Archive | May 2019

இதழ்: 691 மெதுவான பிரதியுத்தரம் கோபத்தை மாற்றும்!

2 சாமுவேல் 6:21  அதற்குத் தாவீது மீகாளைப் பார்த்து: உன் தகப்பனைப் பார்க்கிலும் அவருடைய எல்லா வீட்டாரைப் பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்.

என்னை யாராவது தீண்டி விட்டால் சும்மா இருக்கமாட்டேன் என்று சிலர் கூறுவதை கேட்டிருக்கிறோம் அல்லவா!

தாவீதும் மீகாளும் அப்படிதான் இங்கு நடந்து கொண்டனர். என்னைப்பற்றி நீ அவதூறு சொன்னால் நான் மட்டும் சும்மா இருப்பேனா என்று தாவீதும் மீகாளிடம் பேசுவதை இன்றைய வேதாகமப்பகுதி காண்பிக்கிறது. தாவீது தன்னை இஸ்ரவேலின் தலைவனாகத் தெரிந்து கொண்டது கர்த்தர் தான் எந்த மனுஷனும் இல்லை  என்று அவள் மேல் கணையை எறிந்தான்.

மீகாளுடைய தகப்பனாகிய சவுலும் அவளுடைய சகோதரர் அனைவரும் போரில் மரித்துப் போயிருந்தார்கள். அவளும் சந்தோஷமாகவாழ்ந்து கொண்டிருந்த அவளுடைய கணவ்னை விட்டு பிரித்து வரப்பட்டிருந்தாள். அவளை நேசித்த ஒருவனைவிட்டு விட்டு இப்பொழுது அரண்மனையை பெண்களால் நிரப்பியிருந்த ஒருவனோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

அவளுடைய பற்போதைய மனநிலையை புரிந்து கொண்டு தாவீது இன்னும் கொஞ்சம் நிதானமாக அவளோடு பேசியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அதற்கு பதிலாக அவளுடைய தகப்பனையும், மொத்த குடும்பத்தையும் கீழே போட்டு பேசுவது மட்டுமல்லாமல், விஷம் நிறைந்த உணவின்மேல் சற்று அதிகம் குழம்பு ஊத்துவதுபோல, அந்த ஊரில் உள்ள எல்லா பெண்களின் கண்களுக்கும் தன்னைப் பிடிக்கும் என்றும் கூறினான்.

தாவீது மீகாளிடம், இனி அவளுடைய குடும்பம் அல்ல தான்மட்டுமே தேசத்தின் பெண்கள் மனம் மகிழும் அழகிய வாலிபன் என்று தெளிவு படுத்தினான்.

மீகாள் தாவீதைக் குற்றப்படுத்தி பேசியது நிச்சயமாக எனக்கு பிரியமில்லை என்றாலும், தன்னுடைய கணவனிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து வரப்பட்ட அவள்மேல் ஒரு பரிதாபம் பிறந்தது. கொஞ்சம் நிதானமாக அவளை நடத்தியிருக்கலாம் என்று தோன்றியது.

தாவீதின் அரண்மனையில் அவனுடைய அநேக மனைவிமார்களையும், மறுமனையாட்டிகளையும் அவர்களுடைய  கார சாரமான வெறுப்பையும் கண்டு வளர்ந்த தாவீதின் குமாரனாகிய சாலொமோன் கூறிய வார்த்தைகள் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தன.

மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும். கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.  ( நீதிமொழிகள் 15:1)

ஒருவேளை தாவீது மெதுவாக அவளுக்கு பிரதியுத்தரம் கொடுத்திருந்தால் அதன் விளைவு எப்படியிருந்திருக்கும்? இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்?

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

இதழ்: 690 பரியாசமான வார்த்தைகள்!

2 சாமுவேல் 6: 20 .. சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்

என்னுடைய சிறிய வயதில் சங்கீதம் ஒவ்வொரு அதிகாரமாக படித்து ஒப்புவித்தால் மட்டுமே ஞாயிறு அன்று மணக்க மணக்க கறிக்குழம்பு சாப்பாடு  கிடைக்கும். அதனால் சங்கீதங்களின்  அர்த்தம் புரியாமலே மனப்பாடம் பண்ணுவேன். அப்படிப்பட்ட சங்கீதங்களில் ஒன்று முதலாம் சங்கீதம். ஆனால் இன்று அந்த முதலாம் சங்கீதம் ஒரு ஞானப்பொக்கிஷம் என்று உணரும்போது அதை சிறுவயதிலேயே மனதில் தங்க வைத்த அம்மாவுக்குதான் நன்றி சொல்லுவேன்.

துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும் இருக்க வேண்டும் என்று அறிவுறை சொல்லும் இந்த வசனத்தில் பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காரக்கூடாது என்ற அறிவுறையையும் பார்க்கிறோம். அப்படியானால் மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் யாருடனும் அல்லது மற்றவர்களை தாழ்வாக பேசும் யாருடனும் நாம் உட்கார்ந்து கதையடிக்கக்கூடாது என்பதே!

இன்றைய வேதாகமப்பகுதியில் மீகாளுடைய பரியாசமான வார்த்தைகள் அவளுடைய உள்ளத்தை பிரதிபலித்தது. தாவீது ராஜாவாயிருப்பதற்கு தகுதியற்றவன் என்று மறைமுகமாக கூறுகிறாள்.  ராஜாவாகும் தகுதி அவளுடைய குடும்பத்துக்குதான் உண்டு தாவீதுக்கு அல்ல என்ற எண்ணம். அவன் தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டு தம்மை இழிவு படுத்தி விட்டான் என்று பரியாசம் பேசுகிறாள்.

ஆனால் மீகாளுக்கு எட்டாத ஒன்று என்னவென்றால் தாவீது ராஜாவாகும்படி அவனை அபிஷேகம் பண்ணியது எந்த மனுஷனும் அல்ல தேவனாகிய கர்த்தர் தான் என்பது தான். கர்த்தர் ஒருவனை தெரிந்து கொள்வாரானால் அவனுக்குத் தகுதியையையும் அவரே கொடுப்பார்..

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோது தம்முடைய சீஷர்களை எவ்வாறு தெரிந்து கொண்டார் என்று நமக்குத் தெரியும். பெரிய படித்தவர்களும், பணக்காரர்களும் தெரிந்து கொள்ளப்படவில்லை!மன்னித்துவிடுங்கள்! படிப்பும், பணமும் கர்த்தருடைய ஊழியத்துக்கு தேவையில்லை என்று நான் சொல்லவில்லை! ஆனால் படிப்பும், பணமும் ஒரு ஊழியக்காரனின் தகுதியாகாது.

மீகாளைப் போல கிறிஸ்தவர்களாகிய நாமும் எத்தனைமுறை மற்றவர்களுடைய காரியத்தில் மூக்கை நுழைத்து பரியாசம் பேசுகிறோம். நாம் மற்றவர்களைவிட எல்லாவிதத்திலும் சிறந்தவர்கள் என்று நினைத்து எங்கே விழக்கூடாதோ அங்கேயே சருக்கி விழுகிறோம்.

மீகாளைப்போல பரியாசமான வார்த்தைகளை நாம் பேசுகிறோமா?

நம்முடைய குளிர்ந்த வார்த்தைகள் மற்றவர்களை உறைய செய்து விடும், நம்முடைய சூடான வார்த்தைகள் மற்றவர்களை எரித்துவிடக்கூடும் ஜாக்கிரதை!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 689 வார்த்தை ஒரு கொடிய ஆயுதம்!

2 சாமுவேல் 6: 20 .. சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்

இன்றைய வேத வசனத்தில் மீகாள் தாவீதின் மீது வீசும் கடுமையான வார்த்தைகளைப் பார்க்கிறோம்.

மீகாள் தாவீதை நேசித்து திருமணம் செய்தவள். அவளுடைய தகப்பனாகிய சவுல் தாவீதை வெறுத்தபோதும், அவளுடைய காதல் திருமணத்தால் தாவீது சவுலின் அரண்மனையில் வாழ ஆரம்பித்தான். சவுலின் கண்ணியிலிருந்து தாவீதை ஜன்னல் வழியாகத்  தப்புவித்து அவன் உயிரைக் காப்பாற்றியதும் இந்த மீகாளே.

ஆனால் நாம் கடந்த நாட்களில் படித்தது போல், தாவீது தப்பித்து ஓடினவுடன் சவுல் மீகாளுக்கு வேறொரு திருமணம் செய்து வைக்கிறான். தாவீதும் எப்ரோனில் தனக்கு தேவையான அளவுக்கு மனைவிகளைத் தேடிக்கொள்கிறான்.  ஆனாலும் தாவீது தனக்கு தருணம் கிடைத்தவுடன் மீகாளை திரும்பிபெறும் முயற்சியை எடுத்து அவளையும் அடைகிறான். அவள் இன்னொருவநின் மனைவி என்பதை சுத்தமாக மதிக்கவே இல்லை.

ஆம்! தாவீது, மீகாள் என்பவர்களின் சரித்திரம் ஒரு கசப்பான கதை. அதனுடைய விளைவுதான் மீகாள் தாவீதின் மீது எறிந்த கற்கள் போன்ற வார்த்தைகள்!  தன்னுடைய குடும்பத்தை ஆசீர்வதிக்க ஆவலுடன் உள்ளே நுழைந்த தன்னுடைய கணவனை குறுக்கிட்டு நக்கலான  வார்த்தைகளால் வரவேற்கிறாள் அவனுடைய மனைவி நம்பர் 1.

இந்தக் நக்கலும் கேலியுமான  வார்த்தைகள் சில நேரங்களில்  நம்மை கூறு போட்டுவிடும்! தேள் கொட்டியது போன்ற வார்த்தைகளால் தாவீதின் மகிழ்ச்சி நொறுங்கிப்போனது!

நம்முடைய குடும்பத்தில் இதைப்போன்று நடக்கவில்லையா? நான்கு சுவற்றுக்குள் நாம் பேசும் கேலியும், கிண்டலும், நக்கலுமான வார்த்தைகள் நம்முடைய குடும்பத்தாரின் மனதைக் கிழித்து அவர்களுடைய சந்தோஷத்தைக் கெடுப்பது போல உள்ளதா?

வார்த்தை ஒரு கொடிய ஆயுதம்! அதை பயன்படுத்தி உன்னை நேசிப்பவர்களை புண்படுத்த வேண்டாம்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 688 ஆசீர்வாதமான வார்த்தைகள்!

2 சாமுவேல் 6:20  தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது

நாம் வீட்டுக்கு வரும்போதும், வீட்டை விட்டு போகும்போதும் கர்த்தருடைய ஆசீர்வாதத்தை உச்சரித்து செல்வோமானால் எவ்வளவு ஆசீர்வாதமாயிருக்கும் என்று இன்றைய வேதாகமப் பகுதி என்னை சிந்திக்கத் தூண்டியது.

2 சாமுவேல் 6 ல் கடைசி வசனங்களை வாசிக்கும்போது, தாவீது தன் வீட்டாரை சந்திக்க ஆவலாயிருப்பது தெரிய வருகிறது.

தாவீது தன் குடும்பத்தை விட்டு 3 மாதங்கள் பிரிந்திருந்ததை மறந்து விடாதீர்கள். தாவீது கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை எடுத்து வர சென்றபோது என்ன நடந்தது என்று அறிவோம். தாவீதின் அலட்சியத்தால் ஊசா உயிரை இழந்து விட்டான். தாவீதுக்கு பயம் பிடித்து விட்டதால் அந்தப் பெட்டியை அவன் லேவியனான  ஓபெத்ஏதோமின் வீட்டில் வைத்து ஏதுமறியாமல் காத்திருந்தான். மூன்று மாதங்கள் அந்தப் பெட்டி அங்கேயே தங்கியிருந்தது. அந்த நாட்களில் கர்த்தர் ஒபேத்ஏதோமையும் அவன் குடும்பத்தையும் ஆசீர்வதித்ததை மக்கள் கண்கூடாகக் கண்டதால், தாவீது கர்த்தருடைய பெட்டியை எருசலேமுக்கு கொண்டுவர முடிவு செய்தான். ஆனால் இந்தமுறை எந்த தவறும் செய்யாமல் கர்த்தர் மோசேக்கு கூறிய முறைமையின் படியே பயபக்தியோடு அந்தப்பெட்டியை எடுத்து வந்தான்.

வேதம் கூறுகிறது மக்கள் மகிழ்சியால் நிரம்பினர் என்று. தாவீதின் உள்ளம் மகிழ்சியால் நிரம்பியதால் ஆடிப்பாடி அந்தப் பெட்டியை கொண்டுவந்தான். சந்தோஷத்தோடு வந்த அவன் தன்னுடைய குடும்பத்தை சந்தோஷத்தோடு வாழ்த்த ஆசையோடு வந்தான். எத்தனை மகிழ்சியான தருனம் அந்தக் குடும்பத்துக்கு என்று பாருங்கள்!

இந்த அதிகாரத்தின் கடைசி வசனங்களை நாம் ஆராய்ந்து படிப்போமானால் அவைகள் நம்முடைய வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் என்று நமக்குக் காட்டும்.  விசேஷமாக நாம் நம்முடைய குடும்பத்தினரிடம் நான்கு சுவருக்குள் உபயோகப்படுத்தும்  வார்த்தைகள்!

நம்முடைய குடும்பத்தினருடன் கடும் சொற்களை உபயோகித்து நாம் பேசுவோமானால் அதே மாதிரிதான் நான் வெளி உலகத்தினருடனும் பேசுவோம்.

நாம் தாவீதைப்போல நம்முடைய குடும்பத்தை ஆசீர்வதித்து பேசுவோமானால் அந்த ஆசீர்வாதம் நம்முடைய குடும்பத்துக்கு அப்பாலும் தொடரும்!

நாம் கடந்து போனபின்னரும் நாம் நம்முடைய குடும்பத்தில் பேசிய வார்த்தைகள் நம் குடும்பத்தினரை விட்டு கடந்து போகாது.

நாம் நம்முடைய குடும்பத்தில் எப்படிப்பட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறோம்? கடும் சொற்களா? ஆசீர்வதிக்கும் சொற்களா?

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 687 குளிர்காயும் நேரத்தில் வீசப்படும் ஈரமான துணி!

2 சாமுவேல் 6: 20 .. சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.

அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில்,

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்   ( பிலி:4:4)

என்கிறார். இது பவுல் சிறையிலிருந்து எழுதிய நிருபங்களில் நான்காவது என்றும்,  AD 61 ல் எழுதப்பட்டது என்றும் சொல்லுகின்றனர்.  பவுல் சிறைப்பிடிக்கப் பட்டதைக் கேள்விப்பட்ட பிலிப்பி பட்டணத்தார், அவனுக்கு எப்பாபிரொதீத்துவின் மூலம் உதவி அனுப்பினர் (4:18)  இந்தத் திருச்சபை பவுலுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தனர் ஏனெனில் அவர்கள் தங்கள் அன்பை மட்டும் அல்ல தங்களுடைய தாராள உதவியினாலும் பவுலை சந்தோஷப்படுத்தினர். சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில் அவனுள்ளம் சந்தோஷத்தால் நிறைந்தது. அந்த இருண்ட சிறையில் இருந்து பவுல் நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சந்தோஷமாயிருக்கலாம் என்று தனக்கு உதவி வழங்கிய திருசபையாருக்கு நன்றியோடு பதில் அனுப்பினான்.

சிறையில் கட்டுண்டவனாய் இருக்கும்போது தன்னை சுற்றியுள்ளவர்களிடம்  சந்தோஷமாயிருங்கள் என்றுஒருமுறை அல்ல  இரண்டு முறை ஒருவன் கூறுவதைப் பாருங்கள்!

இன்றைய உலகில் நாம் துக்கம் நம்மை சூழும்போது, சந்தோஷமாயிருக்கிறோமா? அது எப்படி முடியும் என்றுதானே நினைக்கிறோம்! அதனால் தான் நாம் வாசித்த இன்றைய வேதாகமப்பகுதியில் உள்ள கதையை சில நாட்கள் சற்று ஆழமாகப் படிக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்தக் கதையில் குடும்ப பிரச்சனைகளால் வரும் வேதனையையும், கசப்பையும் பார்க்கமுடிகிறது.

எல்லோரும் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் ஒரு இடத்தில் திடீரென்று ஒருவன் ஒரு ஈரக்  கம்பளியை தூக்கி எறிந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இருந்தது மீகாளின் செயல் கூட. எல்லோறும் மகிழ்ச்சியாக ஆடிப்பாடிக் கர்த்தருடைய பெட்டியை எருசலேமுக்குள் கொண்டுவந்தபோது சவுலின் குமாரத்தியாகிய மீகாள் அந்த சந்தோஷத்தில் மண்ணை வீசுகிறாள்.

இது நம் வாழ்வில் நடப்பதில்லையா? எத்தனை முறை நம்முடைய குடும்பத்தில் யாரோ ஒருவர் நம்முடைய சந்தோஷத்தைக் கெடுக்க ஈரத் துணியை வீசுகிறார்கள்!

இந்தக் கதை நம்முடைய இன்றைய வாழ்விற்கு மிகவும் பொருந்தும் ஒன்று என்பதால்  அடுத்த வாரமும் நாம் இதைத் தொடர்ந்து படிக்கலாம்.

ஒரு சின்ன வேண்டுகோள்! இதை மற்றவர்களும் படிக்கும்படியாக http://www.rajavinmalargal.com என்ற இந்த வெப்சைட்டை ஷேர் பண்ணுங்கள்!  கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

இதழ்:686 ஒரு தேசத்தை மாற்றிய அமைதியான சாட்சி!

2 சாமுவேல்: 6:12  தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்.

2 சாமுவேல் ஆரம்பிக்கும்போது ஊசாவின் மரணத்தால் இருளாய் இருந்தாலும், அந்த இருள் சீக்கிரமே ஓபேத்ஏதோமின் சாட்சியால் மாறுகிறது.

கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் தேவனுடைய பெட்டியை எடுத்து வந்ததால் ஏற்பட்ட விளைவைக் கண்ட தாவீது பயந்து அந்தப் பெட்டியை தன்னிடமாய்க் கொண்டுவராமல், ஓபேத்ஏதோமின் வீட்டிலே 3 மாதங்கள் வைத்து விட்டான். அங்கே கர்த்தரின் ஆசீர்வாதங்கள் அளவுக்கு அதிகமாய் அருளப்பட்டபோது அந்தக் குடும்பம் எல்லொருடைய கவனத்தையும் ஈர்த்தது!

தாவீது அந்த ஆசீர்வாதங்களைக் கண்டபோது அவனுடைய பயம் நீங்கியது. அவனும் மறுபடியும் கர்த்தருடைய வழிநடத்துதலுக்கு கீழ்ப்படிந்து கர்த்தருடைய பெட்டியை எருசலேமுக்கு எடுத்து வர முடிவெடுத்தான்.

இன்றைய வேதாகமப் பகுதி சொல்கிறது, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி எருசலேமுக்குள் மகிழ்ச்சியுடனே கொண்டுவரப்பட்டது என்று! இந்த மகிழ்ச்சிக்கு உண்மையான காரணம் யார் என்று யோசியுங்கள்! ஓபேத்ஏதோமின் சாட்சி அல்லவா? அவன் தைரியமாக கர்த்தருடைய பிரசன்னம் தன் குடும்பத்தில் தங்க இடம் கொடுத்ததால் தானே!

ஓபேத்ஏதோம் எப்படி சாட்சி பகர்ந்தான்? பிரசங்கம் பண்ணினானா? யாரையும் கட்டாயப்படுத்தினானா? அற்புதங்களை செய்தானா?  தன்னுடைய வாழ்விலும், தன் குடும்பத்திலும் தேவனுடைய மகிமை ஊடுருவ செய்தான். அவனை சுற்றியுள்ளவர்கள் அவனைக் கவனிக்கத் தொடங்கினார்கள். ஊரெல்லாம் அதைப்பற்றி பேசத் தொடங்கினார்கள்!

அவனுடைய சாட்சி மற்றவர்களுடைய கண்களைத் திறந்தது! அவன் ஒன்றும் பெரிய பெயர் பலகையை அடித்து தன் வீட்டின் வாசலில் தொங்க வைக்கவில்லை! யாரூக்கும் பறைசாற்றாமலே அவன் ஒரு தேவனுடைய மனிதன் என்று அனைவரும் அறிந்து கொண்டார்கள்.

கிறிஸ்தவர்களாகிய நாம் எப்படி நடந்து கொள்கிறோம்?  கிறிஸ்தவர்கள் என்ற பெயர்கொண்ட எத்தனை பேர்கள் பச்சை பொய்யை கூறுவதைப் பார்க்கிறோம்! மற்றவரை ஏமாற்றுவதையும் பார்க்கிறோம்! கிறிஸ்து அல்லாத வாழ்க்கை நடத்துவதைப் பார்க்கிறோம்! இது இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தூஷிப்பது அல்லவா?

ஓபேத்ஏதோமின் வாழ்க்கை  நமக்கு ஒரு நல்ல மாதிரியாக அமைந்துள்ளது. ஒரு மனிதனின் அமைதியான சாட்சி எப்படி ஒரு தேசத்தையே மாற்றமுடியும் என்று!

அவனுடைய சாட்சி பயத்தை மகிழ்ச்சியாக மாற்றியது ஏனெனில் அவனும் அவனுடைய குடும்பமும் கர்த்தருடைய பிரசன்னம் அவர்களுடைய வாழ்வில் ஊடுருவ இடம் கொடுத்தனர்!

நம்முடைய சாட்சி எப்படியிருக்கிறது? நம்மை சுற்றியுள்ளவர்கள் நம்முடைய வாழ்வில் கர்த்தரின்  மகிமையைக் காண முடிகிறதா?

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ் :685 கர்த்தருடைய பிரசன்னம் அளிக்கும் ஆசீர்வாதம்!

2 சாமுவேல்: 6: 10,11  அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான், ….. கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.

ஓபேத்ஏதோம் என்ற பெயரைக் கொண்ட யாரையாவது நாம் இன்றைய மாடர்ன் உலகத்தில் பார்த்திருக்கிறோமா? ஆனால் உங்களில் யாரவது ஆண் குழந்தைக்கு நல்ல பெயர் வேண்டும் என்று நினைப்பீர்களானால், இதோ ஒரு அற்புதமான ஒரு பெயர்!

தாவீது கர்த்தருடைய  கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் செயல்பட்டதால் உயிரழந்தான் வாலிபன் ஊசா. கர்த்தரின் பெட்டியைத் தொட்டதால் ஊசா உயிரழந்ததைப் பார்த்த தாவீது அதைத் தன் ஊருக்கு கொண்டுவர பயந்தான்.

நான் அங்கு இருந்திருந்தால் அந்தப் பெட்டியின் அருகேயே செல்ல பயந்திருப்பேன்! அந்தப் பெட்டியை என் வீட்டுக்குள் கொண்டு வர எப்படி சம்மதிப்பேன்!

ஊசாவின் மரணத்துக்குபின் கொஞ்சம் வேதத்தை ஆராய்ந்து படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் ஏனெனில் தாவீது மறுபடியும் கர்த்தருடைய பெட்டியை எடுத்து செல்வதில் இருந்த தவறை செய்யவில்லை.

ஒருமுறை பெலிஸ்தியர் தாங்கள் கைப்பற்றிய இந்த உடன்படிக்கை பெட்டியை, கர்த்தர் தங்களை வாதித்ததால் திருப்பி அனுப்பினர். அப்பொழுது கூட அவர்கள் ஒன்றும் கர்த்தர் இந்தப்பெட்டியைக் குறித்து கூறிய விதிமுறைகளைக் கைப்பிடிக்கவில்லை.  அந்த சமயத்தில் கர்த்தர் அவர்களைத் தண்டிக்கவில்லை. ஆனால் வேதத்தை அறிந்த இஸ்ரவேல் மக்கள் தவறு செய்தபோது அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.

இஸ்ரவேல் மக்கள் அறிந்து செய்த தவறே தண்டனைக்குட்பட்டது. அதிலும் தாவீது, இஸ்ரவேலின் தலைவனானதால் ஒரு பெரியப் பொறுப்பு அவன் தோள்களில் இருந்தது.

ஊசாவின் மரணத்துக்கு பின் கர்த்தருடைய பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டிலே வைக்கப்பட்டது.  எபிரெய மொழியில் இந்த பெயரின் அர்த்தம் , ‘வேலையாள்’ என்பது. 1 நாளா:13:13 ல் நாம் அவன் ஒரு லேவியன் என்று பார்க்கிறோம். வேதத்தின்படி, லேவியர்கள்தான் இந்த பெட்டிக்கு காவலராக இருந்திருக்கவேண்டும்.

ஊசாவின் மரணத்துக்குபின் ஓபேத்ஏதோம் இந்தப்பெட்டியைத்  தன் வீட்டுக்குள்  ஏற்றுக் கொள்ளத் தயங்கியிருப்பான் என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது அல்லவா? ஆனால் அவன் அதைத் தன் வீட்டில் ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல, அதை 3 மாதம் வைத்திருந்தான். கர்த்தர் அவன் வீட்டை ஆசீர்வதித்தார் என்று பார்க்கிறோம்.

இதில் என்ன புரிகிறது? கர்த்தருடைய பிரசன்னத்தை ஒபேத்ஏதோம் தன்னுடைய இல்லத்தில் ஏற்றுக்கொண்டதால் அவனும் அவனுடைய குடும்பமும் ஆசீர்வதிக்கப்பட்டது. கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமையால் சாபமும், அவருடைய பிரசன்னத்தை ஏற்றுக்கொண்டதால் ஆசீர்வாதமும் வந்து சேரும்!

இன்று கர்த்தருடைய பிரசன்னம் நம் வாழ்க்கையிலும் நம் இல்லத்திலும் இருப்பதால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோமா?

கர்த்தருடைய ஊழியத்துக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து அவர் நடத்தும் பாதையில் நடந்து அவருடைய சித்தத்துக்குள் நிலைத்திருப்பதே அவருடைய பிரசன்னம் நம் வாழ்வில் இருப்பதின் அடையாளம்! இதுவே நமக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்