கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ்: 418 காணப்படாதவைகளை விசுவாசித்த ராகாப்!

 

“விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரை சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு , கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்.” (எபி:11:31)

அந்தக்காலத்தில் டெலிவிஷன் வந்த புதிதில் நாம் அதற்கு அன்டெனா பொருத்த வேண்டியதிருந்தது அல்லவா? எங்களுடைய முதல் கருப்பு வெள்ளை டிவி என்னால் மறக்கவே முடியாத ஒன்று! சில நேரங்களில் காற்று பலமாக வீசினால் அன்டெனா ஒருபக்கம் திரும்பிவிடும், நமக்கு படம் சரியாக வராது. அப்படிப்பட்ட நேரங்களில் எங்கள் வீட்டில், எங்களில் ஒருவர் மாடி மேலே ஏறி அந்த அன்டெனாவை திருப்புவோம், ஒருவர் கீழிருந்து சத்தமாக சொல்லவேண்டும் படம் வருகிறதா இல்லையா என்று. அப்படியும் இப்படியும் திருப்பி, கடைசியில் ஏதோ ஒரு திசையில் அது ஒளிக்கதிர்களை பிடித்து விடும். அப்புறம் தான் எங்களுக்கு நிம்மதியான பெருமூச்சு வரும்!

நாம் நம்முடைய விசுவாசம் என்னும் அஸ்திபாரத்துக்கு தேவையான முதல் கல்லை பார்த்தோம். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் மக்களை வழி நடத்திய விதத்தை எரிகோவின் மக்கள் எல்லோரும் கேள்விப்பட்டிருந்தாலும், ராகாப் தான் கேள்விப்பட்ட காரியங்களையும், தன்னிடம் வந்த மனிதரையும் அடையாளமாய் எடுத்துக்கொண்டு காணப்படாதவைகளை விசுவாசித்தாள் என்று பார்த்தோம்.

எத்தனையோமுறை நான் என் வாழ்க்கையைத் திரும்பிப்பார்க்கும்போது “நான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன், நான் தான் அவரைத் தேடினேன்” என்று தான் நினைப்பேன். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் என்னைத் தேடினார் என்ற எண்ணம் வந்ததே கிடையாது. நான் அவரை ஏற்றுக்கொண்டது உண்மைதான் ஆனால் எப்பொழுது? அவர் என்னுள் கிரியை செய்ததால் தானே!

கர்த்தரை விசுவாசிக்க நாம் முடிவு எடுப்பது நம் வீட்டில் அன்டெனா சரியான இடத்தில் சரியான திசையில் இருப்பது போலத்தான்! அப்பொழுதுதான் நாம் பரலோக தேவன் நம் வாழ்வில் கிரியை செய்து கொண்டிருப்பதை தெளிவாகப் பார்க்கமுடியும். அந்த அன்டெனா என்கிற விசுவாசம் தொடர்ந்து சரியான திசையில், உயரமான இடத்தில் இருக்கும்வரை, பரலோகத்தின் தேவன் நமக்குள் செய்யும் கிரியை என்கிற படம் நமக்குத் தொடர்ந்து தெளிவாகக் கிடைக்கும்.

ராகாப் கர்த்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள்! கடுகுவிதை போல விசுவாசம் அவளுக்குள் வந்தது!  இப்பொழுது முன்னும் பின்னும் தெரியாத வேவுகாரர் தன் வீட்டுக்குள் நுழைந்ததும் கர்த்தர் தன் வாழ்வில் கிரியை செய்வதை உணர்ந்தாள். சரியான திசையில் திருப்பபட்ட அன்டெனா போல அவள் வாழ்க்கையில் கர்த்தரைக் குறித்த படம் அவளுக்குத் தொடர்ந்து தெளிவாக தெரிய ஆரம்பித்தது.

நம்முடைய வாழ்வின் அஸ்திபாரத்திற்கு விசுவாசம் என்னும் ஆரம்பம் ஒரு அஸ்திபாரக் கல் என்றால், தொடர்ச்சியான விசுவாசம் அதற்கு தேவையான இன்னொரு கல்லாகும். இந்த தொடர்ச்சியான விசுவாசமே அன்டெனா போல நம்மை தேவனுடைய பிரசன்னத்தை தெளிவாகக் காணச்செய்யும்.

சிறு பிள்ளைகள் தன் தகப்பனுடைய கரத்திலிருந்து உணவை ஆவலுடன்வாங்கி உண்ணுவது போல நாம் ஒவ்வொரு நாளும் நம்முடைய பரலோகத் தகப்பனுடைய சமுகத்தில் காத்திருக்கவேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கை ஒருநாள் ஆரம்பமாகி மறைந்து விடுவதல்ல! ஒவ்வொரு நாளும் தொடர வேண்டும்.  நம் பரலோகத் தகப்பனாகிய தேவனாகிய கர்த்தரும் நம்மோடு பேச ஆவலோடு காத்திருக்கிறார்.

உன்னுடைய விசுவாசம் என்னும் அன்டெனா மூலம் தேவனுடைய பிரசன்னத்தை
உன்னால் தொடர்ந்து காண முடிகிறதா?

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment