1 சாமுவேல்: 8:9 இப்பொழுதும் அவர்கள் சொல்லைக் கேள். ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.
இன்றைய வேதாகம வசனம் எனக்கு என்னுடைய அம்மாவைத் தான் ஞாபகப்படுத்தியது. என் வாலிப நாட்களில் அம்மா என்னை ஒருநாளும் தனியாக ஆண்களோடு அனுப்பியதில்லை. என் கூடப் படித்தவர்கள் வீட்டுக்குக்கூட அவர்கள் பெற்றோர் இல்லாதபோது அனுப்ப மாட்டார்கள். மற்ற பிள்ளைகள் ஒன்று சேர்ந்து அங்கு இங்கு சுற்றும்போது எனக்கு அம்மாவுடைய தடையுத்தரவு கொஞ்சம் கசப்பாகக் கூடப் பட்டதுண்டு!
ஆனால் திரும்பிப் பார்க்கும்போது அம்மாவின் ‘இதை செய்யாதே, அங்கு செல்லாதே’ என்பது போன்ற உத்தரவுகள், அவர்கள் என்மேல் காட்டிய அன்பையும், என்னைப் பாதுகாத்து வளர்க்க எடுத்த முயற்சியையும் தான் நினைவு படுத்துகிறது!
இஸ்ரவேல் மக்கள் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்றுக் கேட்ட போது, தேவன் தாம் நேசித்த ஜனத்தின் மேல் தாம் கொண்டிருந்த அக்கறையுடன் தான் செயல் பட்டார். கர்த்தரை நிராகரித்து விட்டு, தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று முறையிட்ட அவர்களிடம் கர்த்தர் கோபப்படவில்லை, அவர்களை சபிக்கவும் இல்லை! அவர்கள் மேல் மிகுந்த அக்கறையுடன் சாமுவேலை நோக்கி, ஒரு ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் தெளிவாக தெரியப்படுத்து என்றார் என்று பார்க்கிறோம்.
கர்த்தரால் நியமிக்கப் பட்டவர்களால் நியாயம் விசாரிக்கப்படுவதைப் பார்க்கிலும், ஒரு உலகப் பிரகாரமாக நியமிக்கப்படும் ராஜாவினால் ஆளப்படுவது எவ்வளவு கடுமையாக இருக்கப்போகிறது என்று உணராத ஜனங்களுக்கு சாமுவேல் மூலமாக தேவன் தெளிவான அறிவுரையளித்தார்.
சாமுவேல் அவர்களைப் பார்த்து,’ராஜா உங்கள் குமாரரை எடுத்து தன் ரதத்துக்கு முன் ஓடும் ரதசாரிகளாகவும், குதிரைவீரராகவும் ஆக்கி விடுவான். அதுமட்டுமல்ல, உங்களைத் தன் நிலத்தை உழவும், தன் விளைச்சலை அறுக்கவும் உபயோகப் படுத்துவான்.உங்களைத் தன் யுத்த ஆயுதங்களைப் பண்ணுகிரவர்களாக்குவான்.
உங்கள் குமாரத்திகள் அவனுக்கு பரிமளதைலம் பண்ணுகிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும் இருப்பார்கள்.
உங்கள் வயல்களிலும், தோட்டத்திலும் வரும் நல்லவைகளை எடுத்து தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்.
உங்கள் தசமபாகத்தை வாங்கித் தன் சேவகருக்குக் கொடுப்பான்.
உங்களில் திறமையானவர்களை எடுத்துத் தன் வேலைக்கு வைத்துக் கொள்வான்.
இவைகள் மட்டுமல்ல,நீங்கள் தெரிந்து கொண்ட ராஜாவின் நிமித்தம் நீங்கள் அன்றுக் கர்த்தரிடம் முறையிட்டால், கர்த்தர் உங்களுக்கு செவி கொடுக்க மாட்டார் என்றுத் தெளிவாக விளக்கிக் கூறினான்.( 1 சாமு:8:11 – 18)
ஆனால் ஜனங்கள் சாமுவேலின் வார்த்தைகளைக் கேட்காமல், தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்றனர் என்றுப் பார்க்கிறோம் (19 – 20)
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தேவனுடைய வார்த்தைகளை நிராகரித்த இஸ்ரவேல் மக்களைப் போல் எத்தனை முறை நாம் நம் வாழ்க்கையை நம்முடையக் கையில் எடுத்துக் கொள்கிறோம்! நாம் மிகுந்த அறிவாளிகள் போல கர்த்தருடைய வார்த்தையை நிராகரித்து நமக்கு எது நல்லது என்று படுகிறதோ அந்த வழியிலே செல்கிறோம்.
ஒரு தாய்,தகப்பனைப் போல நம்மை நேசிக்கும் கர்த்தருடைய தடையுத்தரவுகள் தவறாகாது!
தங்களுக்கு ராஜா வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த இஸ்ரவேல் மக்களுக்கு என்ன ஆயிற்று? தொடர்ந்து படிப்போம்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்