Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ் : 402 – தலைமுறைக்கும் தொடரும் ஆசீர்வாதம்!

உபாகமம்: 28:4  உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.

 போன வருடம் என் மகனும் சில நண்பர்களும் சேர்ந்து நேப்பாள தேசத்தில் பூகம்பத்தால் வீடு இழந்தோருக்கு வீடு கட்ட உதவி செய்ய சென்றனர். அவர்கள் சில கிராமங்களை சென்று அடைய உயிரைப் பணயம் வைத்து தான் செல்ல வேண்டியிருந்தது!
 

எங்கள் மகன் இவ்வாறு கர்த்தருடைய ஊழியத்தில் உபயோகப்படுத்தப்படுவது எங்களுக்கு பரிபூரண சந்தோஷத்தைக் கொடுக்கும் ஒரு காரியம்.  இதுவே எங்கள் உள்ளத்தின் வாஞ்சையாகவும், வேண்டுதலாகவும் இருந்தது! உண்மையில் பார்க்கப்போனால் அவனுடைய தூண்டுதலாலும், உற்சாகத்தாலும்தான் இந்த ராஜாவின்மலர்கள் மலர ஆரம்பித்தது!

 
35 வருடங்களாக எங்களைத் தம்முடைய பரிசுத்த ஊழியத்தில் உபயோகப்படுத்திவரும் தேவன் இப்பொழுது எங்கள் பிள்ளைகளையும் உபயோகப்படுத்துகிறார்.

 

இதைத்தான் நான் இன்றைய வேதாகமப்பகுதியில் காண்கிறேன்! உன் கர்ப்பத்தின் கனியும்….. ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.

 

நாம் நேற்று பார்த்தவிதமாக, நாம் கர்த்தருடைய வார்த்தைகளை கவனமாகக் கேட்டு, அவருக்கு கீழ்ப்படிந்து நடப்போமானால், எந்த வேளையிலும், எந்த சூழ்நிலையிலும் நாம் அவரை ஆராதிக்கிறவர்களாகவும், அவருக்கு மகிமையையும் கனத்தையும் கொண்டு வருகிறவர்களாகவும் இருப்போம். கர்த்தருடைய பிரசன்னம் நம்மை சூழ்ந்திருக்கும்!

 

அதுமட்டுமல்ல,   கர்த்தருடைய பிரசன்னமானது கர்ப்பத்தின் கனியாகிய நம்முடைய பிள்ளைகளையும், நமக்கு சொந்தமான எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கும்!

பெற்றோராகிய நாம் நம் பிள்ளைகளுக்கு விட்டு செல்லும் ஆசீர்வாதம், பெரிய வீடும், சொத்து சுகங்களும், வங்கியில் ரொக்கத்தொகையும் அல்ல! அவர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை மகிமைப்படுத்துபவர்களாக வளர்ப்பதுதான்!

என்ன அற்புதம், நம்மோடு வாசம் செய்யும் நம் தேவாதி தேவன், நம் பிள்ளைகளோடும் இருப்பார்! அவர்களை வழுவாமல் காப்பார்!

 

இது சாத்தியமா? எத்தனையோ கர்த்தருடைய் பிள்ளைகளின் பிள்ளைகள் நேர்மையாக வாழ்வில்லையே, எத்தனையோ விசுவாசிகளின் குடும்பங்களில் அடுத்த தலைமுறையினர் பெற்றோரைப்போல இல்லையே என்று நீங்கள் கேட்கலாம்!!

உபாகமம்: 11: 19 – 20 ”நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும், உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின் மேல் அடையாளமாகக் கட்டி உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,

 

அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும்,  பேசுவீர்களாக.”

 

பிள்ளைகள் வளரும் பருவத்தில் நம் வாழ்க்கையை அதிகமாக கவனிக்கிறார்கள். நம்முடைய நடத்தையினாலும், வார்த்தைகளாலும் நாம் கர்த்தரைப் பற்றி போதிக்கவேண்டும்! நம்முடைய குடும்பங்களில் அநாவசியமான  எத்தனையோ காரியங்களை நாம் பிள்ளைகளோடு சேர்ந்து செய்கிறோம், பேசுகிறோம்! உலகப் பிரகாரமான கல்வியைக் கொடுக்கப் பாடு படுகிறோம். ஆனால் கர்த்தருடைய வார்த்தைகளைப் பற்றியும், கர்த்தர் செய்த நன்மைகளைப் பற்றியும் போதிக்க, பேச நேரம் உண்டா? அவர்களுடைய வாலிபப் பிராயத்தில் அவர்களுக்காக கண்ணீர்விட்டு ஜெபிக்க உங்களுக்கு நேரம் உண்டா?

 

’உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்’ என்பது அவருடைய வாக்குத்தத்தம். நம்முடைய பிள்ளைகளை ஆசீர்வதிப்பது கர்த்தருடைய கடமை! ஆனால் நம் பிள்ளைகளை கர்த்தரை மகிமைப்படுத்துபவர்களாக வளர்ப்பது நம் கடமை!

 

கர்த்தருடைய ஆசீர்வாதம் ஒரு தொடர் சங்கிலி! ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம் நம்மையும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும்! அதைப் பெற்றுக்கொள்ளத் தவறி விடாதே!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

Leave a comment