கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ் 1161 கர்த்தர் உனக்கு முன்பாக செல்கிறார்!

நியா:4:14  அப்பொழுது தெபோராள் ..எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்.

நேற்று நாம் கர்த்தர் நம்மை எதிரிகளிடமிருந்து விடுவிக்க வல்லவர் என்று பார்த்தோம். தெபோராள் பாராக்கை எழுந்து போ ,கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே என்றாள்.

இன்று நாம் இந்த வசனத்தை தொடர்ந்து தியானிக்க போகிறோம்.

இதை வாசிக்கும்போது என்னை மிகவும் கவர்ந்த காரியம் என்ன என்றால், கர்த்தர் இஸ்ரவேல் மக்களையும், தெபோராளையும் எழுந்து போ என்று மாத்திரம் கட்டளை கொடுக்கவில்லை, அதோடு கூட அவர்களுக்கு முன்னால் செல்லும் வழிகாட்டியையும் கவனிக்கும்படி கூறுகிறார்.

வழிகாட்டி என்ற வார்த்தையை நான் எழுதும்போது, மலைப்பகுதிகளில் மாணவர்களுடன் முகாமிட்டு, முதுகிலே பயணத்துக்குத் தேவையான ஒரு பையை தூக்கிக்கொண்டு, அவர்களை சிகரங்கள் ஏற வழிகாட்டுபவர்கள் தான் நினைவுக்கு வந்தது! கரடுமுரடான பாதையிலும் மாணவர்களுக்கு முன்பாக அவர்கள் செல்வார்கள்!

கர்த்தர் இஸ்ரவேல் மக்களை நோக்கி நீங்கள் தெபோராவை பின்பற்றுங்கள் என்றோ அல்லது பாராக்கை பின்பற்றுங்கள் என்றோ அல்லது நீங்கள் ஒருவரையொருவர் பின்பற்றுங்கள் என்றோ கூறாமல், அவர்களை நோக்கி, நான் உங்களுக்கு முன்னால் புறப்பட்டு விட்டேன்! என்னை பின்பற்றுங்கள் என்பதைப் பார்க்கிறோம். ஆம்! கர்த்தராகிய தேவனே நம் வாழ்வின் வழிகாட்டி!

நாம் எத்தனைமுறை நமக்கு முன் செல்லும் தேவனாகிய கர்த்தர் மேல் கண்களை வைக்காமல் தெபோராளைப் போன்ற, பாராக்கைப் போன்ற உலகத்தலைவர்கள் மேல் நம் கண்களை வைக்கிறோம். கர்த்தர் சில நல்ல தலைவர்களை நமக்கு கொடுத்திருக்கலாம்! அவர்கள் உங்களை சரியான ஜீவ பாதையில் வழிநடத்தியிருக்கலாம்! தெபோராளைப் போல நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை நமக்கு கொடுத்திருக்கலாம்!  ஆனாலும் அவர்களையல்ல, தேவனாகிய கர்த்தரையே நாம் பின்பற்ற வேண்டும்!

கர்த்தரைப் பின் தொடருதல் என்பது சில நேரங்களில் சுலபமான காரியம் அல்ல என்பதைப் போல தோன்றும்! என்னுடைய வாழ்க்கையில் பலநேரங்களில் என்னுடைய வழிகாட்டியான  கர்த்தரை விட்டு விட்டு அவருக்கும் முன்னால் செல்ல நான் முயன்றிருக்கிறேன். அப்படியாக  நான் முன்னால் ஓடி, என் சுயமாக எடுத்த முடிவுகள் எதுவுமே இதுவரை வெற்றியாக முடிந்ததில்லை. ஏனெனில் என் வாழ்க்கையை நான் பார்க்கும் விதம் வேறு, கர்த்தர் பார்க்கும் விதம் வேறு. நான் என்னை சுற்றிலும் உள்ளவைகளைத் தான் காணமுடியும், அடுத்த நிமிடம் என் வாழ்க்கையில் நடக்கப் போவதைக் கூட என்னால் காண முடியாது. ஆனால் கர்த்தர் தம்முடைய சிங்காசனத்திலிருந்து என்னை நோக்குகிறார்! என்னுடைய எதிர்காலம் அவருக்குத் தெரியும்! ஆதலால் அவருடைய வழிநடத்துதல் நிச்சயமாக என்னுடைய நலத்துக்காகத்தான் இருக்கும்!

இன்று கர்த்தர் நம்மிடம்  எழுந்து போ! உன்னை எதிரிகளிடமிருந்து விடுவிப்பேன்! நோயின் பிடியிலிருந்து விடுவிப்பேன், தீராத பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பேன் என்று அழைக்கும் சத்தம் கேட்டு அவருக்கு நாம் கீழ்ப்படியும் போது, உனக்கு முன்பாக நான் செல்கிறேன், என்னைப் பின்பற்று என்கிறார்.

நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு முன்பதாக செல்கிறார் என்ற எண்ணம் எத்தனை இன்பமும், ஆறுதலுமாயிருக்கிறது!

கண்ணுக்கு பசுமையாகத் தோன்றும் எல்லா புல்வெளிகளிலும் நான் செல்ல ஆவலாய் அவருக்கு முன்னல் ஓட முயற்சி செய்யும் போதெல்லாம், கரடு முரடான பள்ளத்தாக்கில் போய் நின்று அழுவதுண்டு! ஒரு கால கட்டத்தில் தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாக ஓட முயன்றான்.  ஆனால்

“சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். கர்த்தருடைய உடன்படிக்கையையும், அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும், சத்தியமுமானவைகள்.” (சங்: 25: 9,10)

 என்ற உண்மையை அவன் வாழ்க்கையில் உணர்ந்து கொண்டான். தேவனால் போதிக்கபடும்படியான, வழிநடத்தப்படும்படியான மனப்பக்குவம் கொண்டவர்களைத்தான் தாவீது சாந்தகுணமுள்ளவர்கள் என்கிறான்!  அதனால் ” கர்த்தாவே உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்” என்கிறான்.

தேவனால் போதிக்கப்படும், வழிநடத்தப்படும் மனப்பக்குவம் உனக்கு உண்டா? வழிகாட்டியான கர்த்தரின் பின் செல்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment