கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 726 நிற்கிறாயா? விழுந்து விடாதே!

2 சாமுவேல்: 11:15  அந்த நிருபத்திலே: மும்முரமாய்  நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.

தாவீதின் நகரமாகிய எருசலேமில் சூரியன் அஸ்தமித்துவிட்டது. ராஜாவாகிய தாவீது தன்னுடைய படுக்கை அறையில் தூக்கமில்லாமல் புரளுகிறான். அவன் மனது படபடத்தது. அவன் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறான். அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்றேத் தெரியவில்லை. அவன் எல்லாமே சுலபமாக முடிந்துவிடும் என்று தவறாக எண்ணி தன்னை இச்சைக்குட்படுத்தி விட்டான். இப்பொழுது அது மலை போன்ற பிரச்சனை ஆகிவிட்டது.

உரியா தாவீதுக்கு அசைக்க முடியாத சாலைத்தடை போல ஆகிவிட்டான். இபொழுது தாவீது உடனடியாக எதையாவது செய்ய வேண்டும். உரியா நாளைக் காலை யுத்தகளத்துக்கு திரும்புமுன் ஏதாவதுஅவசரமாய்  செய்ய வேண்டும்.

ஒரு நிமிஷம்! நீங்களும் நானும் தாவீதின் இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம்?  நம்முடைய சேனையின் தளபதிக்கு தாவீதைப் போல ஒரு கடிதம் எழுதியிருந்தால் நாம் எப்படிப்பட்ட மனநிலையில் இருந்திருப்போம்?   மும்முரமாய்  நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதும்போது தாவீதின் மனநிலை எப்படியிருந்திருக்கும்?

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார் ( சங்:23:1)

என்று எழுதிய அதே தாவீது அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதுவது ஆச்சரியமாயிருக்கிறது.

இந்தப்பகுதியை வாசித்தபோது இரண்டு முக்கியமான காரியங்கள் எனக்கு கண்களில் பட்டன.

இப்படியிருக்க தன்னை நிற்கிறனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்  ( 1 கொரி:10:12)

எப்படியிருந்த தாவீது எப்படி வீழ்ந்து போய்விட்டான் என்று பாருங்கள்! கர்த்தருடைய இருதயத்திற்கேற்ற ஒருவன், கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவன், வழிநடத்தப்பட்டவன், இப்பொழுது தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் தரைமட்டத்துக்கு வந்துவிட்டான்..

இன்னொரு முக்கியமான காரியம் தாவீதின் வாழ்க்கையில் நாழடைவில் ஏற்பட்ட மாறுதல். பதவியும், பணமும், புகழும், பெரிய சம்பத்தும், வெற்றிகளும் வந்தடைந்தவுடன், அவன் தேவனுடைய வழிநடத்துதலை விட்டுவிட்டு, தன்னைத்தானே வழிநடத்த ஆரம்பித்துவிட்டான். தன்னுடைய வாழ்வின் பிரச்சனைகளுக்குத் தானே முடிவு தேட ஆரம்பித்து விட்டான். நாம்கூட சிலநேரம் நாமே சாதித்துவிடலாம் என்று நினைத்து முடிவு செய்வதில்லையா அப்படித்தான்!

ஒருகாலத்தில் கர்த்தரிடம் எல்லாவற்றையும் விசாரித்த அவன், இன்று யோவாபைத் தேடுகிறான்.

தன்னுடைய வாழ்வில் நடந்த இந்த சம்பவத்தை ஒருகாலத்தில் தாவீது திரும்பி பார்த்திருப்பான் அல்லவா? அவனுக்கே ஆச்சரியமாயிருந்திருக்கும் அவன் எவ்வாறு இவ்வளவு கேவலமாய் நடந்து கொண்டான் என்று!

அவன் நிற்கிறேன் என்று நினைத்தபோது கீழே விழுந்தான்! அவன் தனக்கு எல்லாம் இருக்கிறது என்று நினைத்தபோது அவனுக்கு ஒன்றுமேயில்லை!

இவை நம் வாழ்வுக்கு ஒரு பாடம் அல்லவா? இன்று நாம் நிற்கிறோம் என்று நினைத்து விழுந்து விடாமல் இருக்க ஜெபிப்போமா!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

Leave a comment