Archive | January 2019

இதழ்: 614 நம்பினால் கிடைக்கும் பரிசு!

1 சாமுவேல்: 18:6 தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பிவந்தபின்பு, ஜனங்கள் திரும்ப வரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலிமிருந்து ஆடல்பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும், கீதவாத்தியங்களோடும், சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.

காலை எழுந்தவுடன் கவலையில்லாமல் பாடும் பறவைகளைக் கேட்டதுண்டா? காற்றினால் அசைவாடும் மரங்களின் ஆடல்பாடலைக் கேட்டதுண்டா? நிம்மதியாகப்புல்வெளியில் மேயும் மாடுகளைப் பார்த்ததுண்டா?  இரவில் பளிச்சென்று மின்னும் நட்சத்திரங்களைக் கண்டதுண்டா? இவை எந்தக் கவலையும் இல்லாமல் எத்தனை சமாதானமாய், சந்தோஷமாய் இருக்கின்றன என்று  நான் அடிக்கடி நினைப்பேன்!

இந்த வசனத்தை வாசிக்கும்போது அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் எவ்வாறு தங்களுடைய மகிழ்சியை ஆடல் பாடலுடனும், மேள தாளங்களுடனும் வெளிப்படுத்தினர் என்று பார்க்கிறோம். அவர்கள் செங்கடலைக் கடந்து வந்தபோது மிரியாமின் தலைமையில்  ஆடிப்பாடி தங்கள் இரட்சிப்பின் மகிழ்சியை வெளிப்படுத்தியதுபோல, பெலிஸ்தியரிடமிருந்து விடுதலைப் பெற்றதைக் கொண்டாடினர். ஸ்திரீகள் சகல பட்டணங்களிலுமிருந்து புறப்பட்டு ஆடல் பாடலுடன் கொண்டாடியது அந்த தேசத்தின் மக்களிடம் காணப்பட்ட சமாதனத்தையும் சந்தோஷத்தையும் காட்டுகிறது.

சந்தோஷம்?  சமாதானம்,  மகிழ்ச்சி?  ஆடல் பாடல், மேளதாளம்? எனக்கும் இவைக்கும் என்ன சம்பந்தம்?

இன்றைய மாடர்ன் உலகத்தில் பலவிதமானப் பிரச்சனைகளைக் கடந்துவரும் நாம் எங்கே இப்படி சந்தோஷமாக இருக்க முடிகிறது என்று பலரும் எண்ணுவதை என்னால் உணர முடிகிறது. எத்தனை இரவுகள் பலவிதமான மனஅழுத்தங்களோடு செல்கின்றன! இருதயமே வறண்டு கிடக்கும்போது ஆடல் பாடல் எங்கே?

அப்போஸ்தலனாகிய பவுல் இந்த சந்தோஷமும் சமாதானமும்  பரிசுத்த ஆவியின் கனி என்று கூறுகிறார். நம்முடைய விசுவாசத்தின் நிச்சயமே இந்த சந்தோஷமும், சமாதானமும்தாங்க!  என்னைக் கர்த்தர் தம்முடைய பிள்ளையாக ஏற்றுக் கொண்டார் என்ற விசுவாசத்தின் பலன் தான் அது!

அதுமாத்திரம் அல்ல! சமாதானம் என்பது நாம் விமானத்தில் பயணம் செய்யும்போது  மாலுமியை கண்ணைமூடி நம்புவது போலக் கர்த்தரை முழுதும் நம்பும்போது நம் உள்ளத்தில் வரும் ஒரு அமைதியான உணர்ச்சி தான்!

நம்மை சுற்றி நடக்கும் எந்த சம்பவமும், எந்த வலியும், எந்த வேதனையும் இந்த சந்தோஷத்தையும் சமாதானத்தையும் நம்மைவிட்டு எடுக்க முடியாது!

நம்முடைய சந்தோஷமும், சமாதானமும்  ஒரு நறுமணமாய் நம்மை சுற்றி உள்ளவர்களையும் வந்து அடையும். இது கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு அளிக்கும் ஒரு பரிசு!

இன்று வாழ்க்கையின் பாரச் சுமை உன்னை அழுத்திக்கொண்டிருக்கலாம்! அல்லது நீ வேதனையாலும், வலியாலும் நிறைந்து இருக்கலாம்!

கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து உனக்கு சந்தோஷத்தையும், சமாதானத்தையும் தருவார்! அவரை நம்பும்போது அவர் நம்மிடம்,

என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும்,பயப்படாமலும் இருப்பதாக. (யோவான் 14:27) என்கிறார்.

அவரை விசுவாசி! சந்தோஷம் உண்டு! சமாதானமும் உண்டு! இவை கர்த்தர் நமக்குக் கொடுக்கும் பரிசு!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

Advertisements

இதழ்: 613 புத்தியாய் செயல்படு!

1 சாமுவேல் 18:5  தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும்போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷர்மேல் அதிகாரியாக்கினான். அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான்.

தாவீது கோலியாத்தை வென்றபின், சவுல் ராஜா, புத்திசாலியான தாவீதை தன் வசமாக்கி, அவனை போர்ச்சேவகர்களுக்கு  அதிகாரியாக்கினான் என்று இன்றைய வசனம் கூறூகிறது. தாவீதின் இந்த புதிய பதவி சவுலுக்கு உதவியாக இருந்தது மட்டுமல்ல, இஸ்ரவேலர் யாவரையும் அது பிரியப்படுத்தியது.

இந்த அழகிய வாலிபன் புத்தியாய்க் காரியத்தை நடப்பித்தான்!

புத்திசாலி என்ற வார்த்தை எனக்கு கொஞ்சம் அச்சத்தைக் கொடுக்கும் ஒன்று.  நீ ரொம்ப புத்திசாலி என்று நினைப்போ என்றும், உன் புத்திசாலித்தனத்தை என்னிடம் காட்டாதே என்றும் சிலர் இந்த வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்துவதைக் கேட்டிருக்கிறேன்.

தாவீது தான் செய்த எல்லா காரியத்திலும் புத்தியாய் நடந்து கொண்டான் என்பது நம்முடைய உள்ளங்களில் அச்சடிக்க வேண்டிய ஒரு காரியம். ஏனெனில் அவன் அப்படி  நடந்து கொண்டதால் தான் கர்த்தர் அவனைத் தன் இருதயத்திற்கேற்ற ஒருவன் என்று கூறுகிறார். இஸ்ரவேல் மக்களும் அவனை நேசித்தனர்.

தாவீது எப்படிப்பட்ட புத்திசாலித்தனத்தை தன் செயல்களில் வெளிப்படுத்தினான் என்று நாம் நினைக்கலாம்!

ஒரு வாலிபனைப் பொறுத்தவரை புத்திசாலித்தனம் என்பது தன்னுடைய எதிர்காலத்துக்காக தன்னை ஆயத்தப்படுவதுதான்.  ஒரு நடுத்ததர வயது மனிதனைப் பொறுத்தவரை புத்திசாலித்தனம் என்பது தன் நிகழ்காலத்தைப்பற்றி சிந்திப்பதுதான். ஆனால் தாவீது தன்னுடைய கடந்த கால அனுபவங்களை மறந்து போகாமல், அவற்றின் அடிப்படையில் தன்னுடைய நிகழ்கால செயல்களை வெற்றிகரமாக செய்து, தனக்கான ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொண்டான்.

தாவீதின் வாழ்க்கையில் அவன் நடந்து கொண்டவிதத்திலும், அவனுடைய எல்லா செயல்களிலும் தேவன் அருளிய ஞானம் வெளிப்பட்டது! அதை சவுல் கண்டான்! இஸ்ரவேல் மக்கள் கண்டனர்!

இன்று உன் வாழ்க்கை எப்படி? கிறிஸ்துவுக்குள்ளான அனுபவங்கள் உன்னை புத்திசாலியாக்கியிருக்கின்றனவா? உன்னுடைய எல்லா செயல்களிலும் நீ கர்த்தருடைய பிள்ளை என்று தெரிகிறதா?  உன்னை சுற்றிலும் உள்ளவர்கள் உன்னை நீ ரொம்ப புத்திசாலி என ஏளனப்படுத்தின்றனரா? அல்லது நீ நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து உன்னிடம் கர்த்தருடைய ஞானம் உள்ளதென்று புரிந்துகொள்கின்றனறரா?

புத்திசாலியாய் நடந்துகொள்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

இதழ் 612 பட்டயம் இல்லை! வெற்றி உண்டு!

1 சாமுவேல் 17:45: அதற்குத் தாவீது பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும்  ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன்.  

இன்றைய  வசனம் நமக்குத் தெளிவாக கோலியாத் எப்படி யுத்ததுக்குத் தயாராக வந்தான் என்று காட்டுகிறது. இஸ்ரவேல் தேசத்திற்கு சென்றபோது தாவீதும் கோலியாத்தும் யுத்தம் செய்த இடத்திற்குப் போயிருந்தோம். தாவீது தன் சிறியக் கரங்களில் கவணையும், கற்களையும் ஏந்தி கோலியாத்துக்கு எதிராக வந்தக் காட்சி என் மனக்கண்களில் தெரிந்தது.

ஒரு மலையின் மேலிருந்து இறங்கிவந்து பெலிஸ்தியர் தினமும் இஸ்ரவேலரை யுத்தத்துக்கு வரும்படி கூவி அழைத்தனர். கோலியாத்திடம்  பட்டயம், ஈட்டி, கேடகம் எல்லாம் இருந்தது. இஸ்ரவேலரை யுத்தத்தில் ஊதித்தள்ள பெலிஸ்தியர் துடித்துக்கொண்டிருந்தனர்.

திடீரென்று எங்கோ ஒரு நிழலிலிருந்து சிறுவனாகியத் தாவீது வெளிப்பட்டதும் கோலியாத்துக்கு எரிச்சல் வந்துவிட்டது.  என்ன தைரியம் ஒரு சிறுவனைப்பிடித்து என்னிடத்தில் யுத்தத்துக்கு அனுப்பவற்கு, என்னைப் பார்த்தால் என்ன அவ்வளவு கேவலமாகத் தோன்றுகிறதா என்றுதான் எண்ணியிருப்பான். அவன் கையில் பட்டயமும் இல்லை, ஈட்டியும் இல்லை, கேடகமும் இல்லை. கோலியாத்தின் கண்களுக்கு பறவைகளை வேட்டையாட உபயோகப்படுத்தும் கவணும், கற்களும்தான் தெரிந்தன.

ஆனால் கோலியாத் அங்கே செய்த தவறு அவன் தாவீதின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காததுதான். தாவீது உரத்த சத்தமாய் உயரமான கோலியாத்தின் காதுகளில் விழுமாறு தான் தனியாக யுத்தத்துக்கு வரவில்லை என்று தெரியப்படுத்தினான். உண்மையில் அங்கே அவன் சேனைகளின் கர்த்தருடைய நாமத்தினாலே அவருடைய சேவையை செய்யவே வந்ததாகக் கூறுகிறான்.

நம்முடைய எதிரி பட்டயமும் ஈட்டியும் எடுத்துக்கொண்டு நம்மை எதிர் கொள்ளும்போது அவன் நம்மை சாய்த்து விடுவானோ என்று பயந்து விடுகிறோம்.  நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே மீட்கப்பட்டவர்கள் என்பதையும், அவருடைய நாமத்தைத் தரித்தவர்கள் என்பதையும் மறந்தே போகிறோம்.

ஆனால் தாவீதைப் பாருங்கள்! தான் யாருடைய நாமத்தைத் தரித்தவன் என்று மறந்தே போகவில்லை! தன்னுடைய பெலத்தால் எதிரியை முறியடிக்க முடியாது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்! ஆனால் சேனைகளின் கர்த்தர் அவனோடு இருக்கும்போது அவனால் கோலியாத்தை முறியடிக்க முடியும் என்று விசுவாசித்தான்.

