Archive | April 2019

இதழ்: 675 எதிர்பார்த்தல் 2: நம்பிக்கை!

எரேமியா: 17:7  கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

நம்பிக்கை! இந்த வார்த்தைக்கு அர்த்தத்தைத் தேடி நான் அகராதிக்கு போகவேண்டாம்! அந்த வார்த்தையின் அர்த்தத்தை என் அம்மாவிடம் கண்டிருக்கிறேன். தன்னை நம்பி யார் எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் தன்னால் முடிந்தவரை சரியாக செய்து முடிக்கும் குணம் அம்மாவிடம் இருந்தது. ஒரு காரியத்தை மறுபடியும் ஞாபகப்படுத்தவே தேவையில்லை! எப்படியாவது அது நடந்து விடும்!

ஆனால் அம்மாவைவிட நான் நம்பக்கூடியவர் யார் தெரியுமா?  என்னுடைய பரம பிதாவைத் தான்! அவரும் என் காரியம் எதையும் மறப்பதே இல்லை!

இதோ என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன் ( ஏசா:49:16) என்று என்னிடம்  கூறுகிறார்.

கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது  ( சங்:100:5)

D.L. மூடி பிரசங்கியார் அவர்கள் கர்த்தரை மிகவும் அதிகமாக நெருங்கி, அவரை முழுவதுமாக விசுவாசித்து, அவர்மேல் நம்பிக்கை வைத்த ஒருவர். அவர் வெறும்தரையில் முழங்கால் போட்டு ஜெபித்த இடம் தான் இன்று மூடி வேதாகமக் கல்லூரியாக பல்லாயிரக்கணக்கான வேத வல்லுநர்களை உருவாக்க்கிக்கொண்டிருக்கிறது. அதே இடத்தில் நிற்கும் சிலாக்கியத்தை கர்த்தர் எனக்கும் தந்தருளினார். அவர் இப்படியாக எழுதுகிறார்,

உன்னை நம்புவாயானால் நீ நிச்சயமாக சோர்வடைவாய்!

உன்னுடைய நண்பர்களை நம்புவாயாகில் அவர்கள் மரித்து உன்னை விட்டு செல்வார்கள்!

உன்னுடைய சொத்தை நம்புவாயாகில் அத் உன்னைவிட்டு எடுபட்டு போகலாம்!

உன்னுடைய பேரையும் புகழையும் நம்புவாயாகில் ஒரு அநீதனுடைய நாவு அதை அழித்துவிடும்!

ஆனால் கர்த்தரை நம்புவாயாகில் அவர் இம்மையில் மட்டுல் அல்ல மறுமையிலும் கைவிடமாட்டார்!

முழுவதும் நம்பத்தக்க ஒருவரை எதிர்பார்க்கிறாயா? உன் வாழ்க்கையில் உன்னைக் கைவிட்டுவிடாமல் உன்னோடு பயணிக்க ஒருவரைத் தேடுகிறாயா?  கர்த்தராகிய இயேசு உன்னை மறக்கவும் மாட்டார், கைவிடவும் மாட்டார்.  எந்த சூழ்நிலையிலும் உனக்கு நம்பிக்கையானவர் அவர்  மட்டுமே!

நாம் அவரை  எவ்வளவு அதிகம் நம்புகிறோமோ அவ்வளவு அதிகம் அவர் எவ்வளவு நம்பிக்கையானவர் என்று அறிந்து கொள்ளலாம்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 674 எதிர்பார்த்தல் 1: உண்மை

சங்: 34:8  கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

நம் ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் உண்டு. இந்த வாரம் நான்கு எதிர்பார்ப்புக்ளைப் பற்றிப்படிக்கப்போவதாக சொல்லியிருந்தேன்.

உங்களிடம் ஒரு கேள்வி!  யாருடனாவது பழகும்போது அவர் மிகவும் நல்லவராகவும், மனதுக்கு  பிடித்தவராகவும் இருந்து, பின்னால் நீங்கள் எதிர்பாராத அளவுக்கு  முற்றிலும் மாறான  குணம் படைத்தவர் என்று தெரிய வரும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? நிச்சயமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட அனுபவம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

நம்முடைய  வாழ்வில் மறுபடியும் மறுபடியும் பார்த்தவுடன் நல்லவர் என்று நம்ப வைக்கக்கூடிய பலரை கடந்து வருகிறோம்.  அவர்கள் நல்லவர்களைப் போலக் காணப்படலாம், பேசவும் செய்யலாம்.  நாம் அதில் மயங்கி அவர்கள் வலையில் விழுந்து விடுவோம். அதன் பின் என்றாவது ஒருநாள் ஏதாவது ஒரு சம்பவத்தின்போது நாம் சுத்தமாக எதிர்பார்க்காத ஒரு காரியத்தை அவர் செய்யும்போதுதான் நாம் ஏமாந்துவிட்டோம் என்று புரியும்.

வேதத்தில் நான் வாசித்த ஒரு சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. லூக்கா 7 ம் அதிகாரத்தில், யோவான்  தன்னுடைய சீஷர்களை இயேசுவினிடத்தில் அனுப்பி, வருகிறவர் நீர்தானா? அல்லது இன்னொருவர் வர காத்திருக்க வேண்டுமா என்று கேட்கும்படி சொல்லி அனுப்பினார். அந்த வேளையில் இயேசு அநேக அற்புதங்களை செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர்களை நோக்கி, நீங்கள் போய் கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள் என்றார்.

இதற்கு அர்த்தம் என்ன? நீர் உண்மையாகவே மேசியாவா? உம்மை நம்பலாமா என்ற அவர்களுடைய கேள்விக்கு அவர், ஆம்!, நான் தான்! என்று கூறாமல் அவர்களைத் தம்முடன் தங்க வைத்து, தம்முடைய அற்புதங்களை அவர்களைக் காண செய்து, நீங்கள் கண்டவைகளையும், கேட்டவைகளையும் விசுவாசித்தவைகளையும் பற்றி சொல்லுங்கள் என்றார்.

கர்த்தர் நம்மிடம் கூட, நான் நல்லவர், நான் உண்மையானவர், நான், நான், நான் என்று கூறுவதே இல்லை! அதற்கு மாறாக அவர்,  கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்  என்கிறார்.

நான் சிறிய வயதில் எதையும் சாப்பிட ரொம்ப கஷ்டப்படுவேன். அப்பொழுது என்னுடைய அம்மா ஒன்று மட்டும் கூறுவார்கள்.  முன்னால் வைக்கும் சாப்பாட்டில் ஒரு பிடி மட்டும் சாப்பிட வேண்டும். ஒருவேளை அந்த ருசி எனக்கு பிடிக்கவில்லையானால் அதை விட்டு விடலாம். ஆனால் அந்த ஒரு பிடி மட்டும் கட்டாயம் சாப்பிட வேண்டும்! சாப்பிடுவதா இல்லையா என்று முடிவு எடுக்கும் முன் அந்த சாப்பாட்டை ருசி பார்க்க வேண்டும்.

ஒருவேளை நல்லவர் என்று நம்பிய ஒருவர் உன்னைக் கைவிட்டதால் இன்று உன்னால் கர்த்தரைக்கூட நம்ப முடியாத நிலையில் நீ இருக்கலாம். ஒரு நிமிஷம்! கர்த்தரை நீ ருசித்துப் பார்! அவர் எத்தனை நல்லவர் என்று உனக்குத் தெரியும்!

நீ நம்பிய ஒருவர் உன்னுடைய எதிர்பார்ப்புகளை உடைத்து, தன்னுடைய உண்மையில்லா குணத்தினாலும், பொய்யினாலும், துரோகத்தினாலும் உன்னுடைய நம்பிக்கையை உடைத்தெரிந்திருக்கலாம்! அதனால் இன்று நீ மிகுந்த கசப்புடன் உன் பரலோகப் பிதாவைக்கூட நம்ப முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம்! ஒரு நிமிஷம்! கர்த்தரை நீ ருசித்துப் பார்! அவர் எத்தனை நல்லவர் என்று உனக்குத் தெரியும்!

நீ ஒருவேளை உண்மையாக நம்பக்கூடிய ஒரு கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறாயா? ஒரு நிமிஷம்! கர்த்தராகிய இயேசுவை ருசித்துப் பார்! அவர் எத்தனை நல்லவர் என்று உனக்குத் தெரியும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்: 673 உன் எதிர்பார்ப்பு என்ன?

சங்கீதம் 62:5  என் ஆத்துமாவே தேவனையே நோக்கி அமர்ந்திரு, நான் நம்புகிறது அவராலே வரும்.

பல வருடங்களுக்கு முன்பு என்னுடைய கம்பெனியின் தேவைக்காக ஒருவரை அணுகினோம். அவர் நேரில் வந்து எங்களோடு பேசிய பின்னர் எங்களுக்கு உதவுவதாக வாக்குக்கொடுத்தார்.  ஆனால் அதன்பின்னர் நாங்கள் பலமுறை அணுகியும் அவர் வாக்குக்கொடுத்ததை காப்பாற்றவில்லை. நாங்கள் அவரை நம்பி ஏமாந்தது தான் மிச்சம்.  இதைப்பற்றி நான் அடிக்கடி யோசிப்பதுண்டு!  இந்த என்னுடைய ஏமாற்றத்துக்கு காரணம்  நான் கேட்டது கிடைக்காததினால் அல்ல நான் அதை அதிகமாக எதிர்பார்த்ததினால்தான் என்று உணர்ந்ததும் உண்டு!

இன்னும் சில நாட்கள் நான் இந்த எதிர்பார்ப்பு என்ற தலைப்பில் இங்கு எழுதலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் இதை நான் படிக்க ஆரம்பித்தபோது  எப்படி நம்முடைய நான்கு விதமான எதிர்பார்ப்புகள் நாமுடைய உறவை பாதிக்கின்றன என்று காண முடிந்தது.  தாவீது பத்சேபாளுடன் கொண்ட உறவில் நிரைவேறாத எதிர்பார்ப்புகள் இருந்தன. அதனால்தான் நாம் நம்முடைய எதிர்பார்ப்புகள் நம்முடைய உறவுகளை எப்படி பாதிக்கும் என்று பார்க்கப்போகிறோம்.

எதிர்பார்ப்பு 1  உண்மை,  எதிர்பார்ப்பு 2: நம்பகம்,   எதிர்பார்ப்பு 3: திடம் ,   எதிர்பார்ப்பு: 4 பொறுப்பு என்ற தலைப்புகளில் திங்கள் முதல் வியாழன் வரை படிக்கப்போகிறோம், தவறாமல் வாசியுங்கள்!

இந்த நான்கு விதமான எதிர்பார்ப்பையும்பற்றி படித்த நான்  இந்த எல்லா எதிர்பார்ப்புக்கும் பாத்திரரான ஒருவரை இதுவரை சந்தித்துள்ளேனா என்று யோசித்துப் பார்த்தேன். என்னுடைய பதில் ‘ ஒருவர் மட்டுமே’.

ஆம் என்னுடைய பரலோகத் தந்தை மட்டுமே! எனவே நாம் இந்த எதிர்பார்ப்புகளைப் பற்றி படிக்கும்போது, தேவனாகிய கர்த்தர் எப்படி நம்முடைய ஒவ்வொரு எதிர்பார்த்தலையும் சந்திக்கிறார் என்றும் பார்ப்போம்.

இந்த நான்கு நாட்களுக்கு பின்னர் நீங்களும் நானும் பரிசுத்த பவுலோடு சேர்ந்து,

நாம்  வேண்டிகொள்கிறதற்கும், நினைக்கிறதற்கும்,மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்கு செய்ய வல்லவராகிய அவருக்கு    ( எபே: 3:20) நாம் சகல மகிமையையும் செலுத்தக்கூடியவர்களாக வேண்டும் என்பதே என்னுடைய ஜெபம்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

இதழ்: 672 பழிவாங்குதல் நமக்குரியது அல்ல!

2 சாமுவேல் 3: 26,27  யோவாப் தாவீதை விட்டு புறப்பட்டவுடனே அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டுவரும்படி ஆட்களை அனுப்பினான். அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல அவனை ஒலிமுகவாசலின்நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய்  தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான்.

இன்றைய வசனங்களை என்ன வார்த்தையால் விவரிப்பது என்றே தெரியவில்லை.

முதலாவது அப்னேர் சவுலின் படைத்தலைவன், ஒரு வீரன். எத்தனையோ யுத்ததங்களையும், எத்தனையோ இரத்தவெள்ளத்தையும் கண்டவன். சவுலின் குமாரன் இஸ்போசேத்துடன் வந்த மன வருத்தத்தால் அவன் தாவீதின் பக்கம் சேர்ந்து அவனுக்காக வேலை செய்தான். இந்த சந்தோஷமான  விஷயத்தை தாவீதோடு பகிர்ந்துகொண்டு மன மகிழ்வோடு திரும்புகையில் அவனுடைய உள்ளத்தில் அமைதி  இருந்தது.

ஆனால் இந்த செய்தியைக் கேள்விப்பட்ட  தாவீதின் சகோதரியின் மகனும், தாவீதின் படைத்தலைவனுமாகிய யோவாப், தாவீதுக்கும் அப்னேருக்கும் இடையில் நடந்த ஒப்பந்தத்தில் சற்றும் விருப்பம் காட்டவில்லை. அவன் தாவீதிடம் போய் ஏன் இப்படி செய்தீர் அந்த அப்னேர் உம்மை மோசம் பண்ணி விடுவான் என்று கூறுகிறதைப் பார்க்கிறோம்.

உண்மையில் பார்த்தால் யோவாபுக்கும் அப்னேருக்கும் இடையில் ஒரு கசப்பான சரித்திரம் இருந்தது.  யோவாபின் சகோதரனை அப்னேர் கொன்றுவிட்டான். அதை யோவாப் ஒருநாளும் மறந்ததே இல்லை. இப்பொழுது பழிவாங்க ஒரு நல்ல தருணம் கிடைத்து விட்டது.

யோவாப் தாவீதுக்கு தெரியாமல் அப்னேரை அழைத்து வரும்படி தூதுவரை அனுப்புகிறான். திரும்பிவந்த அப்னேரிடம் நல்ல வார்த்தைகளைப் பேசி அவனைத் தனியே அழைத்துசென்று அவன் வயிற்றிலே குத்தி கொலை செய்கிறான். வேதம் தெளிவாக சொல்கிறது,  தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான் என்று.  ஆனால் என்ன நடந்தது? அவன் தம்பி ஆசகேல் உயிரோடு வந்து விட்டானா என்ன?  இந்த சம்பவம் தாவீதுக்கு யோவாப் மீது கடும் கோபத்தைதான் வர வைத்தது.

கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது எவ்வளவு உண்மை!  அப்னேர் யோவாபின் சகோதரனைக் கொன்றான்! யோவாப் அப்னேரை கொன்றான்! நீ எனக்கு எதை செய்தாயோ அதை உனக்கு நான் செய்வேன்!

இது பழைய ஏற்பாட்டில் மட்டும் நடந்த ஒன்றா என்ன ? இன்றும் இப்படித்தானே நடந்து கொண்டிருக்கிறது.

யாரையாவது பழிவாங்க காத்துக்கொண்டிருக்கிறாயா? என்னை எப்படி ஏமாற்றலாம், நான் அவர்களை ஏமாற்றுவேன் என்ற எண்ணம்! எனக்கு என்ன நடந்ததோ அது அவர்களுக்கும் நடக்க வேண்டும் என்ற எண்ணம்! என் தலையில் கரியைப் கொட்டினார்கள்  அவர்கள் தலையில் நெருப்பைக் கொட்டுவேன் என்ர எண்ணம்!

பழிவாங்குதல் என்ற ஆயுதம் இந்த உலகிலேயே மிகக்கொடிய ஆயுதம்! அதை கையில் எடுக்காதே! அது உனக்குரியது அல்ல என்று கர்த்தர் சொல்லும் சத்தத்தைக் கேள்!

கூடுமானால் உங்களானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.

பிரியமானவர்களே பழிவாங்குதல் எனக்குரியது. நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

( ரோமர் 12:18,19)

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்: 671 உள்ளம் போன போக்கில்!

2 சாமுவேல்: 3: 21 அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய் இஸ்ர்வேலரை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டு வருகிறேன். அதினாலே உம் ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்.

இன்றைய வசனத்தை வாசிக்கும்போது அது நம்முடைய அன்றாட வாழ்வில் நமக்கு எதைக் கற்ப்பிக்கிறது என்று சற்று நேரம் சிந்தித்தேன்.  என்னுடைய சொந்த அனுபவங்களுக்காக நான் இன்று கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நான் விரும்பினது எல்லாமே எனக்கு நிச்சயமாக கிடைத்ததில்லை.  சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காமல் வருகிற சில சந்தோஷம் தான் நமக்கு  மிகவும் திருப்தியளிப்பதாக உள்ளது!

சவுலுடைய சேனையின் தளபதியாகிய அப்னேர் தாவீதைப் பார்த்து உம் ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்பதைப் பார்க்கிறோம்.

அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் மேல் கடும் கோபமூண்டு இருந்தான் என்று நாம் பார்த்தோம். ஏனெனில் அவன் அப்னேரை ஒரு பெண்ணுடன் இணைத்து அவதூறு பேசியிருந்தான். அதற்கு பழிவாங்கவே அவன் இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் தாவீதின் ஆளுகைக்கு உட்படுத்த முயன்றான். அதை இதுவரை வெற்றிகரமாக செய்து கொண்டு வந்தான்.

இந்த நல்ல செய்தியை தாவீதிடம் சொல்ல வந்த அப்னேர், உம் ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான். இந்தப் பகுதியில் நான் சேர்க்க வேண்டிய வாசகம் ஒன்றே ஒன்றுதான்! உன் ஆத்துமா எதை விரும்புகிறது என்பதைக் குறித்து ஜாக்கிரதை!

தாவீதின் ஆத்துமா அப்னேரின் வார்த்தைகளை அப்படியே பற்றிக்கொண்டது போலும்! விசேஷமாக பெண்களின் விஷயத்தில்! அவன் விரும்பியதையெல்லாம் அடைய நினைத்தான்! அவனிடம் அதிகாரம் இருந்தது! வல்லமை இருந்தது!  பணம் இருந்தது! அதனால் அவன் தான் எதை விரும்பினானோ அதை அடைய நினைத்தான்!

இது பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு நடந்தது மட்டுமல்ல இன்றும் நடக்கிறது!  இன்றைக்கு மீடியா மூலமாக நாம் பார்க்கிற வாழ்க்கை நமக்கு வேண்டும் என்ற ஆசை!  கிரெடிட் கார்டுகள் கடன் கொடுப்பதால் எல்லாவற்றையும் வாங்க ஆசை!

தாவீது தன் வாழ்க்கையை பாழடித்தபின்னர், தான் தன்னுடைய் இருதயத்தின் வாஞ்சையின் படி நடந்தது என்றோ ஒருநாள் அப்னேர் அவன் இருதயத்தில் விதைத்த விதை அல்ல என்று நன்கு தெளிவாக அறிந்த தாவீது இப்படியாக எழுதுவதைப் பார்க்கிறோம்,

இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்த்தரித்தாள்.

இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர், அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.

( சங் 51: 5,6)

நம்முடைய தேவனாகிய கர்த்தர் நாம் ஒவ்வொருவரும் உள்ளத்தில் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறார். அதுமட்டுமல்ல அதற்கான தெய்வீக ஞானத்தையும் நமக்கு அவர் கொடுக்க சித்தமுள்ளவராயிருக்கிறார். அவரை உண்மையாய் நாம் நேசிக்கும்போது மட்டும்தான் நம்முடைய நம்முடைய வாஞ்சை முற்றிலும் நிறைவேறும். கர்த்தருடைய சித்தமில்லாத காரியத்திலும், கர்த்தருக்கு பிரியமில்லாத காரியத்திலும் மனதை அலைய விட வேண்டாம்!

உங்கள் சகோதரி

பிரேமாசுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

இதழ்: 670 உனக்கு சொந்தமில்லாத ஒன்றின்மேல் ஆசையா?

2 சாமுவேல் 3: 15,16 அப்பொழுது இஸ்போசேத் அவளை லாயீசின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் புருஷனிடத்திலிருந்து அழைத்துவர ஆட்களை அனுப்பினான். அவள் புருஷன் பகூரீம்மட்டும் அவள் பிறகாலே அழுதுகொண்டு வந்தான். அப்னேர் அவனை நோக்கி நீ திரும்பிப்போ என்றான். அவன் திரும்பிப்போய்விட்டான்.

தாவீதுக்கும் மீகாளுக்கும் நடுவில் இருந்த அன்பின் கதை 1 சாமுவேல் 18:28 ல் ஆரம்பித்தது.  மீகாள் தாவீதை நேசித்தாள், ஆனால் ஒருவேளை தாவீது அவளை உண்மையாக நேசித்தானா அல்லது ராஜாவின் மகள் என்பதற்காக மணந்தானா என்றுதான் தெரியவில்லை!  இந்த சம்பந்தம் ஒருவேளை தாவீதுக்கு பலன் கொடுப்பதாயிருந்திருக்கலாம்.

சவுல் தாவீதை கொலை செய்ய முயன்றபோது மீகாள் தாவீதின் பக்கம் இருந்து அவனை காப்பாற்றினாள். தாவீதைக் காப்பாற்ற அவள் தன் தகப்பனையே ஏமாற்ற வேண்டியிருந்தது. ஆனாலும் தாவீது சவுலுக்கு தப்பியோடும்போது மீகாளைப் பற்றி நினைத்ததாகவும் தெரியவில்லை, அவளைப்பற்றி விசாரித்ததாகவும் தெரியவில்லை. மீகாள் அவன் கண்களில் படவே இல்லை.

பின்னர் தாவீது இரு பெண்களை மணந்தான்! மீகாளை அவள் தகப்பனாகிய சவுல் பல்த்தியேலுக்கு விவாகம் செய்து கொடுத்தது அவன் செவிகளை எட்டியது. அந்தக்காலகட்டத்தில் பெண்கள் அதிகம் பேச முடியாது. அவள் நேசித்த ஒருவனிடமிருந்து அவள் தகப்பன் அவளை பிரித்து வேறொருவனுக்கு கொடுத்துவிட்டான்.

ஆனால் வேதம் நமக்கு சொல்லாத இன்னொரு காரியம் நடந்திருக்கிறது. பல்த்தியேலுக்கும் மீகாளுக்கும் நடுவில் ஒரு நல்ல உறவு இருந்தது. பல்த்தியேல் மீகாளை நேசித்தான். இஸ்போசேத் அவளை அழைத்து வர ஆட்களை அனுப்பிய போது பல்த்தியேல் அழுதான். அழுதுகொண்டே அவள் பின்னாக சென்றான் என்று பார்க்கிறோம்.

என்ன கொடுமையான காரியம்! பல்த்தியேல் மீகாளை நேசித்தான் ஆனால் தாவீதுக்கு அவளை அவள் கணவனுடைய அன்பின் கரத்திலிருந்து பிரிக்க அதிகாரம் இருந்தது! தாவீதுக்கு அந்த சமயத்தில் ஆறு மனைவிகள் இருந்தப்போதும் அவன் மீகாளை தன் அதிகாரத்தை உபயோகப்படுத்தி அடைய நினைத்தான்.

நமக்கு சொந்தமில்லாத ஒன்றை நம்முடைய அதிகாரத்தை பயன்படுத்தி பறித்துக்கொள்ள நாம் முயற்சி செய்வதில்லையா அப்படித்தான்! எத்தனை குடும்பங்கள் இப்படி சீரழிந்து கொண்டிருக்கின்றன!

இந்தக்கதை ஒன்றும் ‘அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்று முடியும் கதை அல்ல! இதன் பின்பு தாவீதின் குடும்பத்தில் யாருமே சந்தோஷமாக இருக்கவில்லை.

உன் வாழ்க்கையில் வேறொருவருக்கு சொந்தமான ஒன்றை நீ ஆசைப்பட்டு அடைய விரும்புகிறாயா? விட்டுவிடு! தாவீதைப்போல தவறு செய்யாதே!எல்லா பொல்லாங்குக்கும் பின் விளைவு உண்டு!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

இதழ்: 669 எப்படியாவது அடைய வேண்டும் என்ற ஆசை!

2 சாமுவேல் 3:14    ….  நான் பெலிஸ்தருடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து, விவாகம் பண்ணின என் மனைவியாகிய மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான். 

தாவீது சவுலின் மகளாகிய மீகாளைத் திருமணம் செய்ய சவுல் கேட்டதையெல்லாம் செய்திருந்தான். ஆனால் சவுல் தாவீதைப் பழிவாங்க நினைத்து அவன் மனைவியாகிய மீகாளை வேறொருவனுக்கு விவாகம் செய்திருந்தான். இப்பொழுது சவுல் மரித்த பின் தாவீது தனக்கு நடந்த அநியாயத்தை சரி செய்யப் பார்க்கிறான். இந்த வேளையில் அவனுக்கு ஆறு மனைவிகளும், அநேக பிள்ளைகளும் இருந்தாலும், அவனுக்கு இன்னொருத்தி தேவைப்பட்டாள்!

அப்னேருக்கும், இஸ்போசேத்துக்கும் இடையிலான மன வருத்தத்தை தனக்கு சாதகமாக உபயோகப்படுத்தி, இச்போசேத்திடம் அவன் சகோதரியான மீகாளை அனுப்பி விடும்படி செய்தியனுப்ப சொன்னான்.

மீகாள் இன்னொருவனின் மனைவியென்பது அவனுக்கு பெரிதாகப் படவில்லை! மீகாள் தனக்கு வேண்டும்! அவ்வளவுதான்!

இதை வாசிக்கும்போது, என்னை திருப்தி படுத்த நான் எத்தனை முறை மற்றவர்களுடையத் தேவையை மறுதலித்திருக்கிறேன் என்று யோசித்தேன்.

நிச்சயமாக சொல்கிறேன்! நாம் ஒவ்வொருவருக்குள் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் புதைந்திருக்கும். நம்மை உயர்த்த, நமக்கு பிடித்ததை அடைய, நாம் யாரையாவது உபயோகப்படுத்தியிருக்கிறோமா? தாவீதைப் பொறுத்தவரை அவனுக்கு இருந்த பெரிய குடும்பம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவனுக்கு மீகாள் தேவை! அவளை அடைந்தே ஆக வேண்டும்! அதற்காக யாரை வேண்டுமானாலும் பணயம் வைக்கலாம்.

இதனால் மீகாளின் குடும்பத்தில் என்ன பிரச்சனை வந்தால் என்ன? அதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் தன் அதிகாரத்தை உபயோகப்படுத்தி அவளை அழைத்து வர சொல்கிறான். அவனுடைய ஆறு மனைவிகளோடு ( நமக்குத் தெரிந்தது) திருப்தியாக இருந்திருந்தால் மீகாளுடைய குடும்பம் கஷ்டப்பட்டிருக்காது அல்லவா!  தாவீதுக்கு மேலும் மேலும் அடைய ஆசை! இந்த ஆசைதான் ஒருநாள் கட்டுக்கடங்காமல் அவனை பத்சேபாளிடம் பாவம் செய்யும்படி தள்ளியது.

எப்படியாவது உன் ஆசையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் மற்றவர்களை அலட்சியப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறாயா?  அது தாவீதைப்போல பெரிய பாவத்தில் தான் போய் முடிவடையும்! சிந்தித்து செயல் படு!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்