Archive | July 2019

இதழ்: 723 தலையான நோக்கம்!

2 சாமுவேல் 11: 11  ….. பெட்டியும், இஸ்ரவேலும், யூதாவும் கூடாரங்களிலே தங்கி,  என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில்…..நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன்

நாம் ஒவ்வொருவரும் ஒரு நோக்கத்தோடு வாழத்தானே ஆசைப்படுகிறோம்? சிலருக்கு வாழ்வில் உயருவதே நோக்கம், சிலருக்கு பிள்ளைகளைக் குறித்த நோக்கம். என் வாழ்க்கையில் நோக்கமே இல்லை, நான் எதையும் பற்றிக் கவலைப்படாமல் எனக்காகவே வாழ்கிறேன் என்று சொல்பவரை நான் இதுவரைப் பார்த்தது இல்லை.

வாழ்க்கையில் ஒரே நோக்கத்தைக் குறிக்கோளாக வைத்து வாழ்ந்த ஒரு மனிதனின் உதாரணம் நமக்கு வேண்டும் என்றால் அது உரியாவாகத்தான் இருக்க வேண்டும்.  நாம் நேற்று பார்த்தவிதமாக உரியாவின் வாழ்க்கையில் தேவனுக்கும் அவருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கும் முதலிடம் இருந்தது. தாவீது அவனை பாதை மாறி வீட்டுக்குப் போய் களித்து இருக்கத் தூண்டிய போது அவன் மனதில் முதலில் பட்டது கர்த்தருடைய பெட்டிதான்.

அவன் சரியான ஒரு காரியத்துக்கு முதலிடம் கொடுத்தவுடன், அவனுடைய வாழ்க்கையில் ஒரு நோக்கம் கிடைத்தது. அது சுய நலனுக்கான நோக்கம் அல்ல! தனக்கு அப்பாற்பட்ட  ஒரு நோக்கம்!  இதைத்தான் இன்றைய வேதாகமப் பகுதியில் உரியா வெளிப்படுத்துகிறான்.

உரியா ஒரு கானானியன் என்றும், வேறு மதத்திலிருந்து மனம் மாறியவன் என்றும் நமக்கு நன்கு தெரியும்.  ஏத்தியனான அவன் இஸ்ரவேலின் தேவனைத் தன்னுடைய தேவனாக ஏற்றுக்கொண்டிருந்தான். ஏதோ அறை குறை மனதோடோ அல்லது ஏதோ லாபத்துக்கோ அல்ல, முழுமனதோடு ஏற்றுக்கொண்டிருந்தான்.

அதனால் தான் அவன் ராஜாவாகிய தாவீதிடம் தான் யுத்தகாலத்தில் தன் வீடு திரும்புவதில்லை என்று திடமாகக் கூறினான்.  அதனுடைய காரணம் என்ன தெரியுமா? பெட்டியும், இஸ்ரவேலும், யூதாவும் கூடாரங்களிலே தங்கியிருக்கும்போது தான் எப்படி வீடு செல்ல முடியும் என்பதே.

இங்கு உரியா ஒரு அருமையான காரியத்தை பதிவு செய்கிறான். உங்களுக்கு நினைவு இருக்கிறதா? தாவீது ராஜாவானபோது யார் இஸ்ரவேலை ஆள்வது என்று 12 கோத்திரங்களுக்குள்ளும் சண்டை இருந்தது. சாமுவேல் தீர்க்கதரிசி தாவீதை அபிஷேகம் பண்ணியிருந்தாலும் சவுலின் குமாரன் ஒருவன் ஏழு வருடம் அரசாண்டதைப் பார்த்தோம். கோத்திரங்கள் பிரிந்து யூதாவும், இஸ்ரவேலும் கசப்பாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

இங்கு இப்பொழுது உரியா இஸ்ரவேலும், யூதாவும் இணைந்து கூடாரங்களில் தங்கியிருப்பதை நமக்கு சுட்டி காட்டுகிறான். வெளியே உள்ள எதிரியைத் தாக்க உள்ளே உள்ள கசப்பு எல்லாம் ஓடிவிட்டன! இப்பொழுது ஒரே நோக்கம் எதிரியை முறியடிப்பதுதான்.

நம்முடைய வாழ்க்கையில் இந்த பரலோகத்துக்கடுத்த நோக்கம் உண்டா? அவருக்காக எந்த வேளையிலும் வேலை செய்ய நாம் ஆயத்தமா? நமக்குள்ளே உள்ள பிரிவினைகளையும், வேறுபாடுகளையும் ஒதுக்கி விட்டு, நாம் கிறிஸ்தவர் என்ற ஒரே நாமம் தரித்து அனைவரும் கைகோர்த்து செயல்பட்டால் எப்படியிருக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள். நம்மை சுற்றி பிரிவினை என்ற சுவரையல்லவா எழுப்பியுள்ளோம்!

இந்த ஒரே நோக்கம் தான் ஏத்தியனான உரியாவை, தன் சுய விருப்புகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, யூதாவும், இஸ்ரவேலும் இணைந்து செய்த யுத்தத்தை மட்டும் நோக்க செய்தது.

நீயும் நானும் உரியாவைப் போல தேவனுடைய ஊழியத்தையே நம்முடைய தலையான நோக்கமாக வைத்து வாழ்கிறோமா? சிந்தித்து ஜெபியுங்கள்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

இதழ்:722 உரியா என்ற ஒரு மனிதன்!

2 சாமுவேல் 11:11  உரியா தாவீதை நோக்கி: பெட்டியும், இஸ்ரவேலும், யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியே பாளயமிறங்கியிருக்கையில் நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும் என் வீட்டிற்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான்.

தாவீதைப் பற்றியே படித்துக் கொண்டிருக்கும் நாம் உரியாவைப் பற்றி ஏன் சற்று படிக்கக்கூடாது என்று நினைத்து ஆரம்பித்தேன். ஆனால் உரியா என்னை ஆச்சரியப்பட வைத்துவிட்டான்.

அவன் பெயர் உரியா! வேதத்தில் எழுதப்பட்ட விளக்கத்தின் படி பத்சேபாளின் கணவனாகிய அவன் ஏத்தியர் என்ற சிறுபான்மை இனத்தை சேர்ந்தவன்.

உரியா இஸ்ரவேலில் வாழ்ந்தாலும் அவனுடைய முன்னோராகிய ஏத்தியர்  கானானியர். ஆபிரகாம் காலத்திலேயே இஸ்ரவேலில் வாழ்ந்த மக்கள். இஸ்ரவேலர் கானானுக்குள் நுழைந்தவுடன் கானானை சுத்திகரிக்கும்படியாக உத்தரவிடப்பட்டது. ஆனாலும் இஸ்ரவேல் மக்களுக்கு உதவி செய்த சில பழங்குடியினர் அங்கேயே தங்கவைக்கப் பட்டனர்.

தாவீது இஸ்ரவேலின் ராஜாவானபோது அநேக கானானியர் அங்கு வாழ்ந்ததாக சரித்திரம் சொல்கிறது. இந்தக் கானானியர் இஸ்ரவேலின் சம்பந்தம் பண்ணியது மட்டுமல்ல இஸ்ரவேலின் தேவனையும் வணங்கினர். அவர்கள் உண்மையான இஸ்ரவேலராகவே கருதப்பட்டனர்.

இப்படியாகத்தான் உரியாவின் குடும்பத்தினரும் உண்மையான இஸ்ரவேலராக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்று நம்புகிறேன். நீங்களும் நானும் சொல்கிற வார்த்தையில் இவர்கள் வேறு மதத்திலிருந்து ‘மனம் மாறியவர்கள்’.

உரியா என்ற பெயருக்கு அர்த்தம் நமக்கு இதை இன்னும் விளக்குகிறது. உரியா என்றால் ‘ கர்த்தர் என் வெளிச்சம்’ என்று அர்த்தம். அந்தப் பெயரை அவனுக்கு அளித்த அவனுடைய பெற்றோரோ அல்லது மூதாதையரோ கர்த்தரை தேவனாக ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தரை நான் அறிவேன் என்று பறைசாற்றிய இன்னொரு கானானியப் பெண்ணான ராகாப் தான் என் நினைவுக்கு இப்பொழுது வருகிறது!

இந்தப் பின்னணியில் நாம் பத்சேபாள் மணந்த உரியாவின் வாழ்க்கையைப் பற்றி படிக்கப் போகிறோம். இன்றைய வேதாகமப் பகுதி நமக்கு உரியாவின் வாழ்க்கையின் நான்கு அம்சங்களைக் காட்டுகிறது.

1. முதலாவது உரியா கர்த்தரின் உடன்படிக்கைப்  பெட்டிக்குத் தன் வாழ்வில் முதல் இடம் கொடுத்திருந்தான். அவனைப் பொறுத்தவரை ராஜாவும், அவன் தேசமும் கர்த்தரின் பெட்டிக்கு பின்னர்தான் இடம் பெற்றனர்.

2. இரண்டாவது அவன் தன்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய சித்தத்தை பரிபூரணமாக ஏற்றுக்கொண்டவன். அவன் தாவீதை நோக்கி, இஸ்ரவேலும், யூதாவும் கூடாரங்களில் தங்கியிருக்கும்போது தனக்கும் அதுதான் சரி என்று நினைத்தான்.

3. உரியா தன்னுடைய வேலையில் உண்மையும் உத்தமுமானவன். யோவாபின் நம்பிக்கையைப் பெற்ற போர்வீரன். மற்ற வீரர்களுக்கு அவனுடைய உதவி தேவைப்பட்ட போது அங்கு இருப்பான்.

4. உரியா அசைக்க முடியாத கொள்கைசாலி. அவன் தாவீதிடம்,நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்று திட்டவட்டமாகச் சொல்கிறதைப் பார்க்கிறோம்.  ராஜாவே அவனை மாற்ற முயன்றாலும் உரியாவிடம் அது செல்லவில்லை.

இந்த ஒருவசனத்தில் இந்த கானானிய , வேறு மதத்திலிருந்து மனம் மாறிய உரியா , ஒரு வெளியாள் கர்த்தரின் நிழலில் வந்தவன், இஸ்ரவேலர் அல்லாத உங்களையும் என்னையும் போன்றவன், அவன் நம்பி வந்த வானத்தையும் பூமியையும் படைத்த தேவனுக்கும், தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு முதலிடம் கொடுப்பதைப் பார்க்கிறோம்.

உரியாவின் வாழ்க்கை நமக்கு ஒரு முன் மாதிரியாக இல்லையா!  தேவனுடைய ரூபமாக நாம் மாறும் நாள்வரை யாராலும், எதுவாகிலும் நம்முடைய விசுவாசத்தை அசைக்காமல் நாம் உரியாவைப் போல கர்த்தரையே முன்வைத்து, அவரையே நேசித்து  நம்முடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடர வேண்டும் என்று ஜெபிப்போமா!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ் 721 ஷ்ஷ்! யாரும் பார்க்காத வேளை!

2 சாமுவேல் 11:14 காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.

இன்றைய வேதாகமப்பகுதியைத் தொடர உதவிசெய்த கர்த்தரை மனமாரத் துதிக்கிறேன். தொடர்ந்து ஒவ்வொருநாளும் இந்த வேதாகம தியானத்தை வாசிக்கும் உலகத்தின் பல பாகங்களில் வாழும் என்னுடைய வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி!

ஒரு டெலிவிஷன் ஷோ பார்த்துக்கொண்டிருந்தேன். அது ஒரு அறிவுப்பரீட்சை. அதில் என்ன விசேஷம் என்றால் அந்த பரீட்சையில் வரப்போகும் கேள்விகளுக்கு பதில் எழுதப்பட்ட ஒரு கவர் அவர்கள் ஒவ்வொருவர்  கையிலும் தனித்தனியாக கொடுக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக அதை எடுத்துக்கொண்டு எலிவேட்டரில் ஏழாவது மாடிக்கு சென்று அங்கு இருக்கும் ஒருவரிடம் கொடுத்துவிட்டு பரீட்சை எழுத செல்ல வேண்டும். ஆனால் இப்படியாக ஒருவருக்கு கொடுக்கப்பட்டது மற்றவருக்குத் தெரியாது. அந்த கவர் திறந்துதான் இருந்தது. ஒவ்வொருவராக அதை வாங்கிக்கொண்டு மேலே சென்றனர். அந்த அறையின் வாசலில் இருந்தவர் நீங்கள் அந்தக் கவரைத் திறந்து பதிலைப் பார்க்கவில்லயே என்று கேட்பார். அவர்கள் எல்லோரும் அதைத் திறந்து பார்க்கவில்லை என்றுகூறிவிட்டு உள்ளே சென்றனர். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் ஏழு மாடி ஏறிச் செல்லும் வழியெல்லாம் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு இருந்ததென்றும், அவர்களில் பாதிபேர் அதைத் திறந்து பதில்களைப் பார்த்து விட்டார்கள் என்றும் போட்டியை நடத்தியவர்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் அதைத் திறக்கவே இல்லை என்று நேருக்கு நேர் பார்த்து கூறிய பொய் தான் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

நான் ஒருவேளை யாரும் பார்க்காத இடத்தில் இருந்தால் எப்படி நடந்து கொள்வேன்? ஒருவேளை ஒரு தவறை செய்துவிட்டு அதை யாருக்கும் தெரியாமல் மறைக்க முடிந்தால் நான் எப்படி நடந்து கொள்வேன் என்று அடிக்கடி யோசிப்பது உண்டு. யாருக்கும் தெரியாத இடத்தில் பாவம் செய்வது என்பது நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் ஒரு நெருக்கடியான சோதனை தானே?

பாவம் இந்த உலகத்தில் வந்த நாள் முதல் கர்த்தருடைய பிள்ளைகள் யாரும் இல்லாத இடத்தில் பாவம் செய்து பின்னர் அந்த பாவத்தை மறைத்து ஒளிந்ததை பார்க்கிறோம்.

தாவீது உரியாவிடம் யுத்தத்தைப்பற்றிய செய்திகளை விசாரித்தான், யோவாபைப் பற்றி விசாரித்தான், பின்னர் நல்ல பதார்த்தங்களோடு அவனுடைய மனைவியிடத்தில் அனுப்பினான், அது தவறியதால் மது அருந்த வைத்து வீட்டுக்கு அனுப்பினான். அதுவும் தவறிப் போயிற்று. விசுவாசமுள்ள போர்சேவகனான உரியா, இஸ்ரவேல் அனைத்தும் யுத்தத்தில் இருந்ததால் அவன் தன்னுடைய மனைவியின் தோளில் இளைப்பாற மறுத்தான்.

தாவீதோ யாரும் பார்க்காத வேளையில் தன்னுடைய பாவத்தை மறைக்க, உரியாவைக் கொலை செய்யும்படியான ஒரு கடிதத்தை எழுதி அதை உரியாவின் கையிலே கொடுத்து அனுப்புகிறான்.  யாருக்கும் தெரியாமல் தான் பத்சேபாளுடன் செய்த பாவத்தை மறைக்க அவளுடைய கணவனைக் கொலை செய்ய அவன் உள்ளம் முடிவு செய்தது.

உரியா யாரும் பார்க்காத வேளையில் அந்தக் கடிதத்தை திறந்து பார்த்திருக்கலாம். ஆனால் அங்கும் உரியா நேர்மையாக நடந்து தன்னுடைய மரண தூதை தானே சுமந்து சென்றான்.

யாரும் பார்க்காத வேளையில் நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்பது நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும் சந்திக்கும் கேள்வி!  யாரும் பார்க்காத வேளையில் நான் எதைப் பார்க்கிறேன்? யாரும் இல்லாத வேளையில் நான் எதை செய்கிறேன்? இன்று இந்த உலகமே இண்டெர்னெட் மூலம் உங்கள் கையில் இருக்கிறது. தனிமையில் இருக்கும்போது எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்? இரகசியமான வாழ்க்கையா? மற்றவர் முன் முகமூடியா?

பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான் என்பது வேத வார்த்தை. கர்த்தருக்கு முன்பாக உன்னால் எதையுமே மறைக்க முடியாது என்று உணரு! நீ இருட்டில் செய்யும் ஒவ்வொன்றையும் கர்த்தர் காண்கிறார் என்பதை மறந்து விடாதே! இன்றே அறிக்கைசெய்து விட்டுவிடு!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ் 720 கட்டுப்பாடற்ற வாழ்க்கை!

2 சாமுவேல் 11: 12, 13  அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி; இன்றைக்கும் நீ இங்கேயிரு. நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்….. தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்.ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல் சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான்.

தாவீது தந்திரமான மயக்கும் வார்த்தைகளாலும், ருசியான பதார்த்தங்களாலும் உரியாவை மயக்கி அவனுடைய வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் தவறிப்போனான். அதனால் இப்பொழுது புதிய முயற்சியில் ஈடுபடுகிறான். அவனைத் தன் முன் அழைத்து புசித்து குடித்து வெறிக்கப்பண்ணுகிறான்.

என்ன பரிதாபம்! கர்த்தரால் அபிஷேகிக்கப்பட்ட இஸ்ரவேலின் ராஜா இத்தனை கேவலமாக தன்னுடைய எல்லா அதிகாரத்தையும் உபயோகப்படுத்தி உரியாவின் மனதை குடிபோதையால் கலங்கப்பண்ணி அவனைத் தன் மனைவியுடன் போய்த் தங்குமாறு முயற்சி செய்கிறான்.

அன்று தன்னை வேட்டையாடிய சவுல் தன் கைக்கு அருகே இருந்தபோது அவன் மேல் கை போட மாட்டேன் என்று உறுதியாக இருந்தானே அந்த தாவீதா இவன்! மிகுந்த தயவுள்ள இருதயத்தைக் கொண்ட தாவீது இன்று இரக்கமில்லாதவனாக காணப்படுகிறான்.

உரியாவை எப்படி தன் வீட்டிற்குப் போக வைக்க என்றுத் தெரியாமல் தாவீது இப்பொழுது அவனுடைய ஐம்புலன்களையும் இழுக்கும் விதமான ராஜாவின் மேஜையில் வைக்கும் உணவினாலும், ராஜாவின் திராட்சைத் தோட்டத்திலிருந்து வரும் மதுவினாலும் அவனை நிரப்புகிறான். அதிகமாய் குடித்து விட்டால் குடிபோதையில் தான் சொன்னதை செய்வான் என்ற எண்ணம். ஆனால் வேதம் தாவீது அவனை வெறிக்கப்பண்ணினான் என்று கூறினாலும் அவன் புத்தி பேதலிக்கும் வரை குடித்ததாகத் தெரியவில்லை.

தாவீது தன் இள வயதில் கட்டுப்பாடோடு வாழ்ந்தவன் தான். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவன் தன் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தாமல் அநேக மனைவி மாரையும், மறுமனையாட்டிகளையும் சேர்க்க ஆரம்பித்தான். அவனுடைய இந்த கட்டுப்பாடற்ற தன்மை ஒருநாள் பொங்கி தன்னுடைய சேனையின் வீரனான உரியாவின் மனைவியைத் தொட செய்தது. ஒரு ராஜ்யத்தை கட்டியாளத் தெரிந்த அவனுக்கு தன்னைக் கட்டுப்படுத்தத் தெரியவில்லை. தன்னைக் கட்டுப்படுத்தத் தெரியாதவனுக்கு தன் குடும்பத்தை எப்படி கட்டுப்படுத்தத் தெரியும்? தாவீதின் குடும்பம் பின்னால் பல கஷ்டங்கள் அனுபவித்ததை வேதம் நமக்கு காட்டுகிறது.

நம்மை பாவத்தில் விழவைக்கும் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தும் கிருபையை கர்த்தர் நமக்குக் கொடுக்குமாறு ஜெபிப்போம். தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை கைக்கொள்ளும் ஆவல் ஒவ்வொரு நாளும் நமக்கு வேண்டும். அவருடைய பலத்த புயத்துக்குள் நம்மை ஒப்புக்கொடுத்து கட்டுப்பாடோடு பரிசுத்தமாய் வாழ ஜெபிப்போம்.

கர்த்தாவே எங்களை சோதனைக்குள் பிரவேசிக்கப்பண்ணாமல் தீமையினின்று இரட்சித்துக் கொள்ளும். ஆமென்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

இதழ்: 719 குற்ற மனசாட்சி என்ற நரகம்!

2 சாமுவேல் 11:10  உரியா தன் வீட்டுக்குப்போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி, நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்கு போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான்.

என்னுடைய அம்மா நன்றாக லேஸ் பின்னுவார்கள். என்னையும் ஏதாவது ஒரு டிசைனைப் பின்பற்றி பின்னச் சொல்வார்கள். ஒருநாள் நான் பின்னிய போது ஒரு சிறு தவறு பண்ணிவிட்டேன். ஒரே ஒரு பின்னல்தானே விட்டு விட்டேன் ஒன்றும் ஆகாது என்று அதைத் தொடர்ந்து பின்னிக் கொண்டிருந்தேன். அம்மா என்னிடம் வந்து அதை கையில் வாங்கி , நான் ஒரு பின்னலை தவர விட்ட இடத்தில் ஒரு சிறு இழையை இழுத்தார்கள். அப்படியே முழுவதும் உருவி வந்து விட்டது. ஒரு சின்ன பின்னலைத் தவற விட்டது அந்த முழு வேலையையும் பாழாக்கி விட்டது.

இதைத்தான் தாவீதின் வாழ்க்கையிலும் பார்க்கிறோம். தாவீது உரியாவை போர்க்களத்திலிருந்து வரவழைத்து, தந்திரமான வார்த்தைகள் பேசி, மது அருந்தக் கொடுத்து அவன் வீட்டில் போய் அவன் மனைவியின் தோளில் இளைப்பாற சொன்னது நிறைவேறவில்லை. இந்த உத்தமமான சேனை வீரன் தன் வீட்டுக்கு போகாமல் மற்ற ஊழியரோடே படுத்துக் கொண்டான்.

தன் திட்டம் நிறைவேறாத மன உளைச்சலில் அவன் உரியாவைப் பார்த்து நீ ஏன், எதற்கு  வீட்டிற்கு போகவில்லை என்று கேள்வி கேட்கிறான். ஏதோ உரியா தான் தவறு செய்துவிட்டால் போல் கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறான். நான் குற்றமுள்ள மனதோடு இருக்கும்போது என் முன்னால் இருக்கும் ஒருவர் நியாயமாகத்தான் நடப்பேன் என்றால் என் மனநிலை கூட இப்படித்தான் இருந்திருக்கும். உரியா தன் தேவனுக்கு முன்பாகவும், ராஜாவுக்கு முன்பாகவும், தன் சக ஊழியருக்கு முன்பாகவும் நீதியுள்ளவனாய் இருந்தான். ஆனால் தாவீதோ குற்றமுள்ள மனசாட்சியுடன் அவனிடம் கேள்வி கேட்கிறான்.

இந்த குற்றமனசாட்சி என்பது சரி எது தவறு எது என்று நன்கு அறிந்தது. நம்முடைய ஏதேன் தோட்டத்துக்கு வாருங்கள். ஆதாம் ஏவாள்  இருவரும் கர்த்தரோடு எவ்வளௌ ஐக்கியமாய் உறவாடினர். ஆனால் அந்தக் கீழ்ப்படியாமை வந்தபோது பின்னாலேயே வந்தது இந்த குற்ற மனசாட்சி! ஏய் நீ செய்தது குற்றம் என்று! அதனால் தான் அவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர்.

குற்ற மனசாட்சியைப் போல நரகம் ஒன்றும் இல்லை என்று அதை அனுபவித்தவர்கள் சொல்ல முடியும்! ஏன் தாவீதிடம் சற்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே! தூக்கமற்ற இரவு! உரியா தன் வீட்டுக்கு போனானா இல்லையா என்ற படபடப்பு! காலையில் எழுந்தவுடன் யாரையாவது கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அழுத்தம்! அவன் போகவில்லையென்று தெரிந்ததும் பாதி கோபம் பாதி ஆத்திரம்! நரகம் தான்! பத்சேபாளிடம் கொண்ட சில நிமிட உறவு இப்பொழுது இனிக்கவே இல்லை.

இந்த குற்ற உணர்வுடன் நீங்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறீகளா?

ஒரு சிற்றின்பம், சற்று நேரம் நிலை தளர்ந்தது, தாவீதை அவன் அதிகமாய் நேசித்த அவனுடைய பரம பிதாவாகிய தேவனாகிய கர்த்தரை விட்டு  பிரித்து,  அவனுடைய வாழ்க்கையையே நரகமாக்கிவிட்டது.

ஒரு சின்ன பின்னல் போல ஒரு சின்ன நிலை தடுமாறுதல், ஒரு சிறு சிற்றின்பம் உன் வாழ்க்கையையே நரகமாக்கிவிடும். கர்த்தரிடம் வா!

பழைய பாவத்தாசை வருகுதோ – பிசாசின்

மேலே பட்சமுனக்கு திரும்ப வருகுதோ?

அழியும் நிமிஷத்தாசை காட்டியே

அக்கினிக்கடல் தள்ளுவானேன்?

நீயுனக்கு சொந்தமல்லவே மீட்கப்பட்ட 

பாவி நீயுனக்கு சொந்தமல்லவே!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

இதழ்: 718 சோதனையை சகிக்கிற மனுஷன்!

2 சாமுவேல் 11:9  ஆனாலும் உரியா தன் வீட்டுக்கு போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச்சேவகரோடுங்கூடப் படுத்துக் கொண்டிருந்தான்.

மீன்கள் கண்ணுக்கு படாத வரைக்கும் கொக்கு பரிசுத்தமாய் இருக்கும் என்று ஒரு வங்காள பழமொழி உண்டு.

ஒருவேளை உங்களுக்கு ஐஸ்கிரீம் பிடிக்காமல் இருக்குமானால் ஒரு பெரிய கிண்ணத்தில் ஐஸ்கிரீம் உங்கள் பக்கத்தில் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஐஸ்கிரீம் என்றாலே நாக்கில் தண்ணீர் வருபவராக இருந்து ஏதோ ஒரு காரணத்தால் நீங்கள் அதை சாப்பிடக்கூடாது என்று இருக்கும்போது உங்கள் அருகில் வைக்கப்படும் ஐஸ்கிரீம் உங்கள் கண்களுக்கு ஒரு பெரிய சோதனையாகத்தானே இருக்கும்.

நீரில் காணும் மீன் கொக்குக்கு ஒரு சோதனை தானே!  இந்த சோதனை சில நேரங்களில் மனிதரூபத்தில் வரும்! சோதனை நண்பரின் ரூபத்திலும் வரலாம்! நண்பரின் மனைவி ரூபத்திலும் வரலாம்!

இந்த வேதம் ஒரு அற்புத புத்தகம். கர்த்தர் நம்மை தம்முடைய கட்டளைகளைக் கொடுத்ததோடு நிறுத்தாமல், உன்னையும் என்னையும் போன்ற தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையில் வரும் சோதனைகளையும் வேதத்தில் இடம் பெற செய்து நமக்கு பாடம் கற்பிக்கிறார். வேதம் எதையும் மறைக்கவில்லை. சோதனையில் அகப்பட்டு விழுந்து போனவர்கள் பின்னர் அவர்கள் வாஞ்சித்த இரட்சிப்பை திரும்பப்பெற்றவர்கள் என பலரின் வாழ்க்கை சம்பவங்கள் நமக்காக ஆவியானவரால் எழுதப்பட்டுள்ளன.

பரலோக பிதாவின் ஆலோசனை இந்த வசனத்தில் கொடுக்கப்பட்டது போல எங்கும் இல்லை என்று நினைக்கிறேன். இஸ்ரவேலின் ராஜா தந்திரமான வார்த்தைகளைப் பேசி, பிரியமான பதார்த்தங்களை வீட்டுக்கு அனுப்பி உரியாவை தன் வீட்டில் போய் மனைவியுடன் சந்தோஷமாக இரு என்று அனுப்பிய போதும் இந்த உண்மையான, கடமை தவறாத வீரன் வீட்டுக்கு செல்லாமல், ராஜாவின் அரண்மனையிலேயே மற்ற ஊழியருடன் தங்கி விடுவதைப் பார்க்கிறோம்.

ஒரு சேனை வீரனுடைய அர்ப்பணிப்பு உரியாவிடம் இருந்தது.தன்னுடைய கவனத்தை திசை திருப்ப விடவேயில்லை. மற்ற வீரர்கள் போர்க்களத்தில் இருந்த போது உரியாவுக்கு ஆசா பாசங்களில் எண்ணம் இல்லை.அனைத்து சேனையும் திரும்பும்போது தான் வெற்றியைக் கொண்டாட முடியும். எந்த சோதனைக்குள்ளும் விழ அவன் தயாராக இல்லை! அது ராஜாவிடமேயிருந்து வந்தாலும் பரவாயில்லை நான் சோதனையில் விழ மாட்டேன் என்ற உறுதியான எண்ணம்! எத்தனை அருமையான குணம்!

பின்னால் நாம் படிப்போமானால் உரியா ஒருதடவை மட்டும் அல்ல மூன்று தடவை சோதனையை சகிக்கிறான். உரியா தன் வீட்டுக்குள் செல்லவே இல்லை! அரண்மனைக்கு வெளியே தங்கி விடுகிறான். எத்தனை மன உறுதி! நாமாயிருந்தால் ராஜாதானே அனுமதி கொடுக்கிறார், நான் ஒன்றும் இதைத் தேடி ஓடவில்லை! அதுவே என்னைத்தேடி வந்தது என்று சாக்கு சொல்லி சோதனைக்குள் விழுந்திருப்போம்!

சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான் (யாக்:1:12)

நாம்  சோதனையை எதிர்க்க வேண்டும் என்று உறுதியாயிருந்தால் ஒழிய சோதனையிலிருந்து காத்துக்கொள்ளுமாறு ஜெபிக்க முடியாது. சிந்தித்து ஜெபியுங்கள்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

இதழ்: 717 ஒரு பாவத்தை மறைக்க!!!!!!

2 சாமுவேல் 11:8 பின்பு  தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டுக்குப்போய் பாதசுத்தி செய் என்றான். உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்களவன் பின்னாலே அனுப்பப்பட்டது.

நாம் 1 சாமுவேல் 15:17 ல் சாமுவேல் சவுலைப் பார்த்து நீர் உம்முடைய பார்வைக்கு சிறியவராயிருந்தபோது அல்லவோ …… கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே என்பதைப் பார்க்கிறோம்.

அடிக்கடி யாராவது நம் ஒவ்வொருவருக்கும் இதை ஞாபகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். பதவியும் புகழும் பணமும் ஒவ்வொரு மனிதனையும் தான் யாரென்று மறந்து போக செய்கிறது. நம்முடைய பார்வைக்கு நாம் சிறியவராகத் தோன்றுவதே இல்லை.

என்ன பரிதாபம்! கர்த்தருக்கேற்ற இருதயம் உள்ள தாவீது கூட,  பணமும், புகழும், அதிகாரமும் வந்தவுடன் அடுத்தவனுடைய மனைவியைத் தனக்கு சொந்தமாக்கினதுமல்லாமல், அதை மறைக்கத் திட்டமும் தீட்டும் அளவுக்கு தாழ்ந்து போனான். தாவீது தன்மேலும், தன் கள்ளத்தனத்தை மறைக்கும் திட்டங்கள் மேலும் சார்ந்து போகையில் அவன் கர்த்தரை விட்டு மிகவும் தூரமாக விலகிக் கொண்டிருந்தான்.

நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கலாம். நாம் நம்முடைய தவறை மறைக்க முயற்சி செய்தால் மேலும் மேலும் பாவத்தில் தான் விழுவோம். அவனுடைய சேனைத் தலைவன் யோவாபுடைய கூட்டோடு, உச்ச கட்ட போர்க்களத்தில் இருந்த பத்சேபாளின் கணவனை  வீட்டுக்கு அழைத்து தன்னுடைய பாவத்தை மறைக்கப்பார்க்கிறான்.

அந்தக்காலங்களில் ராஜாவும் சேனையும் சேர்ந்துதான் யுத்தத்துக்கு செல்வார்கள். தோல்வியோ வெற்றியோ சேர்ந்து தான் அனுபவித்தனர். வெற்றியை சேர்ந்தே கொண்டாடி மகிழ்ந்தனர். இங்கு இந்த வீரன் உரியாவை மட்டும் மற்ற வீரர்களை விட்டு பிரித்து வீட்டுக்கு  அழைத்து, போரில் காய்ந்து போய் வந்த அவன் முன் அல்வாவை வைப்பது போல உச்சிதமான பதார்த்தங்களை வைத்ததின் அர்த்தம் தான் என்ன?

சோர்ந்து போய் வந்த உரியாவிடம் தந்திரமான வார்த்தைகளை பேசி, ஏதோ ராஜா நம்மைப் பார்க்க, நம்மிடம் பேச இவ்வளவு ஆசைப்படுகிறாரே நான் அவ்வளவு முக்கியமானவனா  என்று அவன் எண்ணும்படி வைத்து, அவன் ராஜாவிடம் எந்த பயமுமில்லாமல் இருக்கும்போது அவனுக்கு கதவைத் திறந்து அவன் மனைவியிடம் சென்று சற்று இளைப்பாறுமாறு ஆசை காட்டுகிறான். இஸ்ரவேலின் சேனை அனைத்தும் போர்க்களத்தில் இருந்தபோது தன்னுடைய மனைவியின் தோளில் இளைப்பாறும் சிலாக்கியம் இந்த வீரனுக்கு மட்டும் எதற்காக கொடுக்கப்பட்டது?

பாவங்களை மறைக்கிறவ்ன் வாழ்வடைய மாட்டான் என்பது நமக்குத் தெரியும். தாவீது தன்னுடைய பாவத்தை மூடி மறைக்கும் செயலில் கர்த்தரை விட்டு மிகவும் தூரம் போய்விட்டான்.

நம்முடைய வாழ்க்கை இன்று எப்படியிருக்கிறது? நம்முடைய இருதயம் கர்த்தரை பின்பற்ற ஆவலாய் உள்ளதா? அல்லது சிலவற்றை மட்டும் கர்த்தருக்கு தெரியப்படுத்தினால் போதும் மற்றவை எனக்கு சொந்தம் என்று  மூடி மறைத்து உள்ளதா?

நீ உன்னுடைய பார்வையில் மிகச்சிறியவனாய் இருந்தபோது கர்த்தர் உன்னைத் தெரிந்து கொண்டார் என்பதை மறந்து போக வேண்டாம்.

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்