கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 632 நாபால் என்னும் முட்டாள்!

1 சாமுவேல்: 25 2-3  மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான். அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது. அந்த மனுஷன் மகாபாரிக் குடித்தனக்காரனாயிருந்தான். அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது….. அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர்.

வேதத்தை வாசிக்க வாசிக்கத்தான் நாம் அது எத்தனை அருமையான பொக்கிஷம் என்பதை உணர முடியும்! அது இந்த வேதாகமப்பகுதியைப் படிக்கும்போது நான் மிகவும் உணர்ந்தேன். இதை ஒவ்வொருநாளும் நாம் வாசிப்போமானால் எத்தனையோ பொல்லாங்குகளிலிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ளலாம் என்பது சத்தியமான உண்மை!

இன்று இந்த 1 சாமுவேல் 25ம் அதிகாரத்தில் நாம் நாபால் என்ற மனிதனைப் பார்க்கிறோம். நாபாலின் பெயருக்கு முன்னால் அவனுடைய சொத்தின் மதிப்பீடு வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவன் பெரிய பணக்காரன். சமுதாயத்தில் மிகுந்த வல்லமை வாய்ந்தவன். அவனுடைய கால்நடைகளின் எண்ணிக்கைதான் அந்த காலத்தில் அவனுடைய செவத்தின் அறிகுறி.

நாம் யாராவது பணக்காரரைப் பார்த்தால் என்ன நினைப்போம்? ஒருவேளை பரம்பரையாக வந்த சொத்து போல என்று நினைப்போம் அல்லது ஒருவேளை அவர் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்ததுபோல என்று நினைப்போம். என்றைக்காவது ஒரு பெரிய பணக்காரரைப் பார்த்து நாம் இவன் ஒரு முட்டாள் என்று நினைத்தது உண்டா?

இந்த நாபாலின் பெயரோடு முட்டாள் என்ற அர்த்தமும் ஒட்டிக்கொண்டு வருகிறது. வேதாகம அகராதியில் நாபால் என்பதற்கு முட்டாள் என்று அர்த்தம்! அவனுக்கு உலக ஆஸ்திகள் எல்லாம் சொந்தமாக இருந்தாலும் ஏதோ ஒரு குறைபாடு இருந்தது!

அவனுடைய முட்டாள்த்தனத்தினால் அவன் நீதிக்குப் பதிலாக அநீதியைத் தெரிந்து கொண்டான். ஏனெனில் வேதம் அவன் முரடனும், துராகிருதனுமாயிருந்தான் என்று 3 ம் வசனத்தில் கூறுகிறது. இதே அதிகாரம் 25 ம் வசனத்தில் நாபாலின் மனைவியாகிய அபிகாயில் அவனை பேலியாளின் மகன் என்கிறாள்.

சங்கீதக்காரனாகிய தாவீது, ‘தேவன் இல்லையென்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்’ (சங்:14:1) என்று சொல்வதைப் பார்க்கிறோம்.

நாபால் அவனுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் கடவுள் இல்லையென்று அல்லது தனக்குக் கடவுள் வேண்டாம் பணம் மட்டும் போதும், பணத்தைக்கொண்டு எல்லாவற்றையும் சாதிக்க முடியும்  என்று மதிகேடான முடிவு செய்தான்.

எத்தனையோமுறை நானும் என்னால் இதை சாதிக்கமுடியும், யாருடைய துணையும் வேண்டாம் என்று முடிவு எடுத்ததுண்டு என்று ஆவியானவர் இன்று என்னுடன் பேசினார். அந்த முடிவு நாபாலைப்போல என்னையும் முட்டாள் ஆக்கி விட்டது.

நீங்கள் எப்படி?

யாரோ ஒருவர் நீ எதை செய்தாலும் ‘தேவனோடு ஆரம்பி ‘என்று கூறியதைப் படித்திருக்கிறேன். அதோடு சற்று கூடுதலாக எந்தக் காரியத்தையும்  ‘தேவனோடு ஆரம்பி, தேவனோடு நிலைத்திரு, தேவனோடு முடிவு செய்’  என்று என் உள்ளம் இன்று கூறியது!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

1 thought on “இதழ்: 632 நாபால் என்னும் முட்டாள்!”

Leave a comment