என் வாழ்க்கையின் போராட்டத்தில் நான் தனித்து நிற்கிறேன், எனக்கு போராட இனி பெலனில்லை, கோலியாத்தைப் போலக் காணும் இந்தப் பெரிய பிரச்சனைகள் என்னை தோற்க்கடித்து விடுமோ என்று அஞ்சுகிறாயா? தாவீதைப்பார்! சேனைகளின் கர்த்தர் உன்னோடு இருந்து உனக்கும் வெற்றியளிப்பார்!

விசுவாசி! சோர்ந்துவிடாதே!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 611 அன்று தப்புவித்தவர் இன்றும் தப்புவிப்பார்!

1 சாமுவேல் 17:37 பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்.

ஒருமுறை எங்களுடைய ரிசார்ட் இருக்கும் வால்பாறை அருகே கரடியால் தாக்கப்பட்ட ஒருவரின் படத்தை யாரோ அனுப்பியிருந்தார்கள். உடம்பு சிலிர்த்தது! வலது கையை கடித்து குதறியிருந்தது. என்னக் கொடூரமான மிருகம் என்று நினைத்தேன்! இரண்டுமுறை எங்கள் கார் முன்னால் கரடி குறுக்கே ஓடியததைப் பார்த்திருக்கிறேன்.

இன்றைய வசனத்தில்,ஒருமுறை கரடி  மட்டும் அல்ல  சிங்கமும்  தாவீதையும் அவனுடைய ஆடுகளையும் தாக்கவந்தபோது கர்த்தர் அவைகளின் கையிலிருந்து தன்னையும் தன்னுடைய ஆடுகளையும்  தப்பவைத்தார்  என்று அவன் கூறுவதைப் பார்க்கிறோம்.

கோலியாத்தை எதிர்க்க, எந்த அனுபவமுமில்லாத  தாவீதால் முடியும்  என்று சவுல் ராஜாவால் நம்பமுடியவில்லை. எந்த அனுபவமுமே இல்லாத ஒருவனை, மகா வீரனான  கோலியாத்தை எதிர்க்க எப்படி அனுப்பமுடியும் என்று சவுல் எண்ணினான். அதற்குத் தாவீது, என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் எந்த சந்தேகமுமில்லாமல் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்று உறுதியான நம்பிக்கையோடே கூறினான்.

தாவீதின் உள்ளம் அவனுடைய கடந்த காலத்தில், சிங்கம், கரடி போன்ற பேராபத்து தன்னை நெருங்கினபோது கர்த்தர் தம்மைத் தப்புவித்ததை நினைத்துப் பார்த்தது. அதே தேவன் கோலியாத்திடமிருந்தும் தன்னைத் தப்புவிப்பார் என்று உறுதியாக நம்பினது.

இது நமக்கு ஒருபாடமாக இல்லையா! கடந்த காலத்தில் நம்மோடிருந்து வழிநடத்திய தேவன், ஆபத்துகளைத் தாண்டிவர உதவிய தேவன், சோதனைகளில் வெற்றி காணச்செய்த தேவன்  வருகின்ற நாட்களிலும் நம்மோடிருப்பார் என்ற நிச்சயத்தை நமக்குக் கொடுக்கவில்லையா? தாவீது தன்னுடைய சிறு வயதிலேயே இதை விசுவாசித்தான், ஆனால் நாமோ சந்தேகப்பட்டுத் தவிக்கிறோம்.

ஐயோ எனக்கு முன்னால் இவ்வளவு பெரிய பிரச்சனை உள்ளதே, நான் என்ன செய்வேன் என்று மனதில் கண்ணீர் வடிக்கும் உன்னைப் பார்த்து கர்த்தர் சொல்கிறார், கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்! அன்று உன்னைக் கரம்பிடித்து நடத்திய நான் இன்றும் உன்னோடே இருக்கிறேன் என்கிறார். தாவீதைப் போல உறுதியாய் அவரை நம்பு! வெற்றி உன்பக்கம்!

கோலியாத்தைப் போல மாபெரிய சோதனை நம்மை எதிர் கொண்டாலும் நாம் பயப்பட வேண்டாம். அன்று நடத்திய அதே தேவன் இன்றும் நம்மோடிருக்கிறார்.

