கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1024 சிக்கி விடாதே! சிக்கி விட்டால் அவமானம்!

ஆதி: 34:2-4  அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும், அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து அவளைத் தீட்டு படுத்தினான்.அவனுடைய மனம் யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாள் மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான்.சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப் பெண்ணை எனக்கு கொள்ள வேண்டும் என்று சொன்னான்.

நேற்று நாம், தீனாள்  தன் கூடாரத்தின் பாதுகாப்பையும், தேவனின் சித்தத்தையும் விட்டு வெளியேறி அத்தேசத்து பெண்களோடு நட்பு கொள்ள புறப்பட்டாள் என்று பார்த்தோம்.

ஒரு பாலைவனம், ஒரு அழகிய இளம் பெண், மாலைக் காற்று வீசும்போது அலை பாயும் கூந்தலிலிருந்த வந்த நறுமணம், அந்த ஊருக்கு புதிதான முகம், இப்படியாக வர்ணிக்கும் அளவுக்கு, இளமை துள்ள, யாக்கோபின் செல்வக்குமாரி தீனாள், ஆடம்பரமாய் நட்பைத் தேடிச்செல்ல, அந்த ஊரின் பிரபுவான சீகேம் கண்களில் படுகிறாள். அவனுடைய கவனம் இந்த அழகிய செல்லப் பெண்ணின் மேல் விழுகிறது.

தான் விரும்பினதை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்று எண்ணுகிற பல்லாயிரக்கணக்கான வாலிபர்களில் ஒருவன் அவன்! அவன் எப்படி நடந்தான் என்று வேதம் கூறுகிறது பாருங்கள்!

  1. சீகேம் அவளைக் கண்டான்
  2. அவளை ( இச்சித்து) கொண்டு போனான்
  3. அவளோடே சயனித்தான்
  4. அவளைத் தீட்டு படுத்தினான்.

ஒரு கணம் அப்படியே இருங்கள்! நமக்கு இது யாரை நினைப்பூட்டுகிறது?

அழகிய ஏதேன் தோட்டம், அருமையான நாள், தனியாக உலாவத் தூண்டிய தென்றல், அங்கே ஒரு விருட்சத்தில் கண்ணைப் பறிக்கும், ருசிக்கத் தோன்றும் கனி!  ஏவாள் என்ன செய்தாள் என்று வேதம் கூறுகிறது?

  1. அவள் ஜீவ விருட்சத்தை கண்டாள
  2.  அதை இச்சித்தாள்
  3. அதை பறித்துப் புசித்தாள்
  4.  அவமானத்தினால் ஒளிந்து கொண்டாள்.

ஆதியாகமத்திலிருந்து , வெளிப்படுத்தின விசேஷம் வரை, மறுபடியும், மறுபடியும் இதே காரியம் ஒவ்வொரு தலைமுறையிலும் நடந்ததைக் காணலாம்.

இன்று நம்முடைய 21 வது நூற்றாண்டில், நமது தலைமுறையிலும் இது நடப்பதைக் காணுகிறோம். நாம் கண்ணால் பார்ப்பதை, அது ஒரு பெண்ணாகவோ, ஆணாகவோ இருக்கலாம், அல்லது பொருளாகவோ, சொத்தாகவோ இருக்கலாம். நாம் எப்படியாவது  அடையவேண்டும் என்ற வெறி நமக்குள் வருகிறது. நமக்கு சொந்தமில்லாத ஒன்றை நம்முடையது என்று நம் மனதார நினைத்து அதை இச்சிக்கிறோம். கடைசியில் ஏவாளைப் போல அவமானத்தால் ஒளிந்து கொள்கிறோம், அல்லது தீனாளைப் போல அவமானப்பட்டு போகிறோம்.

ஒரு நிமிஷம்! சீகேம் அவளை கண்டான், விரும்பினான், அடைந்தான், என்று பார்த்தோம். இந்த பெண் தீனாள் என்னப் பண்ணிக் கொண்டிருந்தாள்? அவள் அதை விரும்பாததாக வேதம் கூறவில்லையே! ஒரு பணக்கார வாலிபனின் அரவணைப்பு, அவன் அவள் மீது கொண்ட அன்பு, நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையில்லை என்ற அவனின் தேன் போன்ற வார்த்தைகள்,  இவற்றில் மயங்கி, தன்னையே இழந்தாள் போலும் என்றுதானே தோன்றுகிறது! அவள் மறுத்ததாக வேதம் சொல்லவில்லையே!

வேதம் கூறுகிறது சீகேம், தீனாளைத் தீட்டுப் படுத்தினான் என்று. இதன் அர்த்தம் என்ன? தேவனின் பார்வையில் கீழ்த்தரமான, அவமானத்துக்குறிய, காரியத்தை செய்தனர் இருவரும்.

அருமையானவர்களே! ஒரு உண்மையை ஒருபோதும் மறந்து போகாதீர்கள்! தேவனால் நமக்கு கொடுக்கப்படாத எதையும் அல்லது யாரையும், நாம்  கண்களால் கண்டு இச்சித்து அபகரிப்பதால், அல்லது அடைந்து கொள்வதால், நாம்  நம்மை தீட்டுப்  படுத்துகிறோம் , பின்னர் அவமானத்தினால் தேவனுடைய பிரசன்னத்தை நெருங்காமல் ஓடி ஒளிந்து கொள்கிறோம். 

இது உங்களுடைய வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறதா? உங்களுக்கு சொந்தமில்லாத பணம் உங்கள் கணக்கில் உள்ளதா? உங்களுக்கு உரிமையில்லாத சொத்து உங்கள் வசமாகி உள்ளதா? உங்களுக்கு உரிமையில்லாத ஒரு பெண்ணின் மேல் ஆசை உண்டா?

I பேதுரு 1:14 ல் “ நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து…..” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு கூறுவதைப் பார்க்கிறோம்.

சிக்கி விடாதே! இச்சை எப்படிப்பட்டதானாலும் அது சிலந்தி வலை போன்றது! சிக்கி விட்டால் அவமானத்தால் வெட்கி ஒளிய வேண்டியிருக்கும்! இன்று இப்படிப்பட்ட பாவம் உங்களில் காணப்படுமானால் தேவனிடத்தில் ஒப்புவி! இரக்கம் காட்டுவார்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment