த்தர் நம்மைக் காத்து வழிநடத்த முடியாது. உன்னைக் காக்கிறவர் உறங்கார் என்ற வாக்குத்தத்தம் நமக்கு சொந்தமாகாது,

நாம் குடும்பமாக தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் போது கர்த்தர் நம்மை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையமிடுகிறார். அதை யாரும் முறிக்க இயலாது. நம்மைத் தொடுகிறவன் அவர் கண்மணியைத் தொடுகிறான் என்று கூறினார் அல்லவா?

பலிகளையல்ல கீழ்ப்படிதலையே நம் தேவன் நம்மிடத்தில் விரும்புகிறார்! சிப்போராளைப் போல கீழ்ப்படிந்து தேவனுடைய  ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 6 இதழ் 353 கனவுகள் நொறுங்கிப் போன குடும்ப வாழ்க்கையா?

யாத்தி: 2: 21, 22 மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்க சம்மதித்தான்; அவன் சிப்போரள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்கு  கொடுத்தான்;

அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு கேர்சொம் என்று பேரிட்டான்.

மோசே! 40 வருடங்கள் பார்வோனின் அரண்மனையில் வாழ்ந்தான்! பார்வோன் குமாரத்தியின் செல்லக் குமாரனாய், பார்வோன் ராஜாவின் பேரனாய் எல்லாவித செல்வங்களையும் அனுபவித்து வளர்ந்தான். எகிப்து ராஜ்யத்தை ஆளவேண்டிய ராஜகுமாரன், எபிரேயரைக் கொடுமைப் படுத்திய ஒரு எகிப்தியனை வெட்டிக் கொன்றதால், பார்வோனின் வெறுப்புக்கு ஆளாகி, சிங்காசனத்தை துறந்து மீதியான் நாட்டின் வனாந்தரத்துக்கு ஓடிப்போனான்.

யாத்தி: 2: 15 ல் வேதம் கூறுகிறது, மோசே மீதியான் தேசத்திலே ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான். அதே அதிகாரத்தில் நாம், மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள், அவர்கள் மோசே அமர்ந்திருந்த துரவண்டை வந்து தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்கு தண்ணீர் மொண்டு கொடுத்தபோது, அங்கிருந்த மேய்ப்பர்கள் அவர்களை துரத்தினார்கள், அப்பொழுது மோசே அவர்களுக்கு துணைநின்று அவர்கள் மந்தைக்கு தண்ணீர் காட்டினான் என்று வாசிக்கிறோம்.

அவர்கள் வீட்டுக்கு சீக்கிரம் வந்து சேர்ந்த காரணத்தை அவர்கள் தகப்பன் கேட்டபோது எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களை தப்புவித்து எங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான் என்றார்கள். மோசே எகிப்தைவிட்டு புறப்பட்டபோது அணிந்தருந்த எகிப்தியரின் ஆடை அவனை எகிப்தியன் என்று அந்தப் பெண்களுக்கு காட்டிற்று.

மீதியான் தேசத்தில் அவன் வாழ்ந்தபோது, அந்த பாலைவன மக்கள் அரேபியரான இஷ்மவேலருடன் தொடர்புள்ளவர்கள் என்று உணர்ந்தான். ஆதி 37 ம் அதிகாரத்தில், இந்த மீதியானியர் யோசேப்பை இஸ்மவேலரிடம் விற்றதை மறந்து விட வேண்டாம். அதுமட்டுமல்ல மீதியானியர் என்பவர்கள், ஆபிரகாம் சாராள் மரித்தபின்னர் தன்னுடைய 100 வயதுக்கு மேல் மணந்த கெத்தூராளின் பிள்ளைகளின் வம்சத்தினர்.

விளக்கமாகக் கூறுகிறேன்!

மோசே ஒரு இஸ்ரவேலன், ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிறந்த ஈசாக்கின் வழியில் வந்தவன்.

இஸ்மவேலர், ஆபிரகாமுக்கும், ஆகாருக்கும் பிறந்த பிள்ளையின் வம்சத்தார்.

மீதியானியர், ஆபிரகாமுக்கும் கெத்தூராளுக்கும் பிறந்த பிள்ளைகளின் வம்சத்தினர்.

இந்த மூன்று வம்சங்களுக்குமே தகப்பன் ஆபிரகாம் தான். இது ஒன்றே அவர்களுக்குள் போட்டியையும் பொறாமையையும் கொண்டு வர போதுமான காரணம் அல்லவா! எங்காவது ஒரு தகப்பனின் மூன்று மனைவிமாருக்கு பிறந்த பிள்ளைகள் ஒற்றுமையாய் இருப்பதை நாம் கண்டிருக்கிறோமா?

இப்பொழுது ஒரு அழகிய ராஜகுமாரன் மீதியான் தேசத்து ஆசாரியனின் வீட்டுக்கு வருகிறான். அவனுடைய ஏழு குமாரத்திகளில் சிப்போராள் ஒருவேளை மூத்தவளாக இருந்திருக்கலாம். ஒரு ஆசாரியனின் மூத்த மகளாகிய அவள் அந்த தேசத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ளவளாக இருந்திருப்பாள். அவளை அவள் தகப்பன் திருமணத்தில் மோசேக்கு கொடுத்தபோது, அவள் ஒரு விலையேறப்பெற்ற பரிசாகத்தான் இருந்திருப்பாள். மீதியான் பாலைவனத்தில் மோசேக்கு கிடைத்த நீரோடையல்லவா அவள்!

பல கனவுகளோடு தன்னுடைய ராஜ குமாரனுக்காக காத்திருந்த அவளுக்கு என்ன கிடைத்தது தெரியுமா? ஒரு எபிரேய மேய்ப்பன் தான்!  40 வருடங்கள் மோசே அவள் தகப்பனின் ஆடுகளை மேய்த்தான்! பின்னர் 40 வருடங்கள் எப்பொழுதும், எல்லாவற்றிக்கும் முறுமுறுத்த இஸ்ரவேல் மக்களை மேய்த்தான். சிப்போராளின் கனவு பலிக்கவுமில்லை! அவள் கால்கள் ஓயவும் இல்லை!

சிப்போராள் தன் கணவனோடும், பிள்ளைகளோடும் அமைதியாய் மீதியான் தேசத்தில் வாழ விரும்பியிருக்கக் கூடிய ஒரு பெண்ணாகத்தான் இருந்திருப்பாள் ஆனால் அவள் ஆசை நிறைவேறவில்லை! அவள் இஸ்ரவேலரை 40 வருடங்கள் வனாந்தரத்தில் வழிநடத்திய மோசேயோடே காடு மேடாக அலையவேண்டியதாயிற்று!

இன்று உன் திருமண வாழ்க்கையில் கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்த நீ ஒருவேளை ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை என்று உன் உள்ளத்தில் நீ நினைக்கலாம்! உன் கனவுகள் கண்ணாடித் துண்டுகள் போல நொறுங்கியிருக்கலாம்.

சரியான துணை கிடைக்கவில்லை என்று அழுது புலம்புவதை விட கர்த்தருடைய உதவியோடு சரியான துணையாக நாம் வாழ்வதுதான் முக்கியம்.  சிப்போராளைப் பார்! அவள் கனவுகளை மோசே நிச்சயமாக நிறைவேற்றவில்லை! ஆனாலும் சிப்போராள் ஒரு நல்ல மனைவியாக இருந்தாள்!

 
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்த்த எந்த குணநலனுமே இல்லையெனினும், நம்மை அளவில்லாமல் நேசிக்கிறாரே அந்த நேசத்தைதான் நாம் நம் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் காட்ட வேண்டும்!

கர்த்தர் தாமே தம்முடைய வார்த்தையின் மூலம் நம்மை ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்