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ் 610 அதிகாரம் மாறிப்போச்சே!

1 சாமுவேல் 17:8  அவன் வந்துநின்று, இஸ்ரவேல் சேனைகளைப் பார்த்துச் சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்துக்கு அணிவகுத்து நிற்கிறது என்ன? நான் பெலிஸ்தன் அல்லவா? நீங்கள் சவுலின் சேவகர் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள். அவன் என்னிடத்தில் வரட்டும்.

நான் சிறு வயதில் இந்த தாவீது கோலியாத் கதையை எத்தனை முறை கேட்டிருப்பேன்! அதன்பின்னர் எத்தனையோமுறை இந்தக் கதையை வேதாகமத்திலிருந்து படித்துவிட்டேன். ஆனால் ஒவ்வொருமுறையும் ஏதோ ஒரு தெரிந்த கதையை வாசிப்பது போல வாசித்துவிட்டு அதன் முக்கிய அம்சங்களை விட்டிருக்கிறேன்.  நான் எப்பொழுதும் கூர்ந்து வாசிக்காத இன்றைய வசனம் எனக்கு மிக முக்கியமான பாடத்தைக் கற்பித்தது.

கோலியாத் எத்தனை கர்வமுடன், ஆணவத்துடன், பெருமையாக ‘நான் பெலிஸ்தன் அல்லவா’ என்பதைப் பாருங்கள்! பின்னர் இஸ்ரவேலரைப் பார்த்து ‘நீங்கள் சவுலின் சேவகர் அல்லவா’ என்பதையும் பாருங்கள்!

இத்தனை வருடம் தேவனாகியக் கர்த்தரின் வழிநடத்துதலுக்கு கீழ்ப்பட்ட இஸ்ரவேல் மக்கள், தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டதினால், ‘ நாங்கள் தேவாதி தேவனின் சேவகர் இல்லை , இனி நாங்கள் சவுலுக்கு சேவகம் செய்வோம்’ என்ற செய்தியை தங்கள் எதிரிகளுக்கு சொல்லாமல் சொல்லிவிட்டனர்.

அச்சச்சோ! அதிகாரம் கைமாறி விட்டதே! என்ன பரிதாபம்!

இதனால் என்ன நடந்தது பாருங்கள்! இஸ்ரவேலருக்கு இருந்த மதிப்பு சுத்தமாகப் போய்விட்டது. பரலோகத்தின் அதிகாரத்துக்கு கீழ்ப்பட்டிருந்தவரை இருந்த மதிப்பு, பூலோகத்தின் அதிகாரத்துக்கு கீழேவந்தவுடன் ஓடிப்போய்விட்டது. இஸ்ரவேலரின் தரம் குறைந்து போயிற்று. அவர்களை கோலியாத் வெறும் சேவகர்களாகத்தான் பார்த்தான்!

இங்குதான் கோலியாத் ஒரு பெரியத் தப்பு பண்ணிவிட்டான். அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களைக் கைவிட்டார் என்று நினைத்துவிட்டான். ஆனால் கர்த்தரோ வழிதவறிய தம்முடைய பிள்ளைகளைத் தம்மிடம் சேர்க்கும்படியாய் அவர்களுக்காக யாவையும் செய்து கொண்டிருந்தார்.

கோலியாத் நினைத்தான், ‘நான் பெரியவன் ஏனெனில் நான் பெலிஸ்தன், எனக்கு பின்னால் ஒரு பெரிய அதிகாரம் இருக்கிறது, நான் உயரத்திலும், எடையிலும் பெரியவன்’ என்று.

தாவீது அந்த இடத்தில் வந்தபோது அவன் எந்த விதத்திலும் கோலியாத்துக்கு சமம் இல்லாததுபோல் தெரிந்தது. ஆனால் ஒன்று மட்டும் வித்தியாசம்! அவன் சவுலின் சேவகன் அல்ல! தேவாதி தேவனின் சேவகன்!

என்ன அருமையான பாடம்! எத்தனை முறை நம்முடைய முகத்தில் அறைந்தாற்போல கோலியாத் நம்மைப் பார்த்து நாம் இந்த உலகத்தை சார்ந்தவர்கள்தான், நமக்கும் தேவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறான். நாம் தேவனுடைய அதிகாரத்துக்கு கீழ்ப்பட்டவர்கள் மட்டும் அல்ல, நாம்அவருடைய சுவிகாரப் புத்திரர் என்று அவனுக்குத் தெரியவில்லை! பாவம்!

ஒரு சின்ன சந்தேகம்! நீ என்றாவது உன் வாழ்க்கை கர்த்தரின் அதிகாரத்துக்கு உட்பட்டதை உணராமல் உன் வாழ்க்கைக்கு நீயே அதிபதி என்று நினைத்ததுண்டா?

இன்னொரு சந்தேகம்! தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!  உங்கள் வாழ்க்கையில் யார் இந்த கோலியாத்? நீ பரலோகத்துக்கு சொந்தம் இல்லை, பூலோகத்துக்குதான் சொந்தம் என்று உங்கள் மதிப்பைக் குறைக்கும் அவன் யார்? யார்?

சிந்தியுங்கள்! நம்மை ஏளனப்படுத்தும் கோலியாத்தை முழங்கால்களில் நின்று முறியடிப்போம்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 609 ஒரு மாவீரன் உருவாகியக் கதை!

1 சாமுவேல் 17: 36,37  அந்தச் சிங்கத்தையும், கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்.விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான். அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான்.  

பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்.

என்னுடைய பேரன் Zac க்கு பிரியமான விளையாட்டு பில்டிங் பிளாக் (building blocks) வைத்து ரயில் பெட்டி கட்டுவதுதான். அவன் ஒவ்வொரு பெட்டியாக செய்து அதை இணைத்து வீட்டில் சுற்றி சுற்றி வருவான். அவனுடைய சிறிய கையால் ஒவ்வொரு பிளாக்கையும் இணைக்கும் போது  இப்படித்தானே நம்முடைய வாழ்க்கையும் என்று யோசிப்பேன். ஒவ்வொன்றாக அடி மேல் அடி வைத்தது போல்  ஒன்று பின்னால் ஒன்றாய்  நடந்த சம்பவங்களால் தானே நாம் நாமாக உருவாகியிருக்கிறோம்.

அப்படித்தான் நாம் படிக்கும் தாவீதின் வாழ்க்கையும் உருவாயிற்று. சின்ன தாவீது சில கற்களையும், கவணையும் கொண்டு பெரிய கோலியாத்தைக் கொன்ற மாபெரும் சம்பவம் நம் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தாலும், அவனை இப்படிப்பட்ட தாவீதாக உருவாக்கிய சம்பவங்களைத் தான் இன்று பார்க்கப்போகிறோம்.

தாவீது கோலியாத்தைக் கொல்லும் முன்னால் சிறுவனாக தன்னுடையத் தகப்பனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது ஒரு கரடியும், பின்னர் ஒரு சிங்கமும் ஆடுகளைத் தாக்க வந்தது. இவைகள் தான் தாவீதின் வாழ்க்கையில் கர்த்தர் உபயோகப்படுத்தின முதல் பில்டிங் பிளாக்  என்று நினைக்கிறேன்.

பின்னர் அவன் சவுலை அலைக்கழித்த  பொல்லாத ஆவியிடமிருந்து அவனை அமைதிப்படுத்த சுரமண்டலம் வாசிப்பவனாகப் பார்க்கிறோம். இது ஒன்றும் பெரிய அரசாங்க வேலையோ அல்லது மதிப்பிற்குரிய வேலையோ இல்லை. ஒரு ஆறுதளிக்கும் இசையை வாசிப்பவன் அவ்வளவுதான்!

அதன்பின்னர் சவுலின் சேனையிலிருந்த அவனுடைய சகோதரர் யுத்தத்துக்கு சென்றபின் அவனுடைய தகப்பனாகிய ஈசாய் தாவீதை தன்னுடைய மூத்த குமாரருக்கு உணவு எடுத்த செல்ல உபயோகப்படுத்தினான். மற்றுமொரு முக்கியத்துவம் இல்லாத வேலை!

சரியான வேளையில் சரியான ஒருவன் தேவைப்பட்ட போது அந்த இடத்தை நிரப்ப தாவீது அங்கு அந்த வேளையை சந்திக்க தயாராக இருந்தான்.

இது எப்படியாயிற்று?  ஒவ்வொரு சிறிய பில்டிங் பிளாக் போல முக்கியத்துவம் இல்லாதது போல் காணப்பட்ட ஒவ்வொரு வேலயை அவன் செய்தபோதும் அவன் தேவனாகியக் கர்த்தரை நோக்கிப்பார்க்கவும், அவரை விசுவாசிக்கவும், அவரை முழுதும் நம்பவும் கற்றுக்கொண்டான்.

இன்று நீ ஒருவேளை என் தகுதிக்கு ஏற்ற வேலை எனக்கு இல்லை, என் திறமைகள் எல்லாம் வீணாகிறது என்று நினைத்து வருந்தலாம்! ஐயோ இந்த முக்கியத்துவம் இல்லாத வேலையால் எனக்கு என்ன பிரயோஜனம் என்று எண்ணலாம்.  அல்லது உன்னுடைய சூழல் உனக்கு திருப்தி அளிக்காமல் வேதனையாக அமைந்திருக்கலாம். ஆனால் நீயும் நானும் காணமுடியாத கை ஒன்று  சிறு சிறு பிளாக்குகளால்  உன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறது! நாம் காண முடியாத தேவனுடைய திட்டம் உனக்கு ஒருநாள் ஆச்சரியத்தைக் கொடுக்கும்.

நீ ஒன்றும் தண்ணீர் கலந்து பிசைந்து உருவாகும் மண் கலவையான பரிசுத்தவான் அல்ல!

நீ ஒன்றும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து  மைக்ரோ வேவ் பண்ணப்பட்ட ரெடிமேட் உணவு அல்ல!

நீ பிளாஸ்டிக் அல்லது காகிதத்தினால் கட்டப்படும் கட்டிடமும் அல்ல!

ஷ் ஷ் ஷ்!  பொறுமையாயிறு!  கர்த்தரை நம்பு! அவர் உன்னை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்! ஒருநாள் நீ உன் வாழ்க்கையைத் திரும்பிப்பார்த்து, உன்னுடைய உறுதியான அஸ்திபாரத்தையும், உன்னுடைய அழகிய கிறிஸ்தவ வாழ்க்கையையும், உன் வாழ்க்கையை கர்த்தர் ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போல உருவாக்கிய விதத்தையும் நினைத்து  கர்த்தருக்கு  நன்றி சொல்வாய்!  சோர்ந்து போகாதே!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதழ்: 608 தெய்வீகப் பிரசன்னம்!

1 சாமுவேல் 16: 23 அப்படியே தேவனால் அனுப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமணடலத்தை எடுத்து, தன் கையினாலே வாசிப்பான். அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து சொஸ்தமாவான்.

அழகான வர்ணம் தீட்டும் இருவரிடம் ஒரு அமைதியான சூழலை வரையும்படி கூறினர்.

ஒருவர் அமைதியை சித்தரிக்க, இரு மலைகளின் நடுவே ஓடும் ஒரு அமைதியான நீரோடையைத் தெரிந்துகொண்டார்.

மற்றொருவரோ மிக விரைவாக ஓடிவரும் ஒரு நீர்வீழ்ச்சியையும், அதன் அருகே காற்றினால் அலைக்கழிக்கப் பட்ட ஒரு மரத்தின் உச்சியில் நீர்வீழ்ச்சியின் வேகத்தால் தெரித்த நீரில் நனைந்த ஒரு சிறிய பறவை தன்னுடைய கூட்டில் அமைதியாக அமர்ந்திருந்ததையும் சித்தரித்தனர்.

இதை வாசிக்கும்போது நான் தெய்வீக பிரசன்னம் என்பது நாம் தேவனுடைய ஆலயத்தில் தான் உணரமுடியுமா? காற்றினால் அலைக்கழிக்கப்பட்ட வாழ்க்கையில் நம்முடைய வேதனைகளின் மத்தியில் அவருடைய பிரசன்னத்தை உணருவதில்லையா என்று நினைப்பேன்.

சவுல் தொடர்ந்து தேவனுடைய பிரசன்னத்தைத் தள்ளியதால் இன்னொரு பிரசன்னம் அவனைப்பற்றிக்கொண்டது. இந்த அதிகாரத்தில் 14 -23 வரை வாசிக்கும்போது என் உள்ளம் வேதனைப்பட்டது.

இந்த 10 வசனங்களில் நான்கு முறை ‘தேவனால் அனுப்பபட்ட ஆவி’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. அப்படியானால் தேவன் பொல்லாத ஆவியை அனுப்பினாரா? என்று வேதனையோடு சிந்திப்பேன். நாம் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என்று கர்த்தராகிய இயேசு சொன்னதுதான் நினைவுக்கு வரும். அவனுடைய சொந்த முடிவினாலே கர்த்தருடைய ஆவியானவர் அவனை விட்டு விலகியதால் அசுத்த ஆவி அவனுக்குள் வந்து அவனை அலைக்கழித்தது. அவன் எவ்வளவுதூரம் அந்த ஆவியால் அலைக்கழிக்கப்பட்டான் என்பதை இன்னும் சில அதிகாரங்கள் தள்ளி நாம் படிக்கலாம். ஒருமுறை தாவீதைக் கொலை செய்யும்படி தன்னுடைய கையிலிருந்த ஈட்டியை எரியும் அளவுக்கு அவனைக் கோபத்தினால் அலைக்கழித்தது அந்த ஆவி.

இந்தப் பின்னணியில் சவுலை அசுத்த ஆவி அலைக்கழிக்கும்போதெல்லாம் தாவீது அங்கு அழைக்கப்படுவான். அவன் வாசித்த சுரமண்டல இசையானது சவுலை ஆறுதல் படுத்தி அந்த பொல்லாத ஆவி அவனை விட்டு அகலச் செய்யும்.

இந்த இடத்தில் நாம் தாவீதைப்பற்றிப் படிக்கும் வரை அவன் தன் தகப்பனின் ஆடுகளைத்தான் மேய்த்துக்கொண்டிருந்தான். அவன் வனாந்திர வெளியில் ஆடுகளோடு இருந்தபோதெல்லாம் அவன் கண்கள் பரலோக தேவனை நோக்கிப் பார்க்கும். அந்த சூழல்தான் அவனுக்கு பரலோக தேவனின் பிரசன்னத்தை தன் சுரமண்டலத்தின்மூலம் வேதனையில் இருக்கும் ஆத்துமாக்களுக்கு  கொண்டுவர உதவியது.

1 சாமு: 16: 17 ல் சவுல் தன்னுடைய ஊழியரை நோக்கி, நன்றாய் வாசிக்கத்தக்க ஒருவனைத்தேடி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்பதையும், அந்த வேலைக்காரரில் ஒருவன், இதோ பெத்லெகேமியனான ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன், கர்த்தர் அவனோடு இருக்கிறார் என்பதையும் படிக்கிறோம்.

தாவீதைப் பற்றி அந்தப்பகுதியில் வாழ்ந்த எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது.

ஒரு நிமிடம்!  நம் குடும்பத்திலோ அல்லது நம் நண்பர்கள் மத்தியிலோ யாருக்காவது ஆறுதல் தேவைப்பட்டால் தாவீதைப் போல நம்மை அழைப்பார்களா? நம்மால் பரலோக தேவனின் ஆறுதலை வேதனையிலிருக்கும் ஒரு உள்ளத்துக்கு அளிக்க முடியுமா? நம்மோடு கர்த்தர் இருக்கிறார் என்று சாட்சி கூறுவார்களா?

நாம் இன்று தாவீதைப்போல நம்முடைய சுரமண்டலத்தாலும், சாட்சியாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்குக் கொடுத்து சென்ற மெய்சமாதானத்தை வேதனையினால் அலைக்கழியும் மக்களுக்குக் கொடுக்க நமக்கு உதவிசெய்வாராக!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்