கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1252 தனக்கு சொந்தமானதை மீட்டுக் கொள்ள வந்தவர்!

லேவியராகமம்: 25: 25  ” உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து , தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்”.

காலையில் கிழக்கு வெளுத்ததுமே ரூத் எழும்பி விட்டாள். இன்று என்ன நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அவள் உள்ளத்தில் அதிகமாக இருந்தது. தன்னுடைய நாட்டை விட்டு ஒரு புதிய நாட்டுக்குள், புதிய ஜனத்துக்குள் வந்திருக்கிறாள். அன்று என்ன நடக்கப்போகிறது என்று அறியாதவளாய் ரூத்,  வேலைக்கு செல்லும் மற்ற பெண்களோடு இணைந்து போவாஸின் வயலை நோக்கி செல்கிறாள்.

அயல் நாட்டிலிருந்து வந்த விதவையான அவள் இங்கு ஒன்றும் அதிகமாக எதிர்பார்க்கவில்லை. ஆனால் அன்று அவள் போவாஸின் வயலில் வேலை செய்ய ஆரம்பித்த போது, அவள் மேல் போவாஸ் பொழிந்த சரமாரியான ஆசீர்வாதங்களை அவள் கனவில் கூட நினைக்கவில்லை. அன்று மாலையில் வீடு திரும்பிய ரூத், அன்று நடந்த யாவையும்  தன் மாமியாரிடம் பகிர்ந்து கொள்ள ஆவலோடு செல்கிறாள்.

ரூத்தின் கரத்தில் ஏந்தி வந்த ஆசீர்வாதத்தைக் கண்ட நகோமி ஆச்சரியத்துடன் தன் மருமகளை நோக்கி, நீ இன்று எங்கு வேலைக்கு சென்றாய்? யாருடைய வயல்? என்ன நடந்தது? என்று கேள்விகளைத் தொகுத்தாள். நடந்தவைகளை ரூத்திடம் கேட்டு அறிந்த பின், அவள் உள்ளம் நன்றியால் நிறைந்து  “உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக” (ரூத்: 2: 18 – 19) என்றாள் என்று பார்க்கிறோம்.

கடந்த சில வாரங்களாக நாம் நகோமியோடும், ரூத்தோடும் கூட வெறுமையும், மரணமும் நிறைந்த மோவாபை விட்டு அப்பத்தின் வீடாகிய பெத்லேகேமை நோக்கி நடந்தோம். நாம் பெத்லெகேமுக்கு வந்தடைந்தபோது அங்கே அறுவடையின் காலம், அது அவர்களுடைய வாழ்வில் சரீரப் பிரகாரமும், ஆவிக்குரிய பிரகாரமும் நிறைவான காலமாய் அமைந்தது. அவர்கள் பரலோகப் பிதாவினாலும், போவாஸினாலும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.

தேவனாகிய கர்த்தரின் மறைமுகமாக வழிநடத்தும் கரம், அவர்களை ஒரு புதிய வாழ்க்கைக்குள், ஒரு புதிய இரட்சிப்புக்குள் வழிநடத்தியது. அவர்களுடைய இரட்சிப்பின் காலம் நெருங்கி விட்டது! அவர்கள் இத்தனை வருடங்கள் பாவமும், வேதனையும், மரணமும் நிறைந்த  மோவாபில் செலவிட்டது இனி அவர்களுக்குத் தடையாயிருக்கப் போவதில்லை. அவர்கள் அவருக்கே சொந்தமாகும் காலம் நெருங்கிவிட்டது.

ஆம்! நகோமியும், ரூத்தும் பெத்லெகேமிலே தங்கள் இரட்சகரைக் கண்டு கொள்ளும் காலம் இது! அவர்கள் மறுபடியும் அப்பத்தின் வீடு என்ற குடும்பத்துக்குள் ஒரு அங்கத்தினராக சேர்க்கப்படும் காலம்! போவாஸ் தனக்கு சொந்தமானவர்களை மீட்கும் படியான தன்னுடைய பணியை நிறைவேற்றப்போகும் காலம் !

வரப்போகிற சில நாட்கள் நாம் இந்த ‘இரட்சிப்பின் காலம்’ பற்றி படிக்கப் போகிறோம். நகோமியின், ரூத்தின் வாழ்க்கையில் கிடைத்த அந்த இரட்சிப்பு நம்முடைய வாழ்விலும் அனுபவிக்க முடியும் என்ற உண்மையை நாம் ஆராயப் போகிறோம்.

பழையவைகள் ஒழிந்து போயின எல்லாம் புதிதாயின என்ற நம் இரட்சகராகிய இயேசுவின் வார்த்தைகள் நம் வாழ்வின் கடந்த காலத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்றன! இரட்சிப்பின் காலம் ஒரு புதுப்பிப்பின் காலம்! தேவனோடு நாம் ஒப்புரவாகி, தேவனுடைய குடும்பத்தாரோடு நாம் ஒருங்கிணைக்கப்படும் காலம்!

போவாஸ் ரூத்துக்கு அளித்த இரட்சிப்பைப் போல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே நமக்கு விலையேறப்பெற்ற  இரட்சிப்பை  அளிக்கக்கூடும்!  இரட்சிப்பு என்பதற்கு ஒருவன் தனக்கு சொந்தமானதை மீட்டுக் கொள்ளுதல் என்று அர்த்தம்! நாம் கர்த்தராகிய இயேசுவுக்கு சொந்தமானவர்கள்! நம்மை மீட்பதற்காக அவர் தன் ஜீவனையே விலையாக ஈந்தார்.

உன்னுடைய  மீட்பராகிய  இயேசு உன்னைத் தனக்கு சொந்தமாக மீட்டுக்கொள்ள நீ அனுமதித்திருக்கிறாயா?

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment