கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 7 இதழ்: 587 அனுதின வாழ்வில் காணும் தேவ பிரசன்னம்!

1 சாமுவேல் 9: 11,12 அவர்கள் பட்டணத்து மேட்டின்வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள்.
அதற்கு அவர்கள்: இருக்கிறார். இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார். தீவிரமாய்ப் போங்கள். இன்றைக்கு ஜனங்கள் மேடையில் பலியிடுகிறபடியினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார்.

என்னுடைய சிறு வயதிலிருந்தே வேதாகமத்தின் கதைகளை நான் ஆவலோடே கேட்பேன். உண்மையில் சொல்லப்போனால் தானியேல் சிங்கக் குகையில் இருந்த கதை, எபிரேய வாலிபர் மூவர் அக்கினிச் சூளையில் இருந்து வெளியே வந்தது, எலியா தீர்க்கதரிசி கர்மேல் பர்வதத்தில் செய்த அற்புதம்,போன்ற கதைகளை ஆர்வமுடன் கேட்டது மட்டுமன்றி, பின்னர் அவைகளை வேதாகமத்திலிருந்து படித்தும் மகிழ்ந்தேன். இவைகள் தேவனுடைய பிள்ளைகள் சாதித்த அசாதாரண செயல்கள்! இந்த செயல்களில் கர்த்தருடைய வல்லமை வெளிப்படுத்தப் பட்டது! இவைகளை வாசிக்கும் போது நாம் கூட கர்த்தருடைய வல்லமையை காண முடியும்! ஒருவேளை நான் கர்மேல் பர்வதத்தில் எலியாவோடே நின்றிருப்பேனானால் வானத்திலிருந்து அக்கினி இறங்கிய போது, இஸ்ரவேல் மக்களோடு ஆரவாரம் செய்திருப்பேன் என்று அடிக்கடி நினைத்ததுண்டு! யார் அப்படிப்பட்ட அற்புதமான காட்சியைத் தவற விடமுடியும்!

ஆனால் இன்றைய வேதாகமப் பகுதி, நான் என்றும் ஆழ்ந்து கவனம் செலுத்தாத ஒன்று. ஒரு அன்றாட வாழ்க்கையில், சாதாரணப் பெண்மணிகள் தண்ணீர் மொண்ட இடத்தில் என்னப் பெரிய காரியம் நடக்கும் என்ற எண்ணம்! நாம் நம்முடைய ஆபீசில் வேலை செய்து கொண்டிருக்கும் போதோ அல்லது ஒரு மணி நேரம் வேர்க்க விறுவிறுக்க பஸ் பிடித்து வீட்டுக்கு வந்து, பிள்ளைகளை படிக்க உட்கார வைத்து விட்டு, சமையல் செய்ய விரையும் போதோ நம் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும்? நம்முடைய அன்றாட வேலைகளில் நாம் தேவனுடைய வல்லமையைப் பற்றி சிந்திக்க தருணம் கிடைக்கிறதா?

இந்தப் பெண்கள் தன்னுடைய வீட்டுக்கும், வீட்டில் வளர்க்கும் மிருகங்களுக்கும் தேவையான தண்ணீர் மொண்டு கொண்டிருந்தனர். அவர்களுடைய அன்றாட வேலைதான் அது, அதில் ஒன்றும் விசேஷம் இல்லை. ஆனால் அவற்றின் மத்தியில் அவர்கள் கர்த்தருடைய தீர்க்கதரிசியான சாமுவேலைத் தேடி, சவுலும் அவன் நண்பரும் வந்த போது அவர்கள் சவுலையும் சாமுவேலையும் இணைக்கும் பாலமாக மாறினர்!
அவகளுடைய செயல் எவ்வளவு முக்கியமானதால் அது இன்று வேதாகமத்தில் இடம் பெற்றிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். யாரோ வந்து ஞானதிருஷ்டிக்காரன் எங்கேயிருக்கிறார் என்று கேட்டதற்கு அவர்கள் வேலையின் மத்தியில் எங்களுக்குத் தெரியாது என்று ஒரே வார்த்தையில் பதில் கொடுத்திருக்கலாம் அல்லவா? கர்த்தருடைய கிரியைகளுக்கு அவர்களுடைய இருதயமும், கண்களும் திறந்திருந்ததால் மட்டுமே அவர்கள் வேதத்தில் இடம் பிடித்தனர்!

கர்மேல் பர்வதத்தில் அக்கினி இறங்கியது போன்ற அற்புதத்தைத் தான் காண ஒருவேளை நமக்கு கிருபை கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் நம்முடைய அன்றாட வேலைகளின் மத்தியில், நாம் வேலை செய்யும் இடத்தில், ஒவ்வொருநாளும் கர்த்தரின் கிரியைகளைக் காண நாம் திறந்த உள்ளத்தோடு இருக்கும்போது தேவனுடைய பிரசன்னத்தை நமது மிகக்கடின வேலையின் மத்தியிலும் உணர முடியும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment