கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 692 நம்மைக் கொல்லும் தனிமை!

2 சாமுவேல் 6: 23 அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள் மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.

தனிமை என்னைக் கொல்கிறது என்று சொல்லும் அநேகரைப் பார்த்திருக்கிறேன். வாழ்க்கையின் கொடுமையால் தனிமைக்குள் தள்ளப்பட்டவர்கள், பிள்ளைகளோடு வாழ மறுத்து தனிமையைத் தெரிந்து கொண்டவர்கள் என்று பலரைப் பார்த்திருக்கிறேன்.

இந்த அதிகாரத்தின் கடைசி வசனமாகிய இன்றைய வசனம் கூறுகிறது, சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு குழந்தை இல்லை என்று.

மீகாள் என்ற பெயரின் அர்த்தம், ஒரு நீரோடை என்பதுதான். அவள் வாழ்க்கையில் நீரோடை போன்ற கட்டுக்கடங்காத அன்பும் காதலும் ஒருகாலத்தில் தாவீது மீது இருந்ததை நாம் அறிவோம். அநேகப் பெண்களைப் போல அவளால் தன் காதலை மறைக்க முடியவில்லை. அவள் முகம் பிரகாசித்தது. ஆனால் அவளுடைய நீரோட்டத்தைக் கட்டுப்படுத்துவதுபோல் ஏற்பட்டன பல பிரச்சனைகள்.  அவள் அன்பு கணவனைக் காப்பாற்ற தன் தகப்பனை ஏமாற்றி பொய் சொல்லி நாடகமாடவேண்டியிருந்தது.

அவள் தாவீதை ஜன்னலின்வழியாய் இறக்கி விட்ட நாளுக்கு பின் அவனைக் காணவே முடியவில்லை. அவள் முகம் வெளிப்படுத்திய அன்பையும் ஏக்கத்தையும் அவள் தகப்பனாகிய சவுல் காணத்தவறவில்லை. அவள் தகப்பன்  இன்னொருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அவள் தகப்பனுடைய மறைவுக்குபின் அவளுடைய சகோதரன் இஸ்போசேத் அவளைத் தன் கணவனிடமிருந்து பிரித்து வந்து தாவீதிடம் ஒப்புவித்தான். அந்த சமயத்தில் தாவீதுக்கோ பல மனைவிகளும், மறுமனையாட்டிகளும் இருந்தனர்.

மீகாளின் மன நிலையை சற்று யோசித்து பாருங்கள்! ஒருகாலத்தில் அவள் மட்டுமே தாவீதுக்கு சொந்தமாக இருந்தாள். ஆனால் இப்பொழுது தாவீது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை அவளுக்கு எப்படியிருந்திருக்கும்? மனதில் கசப்பையும் வெறுப்பையும் ஏந்தத்துவங்கினாள். தாவீது கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக நடனமாடிக்கொண்டு வந்ததைக் கண்டு அவதூறான வார்தைகளைப் பேசினாள்.

அதன் பின்னர் மீகாளுக்கு குழந்தை இல்லை என்றுதான் நாம் வேதத்தில் படிக்கிறோம். இன்று எத்தனையோபேருக்கு மருத்துவரீதியாக குழந்தைப்பேறு இல்லாமல் இருக்கிறது. அதை எல்லோரும் சாபமாகப் பார்க்கிறார்கள்  வேதத்தில் கூட பல இடங்களில்  கர்த்தர் கர்ப்பத்தை அடைத்தார் என்று வேதம் சொல்கிறது. ஆனால் வேதத்தின் பல  மொழியாக்கங்களை நான் படிக்கும்போது எங்குமே கர்த்தர் மீகாளின் கர்ப்பத்தை அடைத்தார் என்று சொல்லவேயில்லை. அப்படியானால் இதை மீகாள் தான் தெரிந்துகொண்டாள் என்றுதானே அர்த்தம்? இந்த கசப்பான வாக்குவாதத்துக்கு பின்னர் அவள் தன் கணவனோடு சேர்ந்து வாழவே இல்லை என்று அர்த்தம். தனிமையை அவளே தெரிந்துகொண்டாள் என்று  அர்த்தம்!

சகோதர சகோதரிகளே உங்களுக்குள்ளிருந்து ஊறி வரும் அன்பு என்னும் நீரோடையை வாழ்க்கையின் பிரச்சனைகளோ அல்லது வாழ்க்கையில் உள்ள எவருமோ தடை போடாதபடி காத்துக்கொள்ளுங்கள். பிரச்சனைகளை ஒரு சாலைத்தடையைப் போல பார்க்காமல், அதை ஒரு பாலமாகப் பாருங்கள்.  இந்த அணுகுமுறையோடு நாம் வாழும்போது தனிமை நம்மைக் கொல்லாது! மீகாளின் தனிமையான வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாக அமையட்டும்.

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment