கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 990 புவி ஈர்ப்பு சக்தியென்றால் தெரியும்! பாவ ஈர்ப்பு சக்தி தெரியுமா?

ஆதி: 4:18 காயீன்  ஏனோக்கைப் பெற்றான், ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான் , ஈராத் மெகுயவேலைப் பெற்றான், மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான், மெத்தூசவேல் லமேக்கைப் பெற்றான்.

ஏவாள் இரு குமாரரைப் பெற்றாள் என்று நமக்குத் தெரியும்.  அவள் குமாரன், ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், மற்றும் காயீன்  நிலத்தைப் பயிரிடுகிரவனானான். அவர்கள் கர்த்தருக்கு காணிக்கை கொடுக்க வந்த போது,  கர்த்தர் காயீனுடைய காணிக்கையை அங்கீகரிக்காமல் போனதால் அவன் உள்ளம்  ஆபேலின் மேல் பொறாமை கொண்டது. பொறாமையின் விளைவால் ஆத்திரமடைந்த காயீன், தன் சகோதரனைக் கொன்றான்.

ஆரம்பத்தில் ஒரு கனியைப் புசித்த கீழ்ப்படியாமை என்னும் பாவம் ஒன்றும் பெரியதாகத் தெரியவில்லை ஆனால் போகப்போக அதின் புவியீர்ப்பு சக்தி போன்ற பாவ ஈர்ப்பு சக்தி தெரிய ஆரம்பித்தது!  மனிதன் தன்னை உருவாக்கின தேவனை விட்டு விட்டு சாத்தானை பின்பற்ற ஆரம்பித்தான்.

வேதத்தை ஆராய்ந்து பார்க்கும் போது காயீன் தன் குற்றத்துக்காக வருந்தவில்லை, தன் தண்டனைக்காக வருந்தினான் என்று தெரிகிறது.  தேவன் தன் அளவில்லாத கிருபையால் யாரும் அவனைக் கொல்லாதபடி ஒரு அடையாளத்தைப் போட்டு அவனைப் பாதுகாத்தார்.

காயீனுடைய வரலாறு இதோடு முடிவுறவில்லை.

ஆதி: 4:18 இல் பார்க்கிறோம், “காயீன்  ஏனோக்கைப் பெற்றான், ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான் , ஈராத் மெகுயவேலைப் பெற்றான், மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான், மெத்தூசவேல் லமேக்கைப் பெற்றான்.” என்று.

இந்த லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம் செய்தான் என்று வேதாகமத்தில் ( ஆதி 4: 19 ) பார்க்கிறோம். முதன்முதலாக  ஒருவனுக்கு ஒருத்தி என்று தேவனாகிய கர்த்தர் நிர்ணயித்திருந்த விதிமுறையை மாற்றி, இரண்டு பெண்களை மணம் செய்தவன் இவனே! தேவன் அமைத்த திருமணம் என்ற பந்தமும் களங்கப் பட ஆரம்பித்து விட்டது.

அவனுடைய முதல் மனைவி பெயர் ஆதாள், இரண்டாம் மனைவி பெயர் சில்லாள். ஆதாள் என்பதற்கு “அழகிய ரசிக்கக்கூடிய ஆபரணம்” என்று அர்த்தம். சில்லாள் என்பதற்கு  “அழகிய சிகை அலங்காரம்” என்று அர்த்தம்! இந்தப் பெயர்களைக் கொண்டு லாமேக்கின் கண்கள் எப்படிப்பட்ட பெண்கள் மேல் சென்றன என்று புரிகிறது அல்லவா! வெளியலங்காரத்தையும், வெளித் தோற்றத்தையும் கண்டு  பெண்களை அளவிடும் காலமும் ஆரம்பித்து விட்டது!

ஒருகணம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போனதால் சம்பாதித்த பாவத்தின் பலனை ஆதாம், ஏவாளுடைய சந்ததியார்அனுபவிக்க ஆரம்பித்து விட்டார்கள். தேவன் அமைத்த திருமணம் என்ற புனித அமைப்பை அவமதித்து, ஒருவனுக்கு ஒருத்தி என்ற விதிமுறையை மாற்றி இரு பெண்களை மணக்கிறான் லாமேக்கு.

பாவ இருள், ஏவாளுடைய  சந்ததியாரைத் தொடர்கிறது. நம்முடைய பாவம் நம் சந்ததியினரைத் தொடர்ந்து பிடிக்கும் என்று உணர்ந்திருக்கிறீர்களா? நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுப்பாய்! ஆதலால் பாவப்பிடியிலிருந்து இன்று  தேவன் நம்மை விடுவிக்கும்படியாய் ஜெபிப்போம்.

உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment