Archive | June 2019

இதழ்: 707 பார்க்க அழகாயிருந்தால் ???

2 சாமுவேல் 11:2  அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள்.

ஒரு பெண்ணைப்பார்த்து நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்லி பாருங்கள்! அந்த முகத்தில் காணும் புன்னகையே வேறாக இருக்கும். யாருக்குத்தான் பிடிக்காது தன்னை ஒருவர் அழகு என்று வர்ணிப்பது.

தாவீதின் அராசாட்சியின் இரண்டாம் பாகத்தை 2 சாமுவேல் 11 ம் அதிகாரத்தில் எழுதியவர், பத்சேபாள் வெகு சௌந்தரவதியாயிருந்தாள் என்று எழுதத் தவறவில்லை.

ஒருவேளை அவள் அழகில்லாதவளாய் இருந்திருந்தால் ஒருவேளை தாவீது அவளுக்கு அந்த நாளைக் கொடுத்திருக்கமாட்டானோ என்று நான் நினைத்தது உண்டு.  இந்தக் கேள்வி எனக்கு நாம் எப்படி ஒருவரின் வெளியரங்கத்தைப் பார்த்து உடனே அவரைப் பற்றிய தீர்ப்பை நம் மனதில் எழுதுகிறோம் என்று நினைப்பூட்டியது.

என்னுடைய பள்ளியின் இறுதியாண்டுகளில் நான் ஆடம்பரமாய் உடை உடுத்தியதோ அல்லது நவீனமாய் வாழ்ந்ததோ இல்லை. என்னுடைய ஆடைகள் எனக்குத் தெரிந்தவரை அம்மா தைத்துக் கொடுத்தவை தான். ஒருநாளும் ரெடிமேட் எதுவும் வாங்கியதில்லை. தலை முடி நீளமாக இருந்ததால் நன்றாக பின்னி ரிபன் கட்டிவிடுவேன்.  சினிமாவுக்கோ அல்லது பார்க்குகளுக்கோ நண்பர்களோடு சென்றதில்லை. நான் பார்க்க அழகாக இல்லை என்று நிச்சயமாக சொல்ல மாட்டேன் ஆனால் ஆடம்பரமாய் அலைந்த கூட்டத்தில் நான் சேர்ந்ததில்லை. எனக்கென்று ஒருசில நல்ல தோழிகள் இருந்தனர். நாங்கள் ஒரு தனிப்பட்டவர்களாகவே இருந்தோம்.

சில வருடங்களுக்கு பின்னர் ஒருநாள் என்னோடு படித்த ஒரு நண்பனைப் பார்த்தேன். என்னைப்பார்த்தவுடன், ஐயோ அடையாளமே தெரியவில்லை! இப்படி மாறிவிட்டாய் என்றான். எப்படி மாறிவிட்டேன் என்று எனக்கு புரியவில்லை. கட்டுப்பாடான என் உள்ளான வாழ்க்கை என்றுமே மாறியதில்லை!

சென்னையை விட்டு வெளியே படித்துக் கொண்டிருந்ததால் உடை, தலை பின்னல் இவை சற்று மாறியிருந்தது. என்னுடைய வெளிப்புற மாறுதல் அவன் கண்களில் பளிச்சென்று பட்டது போலும்.  இதில் வருந்தக்கூடிய காரியம் என்னவென்றால், தாவீதைப் போலத்தானே நாமும் வெளிப்புறமாய் சற்று அழகாக ஏதாவது தென்பட்டால் நம் கண்களை அகற்றவே மாட்டோம்.

ஏவாள்  பார்த்த கனி பார்வைக்கு அழகாக இருந்தது!  அவள் அதை இச்சித்தாள்!

யோசுவா 7: 20 -21 ல்  ஆகானின் பார்வைக்கு ஒரு பாபிலோனிய சால்வையும்,  வெள்ளிச்சேர்க்கையும், பொன்பாளமும் அழகாய்த் தோன்றின! அவன் அவைகளை இச்சித்தான்.

தாவீது தன் அரமனை உப்பாரிகையின் மேலிருந்து பார்த்த பெண் கண்களுக்கு அழகாக இருந்தாள். அவன் அவளை இச்சித்தான்!

இன்று உன் பார்வையில் எது அல்லது யார் அழகாய்த் தோன்றுகிறார்கள்? யாரை இச்சிக்கிறாய்?  வெளிப்புற தோற்றம் மாயையாக இருக்கலாம்! ஏமாந்துவிடாதே!  இதுதான் தாவீதைத் தவறி விழ செய்தது! பின்னர் சங்கீதங்களை எழுதும்போது, வெளிப்புறமாய்த் தன் கண்களை அலைய விட்ட முட்டாள்த்தனத்தை பற்றி அடிக்கடி அவன் எழுதினான்.

நீயும் முட்டாளாய் இருந்துவிடாதே!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

 

 

 

Advertisements

இதழ்: 706 ஊக்குவிக்கப்பட்ட சோதனை!

2 சாமுவேல் 11: 2  ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பாரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பாரிகையின் மேலிருந்து கண்டான்.

நம் மத்தியில் அதிகமாக பேசப்படும் தாவீது, பத்சேபாள் என்பவர்களின் கதையை நாம் ஆழமாக படிக்கப்போகிறோம்.

இந்தக் கதையை நாம் தொடருமுன், தேவனாகிய கர்த்தர் ஆதாம் ஏவாளிடம், ஏதேன் தோட்டத்தில் எச்சரித்துக் கூறிய வார்த்தைகளை  பாருங்கள்.

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும்   புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப்  புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று  கட்டளையிட்டார். (ஆதி:2:16,17)

இது ஏதோ சாதாரண எச்சரிக்கை அல்ல!  ஏதோ ஒரு பழத்தை சாப்பிடக்கூடாது என்று!  இது கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தேவன் கொடுக்கும் எச்சரிக்கை!   எல்லாம் அறிந்த அறிவு என்னும் நச்சுக்கழிவு  நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை அழித்துவிடும் என்ற எச்சரிக்கை. தேவன் தம்முடைய கிருபையால் தம்முடைய பிள்ளைகளை இந்த பொல்லாங்கிலிருந்து விலகியிருக்கும்படி ஞானமாக எச்சரித்தார்.

வேதத்தை முதலில் இருந்து என்னோடு படித்து வருபவர்களுக்குத் தெரியும், தேவன் தம்முடைய பிள்ளைகளை அழிக்க அல்ல பாதுகாக்கவே முயற்சிப்பவர் என்று. பல நேரங்களில் கர்த்தருடைய ஜனம் கீழ்ப்படியாமல் போன வேளையிலும், அவர்களை நியாயம்தீர்த்து தண்டித்து விடாமல், தகுதியே இல்லாத அவர்களுக்கு தன் கிருபையை அளித்து பாதுகாத்தார். இந்த தேவனாகிய கர்த்தரின் இரக்கத்தையும், கிருபையையும் பின்னணியாகக் கொண்டு, நாம் உல்லாசமாய் தன் வீட்டின் உப்பாரிகையின்மேல் தரித்திருந்த தாவீதின் வாழ்க்கையைப் பார்ப்போம்.

எபிரேய வழக்கத்தின்படி இந்த சாயங்கால வேளை என்பது மதிய வேளை. உண்டபின் வரும் சின்ன குட்டித்தூக்கம் முடிந்து எழும்பும் வேளை. தாவீது தன்னுடைய குட்டித் தூக்கம் முடித்து, தன் அரண்மனையின் உப்பாரிகைக்கு செல்கிறான். ஒருவேளை அது எருசலேமின் மிக உயர்ந்த உப்பாரிகையாக இருந்திருக்கலாம். அங்கிருந்து அவன் ஒரு பெண் குளிப்பதைப் பார்க்கிறான்.

ஒருநிமிஷம்!  தாவீது மத்தியான வேளையில் தூங்கியது தவறா? அவன் அங்கிருந்து தன்னுடைய அழகிய மாளிகையின் உச்சிக்கு சென்றது தவறா? அங்கே ஒரு பெண் குளிப்பது அவன் கண்களில் தற்செயலாய்ப் பட்டது தவறா?  இல்லவே இல்லை என்று நான் சொல்கிறேஏன்!

எப்படி ஆதாமும் ஏவாளும் மறுக்கப்பட்ட கனியைக் கண்டதும் அந்த இடத்திலிருந்து ஓடவில்லையோ அதே மாதிரி தாவீதும் ஒரு பெண் குளிப்பதைக் கண்டதும் அங்கிருந்து இறங்கி ஓடி வீட்டுக்குள் செல்லாததுதான் தவறு!

நாம் சோதனையை ஊக்குவிப்பதால்தான் அதை எதிர்க்கவோ வெல்லவோ முடியாமல் திணறுகிறோம். சோதனை என்று அறிந்தவுடன் அதிலிருந்து ஓட வேண்டாமா?

பாவம் ஒரு நச்சு போன்றது! அது ஒரே ஒரு துளி போதும் நம்மை அழித்து விடும்.

யாக்கோபு 4: 7 கூறுவதுபோல்,  ஆகையால் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.

தேவனுடைய எச்சரிக்கையை மீறி தவறான பாதையில் உன்னை இழுக்கும் ஏதாவது பாவத்தில் நீ தரித்திருக்கிறாயா? கண்ணியில் மாட்டி விடாதே!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

(for contact premasunderraj@gmail.com)

 

 

இதழ்: 705 கீழ் நோக்கிய அந்த ஒரு நொடி!!!!!!!

2 சாமுவேல் 11:2  ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பாரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருந்தபோது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பாரிகையின் மேலிருந்து கண்டான். அந்த ஸ்திரீ வெகு சௌந்தரியவதியாயிருந்தாள்.

ஒருநாள் காலையில் வாசலில் கால் வைக்கும்போது ஏதோ ஒன்று நீளமாக இருப்பதுபோலத் தோன்றியது. அங்கு ஒரு தொட்டியில் சிவப்பு நிற நீளமான பூக்கள் பூக்கும். அந்தப் பூ காய்ந்து  மண் கலரில் விழுந்து கிடக்கும். நான் அந்தப்பூ தான் விழுந்து கிடக்கிறது என்று காலை தூக்கி வைத்து தாண்டிப்போய் விட்டேன். ஆனால் ஏதோ உள்ளுணர்வு என்னைத் திரும்பிப் பார்க்க செய்தது. அப்பொழுதுதான் அது பாம்பு என்று உணர்ந்தேன். பின்னர் அதை அடிக்கும்போது அது விரியன் பாம்பு என்று தெரிந்தது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் எச்சரிக்கையோடு உற்றுப்பார்க்காமல் காலை வைப்பதே இல்லை!

நம்முடைய தினசரி வாழ்விலும் நமக்கு எச்சரிக்கைத் தேவை! இன்றைய வேதாகமப்பகுதி தாவீது ‘ஒரு ஸ்திரீயை கண்டான்’ என்று கூறுகிறது. கண்டான் என்ற வார்த்தை எபிரேய மொழியில், ‘ கற்ப்பற்ற, காம வெறிகொண்ட” பார்வையென்ற அர்த்தத்தைக் கொண்டது.

ராஜாவாகிய தான் யுத்தத்துக்கு போகாமல், இஸ்ரவேல் அனைத்தையும் யுத்தத்துக்கு அனுப்பி விட்டு, உல்லாசமாக ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த தாவீதின் கண்கள் எல்லாவற்றையும் கண்டு ஆனந்தமாய்  அனுபவித்துக் கொண்டிருந்தன! இன்று அந்தப்பார்வையில் பட்டது ஒரு அழகிய ஸ்தீரி!

தாவீது யார் என்பதை நாம் மறந்துபோக வேண்டாம். அவன் கர்த்தரை நேசித்தவன். தேவனாகிய கர்த்தருடைய இருதயத்தை பின்பற்றும் வாஞ்சை கொண்டவன். அவரால் அளவில்லாமல் ஆசீர்வதிக்கப்பட்டவன். தயவும், இரக்கமும் உள்ளவன். வலிமையான ஒரு ராஜா, அவனைக் காண்போருக்கு உற்சாகமளிக்கும் தன்மை கொண்டவன்.

ஆனால்!!!!! 2 சாமுவேல் 11 ல் அவன் ஒரு பெரிய தோல்வியுற்றவன்!

உல்லாசமான மாலை வேளையில் தாவீது தான் நேசித்த எருசலேமில், தன்னுடைய அழகிய அரண்மனையின்மேல் உலாவும்போது அவனுடைய பார்வை அவனை எங்கோ இழுத்து சென்றது. அவன் மட்டும் அந்த இடத்திலிருந்து எழுந்து தன் பார்வையை தேவனாகிய கர்த்தர் பக்கம் திருப்பியிருப்பானாகில் சரித்திரமே மாறியிருக்கும்.

கண்கள் போனபோக்கிலே தன் எண்ணத்தையும், நோக்கத்தையும் தவற விட்ட இந்த ஒரு நொடியை தாவீது தன் வாழ்க்கையில் எத்தனைதரம் நினைத்திருப்பான்! நினைத்து வருந்தியிருப்பான்! அந்த ஒரு  நொடி அவனை மேல் நோக்கி பரலோக தேவனைக் காணாமல், கீழ்நோக்கி அழகான ஸ்தீரியை நோக்க செய்தது!

உன்னுடைய வாழ்வில் அந்த ஒரு நொடி உண்டா?

நம்முடைய கண்கள் இன்று எதை அதிகமாக பார்க்கின்றன? நம்முடைய கால்கள் நம்மை எங்கே இழுத்து செல்கின்றன? நம்முடைய ஒவ்வொரு பார்வையையும், ஒவ்வொரு நடத்தையையும் நாம் எச்சரிக்கையோடுதான் எடுத்து வைக்க வேண்டும்! யாருக்கு தெரியும்? நாம் கால் வைக்கும் இடத்தில் ஒளிந்து கொண்டிருப்பது வலுசர்ப்பமாயிருக்கலாம் அல்லவா?

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதழ்: 704 வீணாக்கும் ஒவ்வொரு நொடியும்!

சங்கீதம்31:15 என் காலங்கள் உம் கரத்தில் இருக்கிறது…

தாவீதிற்கு அதிக செல்வந்தமும், உல்லாசமான ஓய்வு நேரமும்  கிடைத்தது என்று நாம் பார்த்தோம். எல்லா ராஜாக்களும் யுத்தத்துக்கு போகும் காலத்தில் அனைத்து இஸ்ரவேலும் யோவாபின் தலைமையில் யுத்தத்தில் இருந்தபோது தாவீது மட்டும் தன் வீட்டில் உல்லாசமாய் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான்.

தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள்! ஓய்வு எடுப்பது தவறே இல்லை. பெரிய கூட்டமாய் வந்த ஜனங்களுக்கு ஊழியம் செய்த தன்னுடைய சீஷரைப் பார்த்து , தன்னுடன் வந்து சற்று இளைப்பாறும்படி கர்த்தராகிய இயேசு கூறினார். அமைதியான ஓய்வு நேரம் அலைபாயும் உள்ளங்களை சீராக்கும். ஆனால் ஓய்வு என்ற பெயரில் நேரத்தை வீணாக்கக்கூடாது.

தாவீதுக்கு வந்த உல்லாசமான ஓய்வு அதிகமாய் சம்பாதித்ததால் கிடைத்தது. அவன் காலத்தை உபயோகப்படுத்தாமல் வீணாக்கிக் கொண்டிருந்தான்.

ஒரு சிறிய சிந்தனை!

ஒருவேளை நாம் ஒரு போட்டியில் வெற்றி பெறுகிறோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நமக்குப் பரிசுத்தொகை ஒரு நாளுக்கு  86,400 ரூபாய். இது ஒவ்வொருநாளும் நம்முடைய வங்கிக்க்கணக்கில் கொடுக்கப்படும்.

இதற்கு சில விதிமுறைகளும் கொடுக்கப்படுகின்றன!

முதலில் நாம் செலவழிக்காத பணத்தை வங்கி திரும்ப எடுத்துவிடும். இதற்காக நாம் அந்தப்பணத்தை வேறொரு வங்கிக்கு மாற்ற முடியாது. அதை கட்டாயமாக செலவழிக்க வேண்டும்.

அடுத்த விதிமுறையானது, வங்கி இந்த போட்டியை எப்பொழுது வேண்டுமானாலும்  நிறுத்தி விட முடியும். நமக்கு எச்சரிப்பு இல்லாமலே போட்டி நின்றுவிடலாம்.

நாம் என்ன செய்வோம்? நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் வாங்க முயற்சி செய்வோம். நமக்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு பைசாவையும் நாம் உபயோகப்படுத்த முயற்சி செய்வோம். நமக்காக மட்டும் அல்ல மற்றவருக்காகவும் செலவிடுவோம்.

இந்தப்போட்டி நம் ஒவ்வொருவருக்கும் உண்மாயான ஒன்றுதான்.

நம் ஒவ்வொருவருக்கும் இந்த வங்கிக் கணக்கு உள்ளது. நாம் கண் விழிக்கும் வேளை ஒவ்வொரு நாளும் 86,400 வினாடிகள் நமக்கு பரிசாக அளிக்கப்படுகிறது. நாம் படுக்கப்போகும்போது நாம் செலவழிக்காத வினாடிகள் எடுத்துக்கொள்ளப்படும். நாம் உபயோகப்படுத்தாத அத்தனை நொடிகளும் நஷ்டம்தான்!

நேற்று கொடுத்தது இன்று  திரும்ப வராது!

நம்முடைய கணக்கு எப்பொழுதுவேண்டுமானாலும் முடிவடையும்! எச்சரிக்கையே இல்லாமல்!

86400 ரூபாயை விட கடவுள் நமக்கு கொடுக்கும் 86400 நொடிகள் எத்தனை மேலானவை! சிந்தித்துப்பார்!

நேரத்தை வீணாக்காதே! தாவீது வீணாய் செலவழித்த நேரம் அவனை பாவத்தில் தள்ளியது! ஜாக்கிரதை!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

இதழ்: 703 உல்லாசமான ஓய்வு நேரம்!

2 சாமுவேல் 11:2 ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை உப்பாரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது….

பல நேரங்களில்  சாலை ஓரங்களில்  சோம்பலாய் உட்கார்திருப்பவர்களைப் பார்த்து வேலைவெட்டியில்லாமல் இப்படி உட்கார்ந்திருக்கிறார்களே என்று நினைப்பேன். ஆனால் பணக்காரகள் தான் அதிகமாக வேலை வெட்டியில்லாமல் நேரத்தைக் கழிக்கிறார்கள். பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்தவர்களுக்கு உல்லாசமான ஓய்வு நேரம் அதிகம் கிடைக்கிறது.

இங்குதான் லோத்தின் குடும்பம் வாழ்ந்த சோதோமும், எருசலேமில் யுத்தத்துக்கு போகாமல் வீட்டில் இருந்த தாவீதின் கதையும் சம்பந்தப்படுகிறது! நான் நேற்று இதைப்பற்றி அதிகம் அறிய இந்த மலர்த்தோட்டத்துக்கு வாருங்கள் என்று எழுதியிருந்தேன்!

அன்று பணமும் புகழும் வாய்ந்த பட்டணமாய்த் திகழ்ந்தது சோதோம். பகட்டும்,பெருமையும் வாய்ந்த பணக்காரர்களின் கையில் அதிக நேரம் வெட்டியாய் செலவிட இருந்ததால் தான் பிரச்சனைகளே உருவாயின. சோதோமின் அழிவிற்கு அங்கிருந்த விபசாரம் தான் காரணம் எனறு நாம் நினைப்போம் அல்லவா? ஆனால் பெருமையும், அகங்காரமும் உள்ள பணக்காரர்கள் வெட்டியாக செலவிட்ட உல்லாசமான நேரத்தில் நடந்த கீழ்த்தரமான செயல்களே அதற்கு காரணம்.

அநேக நாட்கள் ஒரு சுலபமான வாழ்க்கைக்கு நாம் கூட ஆசைப்படுகிறோம் அல்லவா? ஆசை மட்டும் அல்ல பேராசையும் கூட!  .  டிவியைப் பார்க்கும்போதும், பேப்பர் படிக்கும்போதும் நாம் கடந்து வரும் , ‘எல்லாமே’  உள்ளவர்களைப்பார்த்து நாம் பொறாமை படாமல் இருக்க முடியுமா? யு ட்யூபில் அம்பானி போன்ற பெரிய பணக்காரர்கள் வீட்டு திருமண வைபவங்களை பார்க்கிறோம். உலகம் போற்றும் செல்வந்தர்களைப் பார்த்து நானும் அப்படி வாழ வேண்டும் என்று நினைப்பது நம்முடைய இருதயத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் பேராசையைக் காட்டுகிறது. இது கர்த்தரின் வழி அல்ல!

அதனால் தான் கர்த்தர் தம்முடைய கிருபையால் நமக்கு கர்த்தரின் இருதயத்திற்கேற்ற ஒருவனாய் இருந்த தாவீதைப் போன்ற தம்முடைய பிள்ளைகளின் கதையை வேதத்தில் இடம் பெற செய்திருக்கிறார்!   கர்த்தரைப் போல வாழவேண்டும் என்று ஏங்கிய உள்ளம் கொண்டவன்!  ஆனாலும் அவன் முன்னால் நிறைவான நன்மைகள், செழிப்பு, செல்வம் அனைத்தும் வைக்கப்பட்டபோது,  அவனுடைய உல்லாசமான ஓய்வு நேரம் ஒரு வெட்டியான செயலற்ற  நேரமாகி விட்டது. சோதோம் மக்கள் வீழ்ந்த அதே கண்ணியில் தாவீதும் வீழ்ந்தான்.

செல்வந்தம் கொண்டு வரும் வேலைசெய்யாத உல்லாசமான  நேரம் நம்மை ஒரு வேண்டாத பாதைக்கு இழுத்துச் செல்லலாம்!  இது நம்முடைய ஆத்துமாவுக்கு எதிரியாகக்கூட மாறலாம். இதுவே தாவீது பத்சேபாள் என்ற கதையின் அடிப்படை! நமக்குக் கொடுக்கப்படும் எச்சரிக்கை!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 702 நம்மை நாமே ஏமாற்றுவதின் விளைவு?

2 சாமுவேல்:11:1  ….தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான்.

வேதம் எனக்கு எடுத்துரைக்கும் உண்மைகளில் ஒன்று, கர்த்தராகிய தேவன் உண்மையை அறிந்தவர் என்று அல்ல, அவரே சத்தியம் அல்லது உண்மை என்று! சங்கீதம் 31: 5 ல் தாவீது கர்த்தரை சத்தியபரன் என்று கூறுகிறான்.

இதை நான் ஏன் இங்கு கூறுகிறேன் என்றால், ஏன் தேவனாகிய கர்த்தர் தாவீது, பத்சேபாள் போன்ற ஒரு கதையை தம்முடைய சத்திய வார்த்தைகளில் இடம் பெற செய்திருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்வதற்காகத்தான். இந்த சம்பவம் நமக்கு தேவன் எவ்வளவு உண்மையானவர் என்று காட்டுகிறது.கர்த்தர் இந்த சம்பவத்தை பாலில் காணும் ஆடையைப்போல களைந்து எறிந்து இருக்கலாம். ஆனால் அவர் சம்பவத்தை வெளிச்சமாக்கி உண்மையை நிலைநாட்டுகிறார்.

கர்த்தர் நமக்கு வெளிச்சமாக்கி காட்டுகிற உண்மை இதுவே! ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும் யுத்தத்துக்கு செல்லும் காலம் அது! என்ன காரணமோ தெரியாது! தாவீது மட்டும் எருசலேமிலே தங்கி விட்டான். அவனுடைய சேனைத் தலைவன் யோவாப் மிகவும் திறமைசாலி! அவனும் இஸ்ரவேல் அனைத்தும் யுத்தத்துக்கு சென்றனர். ராஜா யுத்தத்துக்கு செல்லாதது அவனுக்கு அழகே இல்லை! ஆனாலும் தாவீது தங்கிவிட்டான். எதிரிகள் இதை அவனுடைய பெலவீனம் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.

வேதம் நமக்கு ஏன் தாவீது எருசலேமிலே தங்கி விட்டான் என்று கூறாவிட்டாலும், ராஜாக்கள் யுத்தத்துக்கு செல்லும் காலம் அது என்று சொல்வதின்மூலம்  ராஜாவின் மாறுபாடான நடத்தையை பார்க்க முடிகிறது.

தாவீது தன்னுடைய வீட்டிலேயே தங்கி விடுவதை தவறு என்று நினைக்கவில்லை. நான் போக வேண்டிய அவசியமில்லை என்றோ, அவர்கள் திறமைசாலிகள் என்றோ, நானே எப்பொழுதும் செல்ல வேண்டிய அவசியமில்லை அவர்கள் செய்யட்டும் என்றோ நினைத்திருக்கக்கூடும்.

இஸ்ரவேல் அனைத்தும் யுத்தத்துக்கு சென்றபோது தான் வீட்டில் சுகமாய் இருப்பது தவறு இல்லை என்று நினைத்தானே அங்குதான் தாவீது தன்னையே ஏமாற்றிக்கொண்டான்!

நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது எப்படிப்பட்ட பிரச்சனைக்குள் நம்மை கொண்டுபோய் விடும் என்று நாம் தொடர்ந்து படிக்கலாம். இந்த சமயத்தில்  தங்களையே ஏமாற்றிக்கொண்ட ஒரு குடும்பத்தை நினைவு படுத்துகிறேன். லோத்தும், அவன் மனைவியும், அவன் பிள்ளைகளும் தான்!  சோதோமைப் பார்த்தவண்ணம் தங்கள் கூடாரங்களைப் போட்டது எந்தவிதத்திலும் தவறு இல்லை என்று தங்களை ஏமாற்றிக்கொண்டனர்.  என்ன நடந்தது! சோதோமைப் பார்த்தவாறு இருந்த அவர்கள் கூடாரம் சில நாட்களில் சோதோமுக்குள்ளே நகர்ந்தது! பின்னர் என்ன நடந்தது என்று நாம் அறிவோம்.

எருசலேமிலே தாவீது தங்கியதற்கும், லோத்தின் குடும்பம் சோதோமை பார்த்தவாறு கூடாரம் அமைத்ததற்கும் எப்படி சம்பந்தம் ஆகும் என்ரு நினைப்பீர்களானால் நாளை தொடர்ந்து இந்த மலர்த்தோட்டத்துக்கு வாருங்கள்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்; 701 அர்த்தமுள்ள வாழ்க்கை!

2 சாமுவேல் 11: 1 மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்துக்கு புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான்.

தாவீது தேவனால் விசேஷமாக ஆசீர்வதிக்கப்பட்டவன்!  விசேஷித்த பெலத்தால் எதிரிகளை வென்றான். அதினால் கிடைத்த பொருட்களை விசேஷமான பெருந்தன்மையால் கர்த்தருக்கு அர்ப்பணித்தான் என்று பார்த்தோம். பெலத்தாலும், பெருந்தன்மையாலும் மட்டுமல்ல விசேஷமான நீதியையும் நியாத்தையும் கொண்டு தன் மக்களை அரசாண்டான் என்றும் பார்த்தோம்.

பரலோக தேவனுக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்து அரசாட்சி செய்ததால் அவனை சுற்றியுள்ள பலநாடுகள் அவனுக்கு கப்பம் கட்டின. கர்த்தராகிய தேவனைப் பார்த்து கை கொட்டிய அத்தனை நாடுகளும், அதே தேவனின் சித்தப்படி வாழ்ந்த தாவீதுக்கு அடிமையாயின.

இப்பொழுது மறுவருஷம் என்ன நடக்கிறது பாருங்கள்! மறுபடியும் யுத்தங்கள் ஆரம்பிக்கும் காலம் இது! தாவீது தன்னுடைய படையை யுத்தத்துக்கு அனுப்ப சிரமப்படவே இல்லை! எல்லோரும் தயாராகவே இருந்தனர்! தாவீதின் வாழ்க்கை கர்த்தரால் வழிநடத்தப் படுவதை உணர்ந்த மக்கள் யுத்தத்துக்கு செல்லத் தயங்கவேயில்லை!

கர்த்தருடைய சித்தத்துக்குள் வாழும் ஒருவருடைய வாழ்க்கை இப்படித்தான் மற்றவர்களையும் தேவனை சார்ந்து வாழ உதவி செய்யும். நமக்குள் கிரியை செய்யும் அதே ஆவியானவர் , நம்முடைய வாழ்வை மட்டும் அல்ல, நம்மை சார்ந்தவர்களின் வாழ்வையும் சிறப்பாக்குவார்.

தாவீது சாட்சியுள்ள அல்லது ஒரு அர்த்தமுள்ள வாழ்வைத் தெரிந்து கொண்டதால் இஸ்ரவேலர் அத்தனை பேரும் கர்த்தரைப் பின்பற்றினர். கர்த்தருடைய சித்தத்துக்கு தங்களை முற்றிலும் அர்ப்பணித்து வாழ்ந்தனர்! யுத்தத்துக்கு அழைப்பு வந்தபோது அனைத்து இஸ்ரவேலும் தயங்காமல் முன் சென்றனர்.

நம் வாழ்வில் அர்த்தம் உள்ளதா? அர்த்தமற்ற வாழ்க்கையில் ஆசீர்வாதம் இருக்காது! அர்த்தமற்ற வாழ்க்கை பலனளிக்காது!

தாவீதைப்போல அர்ப்பணிப்பான, அர்த்தமுள்ள, தேவனுடைய சித்தத்துக்குள்ளான வாழ்க்கையை நாம் தெரிந்து கொள்வோம்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்