Archive | June 2016

மலர் 6 இதழ்: 422 ராகாப் நம்மை விட குறைந்தவளா என்ன????

 யோசுவா: 6:23 அப்பொழுது வேவுகாரரான அந்த வாலிபர் உள்ளே போய்  ராகாபையும், அவள் தகப்பனையும், அவள் தாயையும், சகோதர்களையும், அவளுக்குள்ள யாவையையும், அவள் குடும்பத்தார் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்து அவர்களை இஸ்ரவேல் பாளயத்துக்கு புறம்பே இருக்கும்படி பண்ணினார்கள்.

தன்னுடைய வாழ்வின் அஸ்திபாரத்தை கர்த்தர்மேல் உறுதியாகப் போட்ட ராகாப், வேவுகாரர் அவ்விடம்விட்டு போன பின்னர் அமைதியாக கவனித்து வந்தாள். இஸ்ரவேலர் ஆறு நாட்கள் எரிகோவை சுற்றிவந்தபோது அவள் என்ன நினைத்திருப்பாள்? ஏழாவது நாள் அவர்கள் ஏழுதரம் எரிகோவை சுற்றி வந்து ஏழாவதுதரம் எக்காளம் ஊதி ஆர்ப்பரித்தபோது அவள் மனநிலை எப்படியிருந்திருக்கும்?

எத்தனைமுறை விசுவாசிகளாகிய நாமும் செய்வதறியாது இப்படி அமைதியாக நம்மை சுற்றி நடப்பவைகளை கைக்கட்டி பார்த்துக்கொண்டிருக்கவேண்டிய சூழ்நிலைகள் வருகின்றன! அப்படிப்பட்ட சமயத்தில் நம் விசுவாசம் தடுமாறுகிறதா அல்லது ராகாபைப்போல் உறுதியாய் இருக்கிறதா?

ராகாபின் விசுவாசம் உறுதியாய் இருந்ததற்கு காரணம் அவள், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மேல் விசுவாசம் என்னும் ஆரம்பக்  கல்லையும், விசுவாசத்தின் மூலம் கர்த்தரைப் பற்றிய வெளிப்படுத்துதலை பெற்றுக்கொள்ளுதல் , பாதுகாக்கப் படுதல், உலகத்தை மறுதலித்தல், நம்பிக்கை என்ற கற்களை உபயோகப்படுத்தி தன் அஸ்திபாரத்தை உறுதியாய்ப் போட்டதினால்தான்!

கர்த்தர் தம் பிள்ளையான ராகாபை நேசித்ததால் அவளை எரிகோவிலிருந்து பிடுங்கி, அவளைத் தமக்கு சொந்தமான ஜனமாகும்படி செய்தார்.

ஒரு புறஜாதியான பெண்ணாய், கர்த்தரை அறியாத தேசத்தில் பிறந்து வளர்ந்தாலும் கர்த்தரைப் பற்றும் விசுவாசத்தில் உறுதியாய் இருந்த ராகாபை இஸ்ரவேல் மக்கள் எப்படி நடத்தினர் என்று அறிய என் உள்ளத்தில் ஒரு ஆர்வம் எழுந்தது.

நாம் வாசிக்கிற இந்த வேதபகுதி நமக்கு அதை தெளிவாகக்காட்டுகிறது! அவர்களை (ராகாபின் குடும்பத்தை) இஸ்ரவேல் பாளயத்துக்கு புறம்பே இருக்கும்படி பண்ணினார்கள். பாளயத்துக்கு புறம்பே என்ற வார்த்தையை படித்தவுடன் எனக்கு என்னுடைய் கிராமம் தான் ஞாபகம் வந்தது.

நான் சென்னையில் வளர்ந்தாலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள என்னுடைய சொந்த கிராமத்துக்கு அடிக்கடி போயிருக்கிறேன். எங்கள் ஊரில், ஊருக்கு துணி துவைப்பவர்களின் குடும்பமும், ஊர் ஜனத்துக்கு முடி வெட்டுபவர்களின் குடும்பமும் மாத்திரம் ஊரைவிட்டு வெளியே கால்வாய் ஓரத்தில் குடியிருக்கிறார்கள். அவர்கள் நம்மைவிட குறைவானவர்கள் ஆதலால் அவர்களை ஊருக்கு வெளியே இருக்கவேண்டும் என்ற எண்ணம்தான் இதற்கு காரணம்!

இங்கு இஸ்ரவேல் மக்கள் ராகாபையும், அவள் குடும்பத்தையும் பாளயத்துக்கு வெளியே தங்க வைத்தனர் என்று பார்க்கிறோம்! அவள் நம்மைவிடக் குறைவு பட்டவள் என்ற எண்ணம்! ராகாப் எந்தவிதத்தில் குறைவு பட்டிருந்தாள்?

மோசே சீனாய் மலையிலிருந்து வர தாமதித்தவுடன் பொன் கன்றுக்குட்டியை வார்ப்பித்து அதை தேவன் என்று வழிபட்டார்களே அந்த இஸ்ரவேலரைவிட குறைவு பட்டவளா??????

அல்லது…..

கானானுக்குள் நுழைந்தவுடன் அங்கிருந்த மக்களின் உருவத்தைப் பார்த்து பயந்து நம்மால் கானானை சுதந்தரிக்க முடியாது என்று மோசேயிடம் வந்து அழுதார்களே அந்த இஸ்ரவேலரைவிடவா???????

மன்னியுங்கள்! அங்கிருந்த இஸ்ரவேலரில் அநேகரை விட அவள் கர்த்தரை அதிகமாகவே அறிந்திருந்தாள், அவரை உறுதியாக விசுவாசித்தாள்! வானத்தையும் பூமியையும் படைத்தவரையும், சிவந்த சமுத்திரத்தை பிளந்தவரையும், எமோரியரின் ராஜாவை முறியடித்தவரையும் அவள் அறிந்திருந்தது மட்டும் அல்ல அவருக்காக அவள் எரிகோவின் ராஜாவிடம் தன் உயிரையும் பணயம் வைத்து இஸ்ரவேலின் வேவுகாரரின் உயிரைக் காப்பாற்றினாள்!

அப்படிப்பட்டவள் இஸ்ரவேலின் பாளயத்துக்குள் சேர்க்கப்படவில்லை!

எத்தனைமுறை நீங்களும் நானும் இப்படிப்பட்ட காரியத்தை செய்கிறோம்? ஒருவேளை ராகாப் என்னுடைய வீட்டுக்குள் பிரவேசிக்க முயன்றிருந்தால் அவளை நான் ஏற்றுக்கொண்டிருந்திருப்பேனா? அதெப்படி முடியும்? அவள் நம்மில் ஒருத்தி இல்லை அல்லவா? நம்மைவிட குறைவு பட்டவள், என்று நாம் நினைக்கலாம்! ஆம்! ஆம்! அவள் நம்மில் ஒருத்தி இல்லை! நம்மைவிட அதிகமாய் அவளுடைய பரம பிதாவின் சாயலைத் தரித்தவள்!

நாம் ஒருவரையொருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர், நல்லவர் கெட்டவர் என்று நியாயம் தீர்த்துக்கொண்டிருந்தால் நமக்கு அவர்களை நேசிக்க நேரமிருக்காது!  என்று அன்னை தெரேசா கூறியிருக்கிறார்.

நாம் கர்த்தருடைய அன்பையும் ஆசீர்வாதத்தையும்  நம்மிடம் தேக்கி வைக்கும் நீர்த்தேக்கம் போன்றவர்களாய் இருக்கக்கூடாது! கர்த்தருடைய அன்பை மற்றவர்கள் பெற்று அனுபவிக்க உதவும் ஆசீர்வாதத்தின் கால்வாய்களாக இருக்கவேண்டும்!

 

நேசிக்கக்கூடாத அவலநிலையில் வாழ்ந்து கொண்டிருந்த என்னை நீர் நேசித்தீர் ஐயா!

நீர் என்னை நேசித்தவிதமாய் நான் மற்றவர்களை நேசிக்க எனக்குள் உம் நேசத்தை தாரும் ஐயா!

 

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

மலர் 6 இதழ்: 421 ஆளுகை செய்பவரை விசுவாசித்த ராகாப்!

  எபி:11:31 “விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.”

நாம் ராகாபுடைய வாழ்க்கையிலிருந்து, நம்முடைய வாழ்வின் அஸ்திபாரக் கற்களைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறொம்! அஸ்திபாரத்திற்கு விசுவாசம் என்னும் ஆரம்பம் ஒரு அஸ்திபாரக் கல் என்றால்,  விசுவாசத்தின் மூலம் கர்த்தரைப் பற்றிய வெளிப்படுத்துதலை பெற்றுக்கொள்ளுதல் அதற்கு தேவையான இன்னொரு கல் என்றும், பாதுகாக்கப் படுதல் நம்முடைய வாழ்வின் அஸ்திபாரத்துக்கு தேவையான மற்றொரு கல் என்றும் பார்த்தோம். அஸ்திபாரக் கற்களில், அடுத்த கல் உலகத்தை மறுதலித்தல் என்று நேற்று பார்த்தோம். இன்று அவளுடைய விசுவாச வாழ்க்கையின் அஸ்திபாரத்துக்கு நம்பிக்கை என்பது அடுத்த கல் என்று பார்க்கிறோம்!

 ராகாப் இஸ்ரவேலின் கர்த்தரைப் பற்றிக் கேள்விப்பட்டாள். அவர் சிவந்த சமுத்திரத்தை இரண்டாய் பிளந்ததையும், தம் மக்களை வழிநடத்தியதையும், பார்வோனின் சேனையை கடலில் மூழ்கப்பண்ணினதையும், இஸ்ரவேலை வனாந்தரத்தில் மன்னா மூலம் போஷித்ததையும், அவர்கள் எமோரியரின் சேனையை முறியடித்ததையும் கேள்விப்பட்டிருந்தாள். இப்பொழுது இஸ்ரவேலின் வேவுகாரர் இருவரும் எரிகோவுக்குள் வந்ததும், கர்த்தர் அவர்களுக்கு தேசத்தைக் கொடுத்தாரென்ற பயம் வந்து விட்டது. சந்தேகமில்லாமல் அவள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே உண்மையான தேவன் என்று விசுவாசித்தாள்.

ஆனால் நம்மில் பலரைப் போல அவள் உள்ளத்தில் சிறு எண்ணம்! எப்படி இவர்களை நம்புவது?

என்னுடைய தோட்டத்தில் ஒருசெடியைப் பார்த்தேன். அது வேர்க்கடலை செடி போலவே இருந்தது! ஆனாலும் சந்தேகம்! ஒவ்வொரு நாளும் அதைப் பார்ப்பேன், அது கடலையா அல்லது காட்டு செடியா? என்று! பல நாட்கள் பராமரித்துவிட்டு கடைசியில் அது காட்டு செடியாக இருந்தால் என்ன செய்வது? இதே செடி என்னால் விதைக்கப்பட்டு முளைத்திருந்தால் எனக்கு பிரச்சனையே இருந்திருக்காது! சந்தோஷமாக அதன் வளர்ச்சியைப் பார்த்துக்கொண்டு அது பூமிக்கு அடியிலே என் கண் காணாத இடத்திலே எனக்காக கனி கொடுக்கிறது என்று பொறுமையோடு இருந்திருப்பேன் அல்லவா?

அப்படித்தான் ராகாபின் உள்ளமும் எண்ணியது! இந்த வேவுகாரர் கடலைச் செடியா? அல்லது காட்டுச் செடியா? எப்படி நம்புவது!

ஒன்றும் புரியாமல் ராகாப் அவர்களைப்பார்த்து ”உங்கள் கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர்,.. என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்வோம் என்று கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக் கொடுங்கள்” என்கிறாள். (யோசு: 2:11,12) இதை வாசிக்கும்போது ராகாப் வேவுகாரரை அல்ல, அவள் கர்த்தரை அறிந்ததால் அவரையே திடமாய் நம்பினாள் என்ற உண்மை எனக்கு தெளிவாகப் புரிந்தது. அவளுடைய விசுவாச வாழ்க்கையின் அஸ்திபாரம், வானத்தையும், பூமியையும் ஆளும் தேவனாகிய கர்த்தரே தன் வாழ்வையும் ஆளுகை செய்பவர் என்ற நம்பிக்கைதான்!

இன்று நம்முடைய வாழ்க்கையை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? எத்தனையோ காரியங்கள் நம்முடைய கட்டுப்பாட்டை மீறி நடக்கின்றன! நாம் நினைப்பதெல்லாம் நடப்பதேயில்லை! ஆனால் நம் வாழ்க்கை நம்முடைய தேவனாகிய கர்த்தரின் கரத்தில், அவருடைய உள்ளங்கைகளில் உள்ளது என்பதை நாம் உறுதியாக நம்பும்போது நாம் எதற்கும் கலங்க வேண்டிய அவசியமில்லை! அவரே நம்மை ஆளுபவர்!

என் மனமே ஏன் எனக்குள் தியங்குகிறாய்? ஏன் எனக்குள் கலங்குகிறாய்? ஏன் இந்த தவிப்பு? ஏன் இந்த பயம்? இருளைப்போக்க வரும் சூரியனைப் போல கர்த்தர் உன்பக்கம் இருக்கிறார்! இயேசுவுக்கு அன்பான சீஷனாகிய யோவான் அவருடைய மார்பில் சாய்ந்திருந்ததைப் போல அவர்மேல் சாய்ந்திருந்து வாழ்க்கை என்னும் பிரயாணத்தை தொடரு! உன்னுடய முழு பாரத்தையும் அவர்மேல் இரக்கிவிடு!

நீ அவர் கரத்தை பிடித்து நடக்க முயற்சிக்காதே! வழுவி விடுவாய்! அவர் உன் கரத்தை பிடித்து வழிநடத்த அனுமதி! கரம் பிடித்து நடத்தும் வேலையை அவர் செய்யட்டும்! அவரை முற்றிலும் நம்புவதை மாத்திரம் நீ செய்! உன்னை நிச்சயம் அக்கரை சேர்ப்பார்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

மலர் 6 இதழ்: 420 ராகாப் பெற்ற புதிய இணைப்பு!

 

எபி:11:31 விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.”

நான் என்னுடைய 13 ம் வயதில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால், பள்ளியிலும், கல்லூரியிலும் அநேக காரியங்களுக்கு மறுப்பு சொல்ல வேண்டியதிருந்தது. ஒரு கை மாறி மறு கைக்கு இரகசியமாய் மாற்றப்பட்ட கதை புத்தகங்களை மறுதலித்தது, கும்பலாய் டிக்கட் வாங்கி தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற நண்பர்களோடு போக மறுதலித்தது, சிற்றின்பமான காரியங்களை பேசி சிரித்து நேரம் கழிப்பது,  இப்படி பல காரியங்களில் நான் தனிமையாக நின்றேன். நான் வகுப்புக்கு செல்லும்போது எல்லோருடைய கண்களும் என்மேல் இருப்பதை உணர்வேன். அநேக வருடங்கள் கழிந்து போனாலும் ஒன்று மட்டும் தெளிவாக ஞாபகத்தில் உள்ளது. எவ்வளவுதூரம் நான் இப்படிப்பட்ட காரியங்களில் பங்கு பெறுவதை வெறுத்தேனோ, அவ்வளவுதூரம் நான் தனிமையாக, மற்றவர்கள் களிகூறும் சிற்றின்ப வட்டத்துக்கு வெளியே நின்றதையும் வெறுத்தேன். என்றாவது ஒருநாள் தவறி அந்த வட்டத்துக்குள் போய்விடுவோமோ என்ற பயம் கூட இருந்தது!

உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா? நீங்கள் வேலை செய்யும் இடத்திலோ, அல்லது உங்கள் குடும்பத்திலோ வட்டத்துக்கு வெளியே தனிமையாக நிற்கிரீர்களா? எல்லோருடைய பார்வையும் உங்களை துரத்துகிறதா?

ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் மாற ஆசைப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் போன நாளிலிருந்து, நாம் ஒவ்வொருவரும் நன்மை தீமை அறியும் கனியை அவர்கள் புசித்தற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்!

நாம் ராகாபுடைய வாழ்க்கையிலிருந்து, நம்முடைய வாழ்வின் அஸ்திபாரக் கற்களைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறொம்! அஸ்திபாரத்திற்கு விசுவாசம் என்னும் ஆரம்பம் ஒரு அஸ்திபாரக் கல் என்றால்,  விசுவாசத்தின் மூலம் கர்த்தரைப் பற்றிய வெளிப்படுத்துதலை பெற்றுக்கொள்ளுதல் அதற்கு தேவையான இன்னொரு கல் என்றும், பாதுகாக்கப் படுதல் நம்முடைய வாழ்வின் அஸ்திபாரத்துக்கு தேவையான மற்றொரு கல் என்றும் பார்த்தோம். கர்த்தர் ராகாபை ஒரு நல்ல தகப்பனாக, தம்முடைய செட்டைகளின்கீழே பாதுகாத்தார்.

இன்று நாம் காண்கிற அஸ்திபாரக் கற்களில், அடுத்த கல் மறுதலித்தல் என்பதே.

உண்மையில் சொல்லப்போனால் நான் இதை எழுதும்போது ராகாபுடைய வாழ்க்கையை பூதக் கண்ணாடிப் போட்டு பார்த்தேன். வேசி என்று அழைக்கப்பட்ட அவள் கீழ்ப்படியாதவர்களோடே சேதமாகாமல் இருக்க என்ன செய்திருப்பாள்? எவற்றை மறுதலித்திருப்பாள்? சிற்றின்பத்தையா அலங்கத்தின் மேல் வாழ்ந்த வாழ்க்கையையா? எப்படி அவள் எபிரேயர் 11 ம் அதிகாரத்தில் விசுவாசத்தின் கதாநாயகர்களின் பட்டியலில் இடம் பிடித்தாள்?

விசுவாச வாழ்க்கையில் நிலைத்திருக்க நாம் எவற்றை மறுதலிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம்? சிற்றின்பமாய் இருக்கலாம்! ஆனால் அதைவிட மிக மிக முக்கியமான ஒன்று உள்ளது!

ராகாப் விசுவாசித்தபோது, கர்த்தருடைய வெளிப்படுத்துதலை பெற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது, கர்த்தரால் பாதுகாக்கப்பட்டபோது, அவள் ஒரு புதிய இராஜ்யத்தின் பிள்ளையானாள்! இனி எரிகோவின் அதிகாரத்துக்கு கீழே அவள் இல்லை! அவளுடைய விசுவாசம் அவளை ஒரு கர்த்தருடைய அதிகாரத்துக்கு கீழே கொண்டு வந்தது.

ஒரு மின்சாரக் கருவி, எந்த பிணைப்பில் பொறுத்தப்பட்டுள்ளதோ அந்த இடத்திலிருந்து மின்சாரத்தை வாங்கி இயங்குவது போல,  அவள் பழைய வாழ்க்கையான எரிகோ இராஜ்யத்தின் பிணைப்பிலிருந்து தன்னை எடுத்து புதிய வாழ்க்கையான கர்த்தரின் இராஜ்யத்தில் பிணைத்து விட்டாள். இப்பொழுது அவள் இயங்கும் சக்தி அவளுக்கு புதிய பிணைப்பான கர்த்தரிடமிருந்து வந்தது!

மறுபடியும் கேட்கிறேன்! ராகாபைப் போல நீங்கள் வேலை செய்யும் இடத்திலோ, அல்லது உங்கள் குடும்பத்திலோ, வட்டத்துக்கு வெளியே தனிமையாக நிற்கிரீர்களா? எல்லோரும் தெரிந்து கொள்ளும் பாதையை நீங்கள் மறுதலிப்பதால் எல்லோருடைய பார்வையும் உங்களை துரத்துகிறதா? தவறி அவர்களுடைய வட்டத்துக்குள்ளேயே போய்விடுவோமோ என்ற பயம் உள்ளதா? ராகாபைப் பார்!

 ராகாபைப் போல அழிந்து போகும் எரிகோவை மறுதலித்து விட்டு, உன்னை இஸ்ரவேலின் கர்த்தரோடு பிணைத்துக் கொள்! ராகாபுக்கு தனியே நிற்கும் வல்லமையை கொடுத்த கர்த்தர் ஒவ்வொரு நாளும் உனக்கும் வல்லமையை கொடுப்பார்!

நீ தீமையை மறுதலிக்காவிட்டால் நன்மையை நேசிக்க முடியாது!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

 

மலர் 6 இதழ்: 419 பதப்படுத்தப் பட்ட ராகாப்!

எபி:11:31 விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.”

 யோசுவா:24:17 ”..நாம் நடந்த எல்லா வழிகளிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் தாமே.”

என்னுடைய பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது வெளியில் எந்த விதமான பழ ரசமும் வாங்கமாட்டேன். வீட்டிலேயே பழங்களை வாங்கி அதை ஜூஸ் போட்டு வைப்பேன். அதில் எனக்கு மிகவும் பிடித்தது கருப்பு திராட்சை கிரஷ் பண்ணுவது! கடினமான வேலைதான் ஆனாலும் செய்யும்போது ஆர்வமாக இருக்கும். அது பாட்டில்களை கழுவி ஸ்டெரிலைஸ் பண்ணுவதில் ஆரம்பிக்கும். பின்னர் பழங்களை கழுவி, ஒரு அகல பாத்திரத்தில் போட்டு சற்று வேகவிட்டு, அடுப்பின்மீது இருக்கும்போதே அதை மத்தால் கடைந்து சாறு எடுத்து, அந்த சாறு அளவுக்கு சர்க்கரை எடுத்து, பாகு காய்த்து,. கிரிமிகள் அணுகாமல் பாதுகாக்க சிட்ரிக் ஆக்ஸிட், சோடியம் பென்சோனேட் போட்டு, கலர் சேர்த்து…… அப்பப்பா! பெரிய வேலை! கடைசியாக சுத்திகரிக்கப்பட்ட பாட்டில்களில் ஊற்றி, காற்று போகாமல் சீல் போட்டு இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்! இப்படியாகத்தான் பழசாறு சேதமடையாமல் பதப்படுத்தப்படும்!.

இங்கு நாம் வாசிக்கும் வசனத்தில் ராகாப் சேதமடையாமல் பாதுகாக்கப்பட்டாள் என்று பார்க்கிறோம்.

கானானிய வேசியான ராகாப் தான் இஸ்ரவேலின் தேவனைப்பற்றி கேள்விப்பட்டவைகள் மூலமாக காணப்படாத தேவனை விசுவாசித்து, இஸ்ரவேலின் வேவுகாரர் தன்னிடம் வந்தபோது அவரைத் தொடர்ந்து விசுவாசித்ததால், அவள் தேவனாகிய கர்த்தராலே சேதமாகாமல் பாதுகாக்கப்பட்டாள்.

 நம்முடைய வாழ்வின் அஸ்திபாரத்திற்கு விசுவாசம் என்னும் ஆரம்பம் ஒரு அஸ்திபாரக் கல் என்றால், தொடர்ச்சியான விசுவாசம் அதற்கு தேவையான இன்னொரு கல் என்று நாம் நேற்று பார்த்தோம். சேதமடையாமல் பாதுகாக்கப் படுவது நம்முடைய வாழ்வின் அஸ்திபாரத்துக்கு தேவையான இன்னொரு கல்! கர்த்தர் ராகாபை ஒரு நல்ல தகப்பனைப் போல சேதமடையாமல் தம்முடைய செட்டைகளின்கீழே பாதுகாத்தார்!

ராகாப் சேதமடையாமல் பாதுகாக்கப்பட்டாள் என்று கூறப்பட்டுள்ளதே தவிர, அதற்குள் அவள் எத்தனை முறை அக்கினியில் வேக வேண்டியிருந்தது என்று நமக்குத் தெரியாது! நம்மை நாமே காத்துக்கொள்ள முயற்சி செய்வோமானால் ஒருவேளை தவறிவிடலாம்! கர்த்தரை சார்ந்து, அவரை விசுவாசித்து, அவரிடம் நம்மை ஒப்படைத்து வாழ்வோமானால் அவர் நம்மை சேதமின்றி காப்பார்!

நாமும் எத்தனை முறை அக்கினி போன்ற அனுபவங்களில்  கடந்து செல்கிறோம்!  சரியான சமயத்தில் கர்த்தரின் அன்பின் கரம் ராகாபைக் காத்தது போல நம்மையும் பாதுகாக்கும்! நம்முடைய வாழ்க்கையில் சோதனையின் உச்சிக்குத் தள்ளப்படும்போது பயப்படாதே! ராகாப் மாத்திரம் அல்ல, நீங்களும் நானும் கர்த்தருக்கு விசேஷமானவர்கள். இந்த உலகத்திலேயே நீ மாத்திரம்தான் அவருடைய பிள்ளை போல உன்னை நேசிப்பார்! பாதுகாப்பார்!

 இஸ்ரவேல் மக்கள் நடந்த எல்லா வழிகளிலும், கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் அவர்களைக் காப்பற்றின நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மோடும்கூட இருப்பார்! நம்மையும் எந்த சேதமில்லாமல் பாதுகாப்பார்!

 

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

மலர் 6 இதழ்: 418 காணப்படாதவைகளை விசுவாசித்த ராகாப்!

 

“விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு , கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.” (எபி:11:31)

அந்தக்காலத்தில் டெலிவிஷன் வந்த புதிதில் நாம் அதற்கு அன்டெனா பொருத்த வேண்டியதிருந்தது அல்லவா? எங்களுடைய முதல் கருப்பு வெள்ளை டிவி என்னால் மறக்கவே முடியாத ஒன்று! சில நேரங்களில் காற்று பலமாக வீசினால் அன்டெனா ஒருபக்கம் திரும்பிவிடும், நமக்கு படம் சரியாக வராது. அப்படிப்பட்ட நேரங்களில் எங்கள் வீட்டில், எங்களில் ஒருவர் மாடி மேலே ஏறி அந்த அன்டெனாவை திருப்புவோம், ஒருவர் கீழிருந்து சத்தமாக சொல்லவேண்டும் படம் வருகிறதா இல்லையா என்று. அப்படியும் இப்படியும் திருப்பி, கடைசியில் ஏதோ ஒரு திசையில் அது ஒளிக்கதிர்களை பிடித்து விடும். அப்புறம் தான் எங்களுக்கு நிம்மதியான பெருமூச்சு வரும்!

நாம் நம்முடைய விசுவாசம் என்னும் அஸ்திபாரத்துக்கு தேவையான முதல் கல்லை பார்த்தோம். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் மக்களை வழி நடத்திய விதத்தை எரிகோவின் மக்கள் எல்லோரும் கேள்விப்பட்டிருந்தாலும், ராகாப் தான் கேள்விப்பட்ட காரியங்களையும், தன்னிடம் வந்த மனிதரையும் அடையாளமாய் எடுத்துக்கொண்டு காணப்படாதவைகளை விசுவாசித்தாள் என்று பார்த்தோம்.

எத்தனையோமுறை நான் என் வாழ்க்கையைத் திரும்பிப்பார்க்கும்போது “நான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன், நான் தான் அவரைத் தேடினேன்” என்று தான் நினைப்பேன். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் என்னைத் தேடினார் என்ற எண்ணம் வந்ததே கிடையாது. நான் அவரை ஏற்றுக்கொண்டது உண்மைதான் ஆனால் எப்பொழுது? அவர் என்னுள் கிரியை செய்ததால் தானே!

கர்த்தரை விசுவாசிக்க நாம் முடிவு எடுப்பது நம் வீட்டில் அன்டெனா சரியான இடத்தில் சரியான திசையில் இருப்பது போலத்தான்! அப்பொழுதுதான் நாம் பரலோக தேவன் நம் வாழ்வில் கிரியை செய்து கொண்டிருப்பதை தெளிவாகப் பார்க்கமுடியும். அந்த அன்டெனா என்கிற விசுவாசம் தொடர்ந்து சரியான திசையில், உயரமான இடத்தில் இருக்கும்வரை, பரலோகத்தின் தேவன் நமக்குள் செய்யும் கிரியை என்கிற படம் நமக்குத் தொடர்ந்து தெளிவாகக் கிடைக்கும்.

ராகாப் கர்த்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள்! கடுகுவிதை போல விசுவாசம் அவளுக்குள் வந்தது!  இப்பொழுது முன்னும் பின்னும் தெரியாத வேவுகாரர் தன் வீட்டுக்குள் நுழைந்ததும் கர்த்தர் தன் வாழ்வில் கிரியை செய்வதை உணர்ந்தாள். சரியான திசையில் திருப்பபட்ட அன்டெனா போல அவள் வாழ்க்கையில் கர்த்தரைக் குறித்த படம் அவளுக்குத் தொடர்ந்து தெளிவாக தெரிய ஆரம்பித்தது.

நம்முடைய வாழ்வின் அஸ்திபாரத்திற்கு விசுவாசம் என்னும் ஆரம்பம் ஒரு அஸ்திபாரக் கல் என்றால், தொடர்ச்சியான விசுவாசம் அதற்கு தேவையான இன்னொரு கல்லாகும். இந்த தொடர்ச்சியான விசுவாசமே அன்டெனா போல நம்மை தேவனுடைய பிரசன்னத்தை தெளிவாகக் காணச்செய்யும்.

சிறு பிள்ளைகள் தன் தகப்பனுடைய கரத்திலிருந்து உணவை ஆவலுடன்வாங்கி உண்ணுவது போல நாம் ஒவ்வொரு நாளும் நம்முடைய பரலோகத் தகப்பனுடைய சமுகத்தில் காத்திருக்கவேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கை ஒருநாள் ஆரம்பமாகி மறைந்து விடுவதல்ல! ஒவ்வொரு நாளும் தொடர வேண்டும்.  நம் பரலோகத் தகப்பனாகிய தேவனாகிய கர்த்தரும் நம்மோடு பேச ஆவலோடு காத்திருக்கிறார்.

உன்னுடைய விசுவாசம் என்னும் அன்டெனா மூலம் தேவனுடைய பிரசன்னத்தை
உன்னால் தொடர்ந்து காண முடிகிறதா?

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 6 இதழ்: 417 ராகாபின் முதல் அஸ்திபாரக் கல்!

 

யோசு:2:11 “……உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர்.”

கடந்த சில வருடங்களுக்கு முன்பதாக, உலக பொருளாதார நிலைமையால் எங்கள் கம்பெனியின் ஏற்றுமதி மிகவும் குறைவுபட்டது. அநேக தொழிலாளர்கள் இருந்ததால் வேலையை நிறுத்தமுடியாமல் தொடர்ந்துவந்தோம். நாங்கள் தயாரித்த ஆடைகள் குவிய ஆரம்பித்தது. ஒரு வருடம் எப்படியோ சமாளித்து விட்டேன், அடுத்த வருடம்  என்னால் கம்பெனியில் வேலை செய்தவர்களின் ஊதியம், பராமரிப்பு இவற்றை சமாளிக்க முடியாமல் திணறினேன். என்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டது. 

ஒருநாள் டிவி போட்டபோது ஒரு ஊழியக்காரர், “ஒருவேளை நீங்கள் இன்று பலத்த தொழில் நஷ்டத்தில் இருக்கலாம்! போதுமான விசுவாசத்தோடு கேளுங்கள், இப்பொழுதே உங்கள் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.  தொடர்ந்து அவர் போதுமான விசுவாசத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த மாதம் ஊதியம் கொடுக்க எனக்குத் தேவையான இலட்சக்கணக்கான பணத்தை நினைத்துப் பார்த்தேன்! தலை சுத்தியது! கர்த்தரை எனக்காக கிரியை செய்ய வைக்கத் தேவையான  விசுவாசம் என்னிடத்தில் இல்லை போலும்! ஆண்டவரே விசுவாசமே இல்லாத உம்முடைய இந்த மகள்மேல் கிருபையாயிரும் என்று சொல்லிவிட்டு எழுந்து விட்டேன்.

என்னைப்போல உங்களில் சிலர் பலவிதமான கடினமான சோதனைகளில் போய்க் கொண்டிருக்கலாம்! ஒருவேளை உங்கள் விசுவாசம் நொறுங்கிப்போன நிலைக்குக் கூட இந்த சோதனைகள் உங்களை கொண்டு செல்லலாம்.

இன்னும் சில நாட்கள் நாம் தொடர்ந்து நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரத்துக்குத் தேவையான கற்களைப் பற்றி பார்க்கலாம்! இதற்கு ஆதாரமாக நாம் விசுவாச அதிகாரம் என்றழைக்கப்படும் எபிரேயர் 11 ம் அதிகாரத்தைப் பார்ப்போம். இந்த அதிகாரத்தில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, மோசே போன்ற விசுவாச கதாநாயகர்கள் பெயரே இடம் பெற்றிருக்கும் இடத்தில்,  இரண்டு பெண்கள் பெயரும் இடம்பெற்றுள்ளது! ஒன்று விசுவாசத்தின் தந்தையாகிய ஆபிரகாமின் மனைவி சாராளின் பெயர், மற்றொன்று நம்முடைய ராகாபின் பெயர்.

விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு , கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள். (எபி:11:31)

அதுமட்டுமல்ல இந்த அதிகாரத்தில் இடம் பெற்றிருப்பவர்கள் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனமாகிய இஸ்ரவேல் மக்கள். ராகாப் என்கிற கானானிய ஸ்திரியோ விசுவாசத்தின் மேல் அஸ்திபாரம் போட்டவள்.

ராகாப் போட்டிருந்த அஸ்திபாரத்தின் முதல் கல் என்ன என்று பார்ப்போம்! அவள் வேவுகாரரை நோக்கி யோசு 2: 2 ல், உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர் என்றாள்.

இதை ஒரு நிமிடம் என்னோடு சிந்தியுங்கள்! எரிகோவில் வாழ்ந்து வந்த அத்தனைபேரும்தானே கர்த்தர் இஸ்ரவேல் மக்களை வனாந்தரத்தில் வழிநடத்தி வருவதைப்பற்றி கேள்விப்பட்டிருந்தார்கள்!  ஆனால் ராகாப் மட்டுமே அவரை விசுவாசித்தாள்! அந்தக் கர்த்தரைப் பற்றி அவளுக்கு எந்த ஞானமும் இருந்திருக்க முடியாது, ஆனாலும் இஸ்ரவேலை வழிநடத்தும் கர்த்தர் மகா பெரியவர் என்று விசுவாசித்தாள்!

நம் எல்லோருடைய வாழ்விலும் ஏதாவது ஒரு சமயத்தில் நமக்குள் விசுவாசம் இருக்கிறதா அல்லது இல்லையா என்ற கேள்வி எழலாம்! அதனால் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கடுகு அளவு விசுவாசம் இருந்தால் கூட பெரிய காரியத்தை சாதிக்கலாம் என்றார்.  நல்லவேளை கிறிஸ்து இயேசு நம்மிடம் நம் தகுதிக்கு ஏற்ற விசுவாசம் வேண்டும் என்றோ அல்லது அவர் செய்கிற அற்புதத்தின் அளவுக்கு தக்கபடி நமக்கு ‘போதுமான’ விசுவாசம் வேண்டும் என்றோ கூறவில்லை.

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. (எபி:11:1)

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் பற்றி முற்றிலும் அறிந்து கொள்ளும் முன்னரே ராகாப் என்கிற வேசி, தான் கேள்விப்பட்டவைகளையும், தான் சந்தித்த மனிதரையும், பரத்திலிருந்து கொடுக்கப்பட்ட அடையாளமாக கொண்டு, காணப்படாதவைகளை விசுவாசித்தாள்.

உம்மை தரிசிக்கும் பரிசுத்தத்தை தாரும்!

உம் சத்தம் கேட்கும் தாழ்மையை தாரும்!

உம்மை சேவிக்கும் அன்பை தாரும்!

உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

 

மலர் 6 இதழ்: 416 ராகாப் காட்டிய இரக்கம்!

யோசுவா 2:12 ”இப்பொழுதும் நான் உங்களுக்கு தயவு செய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்வோம் என்று கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டு.”

சுனாமியால் சென்னையின் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவி செய்ய அடிக்கடி நாங்கள் நாகப்பட்டினம் சென்று வந்தோம். அந்த சமயத்தில் அநேக மசூதிகளும், தேவாலயங்களும், மக்களை தங்கவைத்து அடைக்கலம் கொடுத்தனர். கிறிஸ்தவர்கள் என்றோ முஸ்லிம்கள் என்றோ, இந்துக்கள் என்றோ எந்த பாகுபாடும் இன்றி ஒருவருக்கொருவர் உதவி செய்தனர். அப்படிப்பட்ட ஒரு சூழலை கடந்த டிசம்பர் மாதம் வெள்ளம் வந்த போதும் சென்னையில் நான் பார்க்க முடிந்தது! ஜாதி மத வேறுபாடால் ஒருவரையொருவர் வார்த்தைகளாலும், செயல்களாலும் கழுத்தை நெரிக்கும் இந்த சமுதாயம், ஆபத்து நேரிடும்போது வேற்றுமை நிழல் இல்லாமல் ஒன்று சேருகின்றனர்! ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்நியரால் ஆதரிக்கப்படுபவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்று பலமுறை யோசித்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் யோசுவாவால் எரிகோவை வேவு பார்க்கும்படி அனுப்பப்பட்ட வேவுகாரர் இருந்தனர். எரிகோவை வேவு பார்த்துவிட்டு ஆபத்து வருமுன் ஏதோ ஒரு வீட்டுக்குள் நுழைந்தனர்! அங்கே ‘உங்கள் தேவனை நான் அறிவேன்’ என்ற வாழ்த்துதலைக் கேட்டனர்!  ஒரு கானானிய ஸ்திரியிடம், ஒரு அந்நிய ஸ்திரியிடம், ஒரு புறஜாதி ஸ்திரியிடமிருந்து அந்த வார்த்தைகளைக் கேட்போம் என்று கனவு கூட காணவில்லை! அவள் இஸ்ரவேலின் கர்த்தரை அறிவேன் என்று கூறியதுமட்டுமல்லாமல், எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த அநேக இஸ்ரவேலரை விட அதிகமான நம்பிக்கையும் அவர்மேல் வைத்திருந்தாள்!

இப்பொழுது இந்த இரு வேவுகாரரும் அவளுடைய தயவிலும், அவளுடைய இரக்கத்திலும் இருக்க வேண்டியதிருக்கிறது! அவளுக்கு அவர்கள்மேல் உண்மையான இரக்கமும் தயவும் இருக்கிறதா என்று தெரியாமலே அவளை சார்ந்திருக்க வேண்டியதாயிருந்தது! அவர்கள் கால்களுக்கு அடியில் அவர்கள் நின்ற பூமி ஆடிக்கொண்டுதான் இருந்திருக்கும்!

நீ இரக்கமில்லாமல் பெரிய அற்புதங்களை செய்வதைவிட, இரக்கத்தோடு தவறு செய்தாலும் பரவாயில்லை என்று அன்னை தெரெசா அவர்கள் கூறியிருக்கிறார்.

கானானிய ஸ்திரியாகிய ராகாபுக்கும், இஸ்ரவேலின் இரண்டு வேவுகாரருக்கும் இடையே ஏற்பட்ட உறவிலிருந்து இந்த அற்புதமான பாடத்தைதான் நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. எத்தனையோ முறை நாம் நம்மை விட குறைவு பட்டவர்களைப் பார்த்தவுடன் அவர்களும் நம்மைப்போல இரத்தமும் சதையுமாய் உருவாகப்பட்டவர்கள் என்பதை மறந்து நம் முகத்தை திருப்பிக் கொள்கிறோம்?

ராகாப் “உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும், கீழே பூமியிலும் தேவனானவர், உங்கள் கர்த்தரை நான் அறிவேன், இப்பொழுதும் நான் உங்களுக்கு தயவு செய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்கு தயவு செய்வோம் என்று கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டு கொடுப்பீர்களா? (யோசு:2:9,11,12) என்று இஸ்ரவேலின் வேவுகாரரிடம் கேட்கிறதைப் பார்க்கிறோம்.

கானானிய  ஸ்திரியாகிய  ராகாப், இஸ்ரவேலின் வேவுகாரர் மீது காட்டிய இரக்கத்தையும், அதற்கு பதிலாக அவளுக்கு வாக்களிக்கப்பட்ட இரக்கத்தையும், பாதுகாப்பையும் பற்றி நாம் படிக்கும்போது இந்த உலகில் கர்த்தரால் உருவாக்கப்பட்ட அவருடைய பிள்ளைகளில் நலிந்தவர்களுக்கும், தேவையில் உள்ளவர்களுக்கும்,  இரக்கம் காட்டுவதே  நம்முடைய பரலோகத்தின் தேவனுக்கு நாம் காட்டும் அன்பும், மரியாதையும் ஆகும் என்பது புரிகிறது!

 இரக்கமும் அன்பும் காட்டுவதின் மூலம் ராகாபை போல் உண்மையாய் தேவனைத் தேடும் மக்களை கர்த்தருடைய அன்புக்குள் நம்மால் கொண்டு வர முடியும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!