கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ் 1005 இன்று யார் விருந்துக்கு வருகிறார்கள்?

 ஆதி: 18: 1-2, ….அவன் பகலிலே உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது இதோ மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்…

காலத்தின் சக்கரங்கள் வேகமாய்  உருண்டு ஒடின!

ஆகார் வனாந்திரத்திலிருந்து திரும்பி வந்து இஸ்மவேலைப் பெற்ற பின் பதின்மூன்று வருடங்கள் கழிந்து விட்டன! இப்பொழுது ஆபிராமுக்கு வயது 99.

 (ஆதி: 17:5) கர்த்தர் ஆபிராமுக்கு தரிசனமாகி, “இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால் , உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்” என்றும் ,  ( ஆதி: 17:15)  “சாராய் இனி சாராள் என்றழைக்கப்படுவாள்” என்றும் கூறினார்.

ஒரு நாள் ஆபிரகாம் தன்னுடைய கூடார வாசலிலே அமர்ந்திருந்தார். வெளியில் உஷ்ணம் அதிகமாக இருந்தது. அந்தக் காலத்திலே அனேக மக்கள் நாடோடிகளாய் கூடாரங்களில் வசித்தனர்.  திரளான மந்தையை மேய்க்கும் படியான இடங்களில் இடங்களில் கூடாரமிடுவது வழக்கம். தோலினால் போடப்பட்ட கூடாரங்களின்  இருபுறங்களையும் பகல் நேரத்தில் சுருட்டி விடுவார்கள். அதனால் நல்ல காற்று கூடாரங்களுக்குள் வரும்.  சில சரித்திர ஆசிரியர் கூறுகிறனர், உணவு, நீர் தட்டுப்பாடு அடைந்து சோர்ந்து வரும் வழிப்போக்கரை அன்போடு  உபசரிப்பதின் அடையாளமாகத்தான் கூடாரங்கள் திறந்து வைக்கப்பட்டன என்று.

ஆபிரகாம் தன் கூடார வாசலில் அமர்ந்திருந்த போது மூன்று புருஷர்கள் வாசலில் நிற்பதைப் பார்த்து எதிர் கொண்டு ஓடி, தன் வீட்டில் விருந்துண்டு வழிப்பயணத்தை தொடருமாறு அவர்களை  வேண்டுகிறான். என்ன ஆச்சரியம்! ஆபிரகாமின் விருந்தாளிகளில் ஒருவர் கர்த்தர் !

வானத்தையும் , பூமியையும்  படைத்த கர்த்தர் ஆபிரகாமின் விருந்தாளியானார்!

அவர் ஒருநாள் பெத்லேகேமின் மாட்டுத் தொழுவத்தில் பாலகனானார் !

அடிமையாகிய இந்த ஏழையின் இருதயக்  கூடாரத்தை திறந்து அவரை அழைத்த போது அதற்குள் வந்து அதில் வாசம் செய்கிறார்!  என்ன மகா அற்புதம்!

ஆபிரகாம் வயது முதிர்ந்தவன், மிகவும் ஆஸ்தியுள்ளவன் , அவனுக்கு முன்னூறுக்கும் மேற்பட்ட வேலைக்காரர் இருந்தனர் ( ஆதி: 14:14) . ஆனால் ஆபிரகாம் எந்த பெருமையும் இல்லாமல், அவன் தானே மரத்தடியில் நின்று விருந்தாளிகளுக்கு பணிவிடை செய்கிறதைக் காண்கிறோம். அவன் உபசரிப்பு எப்படி பட்டதாயிருந்தது?

ஆதி:18:2  எதிர்கொண்டு ஓடி அவர்களை வரவழைத்தான்.

ஆதி: 18: 3 தீவிரமாய் கூடாரத்தில் சாராளிடத்தில் போய் அப்பம் சுடும்படி கூறினான்.

ஆதி: 18: 7 மாட்டுமந்தைக்கு ஓடி இளங்கன்றை பிடித்து வேலைக்காரரிடம் கொடுத்து சமைக்கும் படி கூறினான்.

ஆதி:18:8  அவர்கள் புசிக்கும் போது நின்று கொண்டு பரிமாறினான்.

இவை எல்லாவற்றையும் 99 வயது முதிர்ந்த ஆபிரகாம் , உஷ்ணமான மதிய வேளையில் ஓடியாடி செய்கிறதைப் பார்க்கிறோம். இது நமக்கு நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் உபசரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறதல்லவா?

ஆதித் திருச்சபையில் உபசரித்தல் ஒரு ஊழியமாகவே கருதப்பட்டது. I தீமோ: 3:2 ல் கிறிஸ்தவ ஊழியர்களாவதர்க்கு தகுதியே  உபசரித்தல் என்று காண்கிறோம்.

நம் கணவர் வீட்டார் சில நாட்கள் நம் வீட்டில் இருந்து விட்டால் நமக்கு கஷ்டமாக இருக்கிறதல்லவா? அவர்கள் எப்பொழுது கிளம்புவார்கள் என்றல்ல எப்பொழுது ஒழிவார்கள் என்றல்லவா எண்ணுகிறோம். குடும்பத்தினரை சுமப்பதே பாரமாக தோன்றும் இந்நாட்களில், அந்நியரை உபசரிப்பது எப்படி கூடும் என்றெண்ணுகிறோம் அல்லவா? பவுல் கூறுகிறார் எபி: 13: 2  ல் அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள், அதினால் சிலர் அறியாமல் தேவ தூதரையும் உபசரித்ததுண்டு என்று.

வெளி:3:20 கர்த்தராகிய இயேசுவே நம் வீட்டுக்குள் விருந்தாளியாக வர விரும்புகிறார் அவரை உன் உள்ளத்திலும், வீட்டிலும் ஏற்றுக்கொள்வாயா?

இந்த விருந்தாளிகள் என்ன செய்தி கொண்டு வந்தனர்? தொடர்ந்து பார்ப்போம்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

Leave a comment