எண்ணாகமம்: 27: 1,2 யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் குடும்பங்களில் மனாசேயின் குமாரனாகிய மாகீரின் மகனாகிய கிலெயாத்துக்குப் பிறந்த ஏபேருக்கு புத்திரனாயிருந்த செலோப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லான், நோவாள், ஓக்லாள், மில்காள், திர்சாள் என்பவர்கள் வந்து,
ஆசரிப்பு கூடாரவாசலிலே மோசேக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், பிரபுக்களுக்கும், சபையனைத்திற்கும் முன்பாக நின்று;
எண்ணாகமத்திலிருந்து நாம் அநேக காரியங்களை படித்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா? உங்களைப் போலத்தான் நானும் இந்த புத்தகத்தை அதிகமாக படிக்காமல் ஒதுக்கினேன். இதில் நம் பரலோகப் பிதா, நமக்காக எத்தனை பொக்கிஷங்களை வைத்திருந்தார்! கடைசியாக இன்னும் ஒரு சில நாட்கள் நாம் எண்ணாகமத்தை படிக்கப் போகிறோம்!
நான் பள்ளிக்கூட நாட்களில் பேச்சுப்போட்டியில் கலந்து கொள்வது வழக்கம். திறமையாகத், தெளிவாகத் தமிழில் பேசுவேன் என்ற காரணத்தால், பல பள்ளிகள் கலந்து கொள்ளும் போட்டிக்கு என்னை அனுப்புவார்கள். பேசும் திறமை இருந்தாலும், பயம் என்ற ஒன்று எனக்கு கடைசி நிமிடம் வரைக்கும் இருக்கும். என்னுடைய பெயர் வாசிக்கும்வரை தொடைநடுங்கிக் கொண்டிருப்பேன். ஆனால் கர்த்தருடைய கிருபையால் முன்னால் சென்று ஒருவார்த்தை பேச ஆரம்பித்தவுடனே என் பயம் என்னைவிட்டு ஓடிவிடும். சரியான நேரத்தில் கர்த்தர் தேவையான தைரியத்தைக் கொடுப்பதை இளவயதிலேயே உணர்ந்தவள் நான்!
இன்றைய வேதாகமப் பகுதியில், சபையில் தைரியமாகப் பேச தைரியம் பெற்ற ஐந்து பெண்களைப் பற்றிப் படிக்கிறோம்.
தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரத்தாரின் இலக்கத்தை எண்ணும்படியும், அந்த இலக்கத்தின்படியே தேசத்தில் அவர்களுக்கு சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும் என்றும் கட்டளையிட்டார். உடனே ஒருமாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டார்கள். ஆண்கள் மட்டுமே குடும்பத்தின் தலையாக கருதப்பட்டனர். குடும்பத்தின் சொத்துக்கு ஆண்பிள்ளைகள் மாத்திரமே வாரிசாக முடியும். இந்தப்பழக்கம் நம் நாட்டில் கூட தலைமுறை தலைமுறைகளாக இருந்து வந்ததும், இருந்து வருவதும் நமக்கு நன்கு தெரியும். ஆண்பிள்ளைகள் தான் குடும்பத்தை காப்பாற்றுவார்கள், ஆண்பிள்ளைகள் தான் படிக்கவேண்டும், வேலைக்கு போகவேண்டும் என்ற எண்ணங்கள், இத்தனை நூற்றாண்டுகள் கழித்து சிறிதளவு மாறியுள்ளன!
அப்படிப்பட்ட சமயத்தில் ஆண்வாரிசு இல்லாத குடும்பத்தை சேர்ந்த ஐந்து பெண்கள், தன் தகப்பனுக்கு ஆண் பிள்ளைகள் இல்லாமல் அவன் மரித்துப் போனதால், அவன் பேர் நிலைபெறாமல் போய்விடக் கூடாதென்று, தைரியமாக மோசேயின் முன்பும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாகவும், பிரபுக்கள், சபையனைத்தார் முன்பாகவும் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்று,” “ எங்கள் தகப்பனுடைய சகோதருக்குள்ளெ எங்களுக்கு காணியாட்சி கொடுக்கவேண்டும்” (எண்ணா:27:4) என்று குரல் எழுப்புவதைப் பார்க்கிறோம்.
கர்த்தருடைய கிருபையினாலே வேதத்தில், தெபோராளைப் போன்ற, எஸ்தரைப் போன்ற, மனாசேயின் வழி வந்த இந்த ஐந்து குமாரத்திகளைப் போன்ற தைரியசாலியான பெண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தப் பெண்களின் தைரியம் எப்படிப்பட்டது என்று கவனியுங்கள்!
அது சுயநலமானது அல்ல, சொத்து ஆசை பிடித்தது அல்ல, தாங்கள் நினைத்ததை சாதிக்கவேண்டும் என்ற பிடிவாதத்தால் அல்ல, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று கூறுவதுபோல அல்ல, ஒற்றைகாலில் நின்று அடம் பிடிப்பது போல அல்ல, குடும்ப நலத்துக்காக நியாயத்தை, பயமில்லாமல், தெளிவாக, சபையின் முன்னால் எடுத்துக்கூறும் தைரியம்! அவர்கள் கேட்பதில் நியாயம் இருப்பதையும், தங்கள் தகப்பனின் பெயரை நிலைநாட்ட வேண்டுமென்ற தங்கள் ஆவலையும் தெளிவான வார்த்தைகளால் எடுத்துக் கூறுகின்றனர்.
அநேக நேரங்களில் நம் மனதின் ஆவலைத் தெளிவாக எடுத்துக்கூற தைரியம் இல்லாமல் நாம் மனதுக்குள்ளேயே குமுறுகிறோம். ஒருவேளை இன்று நீ தெளிவாகப் பேசுவாயானால் உன் குடும்பத்தில் உள்ள அநேக பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும்! நியாயத்துக்கு குரல் கொடுக்கும்போது கர்த்தர் நம்மோடு கூட இருப்பார், நமக்கு வேண்டிய தைரியத்தைக் கொடுப்பார்.
நம்மை அதிக தைரியசாலிகளாக நினைக்கும்போது நாம் பெலவீனர்கள் என்பதை மறந்து போகாதே! நம்மை அதிக பெலவீனர்களாக எண்ணும்போது நம்மோடு கூட இருக்கும் வல்லமையுள்ள கர்த்தரின் பெலத்தை மறந்து போகாதே!
ஆண்டவரே! சரியான நேரத்தில், சரியான வார்த்தைகளோடு தைரியமாகப் பேச எனக்கு உதவி தாரும். நியாயத்துக்கு எப்பொழுதுமே குரல் கொடுக்க உதவி தாரும்! ஆமென்.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
premasunderraj@gmail.com
பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.
ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.