கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 711 இஷ்டம்போல வாழும் வாழ்க்கை!

2 சாமுவேல் 11: … அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமான பத்சேபாள் என்றார்கள்.

உனக்கு இஷ்டப்படி நீ செய்யலாம் என்ற சுதந்தரம் என்னுடைய இளவயதில் கொடுக்கப்படவில்லை. அம்மா, அப்பா, டீச்சர்ஸ், போதகர்மார்,  என்ற பலருடைய அட்வைஸ் கேட்டுதான் நடந்தோம். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி தங்களுடைய சொந்த வழியில் நடந்தவர்கள் பல விளைவுகளை சந்திக்க வேண்டியிருந்தது. அவர்களால் அவர்களுடைய குடும்பம் தலைகுனிந்து நிற்க வேண்டியிருந்தது!

எல்லா செயல்களுக்கும் பக்க விளைவுகள் உண்டு! அதுவும் யாரையும்பற்றி யோசிக்காமல் நாம் சுயமாக எடுக்கும் முடிவுகளுக்கு நிச்சயமாக பக்க விளைவுகள் உண்டு.

இங்கு தாவீது எடுத்த முடிவால் 5 பேர் பாதிக்கப் படுவதைப் பார்க்கிறோம்.

முதலாவது தாவீது தான். அவன் தான் இந்தத் திட்டத்தை வகுத்தவன். இரண்டாவது தாவீது பத்சேபாளைப்பற்றி விசாரிக்க அனுப்பிய ஆள். இவருக்குதான் தாவீதின் திட்டம் தெரியும். மூன்றாவது பத்சேபாளின் தகப்பன் எலியாம். நான்காவது பத்சேபாள். ஐந்தாவது அவளுடைய கணவன் உரியா.

1 நாளாகமம் 11:26,41 ல் தாவீதின் இராணுவத்திலிருந்த பராக்கிரமசாலிகளின் பட்டியலில் ஏத்தியனான உரியாவின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது.

தாவீது தன்னுடைய சுயமான வழியில் போட்ட இந்தத் திட்டம் அவனுடைய நம்பிக்கைகுரிய ஒரு இராணுவ வீரனின் மனைவியைப் பற்றியது. அவள் யாருடைய மனைவியாயிருந்தாலும் இந்தத் திட்டம் தவறுதான். ஆனாலும் அவனுடைய மிகவும் விசுவாசமுள்ள ஒரு பராக்கிரமசாலியின் இருதயத்தை ஈட்டியால் குத்த முடிவு செய்து விட்டான்.

வாழ்க்கையில் எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்ற சில ஊழியக்காரர்கள் தவறு செய்து அவர்கள் பெயர் டிவியிலும், நியூஸ் பேப்பரிலும் வரும் போது நமக்கு எப்படி ஷாக்காக இருக்கிறது? அப்படிதான் தாவீதின் இந்த செயலும். எத்தனை ஆசீர்வாதங்களைப் பெற்றிருந்தான்! ஆனால் எப்படி இந்த தவறை திட்டமிட்டு செய்தான் என்று படிக்கும்போது நமக்கு சற்று அதிர்ச்சி தான் ஆகிறது.

ஒரு ராஜாவாக தான் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தனோ என்னவோ?

நம்முடைய நடத்தை என்பது நாம் முகம் பார்க்கும் ஒரு கண்ணாடி போன்றது. தாவீதின் நடத்தையை பிரதிபலித்த கண்ணாடியில் அதன் மூலம் அவன் குடும்பம், அவன் பிள்ளைகள், ஏன் அவனுடைய தேசமும் அடையப்போகிற விளைவுகள் பிரதிபலித்தன.

உன்னுடைய இஷ்டப்படி முடிவு எடுத்து நடந்து கொண்டிருக்கிறாயா? ஒவ்வொரு செயலுக்கும் விளைவுகள் உண்டு! இதன்மூலம் உன் குடும்பம் பாதிக்கப்படலாம்! உன் பிள்ளைகள் பாதிக்கப்படலாம்!

அதுமட்டுமல்ல!

நம்முடைய ஒவ்வொரு செயலும் நம்முடைய நித்திய வாழ்வை ஏதோ ஒரு விதத்தில் தொடுகிறது!  அது நம்முடைய பரலோக வாழ்க்கையை அழித்து விடக்கூடும்!  என் இஷ்டம் போல வாழுவேன் என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று எண்ணி வாழாதே!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

Leave a comment