உபாகமம்: 28:4 உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
இதைத்தான் நான் இன்றைய வேதாகமப்பகுதியில் காண்கிறேன்! உன் கர்ப்பத்தின் கனியும்….. ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
நாம் நேற்று பார்த்தவிதமாக, நாம் கர்த்தருடைய வார்த்தைகளை கவனமாகக் கேட்டு, அவருக்கு கீழ்ப்படிந்து நடப்போமானால், எந்த வேளையிலும், எந்த சூழ்நிலையிலும் நாம் அவரை ஆராதிக்கிறவர்களாகவும், அவருக்கு மகிமையையும் கனத்தையும் கொண்டு வருகிறவர்களாகவும் இருப்போம். கர்த்தருடைய பிரசன்னம் நம்மை சூழ்ந்திருக்கும்!
அதுமட்டுமல்ல, கர்த்தருடைய பிரசன்னமானது கர்ப்பத்தின் கனியாகிய நம்முடைய பிள்ளைகளையும், நமக்கு சொந்தமான எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கும்!
இதை எழுதும்போது கர்த்தர் கடந்த 40 வருட காலமாக எங்கள் இருவரையும் தம்முடைய பரிசுத்த ஊழியத்தில் நடத்தியது மட்டுமல்லாமல் இன்று எங்களுடைய பிள்ளைகள் இருவரும் தேவனுடைய ஊழியத்தை தாங்குவதிலும், தேவனுடைய திருச்சபையை நடத்துவதிலும் முன்னிலையில் இருப்பது கர்த்தர் எங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய ஆசீர்வாதமாக எண்ணுகிறோம்!
பெற்றோராகிய நாம் நம் பிள்ளைகளுக்கு விட்டு செல்லும் ஆசீர்வாதம், பெரிய வீடும், சொத்து சுகங்களும், வங்கியில் ரொக்கத்தொகையும் அல்ல! அவர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை மகிமைப்படுத்துபவர்களாக வளர்ப்பதுதான்!
என்ன அற்புதம், நம்மோடு வாசம் செய்யும் நம் தேவாதி தேவன், நம் பிள்ளைகளோடும் இருப்பார்! அவர்களை வழுவாமல் காப்பார்!
இது சாத்தியமா? எத்தனையோ கர்த்தருடைய் பிள்ளைகளின் பிள்ளைகள் நேர்மையாக வாழ்வில்லையே, எத்தனையோ விசுவாசிகளின் குடும்பங்களில் அடுத்த தலைமுறையினர் பெற்றோரைப்போல இல்லையே என்று நீங்கள் கேட்கலாம்!!
உபாகமம்: 11: 19 – 20 ”நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும், உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின் மேல் அடையாளமாகக் கட்டி உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,
அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் பேசுவீர்களாக.
பிள்ளைகள் வளரும் பருவத்தில் நம் வாழ்க்கையை அதிகமாக கவனிக்கிறார்கள். நம்முடைய நடத்தையினாலும், வார்த்தைகளாலும் நாம் கர்த்தரைப் பற்றி போதிக்கவேண்டும்! நம்முடைய குடும்பங்களில் அநாவசியமான எத்தனையோ காரியங்களை நாம் பிள்ளைகளோடு சேர்ந்து செய்கிறோம், பேசுகிறோம்! உலகப் பிரகாரமான கல்வியைக் கொடுக்க எவ்வளவாகப் பாடு படுகிறோம். ஆனால் கர்த்தருடைய வார்த்தைகளைப் பற்றியும், கர்த்தர் செய்த நன்மைகளைப் பற்றியும் போதிக்கவும், பேசவும் நேரம் உண்டா?
கர்த்தருக்காக ஜீவிப்பது என்ன என்று அவர்கள் உங்கள் வாழ்க்கையை முன்மாதிரியாய்க் காணும்படி வாழ்கிறோமா?
கர்த்தருடைய ஊழியக்காரரை அல்லது ஊழியங்களை நம் பிள்ளைகள் முன்னால் தவறுபடுத்தி பேசி தேவனுடைய ஊழியத்தைக் குறித்த பாரம் அவர்களுக்கு வராதபடி நாம் செய்துவிடுவதில்லையா? எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய பிள்ளைகள் செய்த தவறுகளை மறைத்து அவர்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக நிற்கிறோம் என்ற எண்ணத்தில் அவர்கள் மேலும் மேலும் தவறு செய்ய நாமே வழி வகுக்கவில்லையா?
இன்னும் ஒரு காரியம் அவர்களுடைய வாலிபப் பிராயத்தில் அவர்களுக்காக கண்ணீர்விட்டு ஜெபிக்க உங்களுக்கு நேரம் உண்டா?
’உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்’ என்பது அவருடைய வாக்குத்தத்தம். நம்முடைய பிள்ளைகளை ஆசீர்வதிப்பது கர்த்தருடைய கடமை! ஆனால் நம் பிள்ளைகளை கர்த்தரை மகிமைப்படுத்துபவர்களாக வளர்ப்பது நம்முடைய கடமை!
கர்த்தருடைய ஆசீர்வாதம் என்பது ஒரு தொடர் சங்கிலி! ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம் நம்மையும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும்! அதைப் பெற்றுக்கொள்ளத் தவறி விடாதே!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.
ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி! இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!