Archive | January 2017

மலர் 7 இதழ்: 550 ஒரு சந்தோஷம் நூறு கவலைகளை மாற்றிவிடும்!

ரூத்: 2: 10   “அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி; நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்”.

ஒருதடவை நாங்கள் நேப்பால் நாட்டுக்கு காரில் பிரயாணமாய் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தோம். பயங்கர சோர்வுடன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று பல்லாயிரக்கணக்கானோர் எங்களைப் பார்த்து புன்னகைப் பூப்பது போன்றத் தோற்றத்துடன் கண்களில் பட்டது ஒரு சூரியகாந்தி மலர்த் தோட்டம். அவற்றின் நிறம் அந்த இடத்துக்கே ஒரு வெளிச்சத்தைக் கொடுத்தது. என்ன ஆச்சரியம்! ஒரு நிமிடத்தில் எங்கள் களைப்பை மறந்து விட்டு எங்களை நோக்கி புன்னகை பூத்த அந்த மலர்தோட்டத்துக்குள் சென்று நாங்களும் புன்னகையுடன் போட்டோ எடுக்க ஆரம்பித்தோம்.

சிலர் இந்த சூரிய காந்தி மலரைப் போல மற்றவர்களின் வாழ்வில் புன்னகையை வர வைக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை  நாம் சந்திக்கும்போது நம்மை சுற்றியுள்ள எல்லாமே ச்ந்தோஷமாக மாறிவிடும்.

நான் ரூத்தைப் பற்றிப் படிக்கும்போது அவள் தன்னுடைய சந்தோஷமான ஆவியால் தன்னை சுற்றியுள்ளவர்களை உற்சாகப்படுத்திய ஒரு சூரியகாந்தி மலர் போலத்தான் எனக்குப் பட்டாள். நான் ஏன் அப்படி நினைக்கிறேன் என்பதற்கு மூன்று விளக்கங்களை இங்கே கொடுக்கிறேன்.

முதலாவதாக அவள் தன்னுடைய சூழ்நிலையைப் பற்றிய எந்த குறை சொல்லுதலும், முணுமுணுப்பும் இல்லாமல் கர்த்தர் வழிநடத்திய விதமாகத் தன் வாழ்க்கையை நடத்துவதைப் பார்க்கிறோம். இதுவே அவளுடைய உற்சாகமான ஆவிக்குக் காரணம்.  தான் ஒரு ஏழை விதவை, தன் குடும்பத்தாரை மோவபில் விட்டு வந்திருக்கிறோம் என்ற குறைவே அவளுக்குத் தென்படவில்லை. தனக்கு இரக்கம் காட்டிய போவாசுக்கு நன்றி செலுத்தியவளாய் அவனுடைய வயலிலே சந்தோஷமாக உலாவி வந்தாள்.

இரண்டாவதாக ரூத் தன்னைப் பற்றி அதிகமாக நினைத்ததாகத் தெரியவில்லை. அவள் எண்ணமெல்லாம் அவள் மாமியார் மேல் இருந்தது. நகோமியை சந்தோஷமாக வைத்துக் கொள்வதே அவளுடைய நோக்கமாக இருந்தது. சுநலமற்ற இந்த குணமே அவளுடைய உற்சாகமான ஆவிக்கு காரணம்.

மூன்றாவதாக அவள் கண்களை உலக சம்பத்துகள் மேலும், இளமையான வாலிபர் மேலும் செலுத்தவில்லை. அவள் உலகப்பிரகாரமான செல்வாக்கை நாடவில்லை. ரூத்திடம் காணப்பட்ட இந்த குணத்தை போவாஸ் கூட விரும்பினான் என்று பார்க்கிறோம். இருதயத்தின் அழகே அவளுடைய உற்சாகத்தின் ஆவிக்குக் காரணம்!

ரூத்தைப் போல ஒரு சூரியகாந்தி மலர் போல புன்னகையுடன் வாழ்ந்து அநேகரின் வாழ்க்கையை உற்சாகப் படுத்தும் பலர் இந்த உலகத்துக்கு இன்று தேவை. அவளுடைய உற்சாகத்தின் ஆவியால் அவள் நம் மனதில் இன்று நிரந்தர இடத்தைப் பிடித்து விட்டாள்.

உற்சாகத்துக்குள் ஒரு நிரந்தர சந்தோஷம் நிறைந்திருக்கிறது!  உற்சாகம் மற்றவர்களை சந்தோஷப் படுத்தும்!

ஒரு சந்தோஷம் நூறு கவலைகளை மாற்றிவிடும் என்பது ஒரு பழமொழி!

ரூத்தைப் போல உனக்கு கிடைக்காத ஒன்றைப் பார்த்து அல்ல, உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறவைகளைப் பார்த்து சந்தோஷப்படு!

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். (பிலிப்: 4:4)

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 549 கடைசிவரை தரித்திரு!

ரூத்: 2: 21 “பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்; அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும் நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள்.”

நாம் ரூத்தின் குணநலன்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம்.

இஸ்ரவேல் மக்களை பாவத்தில் விழப்பண்ணிய மோவாபிய பெண்களின் மரபில் வந்த இவள், மோவாபைத் துறந்து, தேவனாகிய கர்த்தரை விசுவாசித்து, அவருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததாள் என்று பார்த்தோம். விசுவாசம்  மட்டுமல்லாமல் ,  தைரியத்தோடு  அவள் எடுத்த முடிவால் , கர்த்தர் அவள் வாழ்க்கையில் பெரியத் திட்டங்களை நிறைவேற்றினார்.

ரூத்தின் வாழ்க்கையில் நான் கண்ட இன்னொரு அருமையான குணநலன் என்னவெனில், எடுத்த முடிவில் உறுதியாகத் தரித்திருந்தது. ரூத்தைப் போல வயலுக்கு வருபவர்கள் மறுநாள் வேறு வயலைத் தேடிப் போவது வழக்கம். அதனால் தான் போவாஸ் ரூத்திடம், இந்த அறுப்பெல்லாம் அறுத்துத்தீருமட்டும் இங்கேயே வா என்று கூறினான். ரூத் அறுவடை முடியுமட்டும் வேறு யாருடைய வயலையும் தேடாமல் போவாஸின் வயலில் கோதுமைக் கதிரைப் பொறுக்குவதில் உறுதியாக இருந்தாள்.

போவாஸின் வயலில் அவளுக்குத் தேவையான அனைத்தும் இருந்தன. அவள் வேறெங்கும் போக வேண்டிய அவசியமே இல்லை. நம்முடைய இயேசு கிறிஸ்துவிடம் நமக்குத் தேவையான அனைத்தும் உள்ளன. நாம் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமே இல்லை!

என்னுடைய கிறிஸ்தவ ஊழியப் பாதையில், உணர்ச்சிவசப்பட்டு விசுவாசத்தில் காலெடுத்து வைத்த அநேகர் பின்வாங்கிப் போனதைப் பார்த்திருக்கிறேன்.  இயேசுவுக்காக வாழ்வேன் என்ற உறுதியான மனப்பான்மை அநேகருக்கு வருவதில்லை. காற்றடிக்கும் பக்கமெல்லாம் புல்லைப்போல சாய்பவர்கள் உண்டு!  எல்லா கூட்டங்களிலும் கையைத் தூக்கி ஒப்புக் கொடுப்பவர்கள் உண்டு! ரூத் அங்கும் இங்கும் அலையவே இல்லை. அறுவடை முடியுமட்டும் போவாஸின் வயலிலே உறுதியாகத் தரித்திருந்து தன்னுடைய கடமைகளை செய்தாள்.

என்னில் தம்முடைய நற்கிரியையை ஆரம்பித்தவர் கடைசி பரியந்தம் என்னை நடத்துவார் என்ற நம்பிக்கையுடன், ரூத்தைப் போல நானும் அறுவடையின் கடைசிவரை அவருக்கு உண்மையாக , அங்கும் இங்கும் அலையாமல், சிந்தனைகளை சிதறவிடாமல், கிறிஸ்துவுக்காக வாழவேண்டும் என்ற உறுதி நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

நம்முடைய அன்பர் கிறிஸ்துவின் வயலில் சந்தோஷம் உண்டு! சமாதானம் உண்டு! தாகத்துக்கு தண்ணீர் உண்டு! ஜீவ அப்பம் உண்டு! அவரை விட்டு நீ எங்கும் செல்ல வேண்டிய அவசியமே இல்லை!

முன்னோக்கி செல்வேன் செல்வேன், உலகைத் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்று ரூத்தைப் போல உறுதியுடன் செல்! வெற்றி உன் பக்கம்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 548 மனம் ஏங்கும் எதிர்காலம்!

ரூத்: 1 : 16   “அதற்கு ரூத் : நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து,என்னோடே பேச வேண்டாம்;”

தாவீதின் கதையைக்கேளுங்க!

பிள்ளைகளே தாவீதின் கதையைக் கேளுங்க!

இளைஞன் தாவீது, வீரன் தாவீது, இஸ்ரவேலின் தேவனுக்கு பயந்த தாவீது

அந்த தாவீதின் கதையைக் கேளுங்க!

இந்தப் பாடல் என் காதுகளில் தொனிக்கும் போதெல்லாம், சின்னத் தாவீது எப்படி எட்டடி உயரமுள்ள பெலிஸ்த வீரனின் முன்னால் கூழாங்கற்களோடு தைரியமாக யுத்தத்துக்கு சென்றானோ, அந்தக் காட்சி என்  மனதினுள் படமாக வரும்! தாவீது மட்டும் அல்ல,  நாம் படித்துக் கொண்டிருக்கும் ரூத்தும் கூட மிகவும் தைரியசாலிதான்!

ரூத் ஒரு தைரியசாலி என்று நான் கூறுவதற்கு, அவள்  பயமில்லாத அல்லது வேதனையில்லாத பெண் என்று அர்த்தம் இல்லை. நான் ஒருவேளை ரூத்தைப் போல என்னுடைய நாட்டையும், வீட்டையும் விட்டு, ஒரு புதிய தேசத்துக்கு செல்வேனானால் என் மனது வேதனையால் துடித்துப் போகும். ரூத் மோவாபை விட்டு புறப்பட்டபோது, அவள் மனதிலிருந்த பயத்தையும், வேதனையையும் ஊடுருவி அவள் கண்கள், அவள் மனது ஏங்கிய எதிர்காலத்தை நோக்கின! அவள் மனம் தன் வாழ்க்கையில் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றவே ஏங்கிற்று.

நம்முடைய வாழ்வில் கூட  தேவனாகியக் கர்த்தர் நாம் ஒவ்வொருவரும் தைரியமாக ரூத்தைப் போல துணிச்சலுடன் அவர் வழிநடத்தும் பாதையில் அவரை விசுவாசித்து அடி எடுத்து வைக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் நமக்காக வைத்திருக்கும் எதிர்காலம் என்ன என்று நமக்கு புலப்படாதிருக்கும்போது,  நாம் செல்லும் வழி எது என்று நமக்கு புரியாதிருக்கும்போது, துணிச்சலுடன் அவரைப் பின்பற்ற வேண்டுமென்று விரும்புகிறார். ரூத் மோவாபை விட்டுப் புறப்பட்டபோது அவள் இஸ்ரவேலின் மேசியாவின் வம்சவரலாற்றில் இடம் பெறப்போவதை கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள். விசுவாசத்தோடு,  தைரியத்தோடு மோவாபை விட்டுப் புறப்பட்ட அவளின் வாழ்க்கையில் கர்த்தர் அவள் அறியாத பெரியத் திட்டங்களை வைத்திருந்தார்.

என் தேவனாகிய கர்த்தர் என்னை வழிநடத்தும் இடத்துக்கு மறு பேச்சில்லாமல் செல்லும் துணிச்சல் எனக்கு உண்டா?

தாவீதைப் போல, தானியேலைப் போல, ரூத்தைப் போல  கர்த்தரின் கட்டளையைப் பின்பற்றும் தைரியம் எனக்கு உண்டா?

ஆண்டவரே ! என்னுடைய எல்லா பயங்களையும் நீக்கி, நீர் காட்டும் பாதையின் மறுமுனையை என்னால் பார்க்க முடியாவிட்டாலும், விசுவாசத்தோடு உம்மைப் பின்பற்றும் தைரியத்தை எனக்கு இன்று தாரும்! நான் காணாத எதிர்காலத்தை நோக்கி விசுவாசத்தோடு நடக்க எனக்கு பெலன் தாரும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 547 நகோமியால் உருவாக்கப் பட்ட பாத்திரம்!

ரூத்: 2: 11 ” அதற்கு போவாஸ் பிரதியுத்தரமாக; உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும், எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.”

சில வருடங்களுக்கு முன்னால் நாங்கள் ஊட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் மலைப் பாதையில், சாலையின் இரண்டு பக்கமும் வானுயர்ந்த மரங்கள் நின்றன. அவற்றின் நடுவே வானைத்தொடும் நெருப்பு போல , சிவப்பு நிறப் பூக்களோடு  ஆங்கிலத்தில் African Tulips என்றழைக்கப்படும் மரங்கள் நின்றன.

நாங்கள் ஊட்டிக்கு செல்வது இதுதான் முதல் தடவை அல்ல. எத்தனையோ முறைகள் சென்றிருந்த்தாலும் அந்த மரங்கள் எங்கள் கண்களில் பட்டதேயில்லை. என் கணவர் இவை புதிதாக வளர்க்கப்பட்டுள்ளன என்று ஆணித்தரமாகக் கூறினாலும், அந்த மரங்கள் பார்க்க இளம் மரங்கள் போலத் தோன்றவேயில்லை. அவற்றுக்கு எப்படியும்  50 வயதுக்கு மேலிருக்கும். மிகவும் பழக்கமான சாலையிலேயே ,அந்த சாலைக்கே அழகூட்டும் வண்ணமாய் பூத்திருந்த இந்த மரங்கள் எங்கள் கண்களுக்குத் தப்பிவிட்டன!

இப்படித்தான் நான் ரூத் புத்தகத்தை வாசிக்கும்போதும் எனக்கு நன்கு தெரிந்த கதைதானே என்று அழகிய புதைபொருள்களைத் தவற விட்டிருக்கிறேன் என்று நான் இந்தமுறை படிக்கும்போது தான் உணர்ந்தேன். ரூத்தின் புத்தகம் எனக்கு எப்பொழுதுமே  அநேக காரியங்களைக் கற்றுக் கொடுத்த அழகிய புத்தகம்தான் ஆனாலும் எப்படியோ நான் எப்படியோ இத்தனை வருடங்களும் அந்தப் புத்தகத்துக்கே அழகு கொடுக்கும் கருத்துகளைத் தவற விட்டு விட்டேன்.

அப்படி என்ன புதிதாக கற்றுக்கொண்டேன் என்று கேட்கிறீர்களா?

நகோமியை ஒரு கற்றுக்கொடுப்பவராகப்  (mentor) பார்த்தேன். தன்னிடம் கர்த்தரால் ஒப்படைக்கப்பட்ட இளம் பெண்ணின் வாழ்க்கையை அவள் தன்னுடைய சாட்சியினாலும், தன்னுடைய புத்திமதிகளாலும், தன்னுடைய வழிகாட்டுதலாலும் எவ்விதமாக கர்த்தருக்கு உகந்த பாத்திரமாக உருவாக்கினாள் என்பது என்னை ஆச்சரியப்பட வைத்தது.

ரூத்தின் வாழ்க்கை எனக்கு, ஒரு பெண்ணானவள்,  தன்  தாய்க்கு கீழ்ப்படிந்த  மகளாகவும், திருமணத்துக்கு பின்னர் ஒரு நல்ல மருமகளாகவும் வாழும்போது எப்படிப்பட்ட குணநலன்கள் காணப்படவேண்டும் என்ற கருத்துகளை உணர வைத்தது.

இவற்றை மனதில் கொண்டு சில நாட்கள் நாம் ரூத்தின் குணநலத்தையும், நகோமியின் குணநலத்தையும் அலசி, அவர்கள் வாழ்க்கையின் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய குணநலன்களைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.

ரூத்தின் மற்ற எல்லா குணநலன்களைவிட சிறந்த குணம் அவளுடைய உறுதியான விசுவாசம் தான்.  இஸ்ரவேல் மக்களை பாவத்தில் விழப்பண்ணிய மோவாபிய பெண்களின் மரபில் வந்த இவள், மோவாபைத் துறந்து, தேவனாகிய கர்த்தருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததால், கர்த்தருடைய நோக்கம் அவள் வாழ்வில் நிறைவேறிற்று.

ரூத்திடம் காணப்பட்ட உறுதியான விசுவாசம் நம்மிடம் உள்ளதா? நம்மை சற்று ஆராய்ந்து பார்ப்போம்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 546 முதிர்வயதில் ஆதரவு!

ரூத்: 4:15 ” அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர் வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்”.

கடந்த இரண்டு வாரங்கள் நான் வெளியூர் சென்றதால் என்னால் ராஜாவின் மலர்களைத் தொடரமுடியவில்லை. கர்த்தர் என்னை நல்ல சுகத்தோடும் பெலத்தோடும் மறுபடியும் இந்த தியானத்தைத் தொடரும்படி கொடுத்த கிருபைக்காக நன்றி செலுத்துகிறேன்.

சில நாட்களாக நகோமியுடனும், ரூத்துடனும் நாம் மோவாபை விட்டு, பெத்லெகேமுக்குக் கடந்து வந்தோம். மோவாபின் கசப்பை பின் வைத்து, அவர்கள் அறுவடையின் காலத்தில் பெத்லெகேமில் நுழைந்தவுடன் அவர்களுக்கு போவாஸுடைய தாராளமான கிருபையால் அவனுடைய சுதந்தரத்துக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியம் கிடைத்தது.அவர்களுடைய பசி, தாகம் தீர்க்கப்பட்டது. அவர்கள் பரலோகப் பிதாவினாலும், போவாஸ் என்னும் இரட்சகராலும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.

போவாஸ் பட்டணத்து மூப்பரின் முன்பு தனக்கு ரூத்தைக் குறித்து இருந்த நோக்கத்தை வெளிப்படுத்தியபோது அவனுக்கு முன்பு இருந்த தடைகள் அனைத்தும் அகன்று போயின. தன்னைவிட நெருங்கிய சுதந்தரவாளியிடம் அவன், எலிமெலேக்கின் சொத்துகளை மீட்பது என்பதில் அவனுடைய மருமகள் ரூத்தை ஏற்றுக்கொள்வதும் அடங்கும் என்றதும் அவன் அது தனக்கு வேண்டாம் என்று உடனே முடிவு எடுத்து விட்டான்.

ரூத் 4: 13 ல் போவாஸ் ரூத்தை விவாகம் பண்ணினான், அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது அவள் கர்ப்பந்தரித்து ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம் பண்ணினார் என்று வாசிக்கிறோம்.

அதற்கு அடுத்த வசனத்தில் பெத்லெகேமின் பெண்கள், கர்த்தரை ஸ்தோத்தரித்தனர் என்று பார்க்கிறோம். அந்தக் குழந்தை நகோமிக்கு செய்யக்கூடிய இர்ண்டு காரியங்களுக்காக அவர்கள் ஜெபித்தனர்.

1.  ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவன்.

2. முதிர் வயதிலே ஆதரிக்கிறவன்.

நகோமி பெத்லெகேமுக்கு வந்தபோது என்னை மாரா என்று அழையுங்கள் என்று தன்னுடைய நிலையைக் குறித்து கண்ணீர் வடித்தாள். ஆனால் கர்த்தர் அவளுடைய ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனையும், அவளை முதிர் வயதிலே ஆதரிக்கிறவனையும் அங்கே ஆயத்தம் பண்ணப் போவது அவளுக்குத் தெரியாது. அவளுக்கு ஒரு புதிய ஜீவனை கர்த்தர் ஆயத்தம் பண்ணினார்.

அவள் அந்த ஊருக்கு வந்தபோது அவளுக்கு சந்தோஷம், ஆறுதல், நம்பிக்கை எதுவுமே இல்லை! ஆனால் பரம பிதாவானவர் அவள் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனை அளித்தார்!

பரம பிதாவானவர் நம்முடைய ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிற இயேசு என்னும் மீட்பரை நமக்காக அளித்திருக்கிறார். அல்லேலூயா! அவர் நமக்கு புதிய ஜீவனை அளிக்கிறார். நம்பிக்கையில்லாத நமக்கு நம்பிக்கையையும், சந்தோஷத்தையும், ஆறுதலையும் அளிக்கிறார்!

கர்த்தராகிய இயேசுவை விசுவாசி! அவரே உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவர்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 545 இது ஒரு புதுப்பிப்பின் காலம்!

லேவியராகமம்: 25: 25  ” உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து , தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்”.

காலையில் கிழக்கு வெளுத்ததுமே ரூத் எழும்பி விட்டாள். இன்று என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அவள் உள்ளத்தில் அதிகமாக இருந்தது. தன்னுடைய நாட்டை விட்டு ஒரு புதிய நாட்டுக்குள், புதிய ஜனத்துக்குள் வந்திருக்கிறாள். என்ன நடக்கப்போகிறது என்று அறியாதவளாய் ரூத்,  வேலைக்கு செல்லும் மற்ற பெண்களோடு இணைந்து போவாஸின் வயலை நோக்கி செல்கிறாள்.

அயல் நாட்டிலிருந்து வந்த விதவையான அவள் இங்கு ஒன்றும் அதிகமாக எதிர்பார்க்கவில்லை. ஆனால் அன்று அவள் போவாஸின் வயலில் வேலை செய்ய ஆரம்பித்த போது, அவள் மேல் போவாஸ் பொழிந்த சரமாரியான ஆசீர்வாதங்களை அவள் கனவில் கூட நினைக்கவில்லை. அன்று மாலையில் வீடு திரும்பிய ரூத், அன்று நடந்த யாவையும்  தன் மாமியாரிடம் பகிர்ந்து கொள்ள ஆவலோடு செல்கிறாள்.

ரூத்தில் கரத்தில் ஏந்தி வந்த ஆசீர்வாதத்தைக் கண்ட நகோமி ஆச்சரியத்துடன் தன் மருமகளை நோக்கி, நீ இன்று எங்கு வேலைக்கு சென்றாய்? யாருடைய வயல்? என்ன நடந்தது? என்று கேள்விகளைத் தொகுத்தாள். நடந்தவைகளை ரூத்திடம் கேட்டு அறிந்த பின், அவள் உள்ளம் நன்றியால் நிறைந்து  “உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக” (ரூத்: 2: 18 – 19) என்றாள்.க்

கடந்த சில வாரங்களாக நாம் நகோமியோடும், ரூத்தோடும் கூட வெறுமையும், மரணமும் நிறைந்த மோவாபை விட்டு அப்பத்தின் வீடாகிய பெத்லேகேமை நோக்கி நடந்தோம். நாம் பெத்லெகேமுக்கு வந்தடைந்தபோது அங்கே அறுவடையின் காலம், அது அவர்களுடைய வாழ்வில் சரீரப் பிரகாரமும், ஆவிக்குரிய பிரகாரமும் நிறைவான காலமாய் அமைந்தது. அவர்கள் பரலோகப் பிதாவினாலும், போவாஸினாலும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.

தேவனாகிய கர்த்தரின் மறைமுகமாக வழிநடத்தும் கரம், அவர்களை ஒரு புதிய வாழ்க்கைக்குள், ஒரு புதிய இரட்சிப்புக்குள் வழிநடத்தியது. அவர்களுடைய இரட்சிப்பின் காலம் நெருங்கி விட்டது! அவர்கள் இத்தனை வருடங்கள் பாவமும், வேதனையும், மரணமும் நிறைந்த  மோவாபில் செலவிட்டது இனி அவர்களுக்குத் தடையாயிருக்கப் போவதில்லை. அவர்கள் அவருக்கே சொந்தமாகும் காலம் நெருங்கிவிட்டது.

ஆம்! நகோமியும், ரூத்தும் பெத்லெகேமிலே தங்கள் இரட்சகரைக் கண்டு கொள்ளும் காலம் இது! அவர்கள் மறுபடியும் அப்பத்தின் வீடு என்ற குடும்பத்துக்குள் ஒரு அங்கத்தினராக சேர்க்கப்படும் காலம்! போவாஸ் தனக்கு சொந்தமானவர்களை மீட்கும் படியான தன்னுடைய பணியை நிறைவேற்றப்போகும் காலம் !

வரப்போகிற சில நாட்கள் நாம் இந்த ‘இரட்சிப்பின் காலம்’ பற்றி படிக்கப் போகிறோம். நகோமியின், ரூத்தின் வாழ்க்கையில் கிடைத்த அந்த இரட்சிப்பு நம்முடைய வாழ்விலும் அனுபவிக்க முடியும் என்ற உண்மையை நாம் ஆராயப் போகிறோம்.ப்

பழையவைகள் ஒழிந்து போயின எல்லாம் புதிதாயின என்ற நம் இரட்சகராகிய இயேசுவின் வார்த்தைகள் நம் வாழ்வின் கடந்த காலத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்றன! இரட்சிப்பின் காலம் ஒரு புதுப்பிப்பின் காலம்! தேவனோடு நாம் ஒப்புரவாகி, தேவனுடைய குடும்பத்தாரோடு நாம் ஒருங்கிணைக்கப்படும் காலம்!

போவாஸ் ரூத்துக்கு அளித்த இரட்சிப்பைப் போல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே இந்த இரட்சிப்பை நமக்கு அளிக்கக்கூடும்!  இரட்சிப்பு என்பதற்கு ஒருவன் தனக்கு சொந்தமானதை மீட்டுக் கொள்ளுதல் என்று அர்த்தம்! நாம் கர்த்தராகிய இயேசுவுக்கு சொந்தமானவர்கள்! நம்மை மீட்பதற்காக அவர் தன் ஜீவனையே விலையாக ஈந்தார்.

உன்னுடைய  மீட்பராகிய  இயேசு உன்னைத் தனக்கு சொந்தமாக மீட்டுக்கொள்ள நீ அனுமதித்திருக்கிறாயா?

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

மலர் 7 இதழ்: 544 பட்சமாய்ப் பேசும் தேவன்!

ரூத்: 2: 13 ” அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்க வேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள்.”

இன்றைய வேதாகமப் பகுதியை வாசித்தவுடன், இது ஒரு மனதைத் தொடும் வசனம் இதை எழுதி வைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் வந்தது.

இஸ்ரவேலரில் மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்த போவாஸிடம் ரூத் வந்தபோது, அவனுடைய தகுதிக்கும், மதிப்பும், முன்னால் தான் ஒன்றுமேயில்லை என்பதை உணர்ந்து,’ என் ஆண்டவனே உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்க வேண்டும் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.

எத்தனை முறை நாமும் கர்த்தருடைய சமுகத்தில் வந்து கர்த்தாவே எனக்கு உம்முடைய கண்களில் தயை கிடைக்கவேண்டும் என்று கதறியிருக்கிறோம். அதைத்தொடர்ந்து அவள் போவாஸை நோக்கி, தன்னுடைய வேதனையிலும், தனிமையிலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே  என்பதைப் பார்க்கிறோம்.

நாம் சற்று நேரம் இந்த ஆறுதல் என்ற வார்த்தையைப் பார்ப்போம். ஆறுதல் என்பதற்கு பெருமூச்சு என்று எபிரேய அகராதி கூறுகிறது. ரூத்தின் வாழ்க்கையில் அடித்த பெருங்காற்றின் வேதனையால் அவள் சுவாசம் பெருமூச்சாய் மாறியபோது, போவாஸ் அவளுடைய வாழ்க்கையில் வந்து ஆறுதல் என்ற சுவாசத்தை அவளுக்குள் ஊதுகிறான்.

அதுமட்டுமல்ல, ரூத் அவனைப் பார்த்து உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்கிறாள். பட்சமாய் என்பதற்கு எபிரேய மொழியில் சோர்ந்து போன அவளைத் தாங்கும் படியான வார்த்தைகளைக் கூறுதல் என்று அர்த்தமாம்.

எத்தனை அருமையான காரியம்! போவாசுடைய கிருபையைப் பெறத் தகுதியே இல்லாத, மோவாபியப் பெண்ணான ரூத்தை, தன்னுடைய சுதந்தரத்துக்குள் அழைத்த போவாஸ், அவளைத் தன்னுடைய வயலின் நடுவே உள்ள அரிக்கட்டுகளில் கதிர் பொறுக்கும் சுதந்தரத்தைக் கொடுத்து, அவளுக்குத் தேவையான ஆறுதலையும் கொடுத்து, அவளோடே பட்சமான வார்த்தைகளையும் பேசினான். இந்த வசனத்தில் ரூத் கூறுவது போல, இத்தனைக் கிருபைகளை அவள் மேல் பொழிய, அவள் அவன் வேலைக்காரிகளில் ஒருத்திக்குக் கூட சமானமில்லை! அவள் அவனுடைய குடும்பத்தை சேர்ந்தவளும் அல்ல, வேலைக்காரிகளை சேர்ந்தவளும் அல்ல!

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இதையல்லவா நமக்கு செய்கிறார். தகுதியற்ற நம்மேல் அவருடைய கிருபைகளைப் பொழிந்து, நாம் சோர்ந்து போகும் வேளையில் நமக்கு ஆறுதல் என்ற உறுதியான சுவாசத்தை அளித்து, தம்முடைய மெல்லிய சத்தத்தால் , வேதத்தின் மூலமாக நம்முடன் பட்சமான வார்த்தைகளைப் பேசி நம்முடன் உறுதுணையாக நிற்கிறார்.

சோர்ந்து போயிருக்கிறாயா? கர்த்தராகிய இயேசு உனக்கு ஆறுதல் அளிப்பார்! அவருடைய சமுகத்துக்கு வந்து அவருடைய கிருபையைப் பெற்றுக் கொள்! இது தகுதியற்ற நமக்குக் கர்த்தர் அளிக்கும் மகா பெரிய ஈவு!    அது மட்டும் அல்ல அவரால் உன்னுடன் பேச முடியும்! அவருடைய மெல்லிய சத்தத்தை உன்னால் கேட்க முடியும்!  அவருடைய ஆறுதலின் கரம் உன்னை அணைப்பதை உன்னால் உணர முடியும்!

எத்தனை மகா பெரிய தயவு! எத்தனை மகா பெரியக் கிருபை!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்