Archive | August 2019

இதழ்: 745 தகுதியற்ற எனக்கு அளித்த கிருபை!

2 சாமுவேல் 12:5  அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல்                (அந்த பணக்காரன் மேல்)  மிகவும் கோபம் மூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தை செய்த மனுஷன் மரணத்துக்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.

தாவீதுக்கு பயங்கர கோபம்! தீர்க்கதரிசியான நாத்தான் கூறிய கதையில் வந்த ஐசுவரியவான் ஒரு ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி விட்டான். உடனே அவன் நியாயம்தீர்க்கப் பட் வேண்டும் என்று நினைத்தான் தாவீது. அதையும் தாண்டி கோபத்தின் உச்சிக்கே போய் அவன் இந்தக் காரியத்தை செய்த அந்த மனுஷன் சாக வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறான்.

இதை வாசிக்கும்போதுதான் தாவீது ஒருகாலத்தில் ஆடுகளை மேய்த்த ஒரு மேய்ப்பன் என்பது நினைவுக்கு வந்தது. சங்கீதம் 23 ல் தாவீது கர்த்தராகிய தேவனை ஒரு நல்ல மேய்ப்பனுக்கு ஒப்பிட்டு தாவீது எழுதுகிறான். நாத்தான் அந்த ஏழையின் ஆட்டுக்குட்டியைப் பற்றி, அது அவனுக்கு ஒரு மகள் போல இருந்தது என்று கூறிய வார்த்தைகள் மேய்ப்பனாயிருந்த தாவீதால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்த வார்த்தைகள் தான். இளம் வாலிபனாக ஆடுகளை மேய்த்த காலத்தில் அவன் நிச்சயமாக தன்னுடைய மந்தையில் இருந்த ஒவ்வொன்றின் குரலையும் அறிந்து, ஒவ்வொன்றுக்கும் பெயர் சூட்டி, அவைகளை பத்திரமாக நடத்தியிருந்திருப்பான். அவன் தன்னுடைய ஆடுகளை ஓநாயிடமிருந்தும், சிங்கத்தினிடமிருந்தும் தன்னுடைய உயிரை பணயம் வைத்து காப்பாற்றியது நமக்குத் தெரிந்ததே.

இத்தனை இளகிய மனதுள்ள தாவீதுக்கு தீர்க்கதரிசியாகிய நாத்தான் அந்த ஐசுவரியவான் ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்து விட்டான் என்று கூறியதை தாங்கவே முடியவில்லை. அவனுடைய உடனடி பதில் என்ன தைரியம் அவனுக்கு, அவனுக்குத் தக்க தண்டனை கொடுக்கவேண்டும் என்றே வந்தது

உங்களிடம்  ஒன்று கேட்கிறேன்! நம்மில் எத்தனை பேருக்கு நாம் தவறிபோய் பாவத்தில் விழுந்தபோது, இரக்கமே உருவான நம்முடைய தேவன் நம்முடைய பாவத்துக்குத் தக்க தண்டனையை கொடுத்திருக்கிறார்? அப்படியானால் நாம் இன்று உயிரோடே இருக்கவே முடியாது அல்லவா? அவருடைய தயவுக்கும், கிருபைக்கும் கொஞ்சம் கூட தகுதியே இல்லாத என்மேல் அல்லவா அவர் தம்முடைய மகா பெரிய தயவையும், கிருபையையும்  காட்டினார்!

சங்கீதத்தில் மாத்திரம் கிருபை என்ற வார்த்தை 100 முறை வருகிறது.  இதை ஒவ்வொரு முறையும் வாசிக்கும் போது எனக்கு எத்தனை ஆதரவாக இருக்கிறது தெரியுமா? ஏனெனில் என்னுடைய தேவனாகிய கர்த்தருடைய கிருபை இந்த உலகத்தில் உள்ள நல்லவர்களுக்கு மட்டும் அல்ல, பாவியிலேயே மகா பாவியான எனக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது!

அந்த தேவனாகிய கர்த்தருக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தையே இல்லை!  தேவனாகிய கர்த்தருடைய நித்திய கிருபையை நீங்கள் அனுபவித்ததுண்டா? அப்படியானால் அவரை நன்றியோடு ஸ்தோத்தரியுங்கள்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

இதழ்: 744 உண்மையில் யார் குற்றவாளி?

2 சாமுவேல் 12:5  அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல்                (அந்த பணக்காரன் மேல்)  மிகவும் கோபம் மூண்டவனாகி….

நீ யாருடைய தவறையாவது சீர் திருத்த நினைக்கும்போது உன்னையே சற்றுக் கண்ணாடியில் பார்த்துக்கொள் என்று யாரோ எழுதியதை படித்திருக்கிறேன்.

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.  ( மத்:7:1)

என்று கர்த்தராகிய இயேசு சொன்னார்.  மற்றவருடைய குற்றத்தை நாம் சுலபமாக கண்டுபிடித்து விடுவோம், நம்முடைய குற்றம் மட்டும்தான் நம் கண்களில் படவே படாது. அப்படித்தான்  தாவீதுக்கும் ஆகிவிட்டது. நாத்தான் தாவீதிடம் கூறிய கதையில் வந்த பணக்காரன், ஏழையினுடைய ஆட்டுக்குட்டியைத் திருடி தன்னுடைய வீட்டுக்கு வந்த வழிப்போக்கனுக்கு சமையல் செய்ததைக் கேட்டதும் அவனுக்கு கோபம் வந்து விட்டது.

நாத்தான் அவனிடம் அந்த பணக்காரன் ஏழையினுடைய ஆட்டுக்குட்டியை இச்சித்ததைக் கூறினான். மற்றவருடைய பொருளுக்கு ஆசைப்படுவதும் தவறு அதை அடைய நினைப்பதும் தவறு.  ஆனால் இங்கு தாவீது கோபப்பட்டதுதான் எனக்கு ஆச்சரியத்தை மூட்டுகிறது. உரியாவின் மனைவியாகிய பத்சேபாளை இச்சித்தது அவன், உரியாவை போரில் வெட்டுண்டு சாகடித்தது அவன், அவனுக்கு சொந்தமில்லாத பத்சேபாளைத் தனக்கு சொந்தமாக்கியது அவன், ஆனால் அவன் தன் குற்றத்தைக் காணாமல் கதையில் வந்த ஐசுவரியவான் மேல் கோபப்படுகிறான்.

இன்று தாவீதின் மூலமாக நாம் பார்ப்பது நம்முடைய சுய ரூபத்தைத்தானே!நம்முடைய தவறை நாம் ஒப்புக் கொள்ளாமல், மற்றவர்களுடைய தவறைப்பற்றி பெரிதாகப் பேசுகிறோம் அல்லவா? நம்முடைய தவறை வெளிப்படையாக ஒத்துக்கொள்வது நமக்கு எவ்வளவு கடினமான காரியம். அதனால் தான் நம்மைப்போலவே தாவீதும் மற்றவனுடைய குற்றத்தைப்பற்றி கேள்விப்பட்டவுடன் கோபப்பட்டான். ஆனால் உண்மையில் யார் அந்தக் குற்றவாளி?

இன்று நம்முடைய கண்களை நேருக்கு நேர் கண்ணாடியில் பார்த்து நம்முடைய கண்ணில் உள்ள தூசியை எடுத்துப்போட  தாவீதுக்கும், நமக்கும்  தைரியம் உள்ளதா?

தவறுகளை சுட்டிக்காட்டுவதும் ஒரு தாலந்து தான்! ஆனால் அந்த தாலந்து புதைக்கப்பட வேண்டிய ஒன்று!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

:

இதழ்: 743 அப்பத்தை பகிர பின்வாங்காதே!

2 சாமுவேல் 12: 4    அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல்…..

நாத்தான் தாவீதிடம் கூறிய கதையில் பணக்காரன் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியை இச்சித்ததாகப் பார்த்தோம். அந்த இச்சை தான் அவனை தரித்திரன் வீட்டில் இருந்த ஆட்டுக்குட்டியைத் திருட வைத்தது.

இன்றையதினம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய சுயநலமற்ற, இரக்க மனப்பான்மையை பற்றிப் பார்ப்போம். இது நாம் பார்த்த இச்சை, பெருமை இவற்றிற்கு நேர் மாறானது.

நாம் ஒருவேளை பிறக்கும்போதே இரக்கம் இல்லாதவர்களாக இருந்திருக்க மாட்டோம். நாம் பார்க்கும் எதையும் வாங்க, நாம் நினைக்கும் எதையும் நடத்த, நாம் விரும்பும் வாழ்க்கையை வாழ நமக்குத் தருணம் கிடைக்கும்போதுதான் எல்லாமே தலைகீழாக மாறிவிடுகிறது. அதிக பணம் இருக்கும் சிலர் நடந்து கொள்வது நமக்கு அருவருப்பாக இருக்கும் அல்லவா?

இதனால் தான் நம்முடைய கர்த்தராகிய இயேசு இந்த உலகத்தில் இருந்தபோது, அதிகமாக சொத்து குவித்தவர்களைப் பார்த்து, அதிக ஆஸ்தியினால் வரும் ஆபத்தைக்குறித்து பேசினார்.  அதிக ஆஸ்தி உள்ளவர்கள் பரலோக ராஜ்யம் செல்வது ஒட்டகமானது ஊசியின் காதில் நுழைவது போல இருக்கும் என்றும் எச்சரித்தார்.

சிலருக்கு இரக்க குணமே கிடையாது. ஆனால் பேரும் புகழும் கிடைப்பதற்காக சுயநலத்தோடு நான் நான் நான் என்று தாங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல  காரியத்தையும் கூவி அம்பலப்படுத்துபவர்கள் பரலோகராஜ்யத்துக்குரியவர்கள் அல்ல என்று கூறினார். தாங்கள் செய்வது  தங்களது மற்ற கரத்துக்கே தெரியாமல் செய்பவர்கள் தான் சுயநலமில்லாமல்இரக்க குணமுள்ளவர்கள்.  அவர்கள் இரக்கம் காண்பிப்பது அவர்களுக்கு இயல்பாக இருக்குமே தவிர உள்நோக்கம் இருக்காது.

இங்கே நாத்தானின் கதையில் வந்த ஐசுவரியவானும் அவனிடம் வந்த வழிப்போக்கருக்கு சமைக்க தன்னுடைய ஒரு ஆட்டைக்கூட இழக்க மனதில்லாதிருந்தான் என்று பார்க்கிறோம். அவன் வழிப்போக்கன் மேல் இருந்த இரக்கத்தால் சமைக்கவில்லை. தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியின் மேலுள்ள இச்சையால் தான் சமையல் செய்வித்தான்.

இந்த மனதில்லாமல் என்ற வார்த்தைக்கு பின்வாங்குதல் என்றும் அர்த்தம். யாருக்காவது உதவி தேவைப்பட்டபோது, உதவிசெய்யும் நிலையில் நாம் இருந்தாலும் பின்வாங்கியிருக்கிறோமா என்று நம்மை சோதித்து அறிவோம்!

நீ ஒருவேளை உதவ மனதில்லாதவனாக இருக்கலாம், உன்னுடைய பணத்தால் இரக்கம் செய்ய பின்வாங்கலாம், கஞ்ஞனாகவே  இருக்கலாம் ஆனால் ஒரு கிறிஸ்தவனாக மட்டும் இருக்க முடியாது!  சிந்தியுங்கள்!

போய் பசியாயிருப்போருக்கு அப்பத்தை பகிர்ந்து கொடு

என்றான் தேவ தூதன்!

நான் திரும்பத் திரும்ப இதை செய்ய வேண்டுமோ

என்றேன் நான்!

அப்படியல்ல! தேவன் உனக்குக் கொடுப்பதை நிறுத்தும் வரை கொடுத்துக்கொண்டே இரு

என்றான் தேவ தூதன்!

இதுவே என்னுடைய சாட்சி!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

இதழ்: 742 தேவையா? இச்சையா?

2 சாமுவேல் 12: 4    அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்த தரித்திரனுடைய ஆட்டுக் குட்டியைப் பிடித்து அதைத் தன்னிடத்தில்வந்த மனுஷனுக்கு சமையல் பண்ணுவித்தான் என்றான்.

ஆதியாகமத்தில் நாம் ஆபிரகாமின் குடும்பமும், லோத்தின் குடும்பமும் பலுகிப் பெருகிப்போனதைப் பார்க்கிறோம். இருவரும் பெரிய ஆஸ்தியை சேர்த்துவிட்டனர், அவர்களுடைய ஆடு மாடுகளுக்கு இடம் கொள்ளவில்லை. அதனால் ஆபிரகாம் தன்னுடைய குமாரனைப்போல இருந்த லோத்தை அழைத்து நமக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் உனக்குப் பிரியமான இடத்தை நீ பிரித்து எடுத்துக் கொள் என்றான்.

லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து யோர்தானின் சமனான வெளியைத் தெரிந்துகொண்டான். மிகவும் செழிப்பாக காணப்பட்ட அங்குதான் சோதோம் என்ற பட்டணமும் இருந்தது.

லோத்து உயரமான இடத்திலிருந்து பார்க்கும்போது,  நல்ல நீர் வளமுள்ள பச்சை பசேலென்ற சமவெளி ஒரு பெரிய தோட்டம் போலவும் சோதோமின் பள பளவென்ற வாழ்க்கை மிகவும் அழகாகவும் தெரிந்ததால், அவன் சோதோமை நோக்கி தன் கூடாரத்தைப் போட்டான் என்று வாசிக்கிறோம். ( ஆதி:13)

கண்ணுக்குத் தெரியும் அழகான வாழ்க்கை மீது கொண்ட  மோகம் ஆபிரகாமின் சகோதரன் மகனாகிய லோத்தை தன்னுடைய ஆவிக்குரிய தகப்பனாகிய ஆபிரகாமை விட்டும், ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரை விட்டும் பிரித்து விட்டன. பின்னர் லோத்தின் குடும்பத்துக்கு நடந்தது நமக்குத் தெரிந்ததே!

லோத்து உயரமான இடத்திலிருந்து சோதோமைப் பார்த்தற்கும், தாவீது உய்ரமான இடத்திலிருந்து பத்சேபாளை பார்த்தற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை! இருவரும் பெரிய பணக்காரர்கள்! பணத்தின் மேட்டிமையால் தாங்கள் விரும்பியதை அடைய ஆவல்.

இதைத்தான் நாத்தான் கூறும் கதையில் வரும் பணக்காரனும் செய்கிறான். பணத்தின் மேட்டிமையிருந்து அவன் கண்களை நோக்கிப் பார்த்தபோது அவ்னுக்குத் தென்பட்டது அந்த ஏழையின் அழகான செல்ல ஆட்டுக்குட்டிதான். அதை அடிக்க முடிவு செய்து விட்டான். இது அவனுடைய தேவை இல்லை! இச்சை!

ஆனால் மிகவும் உயரத்திலிருந்து தேவனாகிய கர்த்தர் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததை லோத்தும், தாவீதும், இந்த பணக்காரனும் மறந்து விட்டார்கள்.

நீ இன்று உயரத்திலிருந்து  எதைப் பார்க்கிறாய், எது உன் கண்களில் பச்சையாக தெரிகிறது, எதை நீ அடைய இச்சிக்கிறாய், என்பதை கர்த்தர் மிகவும் உயரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடாதே! உன்னுடைய தேவை என்பது வேறு, இச்சை என்பது வேறு! இதை கர்த்தர் நன்கு அறிவார்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்:741 எண்ணத்தின் தோற்றத்தை அறிவார்!

2 சாமுவேல் 12: 4  அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்த தரித்திரனுடைய ஆட்டுக் குட்டியைப் பிடித்து அதைத் தன்னிடத்தில்வந்த மனுஷனுக்கு சமையல் பண்ணுவித்தான் என்றான்.

நாத்தான் தாவீதிடம் ஒரு கதையுடன் வந்ததைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஏழை, பணக்காரனுடைய கதை! அந்த பணக்காரனிடத்தில் ஒரு வழிப்போக்கன் உணவைத்தேடி வருகிறான். அவன் எந்த வேளையில் வந்தான், எப்படிப்பட்ட நிலையில் வந்தான் என்று இந்தக் கதையில் கூறப்படவில்லை. ஆனால் அவனுக்கு உணவு தேவைப்பட்டது.

என்ன கொடூரம் இது! அந்த வழிப்போக்கனுக்கு உணவு சமைக்க தனக்குண்டான அநேக ஆடு மாடுகளிலிருந்து ஒன்றை அடிக்க மனதில்லாமல், அந்த ஏழையுடைய அன்புக்குரிய ஆட்டுக்குட்டியை அடித்து சமைக்கிறான் என்று பார்க்கிறோம். எப்பொழுது அந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ண வேண்டும் என்று தன் மனதில் முடிவு செய்தானோ அப்பொழுதே அது தன்னுடைய ஆட்டுக்குட்டி அல்ல, மாற்றானுடையது என்றும் முடிவு செய்து விட்டான்.

அவன் அந்த ஏழையுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து அடித்தான். வேதம் நமக்கு கூறுகிறது இதைத்தான் தாவீது உரியாவுக்கு செய்தான் என்று. உரியாவை யுத்தத்தில் முன்னிலையில் நிறுத்தி, மற்றவர்களை பின்வாங்க செய்து அவனை படுகொலை செய்தான்.

நான் முதலில் நாத்தான் ஒரு கதையோடு தாவீதிடம் வந்த போது, அது தாவீது பத்சேபாளை தனக்கு சொந்தமாக்கியதுதான் என்று நினைத்தேன். ஆனால் இந்தக் கதையின் அம்சமே தாவீது உரியாவை தந்திரமாக யுத்தத்தில் படுகொலை செய்ததுதான் என்று இப்பொழுத்தான் புரிந்து கொண்டேன்.

பத்சேபாள் கர்ப்பவதியான செய்தி கேட்டவுடனே தாவீதிற்கு இருந்த ஒரே பிரச்சனை அவளுடைய கணவன் உரியா தான்.  ஆதலால் அவனை அடித்து கொலை செய்த தாவீது அதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் பத்சேபாளைத் தன் மனைவியாக்கிக்கொண்டு வாழ்ந்து வந்தான்.

நாம் நம்முடைய நடத்தையைப் பற்றி கவனித்தால் நம்முடைய செயல்கள் ஒவ்வொன்றும் நம் கவனத்துக்கு வரும். ஆனால் நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் காரணம் நம்முடைய இருதயத்தின் ஆழத்தில் மறைந்து கிடக்கும் எண்ணங்கள் தான். தாவீது பத்சேபாளை தன் அரண்மனைக்கு அழைத்து வந்தது, ஏதோ துக்கத்தில் இருந்த ஒரு விதவைக்கு ஆறுதல் கொடுக்க அல்ல! யுத்தத்தில் கணவனை இழந்த பத்சேபாளின் குழந்தைக்கு பாதுகாப்பு கொடுக்க அல்ல! கர்த்தர் தாவீதின் உள்ளத்தை அறிவார்!  அவன் இருதயத்தின் எண்ணங்களையும், எண்ணங்களின் தோற்றங்களையும் அவர் அறிவார்!

அதனால் நாத்தான் தாவீதிடன் கர்த்தர் அவன் இருதயத்தை அறிவார் என்று ஞாபகப்படுத்தத்தான்  வந்தான்.

ஒரு நல்ல மரத்திற்கு அதின் வேர் எப்படியோ அப்படித்தான் நம் இருதயத்தின் எண்ணங்களும்!  கெட்ட எண்ணங்கள்  நம்முடைய ஆத்துமாவிற்கு விஷம் போன்றது! கர்த்தர் உன்னுடைய உள்ளத்தின் ஆழத்தை அறிவார்! உன்னுடைய ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் எண்ணத்தையும் அறிவார்! ஜாக்கிரதை!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

இதழ்: 740 வழிப்போக்கனான என்னை போஷித்தவர்!

2 சாமுவேல் 12:4. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல்…..

வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பது நம்முடைய நாட்டின் கலாசாரம் அல்லவா? நம்மைப்போல பல தேசங்களில்  இந்த கலாசாரம் காணப்படுகிறது.

ஒருதடவை நாங்கள் நேபாள தேசத்துக்குப் போனபோது ஏதோ ஒரு கிராம தகராறு காரணமாக எங்களுடைய கார் தலைநகருக்குள் போக அனுமதிக்கப்படவில்லை. இரவு பொழுது போயிற்று! எல்லா ஹோட்டல்களும் மூடப்பட்டன! என்ன செய்வதென்று அறியாது அருகில் உள்ள ஒரு பேக்கரியில் போய் தங்க இடம் கேட்டோம். அந்த இடத்தின் உரிமையாளர் எவ்வளவு சந்தோஷமாக எங்களுக்கு படுக்க இடமும், அந்தக் குளிரில் மூட கம்பளியும் கொடுத்தார் என்பதை என்றுமே மறக்க முடியாது!

யூதர்கள் இதில் மிகவும் விசேஷமானவர்கள்! வழிப்போக்கரை உபசரிப்பது அவர்களுடைய தெய்வீக கலாசாரம்! நம்முடைய சுயநலத்துக்காக இரவும் பகலும் நாம்  உழைக்கும் இந்தக் காலத்தில் விருந்தினர் என்ற வார்த்தையே ந்மக்கு பயத்தைக்கொடுக்கிறது அல்லவா? ஆனால் வேதம் நாம் தயவும் இரக்கமும் உள்ளவர்களாய் வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது!

இன்றைய வேதாகமப் பகுதியில் நாத்தான் தாவீதிடம் ஒரு கதையோடு வந்ததைப் பார்க்கிறோம். அதில் ஒரு ஐசுவரியவானும், ஒரு தரித்திரனும் இருந்தனர். தாவீது இந்தக் கதையைக் கேட்டபோது இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தன்னுடைய ராஜ்யத்தில் நடந்ததாகவே நம்பினான் என்று வேதம் சொல்கிறது. ஏனெனில் அவனும் ஒருநாள் ஏழையாகவும், பின்னர் பணக்காரனாகவும் இருந்த அனுபவம் இருந்தது.

திடீரென்று நாத்தான் கதையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்தான். அந்த ஐசுவரியவானிடம் ஒரு வழிப்போக்கன் வந்து ஏதாவது சாப்பிட உண்டா என்று கேட்டான். தாவீது கூட தான் பசியாயிருந்த வேளைகளில் ஏதாவது புசிக்க கிடைக்குமா என்று திரிந்திருக்கிறான். நீங்கள் மறக்கவில்லையானால் அப்படிப்பட்ட ஒரு நேரத்தில்தான் நாபாலையும் அவன் மனைவியான அபிகாயிலையும் சந்தித்தான். நாபால் உணவு கொடுக்க மறுத்து விட்டான் ஆனால் அவனுடைய புத்திசாலி மனைவியோ ஒரு விருந்தை ஆயத்தம் பண்ணி தாவீதை சந்தித்தாள் என்று படித்தோம்.

மற்றவர்களுடைய தயவுக்காக தாவீது காத்திருந்த நாட்களை நாத்தான் அவனுக்கு நினைவூட்டுகிறான். தாவீதை தேவனாகிய கர்த்தர் ஒவ்வொருநாளும் பாதுகாத்து, போஷித்து வழிநடத்தியதை அவனுக்கு நினைப்பூட்டினான். அவன் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்து ஒரு வழிப்போக்கனாய் உணவுக்காக போராடிய அந்த நாட்களை தாவீது எப்படி மறக்க முடியும்?  இருளாய் இருந்த அவன் சிந்தனையை, விளக்கேற்றி நினைவு படுத்துகிறான் நாத்தான்!

கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே! அவர் உன்னை நடத்திய விதத்தை, போஷித்த விதத்தை நினைத்துப்பார்! நீ வழிப்போக்கனாய் அலைந்தபோது அவர் உனக்கு பாதை காட்டி, பாதுகாத்து வழிநடத்தியதை எப்படி மறந்து போவாய். ஒரு நிமிடம்! ஒரே ஒரு நிமிடம் கண்ணை மூடி கர்த்தர் உனக்கு செய்த எல்லா உபகாரங்களையும் எண்ணிப்பார்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

இதழ்: 739 இரக்கமுள்ள இதயம்!

2 சாமுவேல் 12: 3   தரித்திரனுக்குத் தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக் கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது. 

வேதம் எனக்கு மிகவும் பிரியமான புத்தகமாயிருப்பதின் காரணங்களில் ஒன்று வேதத்தில் காணும் நிஜ வாழ்க்கை மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் தான்! ஏனெனில் அன்று அந்த நிஜ வாழ்க்கையில் நடந்த ஒவ்வொன்றும் இன்று நம்முடைய வாழ்க்கையிலும் நடக்கின்றது அல்லவா?

முதன் முதலில் நாம் காயீன், ஏபேல் என்ற இரண்டுபேருடைய  மாறுபட்ட  வாழ்க்கையைப்  பார்த்தோம். பின்னர் ஏசா, யாக்கோபு என்ற இரண்டு மாறுபட்ட இரண்டு நபரைப் பார்த்தோம். ஆகார், சாராள் மற்றும் லேயாள், ராகேல் என்ற மாறுபட்ட பெண்களையும் கூட பார்த்தோம். இந்த மாறுபட்ட குணங்கள் உள்ளவர்களைப் பற்றி நாம் ஒப்பிட்டு  படிக்கும்போது ஒளிந்திருக்கும் நம்முடைய   குணம் வெளிச்சத்தில்  தெரிகிறது அல்லவா?

அதனால் தான் கர்த்தராகிய இயேசுவும் சில உவமைகளை ஒப்பிட்டு நாம் பரலோகத்தையும் பூலோகத்தையும் பற்றிய உண்மைகளை தெளிவாகக் கூறினார். புத்தியுள்ள கன்னிகை, புத்தியில்லாத கன்னிகை, கற்பாறையின்மேல் கட்டிய புத்தியுள்ளவன், மணலின்மேல் கட்டிய புத்தியற்றவன் என்ற உவமைகளை நாம் மறக்கமுடியுமா? அதுமட்டும் அல்ல கர்த்தராகிய இயேசு, ஒரு பணக்காரனையும் அவனுடைய வாசலில் இருந்த ஒரு ஏழை லாசருவையும் பற்றி கூட ஒப்பிட்டு கூறியதை மறக்க முடியாது.

இங்கு நாத்தானும்ஐ, அநேக ஆடுமாடுகள் வைத்திருந்த ஐசுவரியவானுக்கும், ஒரே ஒரு ஆட்டுக்குட்டியை வைத்திருந்த தரித்திரனுக்கும்  உள்ள வித்தியாசத்தை ஒப்பிட்டு பேசுகிறான்.

இன்றைய வேதாகமப்பகுதியில் நான் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பற்றி படிக்கும்போது என் உள்ளம் நெழ்ந்தது!  ஐசுவரியவானுடைய ஆடுமாடுகள் மந்தை மதையாயிருந்தன! ஒருவேளை ஒரு காட்டு மிருகம் வந்து ஒரு ஆட்டை தூக்கிவிட்டாலும் அங்கு மந்தையாக பல ஆடுகள் இருந்தன. ஆனால் தரித்திரனோ ஒத்தை ஆடுதான் வைத்திருந்தான். அது ஒரு பெண் ஆட்டுக்குட்டி ஏனெனில் அது அவனுக்கு மகளைப் போல இருந்தது என்று வேதம் சொல்கிறது. அவனுடைய வீட்டின் சொத்து அந்த ஆட்டுக்குட்டி.  அடிக்கப்படுவதற்காக வளர்க்கப்பட்ட ஆட்டுக்குட்டி அல்ல அது! ஒரு இரக்கமுள்ள தயவுள்ள மனிதன் தான் இப்படியாக  ஒரு ஆட்டுக்குட்டியை வளர்க்க முடியும் என்பது என்னுடைய எண்ணம் அதுதான் உண்மையும் கூட. அப்படியானால் இந்த கதையில் சொல்லப்பட்ட தரித்திரன் மிகுந்த இரக்க குணமுள்ளவன்!

கர்தருடைய இரக்கமுள்ளவராக இருப்பது போல நாமும் இரக்கம் காண்பிக்கும்போதுதான் நாம் அவருடைய குணாதிசயத்தை இந்த உலகத்துக்கு காட்ட முடியும். இரக்கமும் தயையும் இருக்கும் இடத்தில் மன திருப்தியும்,சந்தோஷமும் இருக்கும்!

இந்தக் கதையை நாம் தொடருமுன் இன்று உன்னுடைய இதயத்தில் இரக்கமும், தயையும் காணப்படுகிறதா என்று சிந்தித்து பார்!  அதை எவ்வாறு வெளிப்படுத்துகிறாய் என்று சற்று யோசி?

நம்மை சுற்றி எவ்வளவு மக்கள் தேவையில் வாழ்கிறார்கள்? நாம் எப்படி உதவி செய்கிறோம்?

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்