கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1070 ஒவ்வொன்றும் தனிவிதம்!

யாத்தி: 21: 1 மேலும் நீ (மோசே) அவர்களுக்கு அறிவிக்கவேண்டிய பிரமாணங்களாவன;

எனக்கு மலர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். என்னுடைய வீட்டில் பூக்கும் பூக்களைத்தான் இந்த ராஜாவின் மலர்களின் தோற்றப்படமாக நான் போடுவதுண்டு! ஒவ்வொரு மலரும் தனிவிதம் என்று ரசித்துப் பார்க்கத் தோன்றும்! தனி மணமும் உண்டு!

இந்த உலகில் நாம் காணும் ஒவ்வொரு மலர்களுக்கும் தனி அழகையும் தனித் தன்மையையும், தனி மணத்தையும் அளித்து உருவாக்கிய தேவன், நம்மை எவ்வாறு உருவாக்கியிருப்பார்! ஒவ்வொரு மலருக்கும் உருவில், நிறத்தில், மணத்தில் சற்று வேறுபாடு இருக்கும்! இவ்வளவு தனித்தன்மையோடு படைக்கப்பட்ட மலர்களைவிட ஒவ்வொரு மனிதனும் கர்த்தருடைய பார்வையில் எவ்வளவு தனித்தன்மை படைத்தவர்களாக, விசேஷித்தவர்களாக இருந்திருப்பார்கள்! அதனால் தான் கர்த்தர் நாம் ஒருவரையொருவர் அன்போடும், மரியாதையோடும் நடத்தவேண்டும் என்று விரும்புகிறார். 

ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து ஏதேனை விட்டு அனுப்பப்பட்ட பின்னர், ஒருவரையொருவர் மதிப்பது அப்பட்டமாக குறைவுபட்டது.கொலை, வேசித்தனம் போன்ற பாவங்கள் தலை தூக்கியன. நாம் மோசேயை பற்றி படிக்கும்போது மனிதர்கள் ஒருவரையொருவர் அடிமைகளாக அடக்கி ஆளவே ஆரம்பித்துவிட்டனர்.

தம்முடைய ஜனங்கள் பாவத்தில் வாழ்வதைக் கண்ட தேவன் ஆபிரகாமை நோக்கி உன் சந்ததியார் 400 வருடங்கள் அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அங்கே அவர்களை சேவிப்பார்கள் என்று ஆதி:15:13 ல் கூறுகிறார்.

இதைப் பற்றி என்னால் சிந்தித்து பார்க்கவே முடியவில்லை! ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போது, அது அந்த தேசத்தில் அடிமையாகவே வாழும் என்று அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு தெரியுமானால் அவர்கள் உள்ளம் எவ்வளவு குமுறும்! அந்த நிலை தான் இஸ்ரவேல் மக்களுக்கு இருந்தது! அவர்கள் தலைமுறை தலைமுறையாக எகிப்தியருக்கு அடிமைகளாக வாழ்ந்துவந்தனர்.

ஆறு தலைமுறைகளுக்கு மேல் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரவேல் மக்களுக்கு எகிப்தை விட்டு வெளியேறிய போது, சாட்டை அடி வாங்கி, முரட்டுத் தனமாய் வாழ்ந்த வாழ்க்கையை தவிர, வேறு வாழ்க்கை முறை தெரியவில்லை. அவர்கள் தலைவர்களுக்கும் அடிமை வாழ்க்கையே பழகியிருந்தது. தங்கள் வாழ்க்கையை சரியான முறையில் அமைத்துக் கொள்ள தெரியாமல், எகிப்தியரின் கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்து தான் பழகியிருந்தார்கள். பார்வோனின் கட்டளைக்கு அடிப்பணியாமல் போனால் மரணம்தான் தண்டனை என்பதால்,ஒரு மனிதனை மதிப்பதும், அவனுடைய விருப்பு வெறுப்புகளை அறிந்து வாழ்வதும் அவர்களுக்குத் தெரியவில்லை. அதனால் தான் இந்த விடுதலையான அடிமைகள் அடிக்கடி மோசேயை பார்த்து முறுமுறுப்பதையும், அதிருப்தியோடு நடந்து கொள்வதையும் காண்கிறோம்.

இதை அறிந்த நம் தேவன் அவர்களுக்கு புதிய வாழ்க்கை முறைகளை, ஒருவரையொருவர் மதித்து அன்போடு நடக்கும் வழிமுறைகளை அல்லது பிரமாணங்களை கற்றுக் கொடுத்தார். இவற்றை தான் நாம் யாத்தி:21 லிருந்து வாசிக்கிறோம்.

நித்திய பொறுமையுள்ள நம் தேவனாகிய கர்த்தர் நாம் எவ்வளவு குறைவு பட்டவர்களாக  அவரிடம் வந்தாலும் நம்மை நேசித்து, சீரான வழியில் நம்மை நடத்துவார் என்பதை அறிவோம் அல்லவா! 

அவர் அடிமைத்தனம் என்ற கீழ்த்தர வாழ்க்கையிலிருந்து விடுதலையான இஸ்ரவேல் மக்களை சீர்ப்படுத்தி, இரட்சித்து, தனக்கு சொந்தமான ஜனமாக மாற்றி, அந்த இஸ்ரவேல் மக்கள் மூலமாய் இந்த உலகத்துக்கு இரட்சகரை கொடுத்த அற்புதம் ஒரு மகா அற்புதம் தானே!

தேவன் இஸ்ரவேல் மக்கள் மூலமாய் நமக்கு அளித்த ஒரு சில பிரமாணங்களை படித்தபின்னர் நாம் யாத்திராகமத்தை விட்டு கடந்து செல்வோம்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com

Leave a comment