கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 960 நேசிக்கும் இருதயமே நலமாக இருக்கும்!

ரூத்: 1: 8 – 10  நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயை செய்வாராக.

கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது அவளைப் பார்த்து;

உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன் கூட வருவோம் என்றார்கள்.

என்னுடைய வாழ்வில் நான் இளம் வயதிலேயே ஒன்றுக்கு பின்னால் ஒன்றாக மரணத்தைப் பார்த்தவள். மரணம் என்னுடைய குடும்பத்தில் ஏற்படுத்திய இழப்பால் பலவிதமான கடினமான சூழ்நிலைகளைத் தாண்டி வந்தவள். அப்படி நான் அனுபவித்த கஷ்டங்களால், என்னால் மற்றவர்கள் படும் வேதனையை புரிந்து கொள்ள முடிந்தது. என்னைபோன்ற வேதனைகளை அனுபவித்தவர்கள் மேல் அன்பையும் காட்ட முடிந்தது. ஒரே படகில் பயணம் பண்ணுபவர்களுக்குத்தானே தங்களை சூழ்ந்துள்ள ஆபத்துகளும், பயமும் தெரியும்.

நகோமி, ஒர்பாள், ரூத்  –  மூன்று விதவைகள்! கணவனை இழந்து மோவாபிலே தனித்து வாழ்பவர்கள்! இவர்களை இணைத்திருக்கும் பந்தத்தை நம்மால் கற்பனைகூட பண்ணி பார்க்க முடியவில்லை !துக்கம், வேதனை, இழப்பு என்ற ஒரே படகில் பயணம் பண்ணியவர்கள்! ஒருவரையொருவர் அதிகமாக நேசித்தவர்கள்! மோவாபியர், யூதர் என்ற பேதம் இல்லாமல் அவர்கள் மேல் விழுந்த இடிகளால் பட்ட அழிவை மேற்கொள்ள, ஒருவரையொருவர் தாங்கி வந்தனர்.

இந்த குடும்பத்தின் மாமியாரான நகோமி தன் மருமக்களை சுயநலமில்லாமல் நேசிப்பதையும் பார்க்கிறோம். அவர்கள் இருவரும் மோவாபியராயிருப்பதால் அவள் அவர்களை சுயநலத்தோடு நடத்தவில்லை. நகோமி யூதேயாவுக்கு புறப்படும் இந்த சமயத்தில் அவளுக்கு வழித்துணை தேவைப்பட்டாலும் அவள் தன் மருமக்களின் நலத்தை விரும்பி அவர்களைத் திரும்பிப்போகும்படி வேண்டுகிறாள்.

நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயை செய்வாராக என்பதைப் பார்க்கிறோம். பரலோக தேவனின் அன்பை அனுபவித்த நகோமி, அந்த அன்பை தன் மருமக்களும் அனுபவிக்கவேண்டுமென்று விரும்பினாள். மாமியார் மருமகள் உறவே கேள்விக்குறியாக இருக்கும்  இன்றைய தினத்தில் எந்த மாமியாரும் செய்யாத ஒரு காரியம் இது. தேவனுடைய அன்பை ருசிபார்த்து, தேவனுடைய சத்தத்துக்கு செவிகொடுத்து வாழ்ந்த நகோமியால் மோவாபிய பெண்களான தன் மருமக்கள் இருவரையும் நேசிக்க முடிந்தது.

நகோமியின் இரண்டு மருமக்களும் அவளை விட்டுப் பிரிந்து செல்ல விரும்பவில்லை, ஏனெனில் நகோமி அவர்களிடம் தன் வாயினால் பிரசங்கம் பண்ணவில்லை, தன் வாழ்க்கையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் இரக்கத்தையும், தயவையும் ஒவ்வொருநாளும் காண்பித்திருந்தாள்.

நலமான இருதயம் வேண்டுமென்று நாம் அனேக உணவுகளையும், உடற்பயிற்சிகளையும் செய்கிறோம். ஆனால் நாம் இருதயம் முழுவதும் கிறிஸ்துவின் அன்பு நிறைந்தவர்களாக, உற்றார், உறவினர், மற்றும் நம்மை சுற்றியுள்ளவர்களிடம் நடந்து கொள்வதே  நம் இருதயத்துக்கு வலிமை கொடுக்கும்.

நகோமியைப் போல நாமும் நம் வாழ்க்கையில் கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிக்கும் படியாக ஜெபிப்போம். நாம் மற்றவர்களுக்காக வாழும்போது தான் நம் வாழ்வில் சுவை கூடும்!

நேசிக்கப்படும்போது அல்ல, நேசிக்கும்போதுதான் இருதயம் நலம் பெறும்!

நீ எப்பொழுதுமே சந்தோஷமாக இருக்க முடியாமலிருக்கலாம், ஆனால் எப்பொழுதுமே சந்தோஷத்தைக் கொடுக்க முடியும்!

நீ ஓடும் வாழ்க்கை என்னும் ஓட்டத்தில் தனிமையாக ஓட விரும்புகிறாயா, அல்லது உன்னோடு ஓடிக்கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு உதவுகிறாயா?

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment