கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1053 நன்றியால் துதி பாடு!

எண்ணா:12: 13, 15 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி; தேவனே அவளை குணமாக்கும் என்று கெஞ்சினான்.

அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்கு புறம்பே விலகப்பட்டிருந்தாள். மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம் பண்ணாதிருந்தார்கள்.

தேவனுடைய சேவைக்காக தங்களை அர்ப்பணித்த அநேக மிஷனரிகளைப் பற்றி படிக்கும்போது நாம் இவர்களை சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று எண்ணுவதுண்டு!

அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெறுபவர் டாக்டர் பால் பிராண்ட் என்ற மருத்துவரும் அவர் மனைவி மார்கரெட் அம்மையாரும்.  அவர் நம்முடைய தமிழ்நாட்டில் ஒரு மிஷனரி பெற்றோருக்கு பிறந்தவர். தன் தகப்பனைப் போல லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துவிட்டு  1946 ல் இந்தியாவுக்கு சேவை செய்ய திரும்பி வந்தனர்.

நம் ஊரில் குஷ்டரோகிகள் பிச்சை எடுப்பதைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் சரீரம் உருவிழந்து போயிருக்கும். இப்படிப்பட்ட சில குஷ்டரோகிகள் பிச்சையெடுத்துக் கொண்டு வருவதை டாக்டர் பால் பிராண்ட் அவர்கள், பார்த்தார். அவர் அப்பொழுது  வேலூரில் வாழ்ந்து வந்தார். அங்கு  அந்த கொடிய நோயைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். அதுவரை குஷடரோகிகளின் கைகளும் கால்களும் ஏன் இவ்வாறு உருமாறி அரிக்கப்பட்டு போகிறது என்று உலகத்திற்கு தெரியாது, இந்த நோய் வந்தால் இப்படி ஆகிவிடும் என்று தான் தெரியும்  டாக்டர் பிராண்ட்டுடைய ஆராய்ச்சிக்கு பின், குஷ்டரோகம் முதலாவது ஒரு மனிதனின் நரம்புகளை பாதிக்கிறது, பின்னர் அதை சார்ந்த தசைகளையும் பாதிக்கிறது, ஆனால் முதலில் அது நரம்பை பாதிப்பதால் அதை சுற்றிய தசை அழுகும்போது மனிதன் வலியை உணர்வதில்லை என்ற பேருண்மையை உலகுத்துக்கு அளித்தார்.

இந்த மருத்துவ ஆராய்ச்சியை ஏன் நான் இன்று எழுதுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம். நாம் நேற்று வேதத்தில் முதலாவது தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்ட மிரியாம், தேவனுக்கு துதி ஆராதனை நடத்திய பெண்மணி, மோசேக்கு எதிராக முறுமுறுத்ததால் குஷ்டரோகியானாள் என்று படித்தோம்.

குஷ்டரோகம் ஒருவனின் சரீரத்தின் நரம்பை பாதிப்பதுபோல், முறுமுறுப்பு நம்முடைய ஆத்துமாவின் நரம்பை பாதிக்கிறது! குஷ்டரோகம் சரீரத்தில் உணர்வு இல்லாமல் செய்வதால் தசை அழுகுவது கூட தெரியாது. நம்முடைய முறுமுறுப்பு ஆத்துமத்தில் உணர்வு இல்லாமல் செய்து விடுகிறது ஆதலால் நாம் ஆத்மீக வாழ்க்கையில் சறுக்கி விழுவதைக்கூட உணரமுடிவதில்லை! நாம் செய்யும் தவறுகள் நமக்கு தவறுகளாகவேத் தெரிவதில்லை!

முதலில் மிரியாம் குஷ்டரோகியானாள் என்று வாசித்ததும், கர்த்தர் இவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்திருக்கக் கூடாது என்று எண்ணினேன். ஆனால் குஷ்டரோகம் சரீரத்திற்கு என்ன கேடு விளைவித்ததோ அதையே முறுமுறுப்பும், கசப்பும் நம் ஆத்துமாவிற்கு செய்யும் என்று உணர்ந்த போது, கர்த்தர் நமக்கு ஒரு பெரிய பாடத்தைப் போதிப்பதற்காகத்தான் இதை அனுமதித்தார் என்பதை உணர்ந்தேன்!

நாம் எத்தனை முறை, கர்த்தருடைய ஊழியக்காரர்களைப் பற்றிக் குறை கூறுகிறோம், முறுமுறுகிறோம் என்று யோசித்து பாருங்கள்! எத்தனையோ கிருபைகளை கர்த்தரின் கரத்தில் பெற்ற நாம் எத்தனை முறை முறுமுறுக்கிறோம்! இந்த சிறிய உள்ளத்தில் தான் எத்தனை கசப்பு? எத்தனை வெறுப்பு?

பேதுரு: 2: 17 கூறுகிறது  எல்லாரையும் கனம் பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்பு கூறுங்கள்; தேவனுக்கு பயந்திருங்கள்; ராஜாவை கனம்பண்ணுங்கள்என்று.

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தர் மிரியாமை கைவிடவில்லை! ஒரே வாரத்தில் அவள் சுத்தமானாள்! இஸ்ரவேல் மக்கள் அவள் சுகமாகும்வரை காத்திருந்து பிரயாணத்தை தொடர்ந்தனர்! மிரியாம் மறுபடியும் இஸ்ரவேலின் முதல் தீர்க்கதரிசி என்ற உன்னத பதவியைத் தொடர்ந்தாள்! மிரியாமின் கடந்த காலத்தின் கசப்பான எண்ணங்கள், வெறுப்பான பேச்சு, முறுமுறுப்பு இவை யாவும் கர்த்தர் அவளை எதிர்காலத்தில் ஒரு தீர்க்கதரிசியாக உபயோகப்படுத்த ஒரு தடையாக இருக்கவில்லை.

நாம்கூட எத்தனை முறை கசப்பான எண்ணங்கள், வெறுப்பான பேச்சு, முறுமுறுப்பு இவைகளுக்கு நம் வாழ்க்கையில் இடம் கொடுத்து, ஆசீர்வாதத்தை இழந்து போகிறோம். இவ்வாறான தேவையில்லாத எண்ணமும், பேச்சும், நம்முடைய ஆத்துமாவையும், இருதயத்தையும் , நமக்குத் தெரியாமலே குஷ்டரோகம் போல அரித்து விடுகிறது.

இதற்கு சரியான மருந்து நன்றியோடு ஏறெடுக்கப்படும் துதியும் ஸ்தோத்திரங்களும்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் நம்முடைய உள்ளம் நன்றியால் நிறைந்து நாம் ஒவ்வொரு நிமிடமும் கர்த்தருக்கு நன்றியைத் தெரியப்படுத்தும்போது இப்படிப்பட்ட முறுமுறுப்பும், கசப்பும் நம்முடைய ஆத்துமத்தை அழுக விடாமல் காக்கிறது! ஒவ்வொருநாளும் நன்றியால் துதி பாடு!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment