நியா: 8: 31- 35 ” சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு அபிமெலேக்கு என்று பேரிட்டான்.
பின்பு யோவாசின் குமாரனாகிய கிதியோன் நல்ல விருந்தாப்பியத்திலே மரித்து ஒப்ராவிலே தன் தகப்பனாகிய போவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கப்பண்ணப்பட்டான்.
கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் திரும்பவும் பாகால்களைப் பின்பற்றிச் சோரம்போய் பாகால்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய கர்த்தரை நினையாமலும்,
கிதியோன் என்னும் யெருபாகால் இஸ்ரவேலுக்குச் செய்த சகல நன்மைக்கு அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள்.
இன்று கிதியோனைப்பற்றி சிந்தித்தபோது என் சிறுவயதில் நான் செய்த சிறு தவறு ஒன்றுதான் ஞாபகம் வந்தது. என்னுடைய அம்மா திறமையாக லேஸ் பின்னுவார்கள். தூக்கத்தில் கூட அவர்கள் விரல்கள் தவறு இல்லாமல் லேஸ் பின்னும் என்று நான் அடிக்கடி சொல்லுவேன். ஒருநாள் அம்மா சொல்லிக்கொடுத்த ஒரு டிசைனை நான் பின்னிக்கொண்டிருந்தேன். அதில் ஒரு லூப் தவறாக போட்டுவிட்டேன் என்று எனக்கே தெரிந்தது. சின்னத் தவறுதானே, இதினால் என்னா ஆகப்போகிறது என்று எண்ணியவாறு அந்த டிசைன் முழுவதும் முடித்துவிட்டேன். அம்மாவிடம் போய் பெருமையாக நான் முடித்து விட்ட டிசைனைக் காட்டினேன். அம்மா அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு, நான் தவறாகப் போட்ட அந்த லூப்பை தன்னுடைய ஊசியால் சிறிது இழுத்தார்கள். ஒரு நொடியில் நான் கஷ்டப்பட்டுப் போட்ட டிசைன் அப்படியே உருவி வந்துவிட்டது. சிறிய தவறுதானே என்று நான் எண்ணியது எவ்வளவு பெரியத் தவறு என்று உணர்ந்தேன்.
இந்த அரியப் பாடத்தைதான் நாம் கிதியோனின் வாழ்விலிருந்து கற்றுக் கொள்கிறோம்
நாம் பார்த்தவிதமாக கிதியோனின் வாழ்க்கை சரியான பாதையில் தான் சென்று கொண்டிருந்தது. கர்த்தருக்கு கீழ்ப்படிந்து 300 பேர் கொண்ட படையைக் கொண்டு, மீதியானியரை முறியடித்தான். வெற்றியின் கர்வம் அவன் தலையை எட்டவில்லை. அவனைத் தலைவனாக்கும்படி இஸ்ரவேல் மக்கள் அணுகியபோது மறுதலித்தான்.
ஆரோனின் குடும்பதுக்கு கர்த்தர் அளித்த ஏபோத்தை செய்து அதை தன் ஊரில் வைத்த முதல் அடியில் அவன் சறுக்கினான். அதிலிருந்து அவன் வாழ்க்கை அடிமட்டத்தை நோக்கிதான் சென்றது.அவன் எடுத்த அடுத்த தவறான அடி பெண்கள் விஷயம் என்றும் பார்த்தோம். அவன் கர்த்தர் நமக்கு ஏற்படுத்திய ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண உறவை மதித்ததாகத் தெரியவில்லை. பல பெண்களை மணந்தான்.
அதுமட்டுமல்ல, இன்றைய வேதாகமப்பகுதி கூறுகிறது, அவனுக்கு மறுமனையாட்டியும் இருந்தாள்.இந்தப் பெண் ஒரு கானானிய ஸ்திரீ போலத் தெரிகிறது. கர்த்தர் கானானியரிடம் எந்த சம்பந்தமும் கலக்க வேண்டாம் என்று கூறியதை அலட்சியப்படுத்தி விட்டான்.
முதல் அடி, இரண்டாவது அடி, மூன்றாவது அடி, கிதியோன் தான் தவறானப் பாதையில் அடிமேல் அடி வைப்பதை உணருமுன் அவன் தலைகீழாக சறுக்கினான். வேதம் கூறுகிறது, கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் மக்கள் தேவனைப் பின்பற்றவில்லை.தேவனை வணங்காமல் பாகாலை வணங்கினர், கிதியோனின் வீட்டாருக்கும் தயவு காட்டவில்லை.
கிதியோனின் வாழ்க்கை, நாம் தவறான பாதையில் நாம் எடுக்கும் ஒரு தவறான முடிவு நம்மை எந்த நிலைக்குக் கொண்டுவிடும் என்று காட்டுகிறது.
ஒவ்வொருநாளும், ஒவ்வொரு நொடியும் தேவனுடைய சமுகத்தில் செலவிட்டு, தேவனோடு நெருங்கி ஜீவிக்கும் போதுதான் நாம் வாழ்வில் வெற்றிபெற முடியும். சிறிய தவறு, அல்லது சிறிய அலட்சியம் கூட நம்மைக் கர்த்தரைவிட்டுப் பிரித்துவிடும் என்பதை மறந்து விடாதே!
கிதியோனின் வாழ்க்கை நமக்கு ஒரு எச்சரிப்பாக அமையட்டும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்