நியாதிபதிகள்:11:34 யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை, குமாரத்தியும் இல்லை.
ஒரு மகளின் சரிதையைப் படிக்கப்போகிறோம்! பெயர் தெரியாத ஒரு மகள்! வயது தெரியாத ஒரு மகள்! அவள் தந்தை பெயர் யெப்தா என்று மட்டும் தெரியும்! அவன் ஒரு பரஸ்திரீயின் மகன்! ஒரு முரட்டு வீரன், யுத்தத்துக்கு அழைப்பவர்களுக்கு உதவியாக சென்று சம்பாதிப்பவன்!
சரித்திரத்தின் இந்தப்பகுதியில் பெண்களுக்கென்று எந்த இடமும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் திருமணம் ஆகும்வரை தகப்பனுக்கும், திருமணத்துக்கு பின்னர் கணவருக்கும் சொந்தமான உடமைகளாகக் கருதப்பட்ட காலம் அது! ஒருவேளை தனக்கு வேறே ஆண்பிள்ளைகளே பிறக்கவில்லையே என்று யெப்தா நிச்சயமாகக் கவலைப்பட்டிருப்பான். தன்னோடே யுத்தத்துக்கு போக ஒரு ஆண் பிள்ளை இல்லை, தன்னைப்போல வீரனாக வளர்க்க ஒரு ஆண்பிள்ளை இல்லை என்ற கவலை நிச்சயமாக இருந்திருக்கும்!
அந்தக்காலத்தில் வாழ்ந்த யெப்தாவைக் குறை சொல்லி என்ன பிரயோஜனம்? இன்று நம் சமுதாயத்தில் எத்தனை பெண் சிசுக்கள் கொலை செய்யப்படுகின்றனர்! பெண் குழந்தைகளைப் பெற்றதால் எத்தனைத் தாய்மார் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்! பெண் குழந்தயைப் பெற்றெடுத்த வயிற்றைக் கணவன் எட்டி உதைத்ததால் ஒரு பெண் மரணமடைந்ததாக நேற்றுதான் பேப்பரில் படித்தேன்.
சரி! யெப்தாவின் மகளின் சரிதையைத் தொடருவோம்!
நியா:11:30 ல் யெப்தா, புத்தியில்லாத ஒரு பொருத்தனையை தேவனிடம் செய்வதைப் பார்த்தோம். அவன், ஆண்டவரே நீர் இன்று அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால் நான் திரும்பி வரும்போது,என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அதை உமக்கு சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.
ஒரு நிமிடம் நில்லுங்கள்! சற்று சிந்தியுங்கள்! எனக்கு பதில் சொல்லுங்கள்!
1. கர்த்தர் இந்த பொருத்தனையைக் கேட்டாரா? விசுவாசத்தையல்லவா விரும்பினார். இது தேவையில்லாத பொருத்தனை தானே?
2. அப்படியே முட்டாள்தனமாக அவன் பொருத்தனை பண்ணியிருந்தாலும் அவன் மகளை பலியிடக் கர்த்தர் விரும்பினாரா?
இந்த முட்டாள் தகப்பன் அம்மோன் புத்த்திரரை வென்று விட்டு வீட்டுக்குத் திரும்புமுன், அவன் வெற்றி பெற்ற செய்தி காற்றாக வந்துவிட்டது. அவனுடைய தவளை வாய் சொன்ன வார்த்தைகளை சற்றும் அறியாத மகள், தகப்பனை ஆடிப்பாடி வரவேற்கப் புறப்பட்டாள்!
இந்த அன்பு மகளின் சரிதையைத் தான் இந்த வாரம் நாம் படிக்கப்போகிறோம். இந்தப்பெண்ணின் கதை வேதாகமத்தில் இடம் பெற்றுள்ளதால் நம் பரமபிதா இவளுடைய கதையின் மூலமாக நிச்சயமாய் நமக்கும் ஏதோ ஒரு பாடத்தை வைத்திருக்கிறார்.
யோசுவாவின் மரணத்துக்கு பின்னர் இஸ்ரவேலை ஆளத் தலைவர்கள் இல்லை. அதனால் அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் பிளவு காணப்பட்டது. தேவனாகிய கர்த்தர் அவர்களிடம் எதிர்பார்த்த தரமான வாழ்க்கை குறைந்தது.
புறஜாதியினராகிய கானானியர் ஒரு மனைவியுடன் வாழாமல் பல பெண்களோடு வாழ்ந்தனர். அது அவர்களுக்குத் தவறாகவே தெரியவில்லை. தங்களுடைய இச்சைகள் நிறைவேற, தங்கள் தேவருக்கு சிசுக்களை பலியாகக் கொடுத்தனர், அதுவும் தவறாகத் தெரியவில்லை!
ஆனால் கர்த்தர் இஸ்ரவேல் மக்களிடம் இப்படிபட்ட தரக்குறைவான நடத்தையை விரும்பவில்லை. உலகத்தோரின் முன்பு ஒளிகாட்டும் மக்களாக அவர்கள் வாழவேண்டும் என்று விரும்பினார்.
இன்று கிறிஸ்தவர்களாகிய நம்மிடமும் கர்த்தர் இதைத்தான் விரும்புகிறார். நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பையும், பரிவையும் எடுத்துக்காட்டும் மக்களாக, ஒளியூட்டும் சாட்சிகளாக வாழ விரும்புகிறார்.
தேவனுடைய அன்பு நம்முள்ளத்தில் ஊற்றப்படுவதாலே நம்மை சுற்றியுள்ளவர்களை நம்முடைய அன்பினாலே , ஒழுக்கத்தினாலே, தரமான வாழ்க்கையினாலே, காந்தம் போல கவரும் தன்மையுடன் வாழ வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம். விசேஷமாக நம்முடைய குடும்ப வாழ்க்கையில், நம்முடைய பிள்ளைகளை நாம் கர்த்தருடைய பயத்திலும், விசுவாசத்திலும் , ஜெபத்திலும் நிலைத்திருப்பவர்களாக வளர்க்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்! அவர்கள் கர்த்தர் நமக்கு அளித்திருக்கிற ஈவு! அவர்களை தேவனுடைய பயத்தில் வளர்க்கும் பொறுப்பை அல்லது கடமையைக் கர்த்தர் நம்மிடம் கொடுத்திருக்கிறார் என்பதை மறந்து போகாதே!
யெப்தாவின் மகளின் சரிதையை நாளையும் தொடருவோம்.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்