ஆதி 16:4 அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள். அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாய் எண்ணினாள்.
நேற்று நாம் சாராய் தீட்டிய திட்டத்தைப் பற்றியும், அதை அவள் தன் கணவனிடம் கூறும்போது, தேவன் மேல் போட்ட பழியைப் பற்றியும் பார்த்தோம்.
கர்த்தர் ,ஆதாமையும், ஏவாளையும் உருவாக்கி, ஒருவன் தன் தகப்பனையும், தாயையும் விட்டு தன் மனைவியோடு இசைந்திருப்பான் ( ஆதி 2:24) என்ற கட்டளையை மனித குலத்துக்கு கொடுத்ததை ஒரு கணம் நினைவு கூர்ந்திருந்தால் சாராயுடைய இந்த திட்டத்திற்கு ஆபிராம் இணைந்திருக்கவே மாட்டார்.ஆபிராமோ சாராயுடைய திட்டத்தை அங்கீகரித்தது மாத்திரம் அல்ல, அதை உடனே செயல் படுத்தவும் செய்கிறார்.
ஆபிராமும் , சாராயும் கானானுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகி விட்டன. இந்நேரம் ஆகார் குடும்பத்தில் ஒருத்தியாகவே மாறியிருப்பாள். இந்த பத்து வருடங்களில், சாராய்க்கும், ஆகாருக்கும், எந்த மன வருத்தமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. சாராய்க்கு ஒரு மகளாகவே இருந்திருப்பாள் ஆகார். குழந்தையில்லாத சாராயின் மனநிலை ஆபிராமுக்கு நன்கு தெரியும். நீர் என் அடிமைப் பெண்ணோடே சேருமென்று அவள் கூறியதும் , “ என் மனைவிக்காக இதை செய்வேன்” என்று ஆபிராம் எண்ணியிருக்கலாம்! அதனால் மறு பேச்சில்லாமல் உடன் பட்டிருக்கலாம்.
அன்பான சகோதரிகளே! எத்தனை முறை நம் கணவர் எடுக்கும் தவறான முடிவுக்கு நாமே காரணமாகி விடுகிறோம். கணவன் தன் மனைவியை பிரியப் படுத்த தவறாக சம்பாதிப்பதையும், மனைவியைப் பிரியப்படுத்த அதிகமாக கடனுகுள்ளாவதையும் பார்த்ததில்லையா? நாம் நினைத்ததை சாதிக்க நம் கணவன்மாரை நாம் எத்தனை தரம் உபயோகப் படுத்துகிறோம்!
தங்கள் சொந்த முயற்சியில் ஆபிராமும், ஏவாளும், தேவன் தங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின குழந்தையை பெற்றுக் கொள்ள முன் வந்தனர். தேவனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குழந்தையைப் பெற்றுக் கொள்ள கடவுளுக்கே உதவி செய்ய சாராள் முன்வந்து தன்னுடைய அடிமைப் பெண்ணை ஆபிராமின் மஞ்சத்துக்கு அனுப்புகிறாள். ஆபிராமும் இம்மட்டும் வழிநடத்திய தேவன் தம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற வல்லவர் என்று விசுவாசியாமல் தன்னுடைய மஞ்சத்தில் ஆகாருக்கு இடம் கொடுக்கிறான்.
சகோதர்களே சற்று சிந்தியுங்கள்! சாராயின் தவறு ஒருபுறம் இருக்க, ஆபிராம் அந்த சூழ்நிலையில் என்ன சொல்லியிருக்கவேண்டும்? “ சாராய்! தேவன் நமக்கு வாக்களித்த குழந்தையை தேவனே அருளிச் செய்வார். நாம் எந்த முயற்சியிலும் ஈடுபட வேண்டாம், நீ எனக்கு குழந்தையாகவும், நான் உனக்கு குழந்தையாகவும் இத்தனை வருடங்கள் வாழ்ந்தது போல இனியும் வாழ்வோம்” என்றல்லவா? அப்படி சொல்லியிருந்தால் சாராயின் உள்ளம் நெகிழ்ந்திருக்கும் அல்லவா? ஆனால் நடந்தது வேறு ! மனைவியை திருப்தி படுத்துவதாக எண்ணி , தேவன் வாக்குத்தத்தம் பண்ணின குழந்தையை பெற்று கொள்ளும் எண்ணத்தில் ஆகாரோடு இணைந்தான் ஆபிராம்.
ஆகார் ஒருநாள் காலையில் தன்னுடைய கண்களில் ஜொலிப்போடும், உதடுகளில் பாடலோடும் எழும்புகிறாள்.தன்னுடைய எஜமானி சாராயிடம் தான் ஒரு குழந்தைக்குத் தாயாகப் போவதாக சொல்கிறாள்! கர்த்தருடைய வாக்குத்தத்தத்தின் பிள்ளை என்று அவர்கள் எண்ணிய குழந்தையைப் பெறப்போகும் அந்தவேளை எத்தனை ஆனந்தமாயிருந்திருக்க வேண்டும்! ஆனால் அதுவே சாராயின் வாழ்வில் முள்ளாவதைப் பார்க்கிறோம்! ஆகாருக்கு நன்கு தெரியும் சாராயால் சாதிக்க முடியாத ஒன்றை தான் பெற்றுவிட்டாள் என்று!
நாம் எத்தனை முறை சாராயைப் போல, ஆபிராமைப் போல தேவனுடைய வாக்குத்தத்தத்தை நாமே நிறைவேற்ற பாடுபடுகிறோம். கர்த்தர் கோணலானதை செவ்வையாக்கும் வரை காத்திருக்காமல் நாமே அவற்றை செவ்வையாக்க முயற்சி செய்து கடைசியில் தானே பின்னிய வலையில் சிலந்தி சிக்குவது போல சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம்! ஆண்டவரே நீர் ஏன் எனக்கு உதவி செய்ய வில்லை என்று கதறுவதும் உண்டு அல்லவா?
தேவன் மிகுந்த இரக்கம் உள்ளவர்! இன்றும் நம்முடைய தவறை உணர்ந்து அவரை நோக்குவோமானால் நமக்கு கரம் நீட்டி உதவி செய்வார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
