கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 649 கர்த்தர் கணக்கு கேட்டால்?

1 சாமுவேல் 25: 36 அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜாவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது. அவன் இருதயம் களித்திருந்தது. அவன் மிகவும் வெறித்துமிருந்தான்.ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறிய காரியமானாலும்,பெரிய காரியமானாலும் ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.

ஆடுகள் மயிர் கத்தரிக்கும் காலம் கடந்து விட்டது! நாபாலுக்கு நல்ல வருமானம்! தாவீதிடம் நீயா நானா என்று பேசிவிட்டு, இப்பொழுது தாவீது நானூறுபேரோடு கர்மேலில் அவனைக்கொல்ல வருவதுகூடத் தெரியாமல் நாபால் வெறித்துக் களித்துக்கொண்டிருந்தான்!

அவனுடைய மனைவியாகிய அபிகாயில் தன்னைக் காப்பாற்றத் தீவிரித்து சென்றது கூடத் தெரியாமல் ராஜவிருந்து நடந்துகொண்டிருந்தது நாபாலின் வீட்டில்!

ஒருநிமிடம் கண்ணை மூடி இந்தக் களியாட்ட விருந்தை பாருங்களேன்! அங்கே அவர்கள் சத்தமாக சிரிப்பது கேட்கவில்லையா? அந்தக் குடிகாரர்கள் ஊற்றிக்குடிக்கும் மதுவின்  மணம் நம் நாசியைத் துளைக்கவில்லையா ?  ஏதோ நாளை என்று ஒன்று இல்லாததுபோலல்லவா கூத்தடிக்கிறார்கள்!

அபிகாயில் தாவீதை சந்தித்து திரும்பியபோது இந்தக் காட்சியைத்தான் பார்த்தாள்.

நாபால் தன்னுடைய வாழ்க்கையின் வெற்றியைக் கொண்டாடியது என்னை சற்று சிந்திக்க வைத்தது. இன்றைக்கு சொத்து சம்பாதிக்கும் பலர் இப்படித்தானே தங்கள் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்! இன்று யூ ட்யூபில் சில பணக்காரரின் திருமண வைபவங்களைப் பார்க்கும்போதும், அவர்கள் மணமக்களின் ஆடையில் பதிக்கும் பொன்னையும், வைரங்களையும் பார்க்கும்போதும் இவர்கள் நாபாலைப்போல நாளை என்று ஒன்று இல்லாததுபோல நடந்து கொள்கிறார்களே என்றுதான் நினைக்கத் தோன்றும்.

நாபால் தன்னுடைய மனைவியின் கண்களுக்கு முன்பாகவும், கர்த்தருடைய பார்வையிலும் தான் சம்பாதித்ததை குடித்து, வெறித்து, களியாட்டம் பண்ணிக்கொண்டிருந்தான்.

ரோமர் 14:12 ல் பவுல் கூறுகிறார்,’ ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்’ என்று. அப்படியானால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் கணக்கு கொடுக்கவேண்டுமென்ற பயம் நமக்குள் வேண்டும்!

நம்மில் பலர் இன்று நாபாலைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! நான் சம்பாதித்தது, நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன் என்று எண்ணிக்கொண்டு,  நாளை என்ற ஒன்று இல்லாததுபோல் இன்றைக்கே அனுபவிக்க நினைக்கிறோம்.

நாபாலுடைய இந்த எண்ணம் அவனை அழிவுக்குள்ளாக்கியது! ஒவ்வொரு சிறிய ஆசிர்வாதமும் கர்த்தருடைய கரத்தில் இருந்து வருகிறது என்று எண்ணாமல், நாபாலைப்போல நான் சம்பாதித்த சொத்தை எப்படி வேண்டுமானலும் செலவிடுவேன் என்று வாழ்வோமானால் நாமும் அழிந்து போவோம்!

இன்று கர்த்தர் உன்னிடம் கணக்கு கேட்டால், உன் வாழ்க்கையில் என்னென்ன அவருக்குப் பிடித்தவை, என்னென்ன அவருக்குப் பிடிக்காதவை என்று என்றாவது சிந்தித்ததுண்டா?

சிந்தித்து பார்!

கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாரா!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

Leave a comment